அகதியாக வந்த நீங்கள் பணக்காரரானது எப்படி? சஹ்ரானை  தெரியுமா?

 ஆணைக் குழுவின் கேள்விகளுக்கு  ரிஷாத் பதியுதீன் அளித்த பதில்கள்

0 1,869
தற்கொலைதாரிகளுடன் தொடர்பா?
இன்சாபின் செப்புத் தொழிற்சாலையுடனான தொடர்பு என்ன?
இராணுவத் தளபதிக்கு தொலைபேசி அழைப்பெடுத்தது ஏன்?

 

21/4 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்களை மையப்படுத்தி விசாரணைகளை முன்னெடுத்துவரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் முன்னிலையில் மெகசின் சிறையிலிருந்து ‘ஸ்கைப்‘ ஊடாக முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அளித்த சாட்சியத்தின் முழு விபரம் வருமாறு:

 

எம்.எப்.எம்.பஸீர்

உயிர்த்த ஞாயிறு  தற்கொலை தாக்குதல்களைத் தொடர்ந்து,  பல்வேறு  விமர்சனங்களை எதிர்கொண்ட  இலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகளில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மிக முக்கியமானவர். கடந்த 19 ஆம் திகதியும் 21 ஆம் திகதியும் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், விளக்கமறியலில் இருந்தவாறு (வேறு வழக்கொன்றில்), உயிர்த்த ஞாயிறு விவகாரம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில் சாட்சியமளித்திருந்தார். வாய்மொழி மூலமான அவரது சாட்சியங்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில், எழுத்து மூலமான சாட்சியங்களை சத்தியக் கடதாசியுடன் நாளை சனிக் கிழமைக்குள் சமர்ப்பிக்க, ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு ரிஷாத் பதியுதீன் தரப்புக்கு உத்தரவிட்டது.

கடந்த 19 ஆம் திகதி  முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சாட்சியம் முதன் முதலாக பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில்,  ரிஷாத் பதியுதீன் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் மற்றும் சட்டத்தரணி ரிஸ்வான் உவைஸ் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

இந் நிலையில், மெகஸின் சிறைச்சாலையின் பிரதான  அலுவலக அறையில், சிறை அதிகாரிகளான எம்.யூ.எச். விஜேதிலக,  பி.பீ.விக்ரமதிலக ஆகிய சிறை அதிகாரிகள் அருகே இருக்க ஸ்கைப் ஊடாக சாட்சியம் அளிக்க ஆரம்பித்தார். பிற்பகல் 1.40 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட சாட்சிப் பதிவுகளை அரசின் சிரேஷ்ட சட்டவாதி சஞ்ஜீவ திஸாநாயக்க நெறிப்படுத்தினார்.  முதலில் சிரேஷ்ட சட்டவாதி சஞ்ஜீவ திஸாநாயக்கவின் கேள்விகளுக்கு பதிலளித்தவாறு ரிஷாத் பதியுதீன்  தன்னைப் பற்றிய விடயங்களை வெளிப்படுத்தினார்.

தனக்கு மொஹம்மட் ரிப்கான், மொஹம்மட் ரியாஜ் என இரு சகோதரர்கள் இருப்பதாக கூறிய அவர்,  தான் ஒரு சிவில் பொறியியலாளர் என  இதன்போது தெரிவித்தார்.  மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற தான் ஆரம்பத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபையில்  தொழில்நுட்ப அதிகாரியாக சேவையாற்றியதாகவும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவின் புத்தளம் மாவட்ட இணைப்பாளராக இருந்ததாகவும்  ரிஷாத் பதியுதீன் குறிப்பிட்டார். 1990 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து சிறிது காலம் கொத்தாந்தீவு முகாமில் இருந்த பின்னர், புத்தளம் , தில்லையடி பகுதிக்கு வந்ததாகவும், தற்போது தில்லையடியிலேயே வசிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

திருமணமாகி மூன்று பிள்ளைகளுடன் தற்போது கொழும்பிலேயே வசித்தாலும், அடிக்கடி தனது தேர்தல் மாவட்டமான வன்னி மாவட்டத்துக்கு  சென்றுவருவதாக ரிஷாத் பதியுதீன் சுட்டிக்காட்டினார்.

சஞ்ஜீவ திஸாநாயக்க:  அலி இப்ராஹீம்  சைபு சிஹாப்தீன் என ஒருவரை உங்களுக்கு தெரியுமா?
ரிஷாத்: ஆம் தெரியும். அவர் பிரபல வர்த்தகர். கொடையாளி. எனது மனைவியின் தந்தை.
சஞ்ஜீவ திஸாநாயக்க:  அவர் மன்னாரைச் சேர்ந்தவரா?
ரிஷாத்: இல்லை. அவர் அனுராதபுரம் – மதவாச்சியைச் சேர்ந்தவர்.
சஞ்ஜீவ திஸாநாயக்க:  2019.04.21 தற்கொலை தாக்குதல்கள் இடம்பெற்ற போது நீங்கள் அமைச்சரா?
ரிஷாத்: ஆம், வர்த்தக, வாணிபத் துறை, நீண்டகாலமாக இடம்பெயர்ந்தோரை மீள் குடியேற்றல் மற்றும்  தொழில் பயிற்சி அமைச்சராக இருந்தேன்.
சஞ்ஜீவ திஸாநாயக்க:  அந்த தற்கொலைத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான்  என கூறினால் சரியா?
ரிஷாத்: ஆம்
சஞ்ஜீவ திஸாநாயக்க:   கொழும்பு ஷெங்ரில்லா மற்றும் சினமன் கிராண்ட் ஹோட்டல்களில் தாக்குதல் நடாத்தியவர்கள்  இரு சகோதரர்கள் என அறிவீர்களா?
ரிஷாத்: ஊடகங்கள் வாயிலாக அறிந்துகொண்டேன்.
சஞ்ஜீவ திஸாநாயக்க:  உங்களுக்கு தனியான கட்சி ஒன்று உள்ளதா?
ரிஷாத்: ஆம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
சஞ்ஜீவ திஸாநாயக்க:  அக்கட்சியில் அலாவுதீன் என ஒருவர் இருந்தாரா?
ரிஷாத்:  ஆம், முதலில் அவர் பொருளாளராக இருந்தார். பின்னர்  சிறிது காலம் உப பொருளாளராக செயற்பட்டார். அதன் பின்னர்  அவர் விலகிக்கொண்டார்.
சஞ்ஜீவ திஸாநாயக்க:  அலாவுதீன் எந்த பிரதேசத்தை சேர்ந்தவர்?
ரிஷாத்: அவர் மன்னாரைச் சேர்ந்தவர். கொழும்பில் வசிக்கின்றார். பெரிய வர்த்தகர். நகை வர்த்தகம் செய்பவர்.

