கலைக்கப்படவேண்டிய முஸ்லிம் கட்சிகள்

1 1,717

கலாநிதி அமீரலி,

மேர்டொக் பல்கலைக்கழகம், மேற்கு அவுஸ்திரேலியா

ஐந்து வருடங்களுக்கு முன்னரே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை முஸ்லிம்கள் முற்றாக நிராகரிக்க வேண்டுமெனவும் தேசிய கட்சிகளுடன் இணைந்தே முஸ்லிம்கள் தமது உரிமைகளுக்காகப் போராட வேண்டுமெனவும்   ஓர் ஆங்கில வெளியீட்டில் நான் வாதாடினேன். கடந்த வாரம் இதே பத்திரிகையில் வெளிவந்த ஒரு கட்டுரையிலும் வலியுறுத்தினேன். ஆனால் அந்தக் கட்சியும் அதிலிருந்து பிரிந்து உருவாகிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியும் ஏதேதோ காரணங்களைக் கூறி முஸ்லிம் வாக்காளர்களை மயக்கி இன்னும் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்றன. எனினும், கடந்த 22ஆம் திகதி, 20 ஆவது யாப்புத் திருத்த மசோதா நிறைவேறுவதற்கு இந்த இரு கட்சிகளும் அரங்கேற்றிய நாடகத்தைப் பார்த்த எந்த ஒரு முஸ்லிமும் வெட்கித் தலைகுனியாமல் இருக்க முடியாது. அந்த நாடகத்தால் ஒருவருக்குப் புதியதொரு பதவியும் பலருக்கு சலுகைகளும் கிடைக்கப்போவதாகவும் செய்திகள் கசிகின்றன. இவர்களின் ஏமாற்று அரசியலுக்கு முஸ்லிம் சமூகம் பலியாக வேண்டுமா? எனவேதான் அவ்விரு கட்சிகளும் முற்றாகக் கலைக்கப்பட வேண்டுமென்று மீண்டும் வாதாடுகிறேன்.

முஸ்லிம்களுக்கெனத் தனிப்பட்ட ஓர் அரசியல் கட்சிவேண்டும் என்ற எண்ணம் 1978க்குப் பின்னரே உருவானது. ஜே. ஆர். ஜெயவர்த்தன அறிமுகப்படுத்திய நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சியும், விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையும் முஸ்லிம்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் கணிசமாகக் குறைத்துவிடும் எனப் பயந்ததால், ஜெயவர்த்தனவின் அரசியல் தந்திரத்தை முறியடிப்பதற்காக முஸ்லிம்களெல்லாம் ஒரே குடையின் கீழ் ஒன்றுதிரண்டு ஒரு கட்சியை உருவாக்கி அதன் தலைமைக்குக் கட்டுப்பட்டு வாக்களிக்க வேண்டும் என்று ஒரு பழுத்த முஸ்லிம் கல்விமானும் கவிஞனும், அவருடன் இன்னுமோர் அனுபவமிக்க முஸ்லிம் நீதியரசரும் சிந்தித்தனர். முதலாமவர் காத்தான்குடியைச் சேர்ந்த கவிஞர் அப்துல் காதர் லெப்பை, இரண்டாமவர் கல்முனையைச் சேர்ந்த மாவட்ட நீதிபதி முகம்மது ஹுஸைன். அவ்விருவரின் எண்ணக் கருவிலிருந்து பிறந்ததே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ். இந்த ஆரம்பத்தைப் பற்றிச் சிறிது விளக்கவேண்டியுள்ளது. ஏனெனில் அவை ஏதேதோ காரணங்களால் இதுவரை மூடிமறைக்கப்பட்டு வருகிறது. இந்த ஆரம்ப வரலாற்றில் நானும் சிறிதளவு சம்பந்தப்பட்டிருந்ததால் சில சுய குறிப்புகளையும் இக்கட்டுரையில் சேர்க்க விரும்புகிறேன்.

