என்ன அடிப்படையில் எதிரணி முஸ்லிம் எம்.பி.க்கள் ஆதரவளித்தனர்?

0 658

அரசியலமைப்பின் 20 ஆம் திருத்தச் சட்டம் மீதான வாக்கெடுப்பில் திருத்தத்துக்கு ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் அளிக்கப்பட்டிருக்கின்றன. இதற்கமைய இத்திருத்தத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கப் பெற்றிருக்கிறது.

நாட்டின் ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைப்பதாகவும் பாராளுமன்றத்தின் அதிகாரங்களைக் குறைத்து ஜனாதிபதி எனும் தனி நபரின் கரங்களில் நிறைவேற்று அதிகாரத்தைக் குவிப்பதாகவும் அமைந்துள்ள திருத்தங்கள் என 20 ஆம் திருத்தம் கடும் எதிர்ப்புகளைச் சம்பாதித்திருந்த நிலையிலேயே, மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கப் பெற்றிருக்கிறது.

துரதிஷ்டவசமாக, எதிரணியில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் 20 ஆம் திருத்தத்தை ஆதரித்து வாக்களித்துள்ளமை கவலைக்குரியதாகும். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் அதன் தலைவர் ரவூப் ஹக்கீமைத் தவிர ஏனைய அனைவரும் ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதற்கமைய எம்.பி.க்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைசல் காசிம், நஸீர் அகமட், எம்.எஸ்.தௌபீக் ஆகியோர் திருத்தத்தை ஆதரித்து வாக்களித்துள்ளனர். மறுபுறம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் மற்றும் உறுப்பினர் முஷர்ரப் முதுநபீன் ஆகியோர் எதிர்த்து வாக்களிக்க, அதன் எம்.பி.க்களான இஷாக் ரஹ்மான் மற்றும் அலி சப்ரி ரஹீம் ஆகியோர் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

முஸ்லிம் கட்சிகளின் எம்.பி.க்கள் சிலர் 20 ஆம் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிப்பர் என ஏற்கனவே அரசாங்க தரப்பு நம்பிக்கையுடன் தெரிவித்திருந்தது. அது இன்று நடந்தேறியிருக்கிறது. 18 ஆவது திருத்தத்திலும் இவ்வாறுதான் முஸ்லிம் கட்சிகள் ஆதரவு வழங்கின. ஆனால் இம்முறை கட்சியின் தலைமைகள் இருவரும் ஆதரவளிக்காது தவிர்ந்து கொண்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.

வாக்களிப்புக்கு முன்னர் உரையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவருமான நஸீர் அஹமட், கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் 5 வருட ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களுக்கு அதிக பாதிப்புகள் இடம்பெற்றதாகவும் ஜனாதிபதியின் கரங்களில் அதிகாரம் இருப்பதையே தாம் விரும்புவதாகவும் குறிப்பிட்டு தனது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார். இவரது இந்த செயலுக்கும் கருத்துக்கும் சமூக வலைத்தளங்களில் உடனடியாகவே கடும் எதிர்ப்புகள் வெளிப்படுத்தப்பட்டன.

உண்மையில் ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் எம்.பி.க்கள் முஸ்லிம் சமூகத்தின் இருப்புக்கும் பாதுகாப்புக்கும் என்ன விதமான உத்தரவாதங்களை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக் கொண்டனர் என்பது பற்றி இதுவரை எதையும் கூறவில்லை. வழக்கமாக முஸ்லிம் எம்.பி.க்களை பணத்தைக் கொடுத்தும் பதவிகளைக் கொடுத்தும் இலகுவாக விலைக்கு வாங்க முடியும் என்ற கருத்தாடல் அரசியல் அரங்கில் உள்ளதை அறிவோம். இம்முறையும் முஸ்லிம் எம்.பி.க்கள் என்ன அடிப்படையில் 20 ஆம் திருத்தத்திற்கு ஆதரவளித்தனர் என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும். கட்சித் தலைமைகள் மாத்திரம் எதிர்த்து வாக்களித்தால் போதாது. மாறாக ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கான போராட்டத்தில் சகலரும் இணைந்தே செயற்பட வேண்டும்.

அந்த வகையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமையும் தமது உறுப்பினர்களின் தீர்மானத்திற்குப் பொறுப்புக் கூறவேண்டும். இவ்வாறு ஆதரவு தெரிவித்தமையானது ஆளும் தரப்பிற்கு திருப்தியளிப்பதாக இருப்பினும், நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாக்க தம்மை அர்ப்பணித்துச் செயற்படும் சக்திகள் மத்தியில் பலத்த அவப்பெயரைச் சம்பாதித்துள்ளது. இது பற்றிய பிரதிபலிப்புகளை அடுத்துவரும் தினங்களில் எம்மால் கண்டுகொள்ள முடியுமாகவிருக்கும். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.