சஞ்ஜீவ திஸாநாயக்க:  சிலாவத்துறை வன்னி மாவட்டமா?
ரிஷாத்: ஆம்
சஞ்ஜீவ திஸாநாயக்க:  சிலாவத்துறை உமது பூர்வீக ஊருக்கு அருகிலா அமைந்துள்ளது.
ரிஷாத்: இல்லை. எமது ஊரிலிருந்து 40 கிலோ மீற்றர்களுக்கு அப்பால் அமைந்துள்ளது.
சஞ்ஜீவ திஸாநாயக்க:  மன்னார் மாவட்டத்தில் தானே அமைந்துள்ளது?
ரிஷாத்: ஆம்,  மன்னாரில் 5 பிரதேச செயலகங்கள் உள்ளன. அதில் முசலி பிரதேச செயலக பிரிவின் பிரதான நகரே சிலாவத்துறை .
சஞ்ஜீவ திஸாநாயக்க:  சிலாவத்துறை கரையோரத்தில் அமைந்துள்ள நகரமா?
ரிஷாத்: ஆம்.
சஞ்ஜீவ திஸாநாயக்க:  பேசாலை மன்னாரிலா உள்ளது?
ரிஷாத்: ஆம். எனது ஊருக்கு அருகே உள்ள இடம். அது கத்தோலிக்கர்கள் செறிந்து வாழும் பிரதேசம்.
சஞ்ஜீவ திஸாநாயக்க:  அங்கு டொன்கி பார்ம் எனும்  மிருக சிகிச்சை மையம் ஒன்று உள்ளதா?
ரிஷாத்: எனக்கு அப்படி தெரியாது. எனது ஞாபகத்தின் பிரகாரம் மிருக சிகிச்சை மையம் ஒன்று  முருங்காவிலில் உள்ளதாக கேள்விப்பட்டுள்ளேன்.
சஞ்ஜீவ திஸாநாயக்க:  உங்கள் தாய் தந்தையரின் ஊர் என்ன?
ரிஷாத்: தந்தை உப்புக் குளம். தாயார் தாராபுரம். மன்னாரிலிருந்து புலிகளால் துரத்தப்படும் வரை தாராபுரத்திலேயே நாம் வாழ்ந்தோம்.
சஞ்ஜீவ திஸாநாயக்க:  உங்களுக்கு இரு சகோதரிகள் உள்ளனர் அல்லவா?
ரிஷாத்: ஆம், ஒருவர் கனடாவில் வசிக்கின்றார். மற்றையவர் புத்தளத்தில் ஆசிரியராக கடமையாற்றுகின்றார்.
கனடாவில் உள்ளவர் பஸ்மிலா பர்வின். அவர் திருமணமானவர். அய்யூப் சமாஹிம் அவரது கணவரின் பெயர். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அய்யூபின் மகனே,  அய்யூப் சமாஹிம். திருமணத்தின் பின்னர் வத்தளையில் உள்ள வீட்டில் அவர்கள் இருந்தனர். பின்னர் வெள்ளவத்தையில் வாடகைக்கு சிறிது காலம் இருந்தனர். தற்போது கனடாவில் வசிக்கின்றனர்.
சஞ்ஜீவ திஸாநாயக்க:  அய்யூப் சமாஹிம் என்ன செய்தார்?
ரிஷாத்: அவர் ஒரு வர்த்தகர். அழகுசாதனப் பொருட்கள் வர்த்தகர்.
சஞ்ஜீவ திஸாநாயக்க:  உங்கள் கட்சியின் பொருளாளராக செயற்பட்ட அலாவுதீனுக்கு மகள் ஒருவர் உள்ளாரா, அவர் திருமணம் முடித்தவரா?
ரிஷாத்: ஆம்
சஞ்ஜீவ திஸாநாயக்க:  அப்படியானால், அலாவுதீனின் மகளின் கணவர் தற்போது உயிருடன் உள்ளாரா என்பது தொடர்பில் நீங்கள் அறிவீரா?
ரிஷாத்: அலாவுதீனின் மகளின் கணவர் கடந்த 2019 ஏப்ரல் 21 தாக்குதல்களில் ஒரு தற்கொலைதாரியாக செயற்பட்டுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன்.
சஞ்ஜீவ திஸாநாயக்க:   அலாவுதீனின் மகளுக்கும்,  இன்சாப் அஹமட்டுக்கும் ( சினமன் கிரான்ட் குண்டுதாரி)இடையில்   திருமண வைபவம் ஒன்று இடம்பெற்றிருந்ததா?
ரிஷாத்: ஆம்,  வன்னி மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர், முக்கியஸ்தர் என்ற ரீதியில் எனக்கும் அந்த திருமண வைபவத்துக்கு அலாவுதீன் அழைப்பு விடுத்திருந்தார்.
சஞ்ஜீவ திஸாநாயக்க:  கெளரவ பாராளுமன்ற உறுப்பினரே, குழப்பமடைய வேண்டாம்.  நாம் எல்லோரும் திருமண வைபவங்களுக்கு செல்பவர்கள் தானே.  அதில் எந்த பிரச்சினையும் இல்லை. அந்த திருமண வைபவத்தில் சாட்சிக் கையெழுத்திட்டவர்கள் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?
ரிஷாத்: உண்மையில் அந்த திருமண வைபவம் இடம்பெற்று தற்போது 10 வருடங்களுக்கும் மேலாகிறது. எனக்கு சரியான ஞாபகம் இல்லை. நாம் மக்கள் பிரதிநிதியாக திருமண வைபவங்களுக்குச் செல்லும் போது, அங்கு சாட்சியாளர்களாக கையெழுத்திடுவது சாதாரணமாக நடக்கும் விடயம்.
சஞ்ஜீவ திஸாநாயக்க:   நீங்கள் அந்த திருமணத்தின் ஒரு சாட்சியாளராக கையெழுத்திட்டீர்கள் என நான் உங்களுக்கு பரிந்துரைத்தால் அதனை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?
ரிஷாத்:  அலாவுதீனின் கோரிக்கைக்கு அமைய நான் அவ்வாறு கையெழுத்திட்டிருக்க முடியும். அதனை தவறாக நான் கருதவில்லை.
சஞ்ஜீவ திஸாநாயக்க:   இல்லை…நான் உங்களிடம் அது தவறு என்ற கோணத்தில் கேட்கவில்லை. நான் நீங்கள் செய்த ஒரு காரியம் தொடர்பில் மட்டுமே வினவினேன். அலாவுதீனின் மகள் திருமணம் முடித்த இன்சாப்பின் தந்தை யார் என தெரியுமா?
ரிஷாத்: மொஹம்மட் இப்ராஹீம்