கவிஞரும் நீதியரசரும் சமகாலத்தவர்கள். மதப்பற்றும் இனப்பற்றும் நாட்டுப்பற்றும் நிறைந்த அறிவாளிகள். அவர்களின் இளமையை ஆக்கிரமித்த ஒரு நிகழ்வு பாகிஸ்தான் போராட்டம். அதிலிருந்து அவர்கள் கற்றுக்கொண்ட பாடம் என்னவெனில் சிறுபான்மை முஸ்லிம்களின் ஒற்றுமைப்பலம். இந்தியாவிலே சிறுபான்மையாக வாழ்ந்த முஸ்லிம்களை இந்திய முஸ்லிம் லீக் என்ற குடையின்கீழ் ஒன்றுதிரட்டி அதன் தலைமையை ஒரு திறமைவாய்ந்த வழக்குரைஞரிடம் ஒப்படைத்து அத்தலைவனின் வாதத் திறமையால் ஒரு தனிநாட்டையே பிரித்தானியரிடமிருந்து வென்றெடுத்த வரலாறே இந்த இரு சிந்தனையாளர்களின் பார்வையிலும் முன்னுதாரணமாக அன்று விளங்கிற்று.

அப்போது கவிஞர் அவர்களோ தன் ஒரே மகனை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பிவிட்டுத் தன் பெறாமகன் ஆப்தீனின் குடும்பத்துடன் மாத்தளையில் வாழ்ந்திருந்த காலம். அங்கேதான் ஓய்வுபெற்ற நீதியரசரும் அடிக்கடி சென்று கவிஞரோடு உரையாடுவது வழக்கம். அதற்கு முன்பும் கவிஞர் குருத்தலாவையில் அதிபராகக் கடமையாற்றியபோது அவ்விருவரும் அடிக்கடி சந்திப்பர். அவ்வாறான ஒரு சந்திப்பிலேதான் நீதியரசர் அவர்கள் வழக்குரைஞனாக அப்போது அரும்பிக்கொண்டிருந்த தனது மருமகன் அஷ்ரபை கவிஞருக்கு அறிமுகம் செய்துவைத்தார். அஷ்ரபின் இளமையும், தமிழ் இலக்கிய ஆற்றலும், சமூகத் துடிப்பும், அரசியலில் குதிக்க வேண்டுமென்ற ஆர்வமும் கவிஞரைக் கவர்ந்தன. அஷ்ரபை ஒரு ஜின்னாவாக கவிஞர் கற்பனை பண்ணினார். அதன்பின் அஷ்ரபின் அரசியல் வழிகாட்டியாகவும் இயங்கினார். 1984இல் கவிஞர் மரணிக்கும் வரை அவரின் வழிகாட்டல் அஷ்ரபுக்கிருந்தது. கவிஞர் நோய்வாய்ப்பட்டிருந்த நாட்களில் அடிக்கடி அவரைச்சென்று கவனித்து, தனது அரசியல்ஞான குருவின் மரணச் சடங்குகளையும் முன்னின்று நடத்தியவர் அஷ்ரப். 1998இல் நான் இலங்கை சென்று மந்திரி அஷ்ரபை அவரது கொழும்பு இல்லத்தில் நன்றிக்கடனுடன் சந்தித்தபோது, கவிஞர் தனது அரசியல் சிந்தனைகளை அஷ்ரபுக்குக் கடிதங்களாக எழுதிய ஒரு கடிதக்கோப்பை ‘அப்துல் காதர் லெப்பையின் அரசியல் சிந்தனைகள்’ என்று தலையங்கமிட்டு என்னிடம் காட்டினார். அந்தக் கடிதக்கோப்புக்கு என்ன நடந்ததென்பது இன்று வரை ஒரு கேள்விக்குறி. அதைத் தேட நான் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஆனால் அதன் புகைப்படப் பிரதி ஒரு நண்பரிடத்தில் இருப்பதாக அறிந்தேன். அது விரைவில் வெளிவரும் எனவும் எதிர்பார்க்கிறேன். அந்தக்கடிதங்கள் காத்தான்குடியின் பொக்கிஷம்.

முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமை என்ற ஒரே இலக்கினை மையமாக வைத்தே அந்த இரு சிந்தனையாளர்களும் ஒரு முஸ்லிம் அரசியல் கட்சிக்கு வித்திட்டனர் என்று கூறுவதே பொருத்தமாகும். அதற்கப்பால், அந்தக் கட்சி எவ்வாறு இயங்க வேண்டும் அதன் கொள்கைகள் எவ்வாறு அமையவேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் வழிகாட்டுவதற்கு மு.கா. அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட முன்னரே அவர்கள் இருவரும் இறந்துவிட்டனர். இன்று இந்தக் கட்சியைவைத்து வயிற்றுப்பிழைப்பு நடத்துபவர்களுக்கு அக்கட்சியின் ஆரம்ப வரலாறு தெரியாது. கவிஞரே பாடியது போன்று ‘மரத்தை நட்டி வளர்த்தவனோ மண்ணின் அடியில் தூங்குகிறான், உரத்தையேனும் போடாத உலோபி கனியை உண்ணுகிறான்’. இந்த உண்மைகளையெல்லாம் விரைவில் ஓர் எழுத்தாளன் நூலாய் வெளியிடுவான்.

அந்தச் சிந்தனையாளர்களின் மறைவுக்குப் பின்னர் அஷ்ரப் அக்கட்சியை ஓர் இஸ்லாமிய மதவாதக் கட்சியாகமாற்றி முஸ்லிம்களின் வாக்கு வங்கியை முழுமையாகப் பெற முயன்றதை அச்சிந்தனையாளர்கள் ஆதரித்திருப்பார்களா என்பது சந்தேகமே. கவிஞரின் சிந்தனைகளை அறிந்தவர்கள் அவர் அதனை ஆதரித்திருக்கமாட்டார் என்றே நம்புவர்.

இன்று முஸ்லிம்களோ ஒற்றுமை இழந்து ஒரு கட்சி இரு கட்சிகளாகி இன்னும் சில காலத்தில் மூன்று கட்சிகளாகவும் பெருகக்கூடிய சாத்தியங்கள் தென்படுகின்றன. மு.கா இன்னும் பிளவடையக்கூடிய ஒரு சூழல்  இப்போது உருவாகி உள்ளது. இவற்றால் பலியாகப்போவது சாதாரண முஸ்லிம்களே.

இருந்தபோதும் முஸ்லிம்களுக்கெனத் தனிக்கட்சியொன்று உருவாகுவதை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்தவன் நான். இதைப்பற்றி கடிதங்கள் மூலம் கவிஞரோடு போராடினேன். இந்திய முஸ்லிம்களுடன் இலங்கை முஸ்லிம்களின் நிலையை ஒப்பிடுவது தவறென்றும் ஜின்னா காட்டிய வழியைவிட அபுல்கலாம் ஆஸாத் காட்டிய வழியே இலங்கை முஸ்லிம்களுக்குப் பொருந்தும் என்றும் எடுத்துக்காட்டினேன். இதனாலேதான் அஷ்ரப் ஒருமுறை அவரின் கட்சியில் சேருமாறு என்னை அழைத்தபோது நான் மறுத்தேன். ஜெயவர்த்தனாவின் சூழ்ச்சியை முறியடிப்பதற்கு அன்று நடத்தவேண்டியிருந்த போராட்டம் அந்த அரசியல் யாப்பையே முற்றாகக் கிழித்தெறிவதற்கு சிங்கள தமிழ் மக்களுடன் சேர்ந்து முஸ்லிம்கள் போராடுவதுதான். அதைவிடுத்து தனிக்கட்சி அமைத்தது மகாதவறு. இதை நான் 1983இல் நளீமியாவில் நடைபெற்ற மகாநாடொன்றுக்கு வந்திருந்த வேளையில் மட்டக்களப்பு ரஷீதியா உணவக மண்டபத்தில் காத்தான்குடி பட்டின சபைத் தலைவர் அகமது லெப்பையின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்கு வந்திருந்த சில தமிழ் நண்பர்களிடமும் கூறினேன். அந்த நிலைப்பாட்டிலிருந்து இன்னும் நான் மாறவில்லை.

