படையெடுக்கும் யானைகளால் கல்முனை மக்கள் பீதியில்

0 797

-அஸ்லம் எஸ்.மௌலானா-

நாட்டின் பல பகுதிகளிலும் யானை – மனிதன் மோதல் இடம்பெற்று வருவதை அவ்வப்போது ஊடகங்கள் மூலமாக அறியக்கிடைக்கிறது. காடுகளை அண்டிய பகுதிகளில் யானை தாக்கி மனிதன் மரணிக்கின்ற சம்பவங்களும் அடிக்கடி இடம்பெற்று வருவதை அறிகின்றோம். அம்பாறை மாவட்டத்திலும் கடந்த காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன.

ஆனால் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் சமீப காலமாக காட்டு யானைகளின் ஊடுருவல்களும் தொல்லைகளும் அதிகரித்துக் காணப்படுகின்றன். கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி, சம்மாந்துறை, இறக்காமம், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஒலுவில், நிந்தவூர், நற்பிட்டிமுனை என்று அம்பாறை மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களினதும் வயலோர பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் தொடர்ச்சியாக படையெடுத்து வருகின்றன.

வயல் வெளிகளை அண்டிய குடியிருப்புப் பகுதிகளில் யானைகள் கூட்டம் கூட்டமாக நுழைவதால் இப்பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் பெரும் அச்சமடைந்து காணப்படுகின்றனர். அவர்கள் தமது இரவுப் பொழுதுகளை பெரும் பீதியுடன் கழிக்க வேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

சில தினங்களுக்கு முன்னர் வயலோரமாக அமைந்துள்ள கல்முனை கிரீன் பீல்ட் வீட்டுத் தொகுதி, சாய்ந்தமருது பொலிவேரியன் மற்றும் மாளிகைக்காடு சுனாமி வீட்டுத் தொகுதிகளில், இரவு நேரங்களில் யானைகள் சாதாரணமாக பிரவேசித்து வீதி, வீதியாக வலம் வந்துள்ள சம்பவங்கள் அங்கு வாழ்கின்ற மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இதனால் இரவு நேரங்களிலும் அதிகாலைப் பொழுதுகளிலும் தமது தேவைகளுக்காக வீடுகளில் இருந்து வெளியேறுவதற்கு தாங்கள் அச்சப்படுவதுடன் வீடுகளினுள் பீதியுடனேயே உறங்குகின்றோம் என அங்கு குடியிருக்கின்ற மக்கள் தெரிவிக்கின்றனர்.

“சுனாமி பேரழிவால் தமது உறவுகளையும் உடைமைகளையும் இழந்து விட்டே நாங்கள் கடற்கரையோரங்களில் இருந்து வெளியேறி, அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள இவ்வீட்டில் வாழ்ந்து வருகின்றோம். இனி இழப்பதற்கு எம்மிடம் எதுவுமில்லை” என்று சுனாமி அனர்த்தத்தினால் கணவனையும் ஒரு பிள்ளையையும் இழந்த பெண்மணி ஒருவர் தெரிவிக்கிறார். சுனாமி அச்சம் காரணமாக கடற்கரைப் பகுதிகளில் வாழ முடியாத சூழ்நிலையிலேயே நாம் பொலிவேரியன் கிராமத்திற்கு வந்தோம். ஆனால் இப்போது இங்கு எம்மை யானைகள் அச்சுறுத்துகின்றன. இதனால் நாமும் பிள்ளைகளும் இங்கு கடும் பயத்துடன் பொழுதைக் கழிக்கிறோம் என்றும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

ஊருக்குள் யானைகளின் நடமாட்டம் அதிகரித்திருப்பதால் அதிகாலை சுபஹ் தொழுகைக்காக வீட்டிலிருந்து வெளியேறி பள்ளிவாசலுக்கு செல்ல அச்சமாக இருக்கிறது என்று க்ரீன் பீல்ட் வீட்டுத் தொகுதியில் வசிக்கும் வயோதிபர் ஒருவர் தெரிவித்தார். பொழுது விடிய முன்பு கடலுக்கும் வயலுக்கும் போகின்ற மீனவர்களும் விவசாயிகளும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டே வீட்டில் இருந்து வெளியேற வேண்டியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

இது இவ்வாறிருக்க, இரு புறமும் வயல் பகுதிகளை கொண்டிருக்கின்ற காரைதீவு- அம்பாறை பிரதான வீதியில் மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் ஒவ்வொரு நாளும் மாலை நேரமானால் யானைகள் கூட்டம் கூட்டமாக அவ்வீதியை ஊடறுத்து கடக்கும் காட்சிகளை கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக அவதானிக்க முடிகிறது. இதனால் அவ்வீதியூடாக பயணிக்கும் வாகனங்கள் நீண்ட நேரம் தூர நின்று காத்திருந்தே பயணத்தை தொடர வேண்டியுள்ளது. இதற்காக போக்குவரத்து பொலிஸார் அங்கு தரித்து நின்று, யானைகள் வீதியை குறுக்கறுத்து கடந்து செல்லும் வரை வாகனங்கள் அனைத்தையும் தடுத்து நிறுத்தி, யானைகள் வீதியை கடந்து சென்ற பின்னரே செல்ல அனுமதிக்கப்படுகின்றன.

