உயிருக்கு உலை வைக்கும் ‘கொவிட் 19’ போலிச் செய்திகள்’

0 987
  • எம்.பி.எம். பைறூஸ்

கொரோனா வைரஸ் மற்றும் கொவிட் 19 போன்ற சொற்களை உலகம் பயன்படுத்த ஆரம்பித்த மறுகணமே ‘Infodemic’ எனப்படும் புதிய சொல்லாடலை உலக சுகாதார நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதற்கான பொருத்தமான தமிழ்ச் சொல் இதுவரை பயன்பாட்டுக்கு வராவிடினும், அளவுக்கதிகமான தவறான அல்லது இட்டுக்கட்டப்பட்ட தகவல்களின் பரிமாற்றம் என்பதையே இந்த ஆங்கிலச் சொல் குறிக்கிறது. ஒரு வைரஸைப் போலவே, ஒரு தொற்று நோய் போலவே இத் தவறான தகவல்களும் பரவி அளவிடமுடியாத எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக கொவிட் 19 தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதில் சுகாதாரத் துறையினருக்கு இந்த தவறான தகவல்களே அதிக இடைஞ்சல்களை ஏற்படுத்துகின்றன எனலாம்.

உயிராபத்தை விளைவிக்கும்  போலிச் செய்திகள்

American Journal of Tropical Medicine and Hygiene எனும் சஞ்சிகை அண்மையில் நடாத்திய ஆய்வொன்றில், 2020 ஆம் ஆண்டின் முதல் 3 மாத காலப் பகுதியில் கொரோனா வைரஸ் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட தவறான தகவல்களால் உலகெங்கும் 800 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் 5800 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. மதுசாரம் அடங்கிய தொற்று நீக்கிகளை அருந்துவது கொரோனா வைரசிலிருந்து பாதுகாக்கும் என சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட தகவல்களை நம்பியோரே இவ்வாறு அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் என குறித்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த மார்ச் மாத நடுப்பகுதியில் ஈரானில் போலிச் செய்திகளை நம்பி மெதனோல் கரைசல்களை உட்கொண்ட சுமார் 300 பேர் இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்ததுடன் 1000 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றனர். இவர்களில் அதிகமானோர் கண் பார்வையை இழந்துள்ளதாகவும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொடர்பாக பகிரப்பட்ட போலியான செய்திகள் பொது மக்களின் உயிர்களுக்கு உலை வைத்தது மாத்திரமன்றி, குறித்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனமும் உலக நாடுகளும் முன்னெடுத்த தடுப்பு நடவடிக்கைகளுக்கும் குந்தகம் விளைவிப்பதாக அமைந்தமை துரதிஷ்டவசமானதாகும்.

அதனால்தான் “எமது பொது எதிரி கொவிட் 19. ஆனால் அது பற்றி அதிகம் பகிரப்படும் போலியான தகவல்களும் எமது எதிரிதான் என்பதை மறந்துவிடக் கூடாது” என ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரஸ் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். அதேபோன்று “நாம் கொவிட் 19 வைரஸ் பரவலுடன் மாத்திரம் போராடவில்லை. போலியான தகவல் பரிமாற்றங்களுடனும் போராடிக் கொண்டிருக்கிறோம். இப் போலிச் செய்திகள் கொரோனா வைரஸை ஒழிக்கும் எமது போராட்டத்தை திசை திருப்புகின்றமை கவலைக்குரியது” என உலக சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் தெட்ரொஸ் அதானொம் தெரிவித்த கருத்தும் இதன் பாரதூரத்தை உணர்த்துவதாகும்.

இலங்கையில் கொவிட் 19 போலிச் செய்திகள்

கொவிட் 19 பரவல் ஆரம்பித்த பின்னர் உலக நாடுகளைப் போன்றே இலங்கையிலும் போலிச் செய்திகளின் பரவல் அதிகரித்திருந்தமை குறிப்பிட்டுக் கூறத்தக்கதாகும்.
இலங்கையைப் பொறுத்தவரை சுகாதார, மருத்துவ ஆலோசனைகள் எனும் போர்வையில் பரப்பப்படும் போலிச் செய்திகளை நம்பிப் பின்பற்றும் போக்கு அதிகரித்து வருகிறது.

கடந்த பெப்ரவரி மாதம் பேஸ்புக் மூலமாக பகிரப்பட்ட போலியான தகவலை நம்பி, Gaja Madara எனப்படும் இலைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட குடிபானத்தை அருந்திய கம்பஹாவைச் சேர்ந்த 36 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்தமையானது, இலங்கையில் போலிச் செய்திகள் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை உணர்த்துவதாக உள்ளது.

