காடழிப்பு: முஸ்லிம்களுக்கு எதிரான கோஷம் மட்டுமா?

0 931
தமிழில்: ஏ.எல்.எம். சத்தார்
 நன்றி: பிபிசி சிங்கள சேவை

‘‘புரடெக்ட் வில்பத்து என்று அன்றைய நாட்களில் கூச்சலிட்ட நண்பரொருவரிடம் நான், ‘மச்சான் சிங்கராஜவனத்தை ஊடறுத்து பாதையொன்று அமைக்கப்படுகிறதே? சரணாலய பூமியொன்றையும் புல்டோஸர் இட்டு தரைமட்டமாக்கியுள்ளனரே…’காடழிப்பு தொடர்பாக கடந்த சில வாரங்களாக நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் முகநூல்களில் பேசப்பட்ட குறிப்புக்களில் ஒன்றே இது.

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இணைப்பிலான கூட்டரசாங்க காலத்தில், வில்பத்துவில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் காடழிப்பை முன்னிலைப்படுத்தி பாரியளவிலான மக்கள் அபிப்பிராயமொன்று முன்னெடுக்கப்பட்டது.

சமூக வலைத்தளங்களூடாக தமது குரலை ஓங்கி ஒலிக்கச் செய்தனர். அதனால் ஈர்க்கப்பட்ட ஆயிரக்கணக்கான வாலிபர், யுவதிகள், சுற்றாடலைப் பாதுகாப்போம் என்ற கோசத்துடன், சமூக வலைத்தளங்களூடாக அணி திரண்டனர். 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது, சுற்றாடல் பேணல் மற்றும் காடழிப்பு பிரதான கருப்பொருளொன்றாக அமைந்தது. இதன் விளைவாக கோத்தாபய ராஜபக் ஷ ஜனாதிபதியானதும் வன அழிப்பின் பிரதிபலன்களைப் பிரதிபலிக்கும் சித்திரங்கள் நகரங்களின் மதில்களில் காட்சிப்படுத்தப்பட்டன.

‘‘ உலகளவில் வரட்சி மற்றும் வெள்ளப் பெருக்கினால் சுற்றாடல் அழிவுக்குள்ளாகி அதனால் பாதிக்கப்படும் மக்களாக நாமும் உள்ளோம். அதனால் இந்த அழகிய தேசத்தை பசுமையான நாடாக பிரகாசிக்கச் செய்து, எதிர்கால உலகில் முன்மாதிரியான நாடொன்றாக மாற்றியமைக்கும் பொறுப்பு எங்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது’’ என்று ‘சுபீட்சமான தேசத்தை உருவாக்கும் கோத்தாபயவின் நோக்கு’ எனும் கோத்தாபயவின் கொள்கைப் பிரகடனத்தின் முதலாவது பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த பிரகடனத்தின் பிரதான பத்து அம்சங்களில் ‘நிலையான சுற்றாடல் முகாமைத்துவம்’ தொடர்பாகவும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் நிலையான சுற்றாடல் கொள்கையாக விடயங்கள் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் 8ஆவது விடயமாக, சுற்றாடலைப் பேணுவதற்காக முன்னெடுக்கவுள்ள செயற்திட்டம் தொடர்பாக விரிவானமுறையில் விளக்கப்பட்டுள்ளது.

ஆனால் இப்போது நடப்பது என்ன? 2019 நவம்பர் 18ஆம் திகதி நடந்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், அரசியல் அனுசரணையுடன் ஒரு சில வனப்பகுதிகள் நாசமாக்கப்பட்டுள்ளதாக சூழலியலாளர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

வில்பத்து தேசிய வனப்பகுதியில் பாதுகாப்பு வலயம் மற்றும் அதனை அண்டிய பகுதியில் சுமார் 1500 ஏக்கர் நிலப்பரப்பில் கற்றாளை பயிர்ச் செய்கை பண்ணப்பட்டும் வருகிறது. அதேபோன்று சிங்கராஜ வனப் பகுதியின் நடுவே லங்காகம வரையில் ஊடறுத்துச் செல்லும் வீதி விசாலமாக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்படுகிறது. அத்துடன் ஆனவிழுந்தான், வனாத்தவில்லு மற்றும் கல்பிட்டி உள்ளிட்ட புத்தளம் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள சுற்றாடல் அழிவுகள் ஏராளம் உள்ளன.

