20.11.2020 விடிவெள்ளி வார இதழின் ஆசிரியர் தலையங்கம்
கொவிட் 19 தொற்றினால் உயிரிழப்பவர்களின் ஜனாஸாக்களை எரிக்கும் விவகாரத்துக்கு இன்று வரை தீர்வு காணப்படவில்லை. அடக்கம் செய்வது பற்றி அமைச்சரவையில் ஆராயப்பட்டுள்ள போதிலும் இதுவரை எழுத்துமூல அனுமதி வழங்கப்படவில்லை.
தலைமன்னாரிலுள்ள தீவொன்றில் அடக்கம் செய்வது பற்றி அமைச்சரவையில் ஆராயப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. எனினும் இதற்கும் தற்போது அப்பகுதி அரசியல்வாதிகளிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
இவ்விவகாரத்தை அரசியல்வாதிகளை விடவும் குழப்பியடிப்பவர்கள் சுகாதாரத் துறைசார்ந்த சிலரே. உலக சுகாதார அமைப்போ அல்லது உலகளாவிய ரீதியில் உள்ள தொற்று நோய் தொடர்பான நிபுணர்களோ முன்வைக்காத கருத்துக்களை இவர்கள் முன்வைத்து தினமும் நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். 180க்கும் மேற்பட்ட நாடுகளில், ஏன் மாலைதீவு போன்ற முற்றிலும் நீரினால் சூழப்பட்ட தீவுகளில் கூட கொவிட் 19 சடலங்கள் அடக்கம் செய்யப்படுகின்ற நிலையில் இலங்கை மாத்திரம் இதில் விடாப்பிடியாக இருப்பது முற்றிலும் இனவாதமே அன்றி வேறில்லை எனலாம்.
அந்தவகையில் மேற்படி விவகாரத்தை அரசியல் ரீதியாக அன்றி, அறிவியல் ரீதியாக அணுகுவதற்கான முயற்சிகளே இப்போது அவசியமாகும். இந்த விடயத்தில் அரசியல்வாதிகளின் கருத்துக்களை மக்கள் நம்பத் தயாரில்லை.
எனவேதான் உயிரற்ற கலங்களிலிருந்து வைரஸ் பரவாது என்பதையோ நீரினூடாக வைரஸ் பரவ வாய்ப்பில்லை என்பதையோ மிகப் பகிரங்கமாக ஊடகங்கள் வாயிலாக, சிங்கள மற்றும் தமிழ் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இதற்குப் பொருத்தமான நிபுணர்கள் அடையாளம் காணப்பட வேண்டும். சர்வதேச நிபுணர்களின் உதவியையும் இதற்காக பெற்றுக் கொள்ள முடியும்.
உலக சுகாதார நிறுவனம் கொவிட் 19 இனால் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய முடியும் என அனுமதி வழங்கியுள்ள நிலையிலும் உலகின் 180 க்கும் மேற்பட்ட நாடுகளில் இவ் வைரஸ் தொற்றினால் மரணிப்பவர்கள் அடக்கம் செய்யப்படுகின்ற நிலையிலும் இலங்கையில் எரிக்க மட்டுமே முடியும் என எடுக்கப்பட்ட தீர்மானம் முழுக்க முழுக்க இனவாதமும் அரசியல் பின்னணியும் கொண்டதேயாகும்.
அரசாங்கம் கடந்த தேர்தல் காலத்தை மையப்படுத்தியும் முஸ்லிம் சமூகத்தை ஒரு வழிக்கு கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்திலுமே இவ்வாறானதொரு மனித உரிமைகளை கிஞ்சித்தும் மதிக்காத தீர்மானத்தை மேற்கொண்டது. எனினும் தற்போது அரசாங்கத்தின் சில அரசியல் இலக்குகள் அடையப் பெற்றுள்ள நிலையில் இந்த விவகாரத்தில் தளர்வுப்போக்கை கையாள தயாராகிய வேளையில்தான், இப்போது மீண்டும் இந்த விவகாரம் சிக்கல் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த சிக்கல் நிலையைத் தோற்றுவிப்பதற்கு மூல காரணமாக அமைந்தவர்கள் முஸ்லிம் சமூகத்தின் பொறுப்புவாய்ந்த பதவிகளில் இருப்பவர்கள் என்பதுதான் இதுபற்றி நாம் அதிக கவலைப்பட காரணமாகும்.
எனினும் இந்த சந்தர்ப்பத்தில் நாம் அரசியல், மார்க்க வேறுபாடுகளை ஒருபுறம் வைத்துவிட்டு புத்திஜீவிகளின் உதவியுடன் இதனை அறிவியல்பூர்வமாக எதிர்கொள்ள தயாராக வேண்டும். இந்த விவகாரம் தொடர்பில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள போதிலும் அவை கூடிய விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரியவில்லை. சட்ட ரீதியான தீர்வு கிடைப்பதற்கு முன்னராக அறிவியல் ரீதியானதொரு போராட்டத்தையும் நாம் முன்னெடுப்பது சிறந்ததாகும்.
தீர்வு கிடைக்கப் பெறும் வரை ஜனாஸாக்கள் எரிக்கப்படுவது தொடரும் என சுகாதார சேவைகள் பணிப்பாளரும் குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு தினமும் சவாலாகவே அமையப் போகிறது. இது முஸ்லிம் சமூகத்திற்கு நிச்சயம் பெரும் அழுத்தத்தை தருவதாகவே அமையும். தொடர்ந்தும் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவது நிச்சயம் முஸ்லிம் சமூகத்தை மிகப் பெரிய உணர்வு ரீதியான நெருக்கடிக்குள்ளேயே தள்ளும். அது நாம் எதிர்பாராத விளைவுகளை எதிர்காலத்தில் கொண்டுவரலாம். எனவேதான் முஸ்லிம் தலைமைகள் இதுவிடயத்தில் விரைந்து செயற்பட வேண்டும். – Vidivelli