அதேபோன்று கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலையால் வெளியிடப்பட்டுள்ள கொவிட் 19 தடுப்பு முறைகள் எனக் குறிப்பிட்டு மருத்துவ சிபாரிசுகள் அடங்கிய பதிவொன்று கொவிட் 19 பரவல் காலத்தில் இணையத்தளங்கள், சமூக வலைத்தளங்கள் வாயிலாக பகிரப்பட்டன. இதனை ஆயிரக் கணக்கானோர் தமது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததுடன் அவற்றை நம்பி பின்பற்றவும் செய்தனர். எனினும் உடனடியாக இந்த மருத்துவ சிபாரிசுகள் போலியானவை என்பதையும் அவ்வாறானதொரு அறிக்கையை தாம் வெளியிடவில்லை எனவும் ஐ.டி.எச். வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் ஹஸித திசேரா உறுதிப்படுத்தியிருந்தார். இவ்வாறான உறுதிப்படுத்தப்படாத மருத்துவ ஆலோசனைகள், வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டாம் எனவும் அவர் பொது மக்களை எச்சரித்திருந்தார்.

குறித்த மருத்துவ சிபாரிசில் அடங்கியுள்ள பொருட்கள் ஆரோக்கியமானவையே என்ற போதிலும் அவற்றுக்கும் கொவிட் 19 வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.
தற்போது இலங்கையில் கொவிட் 19 மூன்றாவது அலை பரவ ஆரம்பித்துள்ள நிலையிலும் பல போலிச் செய்திகள் வலம்வர ஆரம்பித்துள்ளன. போலிச் செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ செய்திகளை மாத்திரமே பின்பற்றுமாறும் ஜனாதிபதியே மக்களிடம் வேண்டுகோள்விடுக்கின்ற அளவுக்கு இதன் தாக்கம் இப்போது நாட்டில் அதிகம் உணரப்படுகிறது.

இக் காலப்பகுதியில் போலியான செய்திகளை பரப்பிய குற்றத்திற்காக வெள்ளவத்தையில் வசிக்கும் 60 வயதான நபர் ஒருவரும் மிட்டியாகொடையில் வசிக்கும் 18 வயது இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிராக தண்டனைச் சட்டக்கோவை, பொலிஸ் கட்டளைச் சட்டம் மற்றும் கணினி குற்றங்கள் தொடர்பான சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்கள் வாயிலாக தமக்கு கிடைக்கப் பெறும் தவறான தகவல்களைப் பரப்புவோரில் பாமர மக்கள் மாத்திரமன்றி நன்கு படித்தவர்களும் உள்ளடங்குகின்றனர். அந்தவகையில் படித்தவர்கள், பாமரர்கள் என்ற வேறுபாடின்றி அனைவருக்கும் இதன் பாரதூரம் தொடர்பிலும் தகவல்களை உறுதிப்படுத்திய பின்னரே பகிர வேண்டும் என்பது பற்றியும் அறிவூட்ட வேண்டியுள்ளது.

” சுகாதாரம் சார்ந்த போலித் தகவல்களை மக்கள் அதிகம் நம்புகின்றனர். இதற்குக் காரணம் அதில் பயன்படுத்தப்படும் மருத்துவ, விஞ்ஞான பெயர்களேயாகும். உதாரணமாக மாத்திரைகள், மூலிகைகளின் பெயர்களைக் குறிப்பிட்டு இதனைப் பயன்படுத்தினால் இந்த நோய் குணமாகும் என தகவல்களை உருவாக்கி பரப்புகின்றனர். இதனை உருவாக்குபவரின் நோக்கம் வேறுபட்டிருப்பினும், இதனை பகிர்பவர்களின் நோக்கம் பிறருக்கு நன்மை பயக்கும் தகவல் என்பதேயாகும். ஆனால் இது உயிருக்கே உலை வைக்கும் தகவல் என்பதை இவர்கள் அறிந்திருப்பதில்லை” என பொது விசேட வைத்திய நிபுணர் கிருஷ்ணமூர்த்தி சுதாகரன் குறிப்பிடுகிறார். மக்கள் மத்தியில் சுகாதாரம் சார் போலிச் செய்திகள் பற்றி விழிப்புணர்வூட்ட வேண்டியது அவசியம். இதனைச் செய்ய சகல வைத்தியர்களும் முன்வர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சில தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து அவர் கடமையாற்றிய மகப்பேற்று விடுதி மற்றும் பிரசவ அறை என்பன மூடப்பட்டுள்ளதாகவும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட தகவல் அம்மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனால் வைத்தியசாலையினுள்ளும் வெளியிலும் பதற்ற நிலை தோன்றியதுடன் மாவட்டத்தின் பல இடங்களிலும் சனநடமாட்டமும் திடீரென குறைந்தது. மக்களும் வைத்தியசாலைக்கு வருவதைக் குறைத்துக் கொண்டனர். குறித்த தாதிக்கு தொற்று ஏற்பட்டமை உண்மையாயினும் அவருக்கு கம்பஹா மாவட்டத்திலுள்ள தனது இல்லத்தில் வைத்தே தொற்று ஏற்பட்டுள்ளது என்பதும் அதன்பிற்பாடு அவர் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு கடமைக்குச் சமுகமளித்திருக்கவில்லை எனவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் திருமதி கே.கலாரஞ்சினி ஊடக சந்திப்பின் மூலம் தெளிவுபடுத்தியதையடுத்தே நிலைமை சுமுகமானது.