‘வில்பத்து‘ முஸ்லிம்களுக்கான எதிர்ப்பா?

கடந்த வருடங்களில் சுற்றாடல் பேணுவதற்காக முன்நின்ற வாலிபர்கள், அரசியல்வாதிகள் மற்றுமுள்ளோர் மேற்கண்ட காடழிப்புகளுக்கு முன்னால் தவமிருக்கும் போர்வையில் வில்பத்து தொடர்பாக நடந்து கொண்டதெல்லாம் தனிப்பட்ட ரீதியிலான முஸ்லிம் விரோதப்போக்கும் அரசியல் அபிலாசைகளை அடைந்து கொள்வதற்காகவா என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

‘‘ யுத்தத்தில் அகதிகளாக்கப்பட்ட மக்கள், தாம் இங்கு வந்த இருப்பிடங்களுக்கு மீள குடியேறும் போதுதான் வில்பத்துவை வெட்டி அழிக்கிறார்கள் என்று தேசப்பற்றாளர்கள் உயிரை மாய்த்துக்கொள்ளப்பார்த்தார்கள். தம் இருப்பிடங்களை இழந்த அகதிகள், மீண்டும் தம் உரிய இடங்களுக்குச் செல்லும்போது அந்தப் பகுதிகள் பெரும் காடாக காட்சி தந்ததால்,
அவை ஒட்சிசன் போஷணை தரும் வலயமாக உள்ளதால் தம் சொந்தக்காணிகளாக இருந்தாலும் பரவாயில்லை, வந்தவர்கள் அவற்றை விட்டு விட்டு வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்று சூழலியல்வாதிகள் சொன்னார்கள்.  பிராணவாயுவின்றி தம்மால் வாழமுடியாது என்று அன்று கூறினார்கள். ஆனால் இன்று காடுகள் வெட்டி அழிவுக்குள்ளாக்கப்படும்போது அந்த நாசகாரம் குறித்து நாட்டில் எந்தப் பேச்சும் இல்லை. காரணம் சுற்றாடலைப் பேணும் விடயத்திலும் கூட அவற்றை நாசம் செய்வோரின் இனம், மதங்களைப் பார்த்தே துடிக்கவும் நடிக்கவும் செய்கிறார்கள். சுற்றாடலும் ஒரு நிகழ்ச்சி நிரலுக்குட்பட்டுள்ளதால், அன்று பாதுகாக்கப்பட வேண்டும் என்று கோஷமிட்டோர், சுற்றாடல் நாசமானாலும் பரவாயில்லை என்றிருக்கிறார்கள்’’ என்று ஷிபானா நியாஸ் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அன்றும் இன்றும் அபிப்பிராயங்கள்
தெரிவிப்பதில் மாற்றங்கள் இல்லை

மேற்படி கூற்றுக்கமைய கடந்த காலங்களில் வில்பத்து உள்ளிட்ட பகுதிகளில் சுற்றாடல்களுக்கு நாசம் விளைவித்தோர்களுக்கெதிராக ‘மாற்றம் வேண்டி’ அர்ப்பணிப்புச் செய்த, அது தொடர்பாக தம் வாக்குகளைப் பிரயோகித்த வாலிப சமூகம் ஏமாற்றத்திற்குள்ளாக்கப்பட்டதா?

இது தொடர்பாக பி.பி.சி. சிங்கள சேவையிடம், ‘வியத்மக’ அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மருந்து வகை தயாரிப்பு, விநியோகம் மற்றும் வழிநடத்தல் தொடர்பான இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன கருத்து தெரிவிக்கையில், ‘‘ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களுக்கு முன்னரும் பின்னரும் தமது தரப்பு சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பாக முன்னெடுக்கும் கொள்கைகளில் எத்தகைய வேறுபாடுகளும் இல்லை’ என்று கூறினார்.

