ஆபத்து நீங்கவில்லை

0 719

உலகளாவிய ரீதியில் கொவிட் -19 வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 மில்லியனைத் தாண்டியுள்ளது. அமெரிக்காவின் ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா வைரஸ் வள நிலையத்தின் புள்ளிவிபரங்களின் படி நேற்று மாலை வரை உலகளாவிய ரீதியில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 1,015,429 ஆகும். இவற்றுள் அமெரிக்காவில் 207,147 பேரும் பிரேசிலில் 143,952 பேரும் இந்தியாவில் 98,678 பேரும் எண்ணிக்கையில் அதிகமாக உயிரிழந்துள்ளனர்.

2019 டிசம்பரில் சீனாவில் பரவ ஆரம்பித்த கொவிட் -19 வைரஸின் பாதிப்பு, 10 மாதங்கள் கடந்தும் குறைந்ததாகத் தெரியவில்லை. உலகின் பல நாடுகள் முடக்க நிலையைத் தளர்த்தி வழமை நிலைக்குத் திரும்ப முயற்சிக்கின்ற போதிலும் மீண்டும் மீண்டும் இவ் வரைஸ் பரவல் அதிகரித்துக் கொண்டே செல்கின்றமை பெரும் சவாலாக மாறியுள்ளது.

இவ் வைரசுக்கு மருந்து கண்டுபிடிப்பது தொடர்பான முயற்சிகள் வளர்ச்சியடைந்த பல நாடுகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரை உலகின் பல நாடுகளாலும் சுமார் 200 தடுப்பு மருந்துகள் உருவாக்கப்பட்டுள்ளன. எனினும் அவை எதுவும் வெற்றியளிக்கவில்லை. இந் நிலையில் அவ்வாறு தடுப்பூசி கண்டுபிடித்தாலும் அதனை மக்கள் மத்தியில் பிரயோகிப்பதில் உடனடியாக வெற்றி பெற முடியாது என்றும் அதற்குப் பல மாதங்கள் அல்லது வருடங்கள் எடுக்கும் என்றும் விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

அண்மைய வாரங்களில் நாளொன்றுக்கு சுமார் 90 ஆயிரம் பேருக்கு புதிதாக கொவிட் -19 தொற்று உண்டாகி வருகிறது. அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மையம் நடத்திய ஆய்வு ஒன்றிலும் கொவிட் -19 தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் குறைந்தபட்சம் 35% பேர், தொற்று இருந்ததற்கு முந்தைய உடல் நிலைக்கு திரும்பவில்லை என்று கூறுகிறது.

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக தீவிர பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு குணமடைந்த பின்னரும் வெவ்வேறு பிரச்சினைகள் வருவது மிகவும் இயல்பானதுதான். ஆனால் மிதமான பாதிப்புக்கு உள்ளானவர்கள் கூட இதற்கு முந்தைய உடல் நிலையை எட்டவில்லை என்று மருத்துவர் நடாலி லேம்பர்ட் கூறுகிறார். கொவிட்-19இன் நீண்ட காலத் தாக்கங்கள் குறித்து இப்போதே கூற முடியாது என்று உலகெங்கிலுமுள்ள வல்லுநர்களில் சிலர் கூறுகிறார்கள்.

இந் நிலையில் உலக நாடுகள் கொவிட் 19 வைரஸ் முற்றாக ஒழிக்கப்படும் வரையோ அல்லது அதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரையோ காத்திராது தமது நாடுகளின் அன்றாட நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டுவர முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. இலங்கையும் இன்று அவ்வாறானதொரு நிலையிலேயே உள்ளது. பெரும்பாலும் இலங்கையில் சமூகப் பரவல் இல்லை என்ற நிலையில் சகல நடவடிக்கைகளும் வழமைக்குத் திரும்பியுள்ளன. இலங்கை ஒரு தீவு என்பதால் ஏனைய நாடுகளிலிருந்து இலங்கைக்குள் நுழைபவர்களால் ஆபத்துகள் ஏற்படும் வாய்ப்பு இல்லை அல்லது மிகக் குறைவாகும். இதுவே இலங்கை இந்த வைரசை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியமைக்கான காரணமுமாகும்.

சீனாவுக்கு அடுத்ததாக இலங்கையே வெற்றிகரமாக இந்த வைரஸ் பரவலை எதிர்கொண்டதாக சில கணிப்புகள் கூறுகின்றன. எனினும் விமான நிலையத்தை திறக்கும்பட்சத்தில் இலங்கையும் ஆபத்தில் தள்ளப்படலாம். சுகாதார அமைச்சு 100 வீதம் கொவிட் 19 பரவலைக் கட்டுப்படுத்திவிட்டதாக அறிவிக்கும் வரை விமான நிலையத்தை திறக்கப் போவதில்லை என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

விமான நிலைம் மூடப்பட்டுள்ளதன் மூலம் ஆயிரக் கணக்கான இலங்கையர்கள் நாட்டுக்கு வர முடியாது வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கின்றனர். இவர்களை நாட்டுக்கு அழைத்துவர அரசாங்கம் சில நடவடிக்கைகளை எடுத்தாலும் அது போதுமானதாக இல்லை. இத்திட்டத்தில் பண வசதி படைத்தவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் வேலைவாய்ப்பை இழந்து தவிக்கும் ஆயிரக்கணக்கான இலங்கைத் தொழிலாளர்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாகவுள்ளது. இவர்கள் விடயத்தில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

இவை ஒருபுறமிருக்க இலங்கை மக்கள் எந்தளவு தூரம் கொவிட் 19 கட்டுப்பாட்டு விதிகளை தொடர்ந்து கடைப்பிடிக்கப் போகிறார்கள் என்பதிலேயே எதிர்கால வெற்றி தங்கியிருக்கிறது. இலங்கை மக்கள் கொவிட் 19 வரைஸ் பரவலை இப்போது முற்றாக மறந்துவிட்டதாகவே தெரிகிறது. அயல்நாடான இந்தியாவில் இவ் வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் நாம் மிகவும் அவதானமாக நடந்து கொள்ள வேண்டும். அலட்சியமாக இருப்பது பெரும் ஆபத்தைக் கொண்டுவந்துவிடலாம். எனவேதான் அரசாங்கம் இதுவிடயத்தில் சில கட்டுப்பாட்டு விதிமுறைகளை இறுக்கமாகப் பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.