சஞ்ஜீவ திஸாநாயக்க:   ஏப்ரல் 21 தாக்குதலுக்கு முன்னர் இப்ராஹீமை நீங்கள் அறிவீரா? ( குறித்த கேள்வியை தமிழில் மொழிபெயர்த்த மொழி பெயர்ப்பாளர் திருமணத்துக்கு முன்னர் இப்ராஹீமை அறிவீரா என மொழி பெயர்த்தார். மொழி பெயர்ப்பில் பல குளறுபடிகளை சாட்சியத்தின் பல சந்தர்ப்பங்களில் அவதானிக்க முடிந்தது)
ரிஷாத்: இல்லை ( மொழி பெயர்ப்புக்கு அமைய பதிலளித்தார். எவ்வாறாயினும் பின்னர் ரிஷாத்தின் சட்டத்தரணி அவரது சந்தர்ப்பத்தின் போது, இப்ராஹீமை இன்சாப் – அலாவுதீன் மகளின் திருமணத்தின் போதே முதன் முதலாக சந்தித்ததாக கூறினார்)
சஞ்ஜீவ திஸாநாயக்க:   தற்கொலை தாக்குதல்களை நீங்கள் ஆமோதிக்கின்றீர்களா? அது உங்கள் மதத்தின் நம்பிக்கைகளுக்கு ஏற்புடையதா?
ரிஷாத்: ஒரு போதும் இல்லை. அது எமது மத நம்பிக்கைக்கு முற்றிலும் முரணானது.
சஞ்ஜீவ திஸாநாயக்க:    தற்கொலைதாரிகளின் திட்டங்களை நீங்கள் அறிந்திருந்தீரா?
ரிஷாத்: குண்டுவெடிப்புகள் இடம்பெறும் வரை அவை தொடர்பில் எதனையும் அறிந்திருக்கவில்லை.
சஞ்ஜீவ திஸாநாயக்க:    முன்கூட்டியே அவர்களின் திட்டங்களை அறிந்திருந்தால் என்ன செய்திருப்பீர்?
ரிஷாத்: பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதி உள்ளிட்ட உயர் மட்ட தரப்புக்கு விடயத்தைக் கூறி அதனை தடுக்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பேன்.
சஞ்ஜீவ திஸாநாயக்க:   21/4 குண்டுத் தாக்குதல்கள் இடம்பெறும் வரை முஸ்லிம்களிடையே அடிப்படைவாதம் வியாபித்திருந்தமையை அறியவில்லையா?
ரிஷாத்: அடிப்படைவாத நடவடிக்கைகள் சில   இடம்பெற்றிருந்தாலும், அவை பயங்கரவாதத்தை நோக்கி நகர்வது தொடர்பில் அறிந்திருக்கவில்லை. பெளத்தர்களிடையே உள்ளதைப் போலவே முஸ்லிம்களிடமும் பல்வேறு கருத்துக்களை அடிப்படையாக கொண்ட பிரிவுகள் உள்ளன. எனினும் அவற்றில் 95 வீதமானவர்கள் அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா சபையின் வழிகாட்டலுக்கு அமைய, ஒற்றுமையாக செயற்படுகின்றன.
சஞ்ஜீவ திஸாநாயக்க: முஸ்லிம்களிடையே, தப்லீக், சூபி, தெளஹீத், ஜமா அத்தே இஸ்லாமி போன்ற அமைப்புக்கள் அல்லது பிரிவுகள் உள்ளனவல்லவா? நீங்கள் அதில் எந்த பிரிவைச் சேர்ந்தவர்?
ரிஷாத்: நான் எந்த பிரிவுக்கும் கட்டுப்பட்டவன் அல்ல. அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா சபையின் வழிகாட்டலுக்கு அமைய குர்ஆன், ஹதீசை பின்பற்றி செயற்படுபவன்.
சஞ்ஜீவ திஸாநாயக்க:   சஹ்ரானும் குர்ஆனையும், ஹதீசையும் பின்பற்றியே தற்கொலைத் தாக்குதலை நடாத்தியுள்ளார் அல்லவா?
ரிஷாத்: இல்லை. குர்ஆன், ஹதீஸின் பெயரை பயன்படுத்தி அவ்வாறு தாக்குதல் நடத்தவே முடியாது.  என்னை பொறுத்தவரை சஹ்ரான் முஸ்லிமே இல்லை.
ஒரு உயிரைக் கொல்வது ஒரு சமூகத்தையே படுகொலை செய்வதற்கு சமன் என இஸ்லாம் கூறுகின்றது. ஒருவரை பாதுகாப்பது ஒரு சமூகத்தையே பாதுகாப்பதற்கு சமன் என இஸ்லாம் கூறுகின்றது. அப்படியானால், சஹ்ரானின் செயற்பாடுகள் இஸ்லாத்துக்கு முற்றிலும் முரணானது.
சஞ்ஜீவ திஸாநாயக்க:   உங்களுக்கு மாவனெல்லை புத்தர் சிலை   சேதப்படுத்திய  சம்பவங்கள் ஞாபகமா?
ரிஷாத்: ஆம், 2018 ஆம் ஆண்டு டிசம்பர் அளவில், கபீர் ஹாசிம் அமைச்சரவையில் விடயங்களை விளக்கினார். அப்போது நாம் முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் கூட்டாக, அந்த சம்பவங்களுடன் தொடர்புடைய அனைவரையும் கைது  செய்து பாரபட்சமின்றி அதிகபட்ச தண்டனையளிக்க கோரினோம்.
இதன்போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கபீர் ஹாசிமை பாதுகாப்பு பேரவைக்கு அழைப்பதாகவும் தெரிவித்தார்.
சஞ்ஜீவ திஸாநாயக்க:   கபீர் ஹாசிமின் இணைப்பு செயலரை கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சி ஞாபகமா?
ரிஷாத்: ஆம், அதனையும் கபீர் ஹாஷிம் அமைச்சரவையில் கூறினார். தனது உயிருக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
சஞ்ஜீவ திஸாநாயக்க:   சஹ்ரான் ஜனநாயகத்தை நிராகரித்திருந்தார். அதாவது  தேர்தலில் வாக்களிக்க செல்வதைக் கூட தவறானது என கூறியிருந்தார் என்பதை அறிவீரா?
ரிஷாத்: தாக்குதல்களின் பின்னர் அறிந்தேன்.