அரசியல் இலாபம் பெறும் நோக்கில் சமூக வலைத்தளங்கள் ஊடாக காடழிப்பு ‘விகாரப்படுத்தப்பட்டு குழப்பியடிக்கப்படும்’ ஒரு நிலைப்பாட்டைக் காணக் கூடியதாகவுள்ளதென்பது இராஜாங்க அமைச்சரின் கருத்தாகவுள்ளது.

எப்படிப் போனாலும், புத்தளம் மாவட்டம் உள்ளிட்ட, நீர்கொழும்பிலிருந்து, எலுவன்குளம் வரையிலான கடற்கரை ஓரப்பகுதிகளில், நீண்ட காலமாக காடழிப்பு இடம்பெறுவதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘‘அது, இன்று, நேற்று ஏற்பட்ட ஒன்றல்ல. வர்த்தக நோக்கை முன்னிட்டு கண்டல் காட்டு பகுதி துப்புரவு செய்யப்படுவதும் சுற்றாடல் நாசம் ஒன்றேயாகும். ஆளும் தரப்பு, எதிர்தரப்பு என்ற பேதமின்றி, அந்தப் பகுதிகளிலுள்ள அரசியல்வாதிகள் தம் அடியாட்களை அமர்த்திக்கொண்டு, மேற்படி அழிவு நாச வேலைகளைச் செய்தார்கள், செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது இரகசியமான ஒன்றல்ல’’ என்று அவர் கூறியுள்ளார்.

வில்பத்து தொடர்பாக நிகழ்ந்திருப்பது அரசியல் இலாபம் பெறும் நோக்கில் உருவாக்கப்பட்ட, முஸ்லிம் விரோத செயற்பாடு என்ற குற்றச்சாட்டை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன மறுத்துள்ளார்.
அது குறித்து அவர் குறிப்பிடுகையில், ‘‘எந்த வகையிலும் அவ்வாறு நடக்காது. சுற்றாடல் அழிவு என்றால் அது, சிங்களவர், தமிழர், முஸ்லிம் என்பது முக்கியமல்ல, அதற்கு உடந்தையான யாரானாலும் தண்டனை வழங்கப்படவேண்டும்’’

‘‘சுற்றாடலுக்கு பாதிப்பு விளையாதவாறு, அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அது இலகுவான ஒன்றல்ல. அதனை இயன்றளவில் குறைத்துக்கொள்ளும் வகையில் நவீன முறைமைக்கு நாம் நகர வேண்டும். சுற்றாடலைப் பேணுவதற்காக முன்வந்துள்ள வாலிபர் குழுக்களில் சிறந்த முகாம் ஒன்று இன்னும் எங்கள் மத்தியில்தான் உள்ளது. எங்களிடம் குறைபாடுகள் இருப்பின் அவற்றை செவிமடுக்க நாம் தயாராக உள்ளோம்’’ என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன மேலும் தெரிவித்தார்.

ஆன விழுந்தான்

உத்தேச இறால் பண்ணை கருத்திட்டம் தொடர்பாக ஆன விழுந்தான் சரணாலயத்தின் மேற்கு பகுதியில் ஒல்லாந்த ஏரிக்கு அண்மித்த பகுதியில் இரண்டு ஏக்கர் அளவிலான கண்டல் காடு அழிக்கப்பட்டுள்ளதாக ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் தகவல் வெளியாகியது. அது தொடர்பாக சமூக வலைத்தளங்கள் ஊடாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இறால் வளர்ப்புக்காக குறித்த தரையை தயார்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட ‘பெகோ’ இயந்திரம் ஒன்று கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