சம்மாந்துறை, இறக்காமம், ஆலிம்சேனை போன்ற பிரதேசங்களில் குடியிருப்பு பகுதிகளில் அத்துமீறி பிரவேசிக்கும் யானைகள் சில வீடுகளை சேதப்படுத்தியிருப்பதுடன் பயிர்ச்செய்கைகளையும் சீரழித்து வருகின்றன என்று அப்பகுதிகளை சேர்ந்த மக்கள் முறைப்பாடு செய்து வருகின்றனர்.

அட்டாளைச்சேனை பள்ளக்காடு பகுதியில் திண்மக்கழிவுகள் கொட்டுமிடத்திற்கு பகல் 2.00 மணிக்கு முன்னரே யானைகள் படையெடுப்பதனால் அங்கு கொண்டு சென்று கழிவுகளை கொட்டுவதில் கல்முனை மாநகர சபை உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றங்கள் பெரும் சவாலை எதிர்நோக்கி வருகின்றன.

இங்கு குப்பைகள் கொட்டப்படுவதால்தான் எமது குடியிருப்பு பகுதிகளில் யானைகள் வந்து வீடுகளையும் பயிற்செய்கைளையும் சேதப்படுத்துகின்றன என்று அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட அஷ்ரப் நகர், சம்புநகர் மற்றும் ஹிறா நகர் போன்ற கிராமங்களில் வசிக்கின்ற மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த காலங்களில் இப்பகுதியில் பலர் யானைகளினால் தாக்கப்பட்டிருக்கின்றனர். உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன. யானைகளினால் தாக்கப்பட்டு, உயிர் பிழைத்த சிலர் இன்னும் அங்கவீனமாகவும் உபாதைகளில் இருந்து மீள முடியாமலும் துன்பப்படுகின்றனர் என்றும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தற்போது யானைகளின் நடமாட்டமும் அச்சுறுத்தலும் அதிகரித்திருப்பதன் காரணமாக இரவு நேரங்களில் தமது வீடுகளில் உறங்குவதற்கு அச்சமாக இருப்பதனால் மாலையாவதற்கு முன்னரே பாதுகாப்பான இடங்களில் சென்று தங்குவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மக்கள் எதிர்நோக்கும் இப்பிரச்சினை காரணமாக சில சந்தர்ப்பங்களில் அங்கு குப்பைகள் கொட்டுவதற்கு அட்டாளைச்சேனை பிரதேச சபை தடை விதிக்கின்றது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் கல்முனை மாநகர சபையினால் சேகரிக்கப்படுகின்ற குப்பைகளை கொட்டுவதற்கு மாற்று இடமில்லாத காரணத்தால் திண்மக்கழிவகற்றல் முகாமைத்துவ சேவை பெரிதும் பாதிக்கப்பட்டு, முடங்குகின்ற சூழ்நிலையும் ஏற்படுகிறது.

இப்பிரச்சினைகளை கருத்தில் கொண்டு பள்ளக்காடு குப்பை கொட்டும் இடத்தை மையப்படுத்தி மின்சார வேலி அமைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும் மின்சார வேலி அமைக்கும் பணிகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. பள்ளக்காடு பகுதிக்கு காட்டு யானைகள் படையெடுத்து வந்து அட்டகாசம் செய்யும் அவலம் மிக நீண்ட காலமாக தொடர்கிறது.

காடுகளில் வாழ வேண்டிய யானைகள் மக்கள் வாழ்கின்ற ஊர்களுக்குள் நுழைந்து, அட்டகாசம் செய்வது ஏன் என்று ஆராய்கின்றபோது அதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. அவற்றில் பிரதான காரணமாக சொல்லப்படுவது காடழிப்பு என்பதாகும். மற்றொரு முக்கிய காரணம் காடுகளில் யானைகளுக்கு போதிய உணவுகள் கிடைக்கவில்லை என்பதாகும். இன்னொரு காரணம் காலநிலை மாற்றம் என்று கூறப்படுகிறது. இவற்றை விட யானைகள் தமது வாழ்வியலை மாற்றியமைக்க முனைவதாகவும் ஊகம் வெளியிடப்படுகிறது.

காடுகளில் இருந்து யானைகள் வெளியேறுவதற்கான காரணங்கள் எவையாக இருந்த போதிலும் அவற்றுக்குப் பொறுப்புக்கூற வேண்டியது வன ஜீவராசிகள் திணைக்களமேயாகும். இவ்விடயத்திற்கென தனியான அமைச்சும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற நிலையில், யானைகளை காடுகளுக்குள் கட்டுப்படுத்தி வைப்பதற்கு பொருத்தமான பொறிமுறையொன்று இன்னும் வகுக்கப்படவில்லை என்பது கவலைக்குரியது.

எவ்வாறாயினும் அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களுக்கு தினமும் யானைகள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வருவதானது மக்களின் நடமாட்டத்திற்கும் பொருளாதார மையங்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமைந்திருப்பதை வன ஜீவராசிகள் திணைக்களம் அவசரமாக கவனத்தில் எடுத்து, உரிய நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகும்.   – Vidivelli

படங்கள் : பாருக் சிஹான்

Leave A Reply

Your email address will not be published.