சஞ்ஜீவ திஸாநாயக்க:   இலங்கை இஸ்லாமிய நாடாக மாற்றப்பட்டு அவ்வாறான நாட்டில் வாழ்வதை நீங்கள் விரும்புகின்றீர்களா? அல்லது தற்போது உள்ள அரசியலமைப்புக்கு கட்டுப்பட்டு  இருக்கவா விரும்புகின்றீர்கள்?
ரிஷாத்: இஸ்லாத்தின் வழிகாட்டலில், தான் இருக்கும் நாட்டின் சட்ட திட்டத்தை மதித்து செயற்படுமாறே கூறப்பட்டுள்ளது. நான்  இலங்கையின் அரசியலமைப்புக்கு கட்டுப்பட்டு இருப்பதையே விரும்புகின்றேன்.
சஞ்ஜீவ திஸாநாயக்க:  ஓ.எச்.ஆர்.டி. எனப்படும் அரச சார்பற்ற நிறுவனத்தை அறிவீர்களா?
ரிஷாத்: ஆம்
சஞ்ஜீவ திஸாநாயக்க:   தற்போது அதன் தலைவர் யார்?
ரிஷாத்: சிஹாப்தீன்
சஞ்ஜீவ திஸாநாயக்க:    அவர் உங்கள்  மனைவியின் தந்தை என்றால் சரியா?
ரிஷாத்: ஆம்
சஞ்ஜீவ திஸாநாயக்க:   சிஹாப்தீனுக்கு முன்னர் அந்த அரச சார்பற்ற நிறுவனத்தின் தலைவராக செயற்பட்டவர் உங்கள் சகோதரர் ரியாஜ் தானே?
ரிஷாத்: ஆம்.
சஞ்ஜீவ திஸாநாயக்க:   ஓ.எச்.ஆர்.டி.யின் அஸ்கர் கான், நளீம் ஆகியோரைத் தெரியுமா?
ரிஷாத்: ஆம், அஸ்கர் கான், மன்னார் தாராபுரத்தைச் சேர்ந்தவர். தற்போது புத்தளத்தில்  வசிக்கின்றார். நளீம் என்பவர் ஒரு கணக்காளர். அவரை தெரியும். ஆனால் பெரிதாக  தொடர்புகள் இல்லை. சந்தித்துள்ளேன்.
இதன்போது ஓ.எச்.ஆர்.டி. அரச சார்பற்ற நிறுவன வேலைகளுக்கு , முன்னாள் அமைச்சர் ரிஷாத்தின் கீழ் இருந்த சதொச வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் விரிவான கேள்விகள் தொடுக்கப்பட்டன. அவற்றுக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், தான்   சதொச நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு பொறுப்பாக இருந்த அமைச்சரே தவிர, யார் என்ன வாகனத்தில் எங்கு செல்கின்றார், எங்கு தங்கியுள்ளார் போன்ற விடயங்களை தேடும் அதிகாரி அல்ல என சுட்டிக்காட்டி பதிலளித்திருந்தார்.
சதொச விடயத்தை தன்னுடன் முடிச்சுப் போட்டு தன்னை ஊடகங்கள் வாயிலாக குற்றவாளியாக காட்ட எடுக்கப்படும் முயற்சிகள் தொடர்பில் கவலை அடைவதாகவும், நாட்டுக்காக பல்வேறு நலவுகளையே தான் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந் நிலையில் குண்டுவெடிப்புக்கள் தொடர்பில் குற்றவாளிகளை கண்டறிய தான் பூரண ஒத்துழைப்பை வழங்கத்  தயார் எனவும் அவர் இதன்போது கூறினார். அத்துடன் ஜெனீவா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கட்டார் வாக்களிக்க தயாரான போது, அப்போதைய ஜனாதிபதி மஹிந்தவின் ஆலோசனைக்கு அமைய தான் கட்டாருக்குச் சென்று கட்டாரின் முடிவை 24 மணி நேரத்தில் மாற்றி இலங்கைக்கு சாதகமாக அமைத்ததாகவும், இவை தாய் நாட்டுக்காக தான் செய்தவை எனவும் ரிஷாத் பதியுதீன் சுட்டிக்காட்டினார்.சஞ்ஜீவ திஸாநாயக்க:   ஓ.எச்.ஆர்.டி நிறுவனத்துக்கு வெளிநாட்டிலிருந்து மில்லியன் கணக்கில் பணம் கிடைத்துள்ளது. அதனால் அவற்றின் மூலம் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களை மேற்பார்வை செய்ய சதொச வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனவா?
ரிஷாத்: முற்றாக மறுக்கின்றேன்.
சஞ்ஜீவ திஸாநாயக்க:    தெளபீக் மெளலவியைத் தெரியுமா?
ரிஷாத்: ஆம் தெரியும்.  மறிச்சுக்கட்டி பள்ளிவாசல் தலைவராக இருந்தவர். 1990 ஆம் ஆண்டு புத்தளத்துக்கு இடம்பெயர்ந்தவர்.
சஞ்ஜீவ திஸாநாயக்க:  தெளபீக் மெளலவிக்கு நீங்கள் வாகனம் கொடுத்தீரா?
ரிஷாத்: இல்லை
சஞ்ஜீவ திஸாநாயக்க:   தற்போது அவர் எங்கு வசிக்கின்றார்?
ரிஷாத்: தெரியாது
சஞ்ஜீவ திஸாநாயக்க:   புத்தளத்தில் ஜிஹாத் அல்லது ஜிஹான் எனும் அமைப்பை அறிவீரா?
ரிஷாத்: இல்லை
சஞ்ஜீவ திஸாநாயக்க:   அது தெளபீக் மெளலவியின் அமைப்பு தானே?
ரிஷாத்: தெரியாது.
சஞ்ஜீவ திஸாநாயக்க:   அந்த அமைப்பின் உறுப்பினர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்துள்ளார்களென்பதை அறிவீரா?
ரிஷாத்: தெரியாது.
சஞ்ஜீவ திஸாநாயக்க:   ஜாசிம் அஹமட் எனும் ஒருவரை அறிவீரா?
ரிஷாத்: ஆம், அவர் கட்டார் நாட்டின் பிரதமராகவும் வெளிவிவகார அமைச்சராகவும் இருந்தவர்.
சஞ்ஜீவ திஸாநாயக்க:   ஓ.எச்.ஆர்.டி. அமைப்புக்கு அவரிடம் இருந்தே பாரிய நிதி உதவி கிடைத்துள்ளது?
ரிஷாத்: இருக்கலாம். அவர்கள் இலங்கைக்கு மட்டுமல்ல, உலகின் பல நாடுகளுக்கும் பல்வேறு திட்டங்களுக்கும் உதவியளிப்பவர்கள்.  யுத்தத்தின் பின்னர் இலங்கையில்  மீள் குடியேற்ற வீடமைப்புக்களுக்கும் அவர்கள் உதவினர்.