2015 இற்குப் பின்னர் சுமார் ஐந்து வருடங்களுக்கு கிட்டிய காலப்பகுதி வரையில் எத்தகைய நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படாத ஆனவிழுந்தான் சரணாலயத்திற்குட்பட்ட மேற்படி காணியை, அனுமதி பெறாமலும் சட்டபூர்வமற்ற முறையிலும் மீண்டும் இறால் வளர்ப்பில் ஈடுபடுத்த முயற்சி செய்ததாக காடழிப்பு தொடர்பாக விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரச்சிகட்டு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஜகத் சமந்தகேயின் கோரிக்கைக்கிணங்க கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவரால் அளிக்கப்பட்ட வாக்குமூலத்தின் மூலம் காடு அழிக்கப்பட்டுள்ளமை தெளிவாகியுள்ளதாக வனவிலங்குகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சீ.பீ. ரத்நாயக்க, செப்டெம்பர் 9 ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற குழுக்களின் கூட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஆரச்சிகட்டு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஜகத் சமந்த, தற்போதைய பாராளுமன்றத்தின் கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் விநியோக, கருத்திட்ட அபிவிருத்தி தொடர்பான இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்தகேயின் சகோதரராவார்.

மேற்கண்ட சந்தேக நபரின் வாக்குமூலத்திற்கமைய ஜகத் சமந்தவுக்கு ஓர் ஏக்கரிலான ஐந்து இறால் பண்ணைகளும் இரண்டு ஏக்கரிலான இரு இறால் பண்ணைகளும் மூன்று ஏக்கர் கொண்ட ஓர் இறால் பண்ணையும் 2015 ஆம் ஆண்டு வரை வருடாந்த அனுமதிப் பத்திரங்களும் மற்றும் நீர்வாழ் உயிரின பண்ணை அதிகார சபையின் அனுமதிப் பத்திரங்களும் இருந்துள்ளதாக குறித்த அறிக்கையில் காணமுடிகிறது.

வனாத்தவில்லு

புத்தளம் மாவட்டத்தில் வனாத்தவில்லு பிரதேச செயலகத்திற்குட்பட்ட எலுவன்குளம், மங்களபுர பிரதேசத்தில் சுமார் நூறு ஏக்கருக்கு மேற்பட்ட வனப்பகுதி தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளதாக பிரதேசத்தின் சுற்றாடல் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. ஆயிரக்கணக்கான சிறிய, பெரிய மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளது. அங்கு காணப்பட்ட தேக்கமரம் உள்ளிட்ட பெறுமதிவாய்ந்த மரங்கள் வெட்டப்பட்டுள்ளதுடன், சுமார் 7–8 அடி சுற்றளவுள்ள சுமார் நூறு வருடங்களுக்கு மேல் பழைமை வாய்ந்த மரங்களும் அவற்றில் உள்ளடங்குவதாக சூழலியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கடந்த 6 ஆம் திகதி புத்தளத்தின் குறிப்பிட்ட இடத்திற்கு விஜயம் செய்த ‘வயம்ப ஹண்ட‘ சுற்றாடல் அமைப்பின் இணைப்பாளர் அஜித் கிஹான் குறிப்பிடுகையில், ‘‘இது வரையில் புத்தளத்தில் பாரிய சுற்றாடல் அழிவுகள் நிகழ்ந்து வருகின்றன. இந்த நாசகார வேலை இந்த பாராளுமன்ற தேர்தலின் பின்னர் ஆனவிழுந்தானில் கை வைத்ததைத் தொடர்ந்தே ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து பல இடங்களிலிருந்தும் சுற்றாடல் அழிவுகள் குறித்து, தகவல்கள் வெளி வந்தவண்ணமுள்ளன. இத்தகைய சுற்றாடல் நாசம் சிறிய விடயமொன்றல்ல, எனக்குத் தெரிந்த வகையில் வில்பத்துவில் கூட இத்தகைய பேரழிவுகள் நிகழ்ந்துள்ளதாகத் தெரியவில்லை’’ என்கிறார் அவர்.