போலிச் செய்தி ஒன்றை கண்டறிவோம்

கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்து 10 மாதங்களுக்கு மேலாகின்ற போதிலும் இதுவரை அதற்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. பல நாடுகளில் இதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. எனினும் “கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஈழத் தமிழிச்சி. தமிழனின் பெருமைமிகு வரலாறு மீளத் திரும்புகிறது” எனும் தலைப்பில் அண்மைக் காலமாக ஒரு செய்தி உலா வருகிறது. இதனை பலரும் பகிர்ந்து வருவதுடன் அதில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த செய்தியை உறுதிப்படுத்த முதலில் நாம், இவ்வாறு கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா எனத் தேடினோம். உலகில் கொரோனா வைரஸ் தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்களை உலக சுகாதார நிறுவனமே வெளியிட்டு வருகிறது. அதற்கமைய அதன் இணையத்தளத்திற்குச் சென்று பார்த்தபோது, இதுவரை எந்தவித மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அவ்வாறு பகிரப்படும் போலிச் செய்திகள் குறித்து தமது நிறுவனத்தின் தொழில்நுட்பப் பிரிவினர் கவனம் செலுத்தி வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் குறித்த செய்தியில், குறித்த மருந்தைக் கண்டுபிடித்த வைத்தியர் ஞானம் கிருஷா எனப் பெயர் குறிப்பிட்டு அவரது புகைப்படம் ஒன்றும் இணைக்கப்பட்டிருந்தது. எனவே புகைப்படங்களைக் சரிபார்க்கும் ‘கூகுள் ரிவேர்ஸ் இமேஜ்’ தேடு பொறி மூலம் குறித்த புகைப்படத்தை தேடிய போது அதற்கு எந்தவித பதிலும் கிடைக்கவில்லை. இறுதியாக, இதனை உறுதி செய்வதற்காக பிரபல வைத்திய நிபுணர் ஒருவரைத் தொடர்பு கொண்டு கேட்ட போது இதுவரை எந்தவித மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் இலங்கையில் அதற்கான எந்த முயற்சிகளும் முன்னெடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு நாம் சற்று முயற்சி செய்யும்பட்சத்தில் இவ்வாறான போலிச் செய்திகளை உறுதிப்படுத்த முடியுமாகவிருப்பதுடன் அவற்றைப் பகிராதிருக்கவும், அதுபற்றி பிறருக்கு விழிப்பூட்டவும் முடியுமாகவிருக்கும்.

விழிப்புடன் இருப்பது நமது கடமை

போலிச் செய்திகள் பல்வேறு நோக்கங்களுக்காகப் பரப்பப்படுகின்றன. அதிலும் குறிப்பாக பல போலிச் செய்திகள் மருந்துப் பொருட்களின் விற்பனையை அதிகரிப்பதற்காகவே வடிவமைக்கப்படுகின்றன. ஈரானில் அதிகமானோர் உயிரிழந்தமைக்கு காரணம் குறித்த போலிச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்த மருந்துகள் வீடு வீடாக விற்பனை செய்யப்பட்டமையும் அதனை மக்கள் வாங்கிப் பருகியமையுமே ஆகும். அந்த வகையில் சுகாதாரம்சார் போலிச் செய்திகள் உயிருக்கே உலை வைக்கக் கூடியவை. கண் போன்ற உடலின் முக்கிய உறுப்புகளை செயலிழக்கச் செய்யக் கூடியவை. அந்த வகையில் நாம் இவ்வாறான செய்திகள் தொடர்பில் மிகவும் விழிப்புடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

அவ்வாறான ஏதேனும் தகவல் உங்களுக்கு கிடைத்தாலோ அல்லது நீங்கள் அங்கம் வகிக்கும் சமூக ஊடக குழுமங்களில் பகிரப்பட்டாலோ அதனைப் பிறருடன் பகிர முன்னர் பின்வரும் 5 இலகுவான கேள்விகளை எழுப்பி விடை காணுங்கள். அது நிச்சயம் உங்களுக்கும் உங்கள் நட்பு பட்டியலில் உள்ளவர்களுக்கும் பயனுள்ளதாக அமையும்.

1. இத் தகவலை முதலில் உருவாக்கியது யார்?
2. தகவலின் மூலம் என்ன?
3. இது எங்கே இருந்து உங்களுக்கு வந்தது?
4. நீங்கள் ஏன் இதனை பகிர வேண்டும்?
5. இது எப்போது முதலில் பதிவிடப்பட்டுள்ளது?

Vidivelli 

Leave A Reply

Your email address will not be published.