சஞ்ஜீவ திஸாநாயக்க:  மொஹம்மட் ஹனீபா மொயினுத்தீன் எனும் ஒருவரை அறிவீரா?
ரிஷாத்: ஆம்
சஞ்ஜீவ திஸாநாயக்க:   21/4 தாக்குதல்களின் பின்னர் அவரது மகன் கைது செய்யப்பட்டதாக அறிவீரா?
ரிஷாத்: ஏப்ரல் 21 தாக்குதல்களின் பின்னர் மொஹம்மட் ஹனீபா மொயினுத்தீன் எனக்கு தொலைபேசியில் கதைத்தார்.  தான் வீட்டில் இல்லாத போது,  முகத்தை மூடிய நிலையில் வீட்டுக்கு வந்த குழு மகனை கடத்திச் சென்றுள்ளதாக கூறினார். மொயினுத்தீன் என்பவர் முஸ்லிம் சமய விவகார  அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர்.  அதே போல் காமினி செனரத், உதய ஆர். செனவிரத்ன போன்ற முன்னணி நிர்வாக சேவை அதிகாரிகளின் சக வகுப்பைச் சேர்ந்தவர். அவ்வாறான முக்கியமான ஒருவர் எனக்கு அழைப்பெடுத்து, தனது மகனை கடத்திவிட்டார்கள் என கூறியபோது அது தொடர்பில் நான் தேடிப் பார்த்தேன்.
சாதாரணமாக, கூலித் தொழிலாளர் ஒருவர் கதைத்து  இவ்வாறான விடயம் ஒன்றினை கூறியிருந்தால் கூட மக்கள் பிரதிநிதி என்ற ரீதியில் அது தொடர்பில் நான் தேடிப் பார்த்திருப்பேன்.
ஆணைக் குழுவின் தலைமை நீதிபதி ஜனக்:   அவரது மகன் சஹ்ரானின் ஆயுத பயிற்சிக் குழுவில் நேரடியாக ஆயுதப் பயிற்சி பெற்றவர் என தெரியுமா?
ரிஷாத்: தெரியாது.
ஆணைக் குழுவின் தலைமை நீதிபதி ஜனக்:    குறித்த சந்தேக நபருக்கு உள்ள குற்றச்சாட்டு தொடர்பில் அப்போது தேடிப் பார்க்கவில்லையா?
ரிஷாத்:  அவருக்கு முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எனக்கு தெரியாது.  அப்போது அது தொடர்பில் நான் கேட்கவும் இல்லை. அதற்கான தேவை அப்போது எனக்கு இருக்கவில்லை. ஜனநாயக நாட்டில், முகத்தை மறைத்துக்கொண்டு வந்த கும்பலொன்றினால் பலாத்காரமாக ஒருவரை கடத்திச் சென்றமை சட்ட விரோதமாகும்.
ஆணைக் குழுவின் தலைவர் ஜனக்: தற்போதும் உங்களுக்கு அந்த சந்தேக நபரின் குற்றச் சாட்டுக்கள் தெரியாதா?
ரிஷாத்:  ஆணைக் குழுவில் கூறும் வரை அவற்றை நான் அறிந்திருக்கவில்லை.
சஞ்ஜீவ திஸாநாயக்க:   இந்த விவகாரத்தில்  அப்போதைய இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்கவுக்கு கதைத்தீர்களா?
ரிஷாத்: ஆம்
சஞ்ஜீவ திஸாநாயக்க:   எவ்வாறு கதைத்தீர்?
ரிஷாத்: தொலைபேசியில்
சஞ்ஜீவ திஸாநாயக்க:  எத்தனை தடவைகள்?
ரிஷாத்: 3 தடவைகள்
சஞ்ஜீவ திஸாநாயக்க:   அப்போது மகேஷ் சேனநாயக்கவிடம் ‘ ஏதேனும் செய்ய முடியுமா’ போன்ற தோரணையில் ஏதேனும் கோரிக்கை முன்வைத்தீரா?
ரிஷாத்:  அப்படி இல்லை. குறித்த நபரின் மகன் கடத்தப்பட்ட பின்னர் தெஹிவளை பொலிஸ் பொறுப்பதிகாரி, கல்கிசை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்களிடம் அவரைக் கைது செய்தீர்களா என வினவிய போது அவர்கள் இல்லை என்ற பதிலையே அளித்துள்ளனர். இந் நிலையில்தான்,  கல்கிசை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரிடம் பொலிசாரை தவிர வேறு யார் இவ்வாறு செய்யலாம் என வினவப்பட்ட போது, முகத்தை மூடிக்கொண்டு வந்து இவ்வாறு அழைத்து சென்றிருந்தால், இராணுவத்தில் கொஞ்சம் விசாரித்து பாருங்கள், அவர்கள் ஒரு வேளை அழைத்து சென்றிருக்கலாம் என கூறினார். அதன்படியே நான் இராணுவ தளபதிக்கு தொலைபேசியில் கதைத்தேன்.  குறித்த தந்தையின் கோரிக்கை, அவரது மகன் உயிருடன் உள்ளாரா இல்லையா என்பதை தெரிந்து கொள்வதே.  முதல் இரு அழைப்புக்களின் போதும் குறித்த நபர் இராணுவத்தால் கைது செய்யப்பட்டதாக  இராணுவ தளபதி கூறவில்லை. எனவே தான் மூன்றாம் முறையும் எடுத்தேன். அப்போது அவர் இராணுவம் கைது செய்துள்ளதை உறுதி செய்தார். அதன் பின்னர் அது குறித்து நான் எதுவும் வினவச் செல்லவில்லை என்றார்.இதனையடுத்து 19 ஆம் திகதி ரிஷாத் பதியுதீனிடம் முன்னெடுக்கப்பட்ட சாட்சிப் பதிவுகள் நிறைவடைந்தன.
கடந்த 21 ஆம் திகதி மீளவும் சாட்சி விசாரணைகள் ஸ்கைப் தொழில் நுட்பம் ஊடாக ஆரம்பிக்கப்பட்டது.கடந்த 21 ஆம் திகதி முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடம், சாட்சி விசாரணைகளுக்கான கேள்வியை அரசின் சிரேஷ்ட சட்டவாதி சுகர்ஷி ஹேரத் ஜயவீர முன்வைத்தார்.