மேற்படி வயம்ப ஹண்ட சுற்றாடல் அமைப்பின் தலைவர் வில்பொத்த பேமானந்ததேரர் இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில், ‘‘இதுவரையில் வனாத்தவில்லு பிரதேசத்தில் 100 ஏக்கர் அளவிலான வனப்பகுதி வெட்டி தீ மூட்டி அழிக்கப்பட்டுள்ளது. தற்போது துப்புரவு செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் பெரிய அளவிலான காணிப்பகுதியொன்றையும் எங்களால் கண்டுகொள்ள முடிந்துள்ளது. அண்மையில் நடைபெற்ற தேர்தல் பிரசார நடவடிக்கைகளின்போது பொலித்தீன்களால் கூட இந்த சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடாது என்றெல்லாம் பேசப்பட்டு வந்தது. சுற்றாடலை மாசுபடுத்தக்கூடாது என்பதில் அத்தகையதோர் அவதானம் செலுத்துவதை அவதானித்தோம். சூழல் மீது அன்பு செலுத்த மக்கள் முன்வரவேண்டும் என்று எமது ஜனாதிபதி தன் அபிலாசையை வெளியிட்டார். இந்நிலையில் பெருமளவிலான சுற்றாடல் நாசப்படுத்தப்பட்டு வருவது குறித்து, எத்தகைய நடவடிக்கைகளையும் எடுக்காமை குறித்து பாரிய சந்தேகமொன்றே நிலவுகிறது’’ என்று தேரர் தனது அதிருப்தியை வெளியிட்டார்.

‘பொதுத் தேர்தலின் பின்னர் புத்தளம் மாவட்டத்தில் பெருமளவிலான சுற்றாடல் அழிவுகள் பல இடம்பெற்றும் அது தொடர்பாக சட்டம் செயற்படுத்தாமை’ எனும் தொனிப்பொருளில் கடந்த 9 ஆம் திகதி ஆரச்சிகட்டு, நல்லாதரன்கட்டு ஸ்ரீ ரத்னகிரி ரஜமஹா விகாரையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்படி தேரர் மேற்கண்டவாறு கூறினார். இதுதொடர்பாக சுற்றாடலியலாளர் சட்டத்தரணி ஜகத் குணவர்தன சமூக வலைத்தளம் ஊடாக கருத்துத் தெரிவிக்கையில், ‘‘இது தற்செயலாக ஏற்பட்ட தீ அனர்த்தமல்ல; நன்கு திட்டமிட்டு செயற்படுத்தப்பட்ட தீ வைப்பு என்பது நன்கு புலனாகிறது’’ என்று முகநூல் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

கல்பிட்டி கண்டல்காடு

கல்பிட்டி, பள்ளிவாசல்துறை பிரதேசத்தில் சுமார் நான்கு ஏக்கர் நிலப்பரப்பில் கண்டல் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக கல்பிட்டி சர்வசமய கூட்டமைப்பு குற்றஞ்சுமத்தியுள்ளது. இதற்குப் பொறுப்புக் கூற வேண்டிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கெதிராக சட்டம் நிலைநாட்டப்பட வேண்டும் என்று மேற்படி அமைப்பின் ஏற்பாட்டாளர் பெதிவெவ தியசேன தேரர் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இது விடயமாக தேரர் குறிப்பிடுகையில், ‘‘இன்று நாட்டின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும், ‘நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? என்று எவரும் எம்மிடம் வினவினால், நாம் புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லத் தயங்குகிறோம். அவ்வாறு கூறினால் அவர்கள் திடீரென்று, அங்கிருப்பவர்கள் கழுதைகள் தானே! என்று கூறுவார்கள். அதற்கடுத்து அங்குள்ளவர்களுக்கு ஒக்ஸிஜன் தேவையில்லையா? என்று அடுத்த கேள்வி கேட்டுவிடுவார்கள். அதனால் நான் எங்கு சென்றாலும் புத்தளம்வாசி என்று கூறுவதில்லை . தற்போது புத்தளத்தில் பாரிய சுற்றாடல் அழிவு நடந்தேறியுள்ளது’’ என்று அவர் கூறியுள்ளார். கண்டல் அழிவுக்கு இப்பிரதேச அரசியல்வாதியொருவர் தொடர்புபட்டுள்ளதாகவும் தேரர் மேலும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

