மௌலவி முபாரக் முன்னுதாரணமாக வாழ்ந்தவர்

முஸ்லிம் மீடியா போரம் அனுதாபம்

0 730

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளரும் அதன் முன்னாள் தலைவரும் நாடறிந்த மூத்த மார்க்க அறிஞருமான மௌலவி எம்.எம்.ஏ. முபாரக் (கபூரி, மதனி) அவர்களது மறைவுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது ஆழ்ந்த கவலையை தெரிவிக்கிறது.

அண்மைக் காலமாக சுகயீனமுற்று தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வந்த எம்.எம்.ஏ. முபாரக் மௌலவி அவர்கள் தனது 71வது வயதில் நேற்று (27) காலமானார். இது தொடர்பில் போரத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் என். எம். அமீன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது ,

அவரது மறைவு, முஸ்லிம் சமூகத்தில் குறிப்பாக ஆலிம்கள் மத்தியில் பாரியதொரு இடைவெளியை ஏற்படுத்தியிருக்கிறது. கபூரிய்யா அரபுக் கல்லூரியின் விரிவுரையாளராகவும் பின்னர் அதிபராகவும் கடமையாற்றிய முபாரக் மௌலவி அவர்கள் நூற்றுக்கணக்கான ஆலிம்களை உருவாக்கியதில் மகத்தான பங்களிப்புச் செய்தவர்.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவராக இருந்தபோது முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட பல்வேறு சவால்களை நிதானமாக கையாண்டவர். பின்னர் ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளராக இருந்து தனது பணியை இறுதி வரை செவ்வனே நிறைவேற்றி வந்தார்.

இலங்கை ஆலிம்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து மறைந்த முபாரக் மௌலவி அவர்கள் சன்மார்க்க, சமயப் பணிகளுக்கு அப்பால் சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வந்தாதர். தேசிய மட்ட சிவில் அமைப்புகளுடன் இணைந்து சமூக விவகாரங்களில் முனைப்புடன் ஈடுபட்டு வந்த அவர், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் நிகழ்வுகளிலும் அதிதியாக, பிரமுகராக பங்கேற்று போரத்தின் வளர்ச்சிக்காக தனது ஆலோசனைகளை வழங்குபவராக இருந்தார். மட்டுமன்றி, ஏனைய இஸ்லாமிய அமைப்புகளுடன் மிகவும் சுமுகமான உறவைக் கொண்டிருந்த அவர், இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகளின் மனதை வென்ற ஒருவராகவும் திகழ்ந்தார்.

இங்கிதமாக பழகும் சுபாவம், நிதானமான போக்கு, எல்லோரையும் அரவணைத்துச் செல்கின்ற பாங்கு, கருத்து வேறுபாடுகளின்போது முரண்படுவோரைக் கையாளும் விதம்… என்பன அவரது ஆளுமைக்கு மெருகூட்டிய அம்சங்கள் என்றால் மிகையாகாது.

வல்ல இறைவன் அவரது சமய, சன்மார்க்க, சமூகப் பணிகளை ஏற்று அங்கீகரித்து அருள் புரிய வேண்டுமெனவும் அவரது பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர், ஆலிம்கள், சமூகப் பணியாளர்கள் அனைவருக்கும் அழகிய பொறுமைய வழங்க வேண்டுமெனவும் இந்த சந்தர்ப்பத்தில் பிரார்த்திக்கின்றோம். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.