‘ துருக்கியில் தடை செய்யப்பட்ட  பெடோ அமைப்பின் உறுப்பினர்கள் இலங்கையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து கிடைத்த தகவல்களுக்கு அமைய விசாரணைகள் நடாத்தப்பட்டு, அவர்களுடன் இரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் தொடர்புகள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவ்விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளன.  இந்த ஆணைக் குழுவில் முன்வைக்கப்பட்டுள்ள சாட்சியங்களுக்கு அமைய,  நீங்கள் அந்த அமைச்சர்களில் ஒருவராவீர். நீங்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலேனும்  அந்த விசாரணைகளுக்கு அழுத்தம் பிரயோகித்தீரா?

ரிஷாத்:  இது முற்றாக பொய்யான தகவல். துருக்கியின் எந்தவொரு நபருடனோ அல்லது அமைப்புடனோ எனக்கு தொடர்புகள் இல்லை. நான் அவ்வாறான அழுத்தம் கொடுக்கவும் இல்லை.

சிரேஷ்ட சட்டவாதி சுஹர்ஷி: முஸ்லிம் பெண்கள் புர்கா, நிகாப் அணிவது தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன?

ரிஷாத்: ஒருவரின் ஆடை தொடர்பில் இன்னொருவர் எந்த அழுத்தங்களையும் செய்ய முடியாது.  ஜனநாயக நாட்டில் அவ்வாறான அழுத்தங்கள் இடம்பெற முடியாது. தற்போது இந்த கொரோனா சூழலில், மக்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு, தனது முழு உடலையும் மறைத்துக்கொள்கிறார்கள். அத்துடன் சஹ்ரான் உள்ளிட்ட 8 பயங்கரவாதிகளும் புர்கா அணிந்து கொண்டு தாக்குதல் நடாத்தவில்லை. முழு உடலையும் மறைத்துக்கொண்டிருக்க வேண்டும் என இஸ்லாத்தில் எந்த கட்டாயப்படுத்தல்களும் இல்லை. பாதுகாப்பு பிரிவினர், தேசிய பாதுகாப்புக்காக புர்காவை தடை செய்ய நடவடிக்கை எடுத்தால், நாம் அதனை எதிர்க்கப் போவதில்லை.
சிரேஷ்ட சட்டவாதி சுகர்ஷி: உங்கள் மனைவி புர்கா அணிபவரா?
ரிஷாத்: வாக்களிக்கச் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றுதான் நாடு முழுதும் பிரச்சாரப்படுத்தப்பட்டிருந்தது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் வரை எனது மனைவி முழு உடலையும் மறைக்கும் வண்ணம் ஆடை அணிந்தார். அரசு அதனை தடை செய்து வர்த்தமானி அறிவித்தல் பிறப்பித்த பின்னர், தற்போது அவர் அந்த  வகையில், முழுமையாக முகத்தை மூடி ஆடை அணிவதில்லை.
இதனையடுத்து சாட்சி நெறிப்படுத்தல்களை கடந்த 19 ஆம் திகதி முன்னெடுத்த அரசின் சிரேஷ்ட சட்டவாதி சஞ்ஜீவ திஸாநாயக்க தொடர்ந்தார்.
சிரேஷ்ட சட்டவாதி சஞ்ஜீவ திஸாநாயக்க : உங்கள் கனடாவில் இருக்கும் சகோதரியின் வீட்டை பயங்கரவாதிகள் பாதுகாப்பு இல்லமாக பயன்படுத்தினர் என்பதை அறிவீரா?
ரிஷாத்: அந்த வீடு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. அதனை பயங்கரவாதிகள் பயன்படுத்தியமை தொடர்பில் தாக்குதலின் பின்னரேயே அறிந்தேன்.
ஆணைக் குழுவின் தலைவர் : நீங்கள் அந்த வீட்டுக்கு சென்றுள்ளீரா?
ரிஷாத்: இல்லை. நான் அந்த வீட்டுக்கு சென்றிருக்கவில்லை.
ஆணைக் குழுவின் தலைவர்: அப்படியானால் நீங்கள் ஏதேனும் ஒரு நாளில் அவ்வீட்டின் அருகில் உள்ள பாடசாலை ஒன்றில் நடந்த நிகழ்வில் பங்கேற்றீரா?
ரிஷாத்:  ஆம். புத்தளம் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றுக்கு சென்று திரும்பும் போது, எடேரமுல்லை சாஹிரா வித்தியாலயத்தில் நடந்த நிகழ்வொன்றில் பங்கேற்றேன். எனது மகனின் நண்பர் ஒருவர் அப்பாடசாலையில் இருந்தார். அதனால் நான் மகனுடன் சென்றேன். அதிக நேரம் அங்கு இருக்கவில்லை. ஏனெனில் அன்று எனக்கு வெளிநாடு செல்லவேண்டி இருந்தது.
ஆணைக் குழுவின் தலைவர்: ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் உங்கள் சகோதரர் ரியாஜ் பதியுதீன் சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டாரா?
ரிஷாத்: ஆம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்காக அவர் கைது செய்யப்பட்டார். சினமன் கிராண்ட் ஹோட்டல் குண்டுதாரியான இன்சாப் அஹமட்டுடன் தொலைபேசியில் 7 தடவைகள் கதைத்ததாக  கூறி இக்கைது இடம்பெற்றிருந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. நான் நாட்கணக்கை சரியாக அறியவில்லை. எப்படியாயினும் 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னைய கால கடடத்தில் அவ்வழைப்புகள் எடுக்கப்பட்டுள்ளன.எனவே நான் எனது சகோதரரிடம், இன்சாப் ஏன் உன்னுடன் கதைத்தார் என வினவினேன். அப்போது அரசாங்கம் செப்பு ஏற்றுமதிக்கு தடை விதித்திருந்த காலத்தில் அது தொடர்பில் நிவாரணம் ஒன்றினை கோர கதைத்ததாக அவர் தெரிவித்தார். 7 சந்தர்ப்பங்களிலும் அதற்காகவா கதைத்தார் என எனக்கு தெரியாது. எனினும் அந்த 7 அழைப்புக்களையும் இன்சாபே எனது தம்பிக்கு எடுத்திருந்தார்.
