கப்பல் தீப்பற்றிய விவகாரத்தில் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டோம்

மசகு எண்ணெயை பாதுகாப்பாக வெளியேற்றுவதில்தான் முழு வெற்றி தங்கியுள்ளது ; கப்பல் பொறியியலாளர் எஸ்.ஐ. மன்சூர் 'விடிவெள்ளி'க்கு செவ்வி

0 1,057

குவைத்திலிருந்து இந்தியாவுக்கு மசகு எண்ணெயை ஏற்றிச் சென்ற MT New Diamond எனும் கப்பலில் தீ விபத்து ஏற்பட்ட விவகாரம் குறித்து நாம் அறிந்திருப்போம். இந் நிலையில் அம்பாறை மாவட்டத்தின் இறக்காமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் இத் துறையில் நீண்ட அனுபவம் கொண்டவருமான கப்பல்துறை பொறியியலாளர் எஸ்.ஐ. மன்சூர், இந்த விவகாரத்தின் தற்போதைய நிலைவரங்கள் தொடர்பில் இந்தியாவிலிருந்து ‘விடிவெள்ளி’க்கு வழங்கிய செவ்வியை இங்கு தருகிறோம்.

கேள்வி: கப்பல் பொறியியல் துறையில் உங்கள் கல்வித்தகைமை மற்றும் அனுபவம் பற்றி சுருக்கமாக கூறுங்கள்?

பதில்: இலங்கை அரசாங்கத்தின் புலமைப்பரிசில் பெற்று நான்கு வருடங்கள் இந்தியாவில் கப்பல் துறை பொறியியலாளர் பட்டப்படிப்பை மேற்கொண்டேன். பின்னர் 16 வருடங்கள் கடற்படையில் கப்பற்துறை பொறியியலாளராக கடமையாற்றினேன். 1997 முதல் இன்றுவரை வியாபாரக் கப்பலில் கடமையாற்றுகின்றேன். இந்த துறையில் 35 வருட அனுபவத்துடன் தற்போது இந்தியாவில் பணியை தொடர்கிறேன்.

கேள்வி: MT New Diamond கப்பலில் தீ பரவியது எவ்வாறு? அதன் தற்போதைய நிலை என்ன?

பதில்: இந்த கப்பலின் இயந்திர அறையில்தான் தீப்பற்றியது. இதனால் அவர்களால் உடனடியாக தீயை அணைக்க முடியவில்லை. இந்த தீயை ஆரம்பத்திலேயே அணைத்திருக்க முடியும். ஆனால் இயந்திர அறைக்குள் தீ ஏற்பட்டால் உடனடியாக அனைவரும் வெளியில் வந்து அனைத்து கதவுகளையும் மூடிவிடுவார்கள். அதன் பிறகு காபனீரொட்சைட்டை அனுப்பி தீயை அணைப்பது வழக்கம். இதற்கு முன்னராக கப்பலில் உள்ளவர்கள் அனைவரும் ஆபத்தின்றி இருக்கின்றனரா என்பதை உறுதி செய்துகொள்வார்கள். ஆனால் அன்று அவ்வாறு கணக்கிடும்போது ஒருவர் குறைந்துள்ளார். அவர் இயந்திர அறைக்குள் வைத்து கதவடைக்கப்பட்டுவிட்டார். அதனால் அவர்களால் காபனீரொட்சைட்டை அனுப்பி தீயை அணைக்க முடியாமல் போய்விட்டது. இதுவே MT New Diamond கப்பலில் தீப்பரவலுக்கான காரணமாகும். இதனால், ஆரம்பக்கட்டத்தில் தீயை கட்டுப்படுத்த முடியாமல்போனது.

கேள்வி: தீயை அணைப்பதில் இலங்கை, இந்திய கடற்படை, விமானப் படையினர் எவ்வாறான முயற்சிகளை முன்னெடுத்தார்கள்?