முஸ்லிம்களெல்லாம் முஸ்லிம் கட்சிக்கும் தமிழர்களெல்லாம் தமிழர் கட்சிக்கும் வாக்களித்தால் சிங்கள மக்கள் தேசிய கட்சிகளைச் சிங்களக் கட்சிகளாக மாற்ற முனைவது தவறா? அதிலும் பெரும்பான்மையான சிங்களவர்கள் பௌத்தர்களாதலால் அவர்கள் அக்கட்சிகளை பௌத்த கட்சிகளாக மாற்றத் துடிப்பதை தவறென்று கூறலாமா? அந்தத் துடிப்பின் இன்றைய வெளிப்பாடுதான் ராஜபக்சாக்களின் மொட்டுக்கட்சி. இன்று அது முழுக்க முழுக்க பௌத்த பேராதிக்கவாதக் கட்சியாகமாறி சிங்கள பௌத்தர்களிடையே பிரபல்யம் அடைந்துள்ளது. எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் அதிலிருந்து பிரிந்த ஐக்கிய மக்கள் சக்தி கட்சியும் அதே வாக்காளர்களை இலக்குவைத்து அதே வழியிற் சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதற்கு வழிசமைத்துக் கொடுத்திருக்கிறார்கள் இந்த முஸ்லிம் பிரதிநிதிகள்.

எனவேதான் முஸ்லிம் கட்சிகள் கலைக்கப்பட வேண்டுமென்று கூறுகிறேன். இந்த இரு கட்சிகளும் முஸ்லிம் சமூகத்துக்காக இதுவரை போராடி வென்றெடுத்ததென்ன? அக்கட்சிகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் அவர்களின் குடும்பத்தவர்களும் அடிவருடிகளும் செல்வம் பெருக்கி இருக்கிறார்கள் என்பதை மறுக்கவில்லை. ஆனால் சமூகம் அடிபட்டு உதைபட்டுப் பல அழிவுகளை அனுபவித்தவேளை இவர்களால் என்ன செய்ய முடிந்தது? முன்னைய அரசாங்கமொன்றில் நீதிக்கு மந்திரியாக இருந்த ஒரு தலைவரும்கூட நீதியை முஸ்லிம்களுக்குப் பெற்றுக் கொடுத்தாரா? இல்லையென்றால் ஏன் இந்தப் பம்மாத்தும் ஏமாற்றும்?

முஸ்லிம்களின் இன்றைய தேவை மூன்றாவதொரு வழி. அந்த வழி முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, நாட்டுக்குமே தேவைப்படுகிறது. அதை விளக்குமுன் நாட்டின் இன்றைய நிலையை நன்கு உணர்வது அவசியம். ஒரு பக்கத்தில் கொள்ளை நோயின் பரவலும் அதனால் ஏற்படப்போகும் சுகாதரரப் பிணிகளும், மறுபக்கத்தில் பொருளாதாரச் சரிவும் மக்களின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகளும், இன்னுமொரு பக்கத்தில் வல்லரசுகளின் நெருக்குதலும் அதனால் ஆபத்துக்குள்ளாகும் நாட்டின் இறைமையும். இவற்றிற்கு மத்தியில் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையின்மையும் பௌத்த பேராதிக்கவாதிகளின் இன நசுக்கல் நடவடிக்கைகளும். எல்லாவற்றுக்கும் மேலாக, ஏதேச்சதிகார ஜனாதிபதி ஆட்சியை நோக்கி நகரும் அரசியல். நாடே போகும் திசைதெரியாது தடுமாறி நிற்கின்றது.