ஆணைக் குழுவின் உறுப்பினரான மேன் முறையீட்டு நீதிபதி: நீங்கள் உங்கள் சாட்சி ஊடாக செப்பு பெற்றுக்கொள்ள உதவவில்லை என கூறினாலும்,  ஏனைய நிறுவனங்களை விட  இப்ராஹீமின் மகனின் நிறுவனத்துக்கு  25 ஆயிரம் கிலோ வரை பாரிய தொகை செப்பு வழங்கப்பட்டுள்ளதே.  இன்சாப்பின் திருமணத்தில் கையெழுத்திட்ட நீங்கள், நேரடியாக இல்லாவிட்டாலும் அவருக்கு மறைமுகமாக உதவியதாக தற்போதும் சாட்சிகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன என நான் கூறினால் அது தொடர்பில் என்ன கூற விரும்புகின்றீர்கள்?
ரிஷாத்: அதனை நான் முற்றாக நிராகரிக்கின்றேன். பொறுப்புடன் கூறுகின்றேன். நான் எந்த இப்ராஹீம் சகோதரர்களுக்கும் உதவி செய்யவில்லை.
ஆணைக் குழுவின் உறுப்பினரான  ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி:  பாராளுமன்ற உறுப்பினரே நீங்கள் சஹ்ரானை அறிவீரா?
ரிஷாத்: இல்லை. அவரை தெரியாது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரேயே சஹ்ரான் என ஒருவர் இருந்தமையை அறிந்துகொண்டேன்.
ஆணைக் குழுவின் உறுப்பினரான  ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி: நீங்கள் தெரியாது என கூறினாலும் உங்கள் சகோதரர்கள் இருவரும் சஹ்ரானை நன்றாக அறிவார்கள் அல்லவா?
ரிஷாத்: இல்லை. அவர்களும் அறிய மாட்டார்கள்.  நான் எனது சகோதரர்கள் இருவரிடமும் அது தொடர்பில் கேட்டிருந்தேன். அவர்கள் சஹ்ரானை அறிந்திருக்கவில்லை.
ஆணைக் குழுவின் உறுப்பினரான மேன் முறையீட்டு நீதிபதி: பாராளுமன்ற உறுப்பினர் பதியுதீன் அவர்களே,  புலிகள் உங்களை வடக்கிலிருந்து விரட்டிய பின்னர் 5 வருடங்கள் வரை அகதி முகாம்களில் இருந்ததாக நீங்கள் கூறினீர்கள்தானே.  அப்படி இருந்த நீங்கள், அரசியலுக்கு வந்து இவ்வளவு பெரிய பணக்காரரானமை எப்படி?
ரிஷாத்: அகதியாகினேன் என்பதற்காக பிச்சை எடுக்க வேண்டியதில்லையே. எனக்கு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடலாம் அல்லவா? ( உணர்வுபூர்வமாக பதிலளித்தார்)
ஆணைக் குழுவின் உறுப்பினரான மேன் முறையீட்டு நீதிபதி: பாராளுமன்ற உறுப்பினரே நான் என்ன கேட்கின்றேன் என்றால், உங்களதும், குடும்ப உறுப்பினர்களதும் வியாபாரங்களை மேம்படுத்த அமைச்சின்  சலுகைகளையும், உங்கள் அமைச்சினையும் நீங்கள் பயன்படுத்தினீர்கள் அல்லவா?
ரிஷாத்: இல்லை. ஒருபோதும் இல்லை. தனிப்பட்ட வர்த்தக நடவடிக்கைகளை மேன்மைப்படுத்த  அமைச்சின் சலுகைகளை பயன்படுத்தவில்லை.  நான் 2001 ஆம் ஆண்டு முதல் பாராளுமன்ற உறுப்பினராக கடமையாற்றியுள்ளேன். ஒவ்வொரு வருடமும் எனது சொத்து விபரங்களை  பாராளுமன்றுக்கு சமர்ப்பித்துள்ளேன்.
ஆணைக் குழுவின் உறுப்பினரான மேன் முறையீட்டு நீதிபதி: பாராளுமன்ற உறுப்பினரே சற்று கேளுங்களேன். நீங்கள் ஆணைக் குழுவின் பொலிஸ் பிரிவுக்கு உங்கள் சொத்துக்கள் தொடர்பிலான விபரங்களை  வாக்கு மூலம் வழங்கும் போது  தெரிவித்திருந்தீர்கள்.  அதனை பார்க்கும் போது, சாதாரண ஒருவரை விட பணக்காரர் ஒருவருக்கான சொத்துக்கள் உங்களிடம் இருப்பது தெரிகின்றது. நீங்கள் மோசடி செய்துள்ளீர்கள் என நான் கூறவில்லை. எனினும் நான் கேட்பது என்னவென்றால், அகதி முகாம் ஒன்றிலிருந்து வந்த நீங்கள் எப்படி இவ்வளவு சொத்துக்களை சம்பாதித்தீர்கள்?
ரிஷாத்: ( உணர்வு பூர்வமாக) நீதிபதி அவர்களே, இதற்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லையே.  எனது நற்பெயரை களங்கப்படுத்த வேண்டுமானால் நீங்கள் கேட்கும் இந்த விடயங்கள் உதவலாம். அதனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தேடுமாறு நான் கேட்கின்றேன்.  தாக்குதல் தொடர்பில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் அதிகாரி ஒருவர், சஹ்ரான் தாக்குதல் நடாத்த 13 காரணிகளை கொண்டிருந்ததாக சாட்சியம் அளித்திருந்தார். அது தொடர்பில் தேடுங்கள். ஞானசார தேரரின்  பேச்சுக்கள் காரணம் என கூறியுள்ளார். அது தொடர்பில் தேடுங்கள்.இந்த தாக்குதல்கள், அதிகாரமிக்க நாடொன்று, இந் நாட்டுக்குள் தனது பிரதிநிதி ஒருவரை ஈடுபடுத்தி  அதனூடாக இந் நாட்டில் அடிப்படைவாதத்தை பரப்ப  எடுக்கப்பட்ட நடவடிக்கையாகவே கருதுகின்றேன். அதனால் அவ்வாறான விடயங்கள் தொடர்பில் இந்த ஆணைக் குழு தேடிப் பார்க்கும் என நான் நம்புகின்றேன் என்றார்.

