2019 ஏப்ரலில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் முக்கிய திருப்பத்தை சந்தித்துள்ளதை அவதானிக்க முடிகிறது. இதுவரை காலமும் பல நூற்றுக் கணக்கானோர் சாட்சியங்களை முன்வைத்த போதிலும் தற்போது தாக்குதல் நடந்த காலப்பகுதியில் உயர் பதவியில் இருந்த தலைவர்களும் அரச அதிகாரிகளும் முன்வைக்கும் சாட்சியங்கள் இத் தாக்குதல்களின் பின்னணியை ஓரளவு வெளிச்சமிட்டுக்காட்டுவதாக அமைந்துள்ளன. அந்த வகையில் அரசியல் தலையீடுகளின்றி ஆணைக்குழுவின் விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமானால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இருந்த சக்திகளைக் கண்டறிவது அவ்வளவு கடினமான காரியமாக இருக்கப் போவதில்லை.
குறிப்பாக அக்காலப் பகுதியில் பொலிஸ் மா அதிபராக பதவி வகித்த பூஜித் ஜயசுந்தர கடந்த இரு தினங்களாக ஆணைக்குழு முன்னிலையில் வெளிப்படுத்தும் விடயங்கள் அதிர்ச்சி தருவனவாக அமைந்துள்ளது. இந்தத் தாக்குதலானது திடீர் என நடந்த ஒன்றல்ல எனக் குறிப்பிட்டுள்ள அவர், இது நீண்ட காலமாக நன்கு திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு விடயம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் இதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் எனவும் அவர் பகிரங்கமாக, ஊடகங்கள் முன்னிலையில் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதுமாத்திரமன்றி தெஹிவளையில் குண்டுவெடித்து உயிரிழந்த தாக்குதல்தாரிகளில் ஒருவரான ஜெமீல் என்பவர், தான் உயிரிழப்பதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் உளவுத்துறை அதிகாரி ஒருவரை நேரில் சந்தித்து உரையாடியதாக தனக்கு தகவல்கள் கிடைத்ததாகவும் நேற்றைய தினம் பூஜித் ஜயசுந்தர ஆணைக்குழு முன் புதிய தகவல் ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார். அப்படியானால் குறித்த உளவுத்துறை அதிகாரி யார்? அவர் ஏன் குண்டுதாரியைச் சந்தித்தார்? குண்டுதாரியை கைது செய்யாது உயிரை மாய்த்துக் கொள்ள ஏன் அனுமதித்தார்? அந்த அதிகாரிக்கும் குண்டுதாரிக்குமிடையிலான தொடர்பு என்ன? என்று நீண்டு செல்லும் கேள்விகளுக்கு விடை காணப்பட வேண்டியது அவசியமாகும். அந்த வகையில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் முன்வைத்திருக்கும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் புதிய தகவல்கள் தொடர்பில் ஆணைக்குழு தீவிரமாக கவனம் செலுத்தி குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
இத்தாக்குதலுடன் எந்தவித சம்பந்தமுமற்ற அப்பாவிகள் நூற்றுக் கணக்கானோர் கைது செய்யப்பட்டு அநியாயமாக சிறைவைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலர் விசாரணைகள் பூர்த்தியாகாத நிலையில் தடுப்புக் காவலில் உள்ளனர். இந் நிலையில் உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்களைத் தண்டிப்பதுடன் நிரபராதிகளை விடுவிக்க இந்த ஜனாதிபதி ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
அதேபோன்று இந்த விசாரணைகள் எந்தவித தடைகளும் தலையீடுகளுமின்றி சுயாதீனமான முறையில் முன்னெடுக்கப்பட்டு, அதன் அறிக்கையும் சிபாரிசுகளும் முன்வைக்கப்படுவதையும் அவற்றை அடிப்படையாகக் கொண்டு நடவடிக்கை எடுப்பதையும் உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கமானது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்துவோம் எனும் பிரதான வாக்குறுதியை முன்வைத்தே ஆட்சிக்கு வந்தது. அந்த வகையில் ஜனாதிபதி தனது வாக்குறுதியைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலமே பயங்கரவாதிகளால் அநியாயமாக கொல்லப்பட்ட கிறிஸ்தவ சமூகத்திற்கு நீதி கிடைப்பதுடன் அநியாயமாக பயங்கரவாத குற்றச்சாட்டுக்கு இலக்கான முஸ்லிம் சமூகத்தின் அவப்பெயரையும் துடைத்தெறியக் கூடியதாக அமையும்.
அந்த வகையில் இந்த தாக்குதலின் சூத்திரதாரிகள் கண்டறியப்படுவார்கள் எனும் நாட்டு மக்கள் அனைவரினதும் நம்பிக்கையை அரசாங்கம் பொய்ப்பிக்காது என நம்புகிறோம். – Vidivelli