எரிக்கும் தீர்மானத்தின் பின்னணி விஞ்ஞான ரீதியானதல்ல ; இன வெறுப்புணர்ச்சியே

0 987

டெய்லி மிரர் பத்திரிகையில் சிரேஷ்ட ஊடகவியலாளர் ரங்க ஜயசூரிய எழுதிய கட்டுரையின் சுருக்க மொழிபெயர்ப்பு

தமிழில் : ஏ.ஆர்.ஏ.பரீல்

கொவிட் 19 வைரஸ் தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்யக் கூடாது, தகனம் செய்ய வேண்டும் என்ற அரசின் தீர்மானம்  194 உலக நாடுகளின் செயற்பாடுகளுக்கு முற்றிலும் மாற்றமானதாகும். அதனால் அரசாங்கத்தின் இந்தத் தவறான கொள்கையை மீள்பரீசிலினை செய்ய வேண்டும். இஸ்லாமியர்களின் சமய கோட்பாடுகளின் படி இறந்தவர்களின் உடல்களை எரிப்பது புனிதத்தன்மைக்கு ஊறுவிளைவிப்பதாகும். கொவிட் 19 தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்குவதற்கும், தகனம் செய்வதற்கும் உலக சுகாதார ஸ்தாபனம்  அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை அரசாங்கம் நிபுணத்துவ குழுவின் விஞ்ஞான ரீதியான ஆலோசனைக்கமையவே இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது விஞ்ஞான ரீதியானதல்ல.

கொவிட் 19 நோய் காரணமாக ஆரம்பத்தில் முதலாவது மரணம் கடந்த மார்ச் மாதம் நிகழ்ந்தது. அப்போது சுகாதார அமைச்சின் வழிகாட்டல்கள் தகனம் செய்யப்படுவதையும், அடக்கம் செய்யப்படுவதையும் அனுமதித்தது. ஆனால், தகனம் செய்யப்படுவது பாதுகாப்பானது என்பதால் அதற்கே ஆதரவு வழங்கப்பட்டது. அச்சந்தர்ப்பத்தில் கடந்த மார்ச் 31 ஆம் திகதி கொவிட்19 காரணமாக முஸ்லிம் ஒருவர் இறந்தபோது, இறந்தவரின் குடும்பத்தினர் அடக்கம் செய்யப்படுவதையே வலியுறுத்தினர். இந்நிலையில் சுகாதார அமைச்சின்  EPID/400/2019N- Cov ஆம் இலக்க 2020.04.01 ஆம்  திகதியிட்ட சுற்று நிருபம் கொவிட் 19 காரணமாக மரணிக்கும் அனைத்து நோயாளர்களினதும் உடல்கள் தகனம் செய்யப்படவேண்டுமென்பதை உறுதிப்படுத்தியது.

அன்று முதல் இலங்கை கொவிட் 19 கட்டுப்படுத்துவதில் வெற்றி கண்டிருந்தாலும், உடல்கள் தகனம் செய்யப்படுவதற்கு இலங்கை தெரிவித்த தவறான காரணங்கள் தலைப்புச் செய்திகளாக மாறின. கொவிட் 19 மரணங்களின் குடும்ப அங்கத்தவர்கள் கவலை கொண்டனர். முஸ்லிம்களின் எதிர்ப்பு அதிகரித்தது.

இந்தத் தீர்மானம், கொள்கை இலங்கையின் புவியியல் அமைப்பு ரீதியிலேயே எடுக்கப்பட வேண்டும். வைரஸ் இறந்த உடலிலிருந்து நீர்வளத்தை மாசுபடுத்துமா என விவாதிக்கப்பட்டது.

இலங்கையில் அதிக மழை வீழ்ச்சி, தாழ்நில நீர்வளம், நுண்துளைகள் நிறைந்த மண் மற்றும் வெடிப்புகளுடன் கூடிய மலைகள் அதிகமிருக்கின்றன. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுபோது எமது நாட்டில் கொவிட் 19 மரணித்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டால் இறந்த உடல்களிலிருந்து உயிரியல் கிருமிகள், இரசாயன கழிவுகள் என்பன பரவும் அபாயம் அதிகம் உள்ளது என பேராசிரியை மெத்திகா விதானகே தெரிவித்துள்ளார். இவர் தொழிநுட்பகுழுவின் அங்கத்தவராவார். என்றாலும் இதற்கான ஆதாரங்கள் குறைவாகும்.

முஸ்லிம்களின் சடலங்களும் கட்டாயமாக தகனம் செய்யப்படவேண்டுமென்பதில் இன வெறுப்புணர்ச்சியே இருக்கிறது. தேர்தலில் அரசாங்கம் சிங்கள பெளத்தர்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றது. அரசாங்கத்தின் 20 ஆவது திருத்தத்திற்கு சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தார்கள். இதன் காரணமாக அரசு முஸ்லிம்களுக்கு உதவிகள் நல்க முனைந்தாலும் அது தற்போது இயலாமற் போயுள்ளது.

தற்போது டாக்டர்கள். பெளத்த குருமார்கள் மற்றும் இனவாதிகள் அரசு இறுதிக்கிரியை நிபந்தனைகளில் மாற்றத்தை கொண்டு வர முடியாத வகையில் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். தற்போது அரசாங்கம் தொழிநுட்ப குழுவின் அறிக்கைக்காகக் காத்திருக்கிறது. அதற்கு இரு மாதங்கள் செல்லலாம். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.