இதனையடுத்து,  1979 ஆம் ஆண்டு அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா சபை , காத்தான்குடி அப்துல் ரவூப் என்பவருக்கு எதிராக கொடுத்ததாக கூறப்படும்  ‘ முர்தத்’ ( இஸ்லாத்தைவிட்டு வெளியேறியவர்) எனும் பத்வா ( மார்க்கத் தீர்ப்பு) தொடர்பில் ஆணைக் குழுவின் உறுப்பினர் ஒருவர் வினவினார். எனினும் அந்த தீர்ப்பு தொடர்பில் தனக்கு தெரியாது என ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

இதனையடுத்து விசாரணை ஆணைக் குழுவின் உறுப்பினரான ஓய்வுபெற்ற அமைச்சு செயலர் டப்ளியூ.எம்.எம். அதிகாரி ‘ நீங்கள் இடம்பெயர்ந்தோரை மீளக் குடியேற்றும் அமைச்சராக சில காலம் பதவி வகித்தீர்கள்.  நீங்கள்  வடக்கு கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்த  எத்தனை சிங்களவர்களை மீளக் குடியேற்றினீர்கள்?’ என வினவினார்.

இதற்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், ‘  கிழக்கு மாகாணத்தில் 2 இலட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் மீளக் குடியேற்றப்பட்டனர்.  சிங்கள பேக்கரியாளர்கள் உள்ளிட்ட வர்த்தகர்களை அங்கு மீள குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

வடக்கில் 2 வீதமான சிங்களவர்களே இருந்தனர்.  5 வீதம் முஸ்லிம்கள் இருந்தனர்.  சிங்களவர்களில் அதிகமானோர், புலிகள் செயற்பட்ட காலத்தில் அப்பகுதிகளை கைவிட்டு சென்றனர். ஒரு இலட்சம் முஸ்லிம்கள் அவரை அங்கிருந்து விரட்டப்பட்டனர்.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் 2009 இல் அவர்களை மீளக் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.  அந் நடவடிக்கைகள் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின்  நெறிப்படுத்தலில் இடம்பெற்றன. முஸ்லிம்களை மீளக் குடியேற்றும் போது நான்  மீள் குடியேற்ற அமைச்சர் இல்லை.  வன்னி மாவட்ட குழுத் தலைவர் எனற ரீதியில் நான் அந் நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கினேன்.

வவுனியா அனுராதபுரம் எல்லையில் உள்ள,  கலாபோகஸ்வெவ, நாமல் கம  ஆகிய கிராமங்கள் , பாரிய மரங்கள், காடுகள் அழிக்கப்பட்டு  ஏற்படுத்தப்பட்டவை.  பெரிய மரங்களை வெட்டி,  ஒரு ஏக்கர் இரண்டு ஏக்கர் என வழங்கப்பட்டு  அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை பகுதிகளைச் சேர்ந்த 5000 பேர் வரை குடியேற்றப்பட்டுள்ளனர்.  அதற்கு எதிராக ஒருவரும் மனுத் தாக்கல் செய்யவில்லை.

எனினும்  இடம்பெயர்ந்த மக்களை அவர்களது  இடங்களில் மீளக் குடியமர்த்தும் போது, காடழிப்பதாக மனுக்களை தாக்கல் செய்கின்றனர். அண்மையில் தீர்ப்பளிக்கப்பட்ட கல்லாறு பகுதியில் கூட, மன்னாரிலிருந்து இடம்பெயர்ந்த சிங்களவர்களை மீளக் குடியேற்றியுள்ளேன். ‘ விஜய கம்மான’ எனும் கிராமத்தை அவர்களை மீளக் குடியேற்றி அமைத்தேன்.   புலிகள் துரத்திய, டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஆதரவாக செயற்பட்ட தமிழர்களையும் மீளக் குடியேற்றியுள்ளேன். கல்லாறு பகுதியில் காடழிக்கப்படவில்லை.  குறித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அதற்கு எதிராக உயர் நீதிமன்றம் செல்வோம்.’ என முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சாட்சியமளித்தார்.

இதனையடுத்து குறுக்கு விசாரணைகள் மற்றும் தனது சட்டத்தரணி ருஷ்தி ஹபீபின் மீள் கேள்விகளுக்கு  ரிஷாத் பதிலளித்தார். அதனையடுத்து விளக்கமறியலில் இருந்த அவரிடம் மேலதிக சாட்சிகளை எழுத்து மூலம் சமர்ப்பிக்க ஆணைக் குழு அனுமதியளித்தது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.