உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகளுக்கு சட்டத்தரணிகளும் கையடக்கத் தொலைபேசிகளை கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் உதவிப் பொதுச் செயலாளர் முர்சித் முளப்பர், சட்டவிரோதமான முறையில் கையடக்கத் தொலைபேசியை எடுத்துச் சென்று, ஞானசார தேரரின் சாட்சியத்தை பதிவு செய்த விவகாரத்தைத் தொடர்ந்தே இத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த மௌலவிக்கும் அவருக்கு உதவிய இளம் சட்டத்தரணிக்கும் எதிராக ஆணைக்குழு சட்ட நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை இவ்விவகாரம் தொடர்பில் உலமா சபை பிரத்தியேகமான விசாரணைகளை நடாத்தி வருவதாகவும் உலமா சபையின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார். இச் சம்பவம் உலமா சபைக்கு பெருத்த தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறித்த முக்கியஸ்தர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை ஆணைக்குழு விசாரணைகள் இடம்பெறும் வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் 5 உறுப்பினர்களதும் பாதுகாப்புக்கு விசேட அதிரடிப் படையினர் நியமிக்கப்படவுள்ளனர். – Vidivelli