பதில்: இந்த கப்பல் உடனடியாக தீப்பற்றி எரிவதை காணொலிகளில் கண்டிருப்பீர்கள். இலங்கை கடற்படை, வான்படையினர் சென்றுதான் அந்த தீப்பரவலை கட்டுப்படுத்தினர். அணைத்துவிட்டு, அடுத்தகட்ட நடவடிக்கையாக கரையோரங்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக இந்த கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்துச் சென்றார்கள். இலங்கை, இந்திய படையினர்கள் இணைந்து கப்பலுக்கு வெளிப்பகுதியில் தீயை கட்டுப்படுத்தினர். இதனால் வெளிப்பகுதி வெப்பநிலை கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், கப்பலின் உள்பகுதியில் உள்ள வெப்பம் தணியவில்லை. இயந்திர அறைக்குள் கப்பலை இயக்குவதற்கான எரிபொருள் போதியளவு இருந்தது. இயந்திரங்களுக்குத் தேவையான எண்ணெயும் அங்கு இருந்தது. ஏற்கனவே எரிந்த கங்குகளும் இருந்தன. ஒட்சிசன் மாத்திரம் குறைவாக இருந்தது. பலத்த காற்று வீசியதால் ஒட்சிசன் மீண்டும் கப்பலினுள் செல்லலானது. இதனையடுத்தே இரண்டாம்கட்ட தீ பரவியது. இதனையும் நான்காயிரம் கிலோ இரசாயனத்தை தூவி கட்டுப்படுத்தி தீயை அணைத்துவிட்டனர்.

இந்த தீயை கட்டுப்படுத்துவதில் இலங்கை, இந்திய படையினர் முக்கிய பங்கு வகித்திருக்கின்றனர். அதற்குத் தேவையான உபகரணங்கள் இலங்கையில் இருந்தன. இந்தியாவிலிருந்தும் வரவழைக்கப்பட்டன. இரு தரப்பினரும் இணைந்து தீயை வெற்றிகரமாக அணைத்துவிட்டனர். இப்போது கப்பலில் முற்றாக தீ இல்லை.

உண்மையிலேயே நாங்கள், இலங்கை கடற்படையையும் விமானப்படையையும் போற்றியாக வேண்டும். அதேபோல், எமது அண்டைநாட்டு இந்திய கடற்படை, கரையோர பாதுகாப்பு பிரிவினரையும் பாராட்ட வேண்டும். ஏனென்றால் இவர்கள் மிகவும் துணிச்சலுடன் இந்தப் பணியில் ஈடுபட்டனர்.

கேள்வி: அதிலுள்ள 270,000 மெ.தொன் மசகு எண்ணெய்க்கு என்ன நடக்கும்? அதனை பாதுகாப்பாக வெளியேற்றலாமா?

பதில்: இந்த கப்பலில் உள்ள மசகு எண்ணெய், இப்போதும் பாதுகாப்பாகவே உள்ளது. கப்பலின் இயந்திர அறை முற்றாக எரிந்துவிட்டதால் மசகு எண்ணெயை வெளியேற்றும் திறன் கப்பலுக்கு இல்லை. இந்த கப்பலின் இப்போதைய நிலையை உயிரற்ற கப்பல் (Dead ship ) என்று சொல்வோம். இப்போது கப்பலில் உள்ள மசகு எண்ணெயை வெளியில் எடுப்பதற்காக வெளியிலிருந்துதான் உபகரணங்களை கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இப்படியான கட்டத்தில் கப்பலின் உரிமையாளரும் காப்புறுதி நிறுவனமும் இணைந்து மீட்புக் குழு (salvage team) ஒன்றை அனுப்புவார்கள். ஏற்கனவே 17 பேர் கொண்ட குழு அந்த கப்பலில் ஏறிவிட்டதாக நான் அறிகிறேன்.

அவர்கள், இந்த எண்ணெயை வெளியில் எடுப்பதற்காக வெளியில் இருந்துகொண்டு பம்பியைப் பயன்படுத்தி இன்னொரு கப்பலுக்கு மாற்றுவார்கள். அவ்வாறு மாற்றும்போது அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அவர்கள் மேற்கொள்வார்கள்.

கேள்வி: மசகு எண்ணெயில் தீ பரவி கப்பல் வெடிப்பதற்கான வாய்ப்புள்ளதா?

