கமர் நிசாம்தீன் மீது பொய்க் குற்றச்சாட்டு : அர்சலானுக்கு நான்கரை வருட சிறை

0 979

அவுஸ்திரேலியாவில், இலங்கையரான கமர் நிஸாம்தீன் மீது பொய்யான பயங்கரவாத குற்றச்சாட்டை சுமத்திய அர்சலான் கவாஜாவுக்கு அந்நாட்டு நீதிமன்றம் நான்கரை வருட சிறைத்தண்டனை விதித்து  தீர்ப்பளித்தது.

தன்னுடைய சக ஊழியரான கமர் நிஸாம்தீன் என்பவரை வேண்டுமென்றே தவறாக பயங்கரவாதி எனும் வகையில் சித்தரித்து சிறையில் அடைக்கச் செய்த குற்றச்சாட்டில் ஆஸி. கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜாவின் மூத்த சகோதரர் அர்சலான் தாரிக் கவாஜா மீதே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கமர் நிஸாம்தீனுக்கும் அர்சலான் தாரிக் கவாஜாவுக்கும் பொதுவான தோழி ஒருவர் உள்ளார், இந்நிலையில் கமர் நிஸாம்தீனை அந்த பெண் காதலிக்கிறார் என்று தவறாகக் கருதி பொறாமையில் போலி பயங்கரவாதக் குற்றச்சாட்டில் சிக்கவைத்தார் தாரிக் கவாஜா.

இவரால்  கமர் செய்யப்பட்டு 2018 இல் அதிபாதுகாப்பு சிறையில் 4 வாரங்கள் அடைக்கப்பட்டார். மிகவும் தவறாக அவர் பயங்கரவாதி என்று ஊடகங்களால் சித்தரிக்கப்பட்டார். ஆனால் பொலிஸார் விசாரணை மேற்கொண்டதில் கவாஜா சகோதரரின் கைவரிசை அம்பலமானது.

இந்நிலையில் தன் குற்றத்தை தாரிக் கவாஜா ஒப்புக் கொண்டார். இதே போல் 2017 இல் இதே காதல் பொறாமையினால் இன்னொரு நபரையும் பயங்கரவாதி என்று சித்தரிக்க முயன்றதையும் கவாஜா ஒப்புக் கொண்டார்.

இதனையடுத்து நியுசவுத்வேல்ஸ் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ராபர்ட் வெப்பர், கவாஜாவின் 40 வயது மூத்த சகோதரருக்கு 4 ஆண்டுகள் மற்றும் 6 மாத சிறைத்தண்டனை விதித்தார். இதில் 2 ஆண்டுகள் 6 மாதங்களுக்குள் அவர் விடுவிக்கப்பட முடியாது.

முன்னாள் பிரதமர் மால்கம் டர்புல் கொலை முயற்சி, கவர்னர் ஜெனரல் மற்றும் பொலிஸ் நிலையங்கள் மீது தாக்குதல், மெல்போர்ன் பாக்சிங் டே டெஸ்ட்டில் தாக்குதல்  நடாத்த கமர் திட்டமிட்டிருந்ததாக இவர் பொய்க் குற்றச்சாட்டை சுமத்தியிருந்தபர்.

இவரது இந்தச் செயலினால் சிறையில் வாடிய கமர் இப்போது  இலங்கையில் வசித்து வருகிறார். ஆனால் அமெரிக்காவில் உள்ள தனது எதிர்கால மனைவியை அவரால் சந்திக்கச் செல்ல முடியவில்லை,  பயங்கரவாதி என்று அவர் முத்திரைக் குத்தப்பட்டதால் அவருக்கு அமெரிக்க விசா கிடைக்கவில்லை.

தனது சகோதரனின் இத்தகைய செயலுக்காக தான் வெட்கித் தலைகுனிவதாக கூறிய கிரிக்கட் வீரர் உஸ்மான் கவாஜா, “வாழ்க்கையில் இந்தத் தருணம் வரை நான் ஒரு ஆதர்ச குடிமகனாக இருந்தேன், ஒரு உதாரணக் குடிமகனாக இருந்தேன்” என்று வருந்தியுள்ளார். – vidivelli

Leave A Reply

Your email address will not be published.