வெண்ணெய் திரண்டுவர தாழியை உடைத்த கதை
13.11.2020 விடிவெள்ளி பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம்
ஜனாஸா எரிப்பு விவகாரம் மீண்டும் ஒரு யூ வளைவை (U Turn) எடுத்திருக்கிறது. அரசாங்கம் இந்த விவகாரத்தை எந்த இடத்தில் ஆரம்பித்ததோ மீண்டும் அதே இடத்திற்கே வந்து நிற்கிறது. நீதியமைச்சர் அலி சப்ரி, ஜனாதிபதி மூலமாக மேற்கொண்ட முயற்சிகளும் முஸ்லிம் சமூகத்தின் பிரமுகர்கள் சிலர் சுகாதார நிபுணர்கள் மூலமாக இவ்விவகாரத்தை கையாள எடுத்த நகர்வுகளும் இன்று கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளன.
இதற்குக் காரணம் “அரசாங்கம் கொவிட் 19 ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கிவிட்டது” என முஸ்லிம் சமூகத்தினுள்ளேயும் வெளியேயும் வெளியிடப்பட்ட உத்தியோகப்பற்றற்ற அறிவிப்புக்களேயாகும். துரதிஷ்டவசமாக, இந்த அறிவிப்பை வெளியிட்டவர்கள் சமூகத்தின் பொறுப்புவாய்ந்த பதவியில் இருப்பவர்கள் என்பது கவலைக்குரியதாகும். இதில் ஒரு அமைப்பு ஒருபடி மேலே சென்று இனவாதிகளுக்கு தீனி போடும் வகையில் சிங்களத்தில் அறிக்கைவிட்டமை இந்த விடயங்களை மேலும் சிக்கல் நிலைக்குள் தள்ளிவிட்டுள்ளது.
இவ்வாறான உணர்ச்சிகரமான சூழ்நிலைகளில் சமூகத்தை நிதானமாக வழிநடாத்த வேண்டியவர்கள் தமது பொறுப்புக்களை மறந்து செயற்படுவது எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு இந்த விவகாரம் சிறந்த உதாரணமாகும். இதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் இதற்கு முன்னரும் பல தடவைகளில் சமூகத்தில் சர்ச்சைகளை தோற்றுவிக்கும் வகையில் விவகாரங்களை கையாண்டுள்ளனர் என்பதையும் இந்த இடத்தில் நினைவூட்ட விரும்புகிறோம்.
உலக சுகாதார நிறுவனம் கொவிட் 19 இனால் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய முடியும் என அனுமதி வழங்கியுள்ள நிலையிலும் உலகின் 180 க்கும் மேற்பட்ட நாடுகளில் இவ் வைரஸ் தொற்றினால் மரணிப்பவர்கள் அடக்கம் செய்யப்படுகின்ற நிலையிலும் இலங்கையில் எரிக்க மட்டுமே முடியும் என எடுக்கப்பட்ட தீர்மானம் முழுக்க முழுக்க அரசியல் பின்னணி கொண்டதேயாகும். சுகாதார அமைச்சின் நிபுணர்களின் வழிகாட்டலிலேயே இத் தீர்மானம் எடுக்கப்பட்டது என ஜனாதிபதி முதல் அரச அதிகாரிகள் வரை இதற்கு வியாக்கியானம் கூறினாலும் அதில் எந்தவித உண்மையும் இல்லை என்பதை இன்று பெரும்பான்மை மக்களே உணர ஆரம்பித்துள்ளனர்.
அரசாங்கம் கடந்த தேர்தல் காலத்தை மையப்படுத்தியும் முஸ்லிம் சமூகத்தை ஒரு வழிக்கு கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்திலுமே இவ்வாறானதொரு மனித உரிமைகளை கிஞ்சித்தும் மதிக்காத தீர்மானத்தை மேற்கொண்டது. எனினும் தற்போது அரசாங்கத்தின் சில அரசியல் இலக்குகள் அடையப் பெற்றுள்ள நிலையில் இந்த விவகாரத்தில் தளர்வுப்போக்கை கையாள தயாராகிய வேளையில்தான், இப்போது மீண்டும் இந்த விவகாரம் சிக்கல் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த சிக்கல் நிலையைத் தோற்றுவிப்பதற்கு மூல காரணமாக அமைந்தவர்கள் முஸ்லிம் சமூகத்தின் பொறுப்புவாய்ந்த பதவிகளில் இருப்பவர்கள் என்பதுதான் இதுபற்றி நாம் அதிக கவலைப்பட காரணமாகும்.
அரசாங்கத்தினதும் சுகாதாரத்துறையினுள் இருக்கும் சில அதிகாரிகளினதும் இனவாதப் போக்குகள் ஒருபுறமிருக்க, இந்த விவகாரத்தை சமயோசிதமாகக் கையாண்டு முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளுக்கு ஒத்தடமிடக் கிடைத்த ஒரு சந்தர்ப்பம் தற்போது நழுவவிடப்பட்டுள்ளது அல்லது தாமதிக்கச் செய்யப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் முஸ்லிம் சமூகத்தில் நிலவும் அரசியல், சிவில் மற்றும் மார்க்க தலைமைத்துவ வெற்றிடமும் குளறுபடியுமே அன்றி வேறில்லை எனலாம்.
இவ்வாறான விவகாரங்களை அறிவுபூர்வமாக கையாண்டு வெற்றி கொள்ளக் கூடிய தலைமைத்துவம் நமது சமூகத்தில் இல்லாமை பெரும் குறைபாடாகும். அவ்வாறான பொருத்தமான தலைமைத்துவங்களின் கரங்களில் சமூகத்தை ஒப்படைப்பதே எதிர்காலத்தில் நாம் சந்திக்கப் போகும் இதைவிடவும் பாரதூரமான பிரச்சினைகளை சமயோசிதமாக வென்றெடுக்க வழிவகுக்கும்.
எனவேதான் முஸ்லிம் சமூகம் இக் காலகட்டத்தில் மிகவும் நிதானமாக சிந்திக்கவும் இந்நாட்டு முஸ்லிம்களின் எதிர்காலத்தை மிகச் சரியான பாதையில் வழிநடாத்தக் கூடிய தலைமைகளை கண்டறியவும் கடமைப்பட்டுள்ளது என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.
இதற்கென தற்போது சமூகத்தை வழிநடாத்தும் பொறுப்புகளில் இருக்கும் அரசியல், சிவில் மற்றும் மார்க்க நிறுவனங்களில் பொருத்தமான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். இளம் தலைமுறையினரிடம் பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட வேண்டும். அவர்களுக்குத் தேவையான ஒத்துழைப்புக்களை சமூகம் வழங்க முன்வர வேண்டும். இன்றேல் இன்று இறந்தபின்னர் நம்மை எரிப்பவர்கள் நாளை உயிருடனே நம்மை எரிக்கும் நிலை தோற்றம் பெறலாம். அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக. – Vidivelli