இந்தச் சிக்கல்களிலிருந்து நாட்டை விடுவித்து, நாட்டின் பல்லின கலாச்சாரத்தையும் பாதுகாத்து, இனங்களின் ஒற்றுமையுடன், ஜனநாயகப்பாதையில் மீண்டும் நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமென்ற ஆவலுடன் சிங்கள மக்களிடையேயும் தமிழ் மக்களிடையேயும் எத்தனையோ புத்திஜீவிகள் தமது கருத்துக்களை பேச்சிலும் எழுத்திலும் வெளியிட்டு வருகின்றனர். அதேபோன்று முஸ்லிம்களிடையேயும் முற்போக்குச் சிந்தனையுள்ள புத்திஜீவிகள் குழாமொன்று உருவாகியுள்ளது. இந்த நல்லவர்களின் கூட்டமைப்பொன்று மிக அவசியமாக அமைக்கப்பட வேண்டும். அந்தக் கூட்டமைப்பிலிருந்துதான் அரசியல் தலைவர்களும் உருவாகவேண்டும். மற்ற இனங்களின் அமைப்புகள் புத்திஜீவிகளை உள்வாங்கியுள்ளதுபோன்று முஸ்லிம்களின் அமைப்புகள் உள்வாங்கவில்லை. புத்திஜீவிகள் வேண்டப்படாத ஒரு வர்க்கமாக முஸ்லிம் சமூகத்தில் நடமாடுகின்றமை ஒரு துரதிஷ்டம்.

இது தொடர்பாக இரண்டு விடயங்களை முஸ்லிம் சமூகம் உணரவேண்டும். முதலாவதாக சிங்கள மக்களெல்லாருமே பேராதிக்கவாதிகளல்லர். அதேபோன்று தமிழர்களெல்லாருமே பிரிவினைவாதிகளுமல்லர். இரண்டாவதாக முஸ்லிம்களின் பிரச்சினைகள் எல்லாமே தனிப்பட்ட பிரச்சினைகள் என்றும் ஆதலால் முஸ்லிம் தலைவர்களே அவற்றைத் தீர்க்கவேண்டும் என்றும் எண்ணுவதைக் கைவிடவேண்டும்.

முஸ்லிம்கள் தனித்துவம் என்ற பெயரில் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டு வருவது பற்றிச் சில வருடங்களுக்கு முன்பிருந்தே நான் கூறிவருகிறேன். அது முஸ்லிம் கட்சிகளால் திட்டமிட்டே வளர்க்கப்படுகின்றது. எனவேதான் இக்கட்சிகள் கலைக்கப்பட்டு சர்வஇனங்களையும் அங்கத்துவப்படுத்தும் ஒரு நடுநிலைக் கட்சி உருவாக்கப்படுவது இன்றியமையாத ஒரு தேவை. அதைச் செயற்படுத்துவது புத்திஜீவிகளின் கைகளிலேதான் தங்கியுள்ளது. முதலில் முஸ்லிம் புத்திஜீவிகள் ஒன்றுகூடி இத்தேடலை ஆரம்பிக்க வேண்டும். செய்வார்களா? – Vidivelli