பதில்: இந்த கப்பலுக்குள் உள்ள மசகு எண்ணெய் தீப்பற்றுவதற்கான சாத்தியங்கள் இப்போதைக்கு இல்லை. காரணம் இந்த கப்பலின் வடிவமைப்பு அவ்வாறுள்ளது. இந்த கப்பலில் மசகு எண்ணெய் தாங்கிகளை சுற்றி இன்னொரு தாங்கி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பல பாதுகாப்பு ஏற்பாடுகள் இருப்பதால் பாதிப்பு மிகவும் குறைவு. இருந்தும் இயந்திர அறைக்கு வலப்பக்கம் தீப்பற்றியதால் சில வெடிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. என்றாலும் இவற்றுக்கும் எண்ணெய் தாங்கிகளுக்கும் தொடர்பு இல்லை. இருந்தபோதிலும் கூடிய சீக்கிரத்தில் கப்பலிலிருந்து மசகு எண்ணெயை வெளியேற்றுவது நல்லது. ஏனென்றால் கப்பல் முழு சுமையுடன் இருக்கிறது. எனவே சுமையை குறைக்க வேண்டும். இல்லாவிடின் கப்பலில் வெடிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால் உடனடியாக சுமையை குறைப்பது நல்லது.

கேள்வி: கப்பல் இன்னும் கட்டுப்பாட்டில் உள்ளதா? அல்லது கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டால் என்ன நடக்கும்?

பதில்: இந்த கப்பல் கட்டுப்பாட்டில் இல்லை. இந்தக் கப்பலை மீண்டும் இழுத்துக்கொண்டு ஆழ்கடலை நோக்கிச் சென்று கப்பலை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றனர். அத்துடன், அதில் தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கப்பலின் வலிமை நமது கைகளில் இல்லை. அது அதன் வடிவமைப்பில் தான் தங்கியிருக்கிறது. ஆனால், இதுவரையில் எந்தவித ஆபத்தும் இல்லை. எவ்வளவு விரைவாக இந்த கப்பலின் பாரத்தை குறைக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரமாக பாரத்தை குறைக்க வேண்டும்.

கேள்வி: கப்பல் வெடித்தால் சுனாமி போன்ற பாரிய அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறுகிறார்களே?

பதில்: அவ்வாறான பயம் தேவையில்லை. அப்படியொரு வாய்ப்பு இல்லை. அந்த கட்டத்தையெல்லாம் கடந்துவிட்டோம். அது நடைபெறாது. பாரிய குண்டுபோல் வெடிப்பதற்கு சாத்தியமில்லை.

கேள்வி: கப்பல் வெடித்து அல்லது எண்ணெய் கசிந்து பேரனர்த்தமானால் கிழக்கின் கரையோரம் எவ்வாறான விளைவுகளை சந்திக்கும்?

பதில்: உண்மையிலேயே இந்த கப்பலில் வெடிப்புகள் ஏற்பட்டால் பாரிய பாதிப்புகள் ஏற்படும். இது கிழக்கு மாகாணத்திற்கும் குறிப்பாக அம்பாறை மாவட்டத்திற்கும் பாரிய விளைவை ஏற்படுத்தும். ஆனால் அந்த அபாயத்தில் இருந்து 50 வீதம் காப்பற்றப்பட்டுள்ளது. அதைத்தான், நான் ஏற்கனவே குறிப்பிட்டேன், இந்த கப்பலில் இருந்து எண்ணெய்யை எவ்வளவு சீக்கிரம் அகற்றுவார்களோ அவ்வளவு சீக்கிரம் அகற்றுவது நாட்டுக்கு பாதுகாப்பாக அமையும்.

எண்ணெய் கசிவு ஏற்பட்டால் கிழக்கில் மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றாக பாதிக்கப்படும். கப்பலில் கொண்டுவரப்பட்ட இரண்டு இலட்சத்து 70 ஆயிரம் மெற்றிக் தொன் மசகு எண்ணெய்யும் கடலில் மிதக்கத் தொடங்கினால் எத்தனையோ மைல் பரப்புக்கு அது பரவும். இதனால் மீன் இனங்கள் பாதிக்கப்படும். கடலுக்குள் உள்ள மீன்கள் ஒட்சிசனை எடுக்க மேலே வரும்போது, கடற்பரப்பில் மசகு எண்ணெய் ஒரு தட்டாக படர்ந்திருப்பதால் அவற்றிற்கு ஒட்சிசன் கிடைக்காது. கடற்பரப்பு அசுத்தமடைவதால் மீன்கள் பாதிக்கப்பட்டு இறந்துபோகும். இதிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கே, இலங்கை அரசாங்கமும் இந்தியாவும் முழு மூச்சாக இருந்து இந்த கப்பலிலுள்ள எண்ணெயை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கேள்வி: இந்த MT Diamond விவகாரத்தினால் இலங்கை கூடுதல் பொருளாதாரத்தை, வளங்களை செலவிட நேர்ந்துள்ளது. இதனை குறித்த கப்பலின் உரிமையாளர்களிடமிருந்து மீளப்பெறலாமா?

