பொறுப்புவாய்ந்தவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியம்

0 1,022

தேர்தலுக்குப் பின்னரான நாட்டின் அரசியல் அரங்கு தினமும் பரபரப்பாகவே நகர்ந்து கொண்டிருக்கிறது. வெற்றி பெற்ற கையோடு தமக்கு வசதியான வகையில் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை கொண்டு வருவதற்கான முயற்சிகளை அரசாங்கம் முடுக்கிவிட்டுள்ளது.

20 ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்படும் விடயங்கள் குறித்து பலரும் தமது அதிருப்திகளை முன்வைத்து வருகின்றனர். “19 ஆவது திருத்தம் மக்களைப் பலப்படுத்துவதாக அமைந்திருந்தது. ஆனால் 20 ஆவது திருத்தம் ஜனாதிபதியைப் பலப்படுத்துவதாகவே வரையப்பட்டுள்ளது” என முன்னாள் அமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்துள்ள கருத்து இத் திருத்தத்தின் நோக்கத்தை சரிவர படம்பிடித்துக்காட்டுகிறது.

இதற்கிடையில் நாட்டில் மாடறுப்பதற்கு தடை கொண்டுவரப்படும் என ஆளும்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களது குழுக் கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச முன்வைத்துள்ள யோசனைக்கு சகலரும் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து நாட்டில் ‘மாடறுப்புத் தடை’ தொடர்பில் பலத்த வாதப்பிரதிவாதங்கள் மேற்கிளம்பின. குறிப்பாக முஸ்லிம்கள் இதுபற்றி அதிகம் கவலைப்பட்டனர். இருப்பினும் அவ்வாறான ஒரு தடைச்சட்டம் கொண்டுவரப்படின் அது முஸ்லிம்களை விடவும் பெரும்பான்மைச் சிங்கள மக்களையே அதிகம் பாதிக்கும் என்பதை இன்று சகலரும் விளங்கி வைத்துள்ளனர். இது பிரதமருக்கோ அவரது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ தெரியாத விடயமும் அல்ல. அந்த வகையில் இதனைச் சட்டமாக்குவதற்கு பெரும்பான்மை தரப்பிலிருந்தே பலத்த எதிர்ப்புகள் இரகசியமாக முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கலாம். அதனால்தான் இந்த விவகாரத்தில் சகல தரப்பினரதும் கருத்துக்களை அறிய ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருக்கிறார்.

அந்தவகையில் இந்த விவகாரத்தில் முஸ்லிம்கள் மாத்திரம்தான் மாட்டிறைச்சி உண்பவர்கள் என்ற அபிப்பிராயத்தை தோற்றுவிக்கும் வகையில் நாம் நடந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. இதனால் பாதிக்கப்படப் போவது இந்த நாட்டில் வாழும் மாட்டிறைச்சி உண்ணும் சகல மக்களுமே என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்விரு விவகாரங்களுக்கு மத்தியில் நேற்று முன்தினம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் சாட்சியமளிக்கும்போது, அதனை சட்டவிரோதமான முறையில் ஒலிப்பதிவு செய்த விவகாரத்தில் உலமா சபையின் உதவிப் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.எம்.முர்சித் சிக்கியுள்ளார். இது அவரது நற்பெயருக்கு மாத்திரமன்றி உலமா சபையினதும் முஸ்லிம் சமூகத்தினதும் நற்பெயருக்கும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மௌலவி முர்சித், உலமா சபையில் தான் வகித்த பதவியை இராஜினாமாச் செய்வதாக அறிவித்துள்ள நிலையில் இச் சம்பவம் தொடர்பில் அதிருப்தியையும் வருத்தத்தையும் தெரிவிப்பதாக உலமா சபை அறிவித்துள்ளது. அத்துடன் இதுபற்றி விசாரணை நடாத்த குழுவொன்றை நியமித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் இச் சம்பவம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஆணைக்குழுவின் செயலாளருக்கு ஆணைக்குழுவின் தலைவர் அறிவுறுத்தியுள்ளதாகவும் அறிய முடிகிறது.

ஏற்கனவே சில ஊடகங்கள் முஸ்லிம்களின் விவகாரங்களை பூதாகரமாக்கி வருகின்ற நிலையில் இச் சம்பவம் அவர்களுக்கு பெரும் தீனியாக அமைந்துள்ளது. உலமா சபையையும் முஸ்லிம்களையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தவும் இது வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. ஆணைக்குழு அமர்வுக்கு சாட்சியமளிப்பவர்களோ, பார்வையாளர்களோ, ஊடகவியலாளர்களோ தொலைபேசிகளையோ ஒலி, ஒளிப்பதிவு கருவிகளையோ கொண்டு செல்ல அனுமதி வழங்கப்படுவதில்லை. எனினும் சட்டத்தரணிகள் கையடக்கத் தொலைபேசிகளை எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. இந்த அனுமதியை துஷ்பிரயோகம் செய்யும் வகையிலேயே இச் செயல் அமைந்துள்ளது. இதனுடன் சம்பந்தப்பட்ட இளம் சட்டத்தரணியையும் ஆணைக்குழு எச்சரித்துள்ளது. அவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான பொறுப்புவாய்ந்த பதவிகளில் இருப்பவர்கள், பொறுப்புவாய்ந்த இடங்களில் மிகவும் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இது விடயத்தில் உலமா சபை தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்குமம் என நம்புகிறோம். எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதுடன் இதனை சகல தரப்பினரும் தகுந்த பாடமாகவும் கொள்ள வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.