எங்கள் நாடும் உலகில் இதர நாடுகளும்

‘‘நாம் சிறந்ததோர் எதிர்காலத்தைக் காண விரும்பும் அறிவுள்ள மக்களாக இருந்தால், நாளுக்கு நாள், அதிகரித்துச் செல்லும் வனம் அழிக்கப்பட்டு வருவதைத் தடுத்து நிறுத்துவதற்குண்டான வழிவகைகளைக் கையாள வேண்டும்’’ என்று லண்டனிலுள்ள இயற்கை விஞ்ஞான தொல்பொருளியல் பிரிவு சிரேஷ்ட பொறுப்பாளர் கலாநிதி கோதமீ வீரகோன் குறிப்பிட்டுள்ளார்.

‘‘காடழிப்பின் மறுபக்கம் கவலையிலும் துரதிஷ்டத்திலும் ஆழ்த்திவிடுகிறது. இந்நிகழ்வு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது’’ என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இப்பெண் அதிகாரி, தென்னாசியா, கிழக்காசியா, ஆபிரிக்கா மற்றும் தென்னமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் வனத்தை நெருங்கிய பகுதிகளில் ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டு வரும் இலங்கையைச் சேர்ந்த விஞ்ஞானியாவார். “ஸ்ரீ லங்காவில் மிகவும் பாரியளவிலான காடழிப்பு நிகழ்ந்துள்ளது. இவ்வாறு பாரிய அழிவு ஏற்பட்ட உலக நாடுகள் உள்ளனவா? சுமார் 65,000 சதுர கிலோ மீற்றர் பரப்பளவுள்ள சின்னஞ்சிறிய தீவான இலங்கையில் தொடர்ந்தும் வனப்பகுதிகள் இழக்கப்படுவது பொறுக்க முடியாததொன்றாகும்’’ என்று கலாநிதி கோதமீ வீரர்த் தின மேலும் தெரிவித்துள்ளார்.

உலகில் காணப்படும் மிகவும் சிறிய தீவுகளில் ஒன்றான இலங்கையில் 70 வருடங்களுக்கு முன்னர், 66 வீதம் வனப்பகுதியாக இருந்தது. 2020 ஆகும் போது அது எந்தளவில் வீழ்ச்சிகண்டுள்ளது? அதேபோன்றே சிறிய காடுகளை எடுத்துக் கொண்டால் (Primary Forest) எஞ்சியிருப்பது மிகவும் அற்ப அளவே. அதனையாவது நாம் பாதுகாக்கத் தவறுவோமானால் இன்னும் இருபது, ஐம்பது வருடங்களில் இருக்கும் காடுகளை எண்ணிப்பார்க்க இயலுமா?

மற்றொரு சிறப்பு என்னவென்றால், இதர நாடுகளுடன் ஒப்பிகையில் இலங்கையில் உயிரியல் வாயு மிகவும் உயர்ந்த நிலையிலே உள்ளது. அப்படியிருந்தும் மட்டுப்படுத்தப்பட்டுள்ள எல்லைக்குள் வசித்து வரும் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் உயிரியல் வாயுவைப் பாதுகாக்கத் தவறுவோமானால் விலைமதிக்க முடியாத அரும் செல்வம் எங்கள் கண் முன்னே எமது எதிர்கால சந்ததியினருக்கு கிடைக்க முடியாதவாறு இழந்து விடுவோம். அந்த அடிப்படையில் உற்றுநோக்கும்போது, நாட்டு பிரஜை என்ற வகையில் நாம் மிகவும் கவலைப்படவேண்டிய நிலையில் இருக்கிறோம். அத்துடன் மிகவும் வெட்கப்படவேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளோம். உதாரணத்திற்கு சிங்கராஜ வனப்பகுதி தொடர்ந்தும் மனித செயற்பாட்டு அழுத்தங்களுக்குள்ளாக்கப்படும் போது, அந்த வனம் உலக மரபுரிமைப் பட்டியலிலிருந்து அகற்றப்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.