பதில்: இந்த அரசாங்கம் குறித்த கப்பலின் தீயை கட்டுப்படுத்த நாட்டின் வளங்களை பயன்படுத்தி கூடுதல் பிரயத்தனம் எடுக்கிறது. இதற்கான செலவினத்தை கப்பல் உரிமையாளரிடமிருந்துதான் பெற வேண்டும். கப்பல் உரிமையாளரினால் இந்த கப்பல் காப்புறுதி செய்யப்பட்டிருந்தால் அனைத்து இழப்பு, அழிவுகளை அந்த காப்புறுதி நிறுவனம்தான் பொறுப்பெடுக்க வேண்டும். காப்புறுதி நிறுவனம், கப்பல் உரிமையாளருக்கு இழப்புக்கான நிதியை செலுத்துவர், அவரிடமிருந்து நாம் பெற வேண்டியிருக்கிறது. அரசாங்கம் ஆதாரங்களுடன் எழுத்து மூலம் அதனை நிரூபிக்க வேண்டியுள்ளது. அதற்கான பட்ஜட்டை தயாரிக்க வேண்டியுள்ளது. இதனை கப்பல் உரிமையாளரிடம் சமர்ப்பித்தால் காப்புறுதி நிறுவன நிதி மூலம் அவர் இலங்கைக்குச் செலுத்துவார் என எதிர்பார்க்கலாம்.

கேள்வி: கப்பலில் இருந்தவர்களை கைது செய்வது பற்றி இலங்கை ஆராய்கிறது. இதற்கு வாய்ப்புள்ளதா?

பதில்: கடல்சார் சூழல் பாதுகாப்புக்கு மாசு ஏற்பட்டால் கப்பலை கைப்பற்றி கப்பல் மாலுமியையும் கைது செய்ய முடியும். அதற்கான சட்டம் உள்ளது. ஆனால் அனைவரையும் கைது செய்ய முடியாது. இது ஒரு அவசர நிலைமை என்பதாலும் தீப்பற்றியதால் கசிவு ஏற்படின் கப்பலின் மாலுமி பொறுப்பேற்க முடியாது. ஆனாலும், இதற்காக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.

கேள்வி: கிழக்கு மாகாண கரையோர மக்களுக்கு நீங்கள் கூறும் ஆலோசனை என்ன?

பதில்: கிழக்கு மாகாண கரையோர மக்கள் விழிப்புணர்வுடன்தான் இருக்க வேண்டும். இன்றைய நிலைமையில் நாம் ஆபத்தான கட்டங்களை தாண்டிவிட்டோம். அந்த கப்பலிலிருந்து மசகு எண்ணெயை எவ்வளவு சீக்கிரம் அகற்ற முடியுமோ அதில்தான் இவை அனைத்தும் தங்கியுள்ளது.

கேள்வி: இவ்வாறான சம்பவங்கள் வேறு நாடுகளில் இடம்பெற்றுள்ளனவா? அதனை அவர்கள் எப்படிக் கையாண்டார்கள்?

பதில்: எண்ணெய் கப்பல் தீப்பற்றுவது, வெடிப்பது போன்ற பல சம்பவங்கள் பல நாடுகளிலும் நடந்துள்ளன. அதனால் பல நாடுகளின் கரையோரங்களில் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இது ஒரு புது விடயமல்ல. அம்பாறை மாவட்ட கடற்பரப்பிற்கும் அம்மாவட்ட மக்களுக்கும் இது புது விடயம். எனினும் இந்தப் பிரச்சினையை கையாள்வதற்கான நிபுணர்கள் இருக்கின்றனர். அவர்கள் இதற்கான நடவடிக்கைகளை எடுப்பார்கள். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.