புத்தளத்தை தளமாகக் கொண்டு செயற்படும் முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தின் நிறுவுனரும் நிர்வாக இயக்குனருமான ஜுவைரியா முகைதீன், 2020 ஆம் ஆண்டுக்கான ஆசிய – பசுபிக் பிராந்தியத்திற்கான மனித உரிமை பாதுகாவலர் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அயர்லாந்தைத் தளமாகக் கொண்டியங்கும் ப்ரொன்ட் லைன் டிபெண்டர்ஸ் (Front Line Defenders) நிறுவனமானது, உலகளாவிய ரீதியில் ஆபத்துகளுக்கு மத்தியில் பணியாற்றி வரும் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு வருடாந்தம் இவ்விருதினை வழங்கி வருகிறது. இதற்கமைய அயர்லாந்தின் 5 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் குழாம், 2020 ஆம் ஆண்டுக்கான ஆசிய – பசுபிக் பிராந்தியத்திற்கான மனித உரிமை பாதுகாவலர் விருதை ஜுவைரியா முகைதீனுக்கு வழங்க தீர்மானித்துள்ளது.
குறித்த விருது வழங்கும் நிகழ்வு சர்வதேச மனித உரிமைகள் பாதுகாவலர் தினமான எதிர்வரும் டிசம்பர் 9 ஆம் திகதி அயர்லாந்தில் நடைபெறவுள்ளது. கொவிட் 19 நிலைமை காரணமாக இவ்வருட விருது வழங்கும் விழா, இணைய வழியாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
“ஜுவைரியா முகைதீன் இலங்கையில் முஸ்லிம் பெண்கள் மற்றும் சிறுமிகள் எதிர்நோக்கும் உரிமைசார் பிரச்சினைகள் தொடர்பில் குரல் கொடுப்பதுடன் அவர்களுக்கு ஆதரவாகவும் செயற்பட்டு வருகிறார். பல்வேறு தரப்புகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலேயே அவர் இந்த கடினமான பயணத்தை முன்னெடுக்கிறார். தனது இளமைக்காலத்திலேயே வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட அவர், அந்த வலிக்கு மத்தியிலும் சக பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் நீதியை நிலைநாட்டுவதற்காகவும் தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்டு வந்துள்ளார். அந்த வகையில் ஜுவைரியா முகைதீன், முழு இலங்கைக்கும் முன்னுதாரணமாக விளங்குகிறார்” என விருது வென்றவர்களை அறிமுகப்படுத்தும் செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய ப்ரொன்ட் லைன் டிபெண்டர்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அன்ட்ரூ அன்டர்ஸன் குறிப்பிட்டார்.
வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட சமூகத்திற்கும் குறிப்பாக பெண்கள் மற்றும் சிறார்களுக்கு உதவிகளை நல்கும் பொருட்டு 2010 ஆம் ஆண்டு முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகம் எனும் அமைப்பை ஜுவைரியா முகைதீன் ஆரம்பித்தார். தமது சமூகத்தில் துஷ்பிரயோகம், துன்புறுத்தல்கள், வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு சட்டம் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் உதவிகளை வழங்கி வருகிறார். அத்துடன் முஸ்லிம் தனியார் சட்ட திருத்தத்திற்காகவும் நீண்ட காலமாக குரல் கொடுத்து வருகிறார்.
“எனது மூன்று தசாப்தகால சமூகப் பணியில் பல்வேறு சவால்களையும் அச்சுறுத்தல்களையும் சந்தித்துள்ளேன். நான் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டு 30 வருடங்கள் பூர்த்தியாகின்ற இச் சந்தர்ப்பத்தில் இவ்விருது கிடைத்துள்ளமை மகிழ்ச்சியாகவுள்ளது. இவ்விருது கிடைத்தமையானது எனது மனித உரிமை செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கான உந்துசக்தியை வழங்கியுள்ளது” என ஜுவைரியா முகைதீன் குறிப்பிட்டார். – Vidivelli