  • இக் கட்டுரை தொடர்பான மாற்றுக் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. உங்கள் கருத்துக்களை vidivelli@expressnewspapers.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
1 Comment
  1. 1.
    1981ல் தனது கல்முனைக்குடி இல்லத்தில் வைத்து ஒரு இரவு எனது தேசிய இனப் பிரச்சினையும் முஸ்லிம் மக்களும் ( https://noolaham.net/project/04/343/343.pdf ) புத்தகத்தின் கையெழுத்துப்பிரதியை அஸ்ரப் வாசித்தார். இரவு முழுவதும் நாம் விவாதித்தோம். என்னுடைய விவாதம் வட கிழக்கு முஸ்லிம்கள் தனிக் கட்சியாக அமையவேண்டும். மேற்படி கட்சியில் தென்னிலங்கையில் சிங்கள மக்கள் மத்தியில் சிதறிய தீவுகளாக வாழும் முஸ்லிம் மக்களை அரசியல் ரீதியாக இணைக்கக்கூடாது. அவர்கள் பல்வேறு தேசிய கட்சிகளோடு பயணிக்கிறார்கள். அதனை ஏற்றுகொண்டு செயல்படவேண்டும். பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தென்னிலங்கை முஸ்லிம் மக்கள் மத்தியில் உங்கள் முஸ்லிம் கட்ச்சி அரசியலுக்கு வெளியில் கலை இலக்கிய அமைப்புகளையும் புத்திஜீவிகளின் ஆய்வு அமைப்புகளையும் உருவக்கும் கட்ச்சிச்சார்பற்ற சமூக சேவைக்கான தாய் நிறுவனமொன்றாக செயல்படவேண்டும். வடகிழக்குகிற்க்கு வெளியில் கட்ச்சி சார்பற்ற சிவில் சமூக அமைப்பின் எழுச்சியே முக்கிய பணியாக இருக்க வேண்டுமென்பதையும் வலியுறுத்தினேன். ஆரம்பத்தில் அத்தகைய உயரிய போக்குகளே மேம்பட்டன. தோழர் அஸ்ரப் முஸ்லிம்காங்கிரசை அமைக்க எனது புத்தகத்தின் செல்வாக்கும் ஒரு காரணம் என குறிப்பிட்டிருக்கிறார்.
    2
    பின்னர் நெடுங்காலம் தொடர்பு இருக்கவில்லை. நானும் தொலைதூரம் போய்விட்டேன். அவருடைய இறுதிக்காலத்தில் இலங்கை வந்த போது சந்தித்தேன். அந்த சந்திப்பு ஒரு மாலைபொழுது ஏற்பாடு செய்யபட்டிருந்தது. ஆனால் தோழர்கள் பசீர் சேலுதாவுத், மஎஉதூர்கணி என எல்லோரிடமும் என்னுடன் தனிய பேசபோவதாக கூறிபார். எங்கள் தனிபேச்சு அந்த இரவு முழுவதும் தொடர்ந்தது. மாலை நான் நோர்வே நாட்டுக்கு செல்லவிருந்தேன். அவர் என்னை விடவில்லை. விமான நிலையத்துக்கு தனிக் காரில் அனுப்பி வைப்பதாகக் கூறி கண்டிக்கு பயணத்தில் என்னையும் அழைத்துச் சென்றார். காரில் எங்கள் விவாதம் தொடர்ந்தது. அவர் கண்டிக்கு அண்மையில் (மாவனல்லயாக இருக்கலாம்) ஒரு வீட்டில் காலை விருந்தின்போது தோழர் றவூப் ஹக்கீம் அவர்களை எனது வலது கை எனக்கூறி அறிமுகம் செய்துவைத்தார். அதற்க்கு முதல்நாள் தோழர் பசீர் சேகுதாவுத்தை என் கைவாள் என குறிப்பிட்டார். அவர்கள் இருவரும் எப்பவும் ஒன்றாக இருக்கவேண்டுமென நாம் விரும்பினோம்.
    3.
    எங்கள் உரையாடலில் அடிபடையில் இரண்டு விடயங்களில் மையப்பட்டிருந்தது. 1. வடகிழக்கில் முஸ்லிம் காங்கிரசை அதிகாரமுள்ள கிராமிய மட்டக் கிழைகள் அடிப்படையிலான கேடர் கட்சியாக மாற்றுவது பற்றியதாகும். 1.2, புவியியல் ரீதியாகச் சிதறிய வடகிழக்கு முஸ்லிம்களையும் கிழைகளையும் டிஜிற்றல் தொழில் நுட்பம்மூலம் இணைத்தல். 3, சூபி வகாபி பிரிவுகளை ஜனநாயக மயபடுத்துதலும் இணைத்தலும். 4. தென் இலங்கை முஸ்லிம் மக்கள் மத்தியில் இருந்து அரசியல் ரீதியாக வெளியேறுதல். 5. வடகிழக்கிலும் தெற்க்கிலும் முஸ்லிம் சிவில் சமூககம் வளர அனுசரணையாக இருத்தல். ஆய்வு, முஸ்லிம் தலைமையில் பல்லின சேவை தொண்டு நிறுவனங்களை ஊக்குவித்தல் என அமைந்தது.

Leave A Reply

Your email address will not be published.