ஆப்கானில் வான்வழித் தாக்குதல் தலிபான்களின் முக்கிய தளபதி பலி

0 842

ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில்  தலிபான்களின் முக்கியத் தளபதி பலியானதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ”ஆப்கானிஸ்தானின் தென் பகுதியில் உள்ள ஹெல்மாண்ட் மாகாணத்தில் தலிபான்கள் பதுங்கியிருக்கும் பகுதிகளில் ஆப்கான் அரசு மற்றும் அமெரிக்கப் படைகள் சனிக்கிழமை அன்று வான்வழி தாக்குதல் நடத்தியது.இந்த வான்வழித் தாக்குதலில் 29 தலிபான்கள் கொல்லப்பட்டனர். இதில் அப்துல் மனன் என்ற தலிபான் தளபதி கொல்லப்பட்டார்” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

அப்துலின் மரணத்தை தலிபான்களும், அம்மாகாண ஆளுநரான முகம்மது யாசின் கானும் உறுதிப்படுத்தியுள்ளனர். எனினும் அப்துல் மனனின் மரணம் குறித்து அமெரிக்காவிடமிருந்து இதுவரை அதிகாரபூர்வ தகவல் ஏதும் இதுவரை வெளிவரவில்லை.

கொல்லப்பட்ட அப்துல் மனன்  ஹெல்மாண்ட் மாகாணத்தில் தலிபான் பகுதிகளைக் கட்டுக்குள் வைத்திருப்பதில் முக்கிய நபராக இருந்தவர். அரசுக்கு எதிராக தீட்டப்பட்ட பல  சதித்திட்டங்களில் முக்கியப் பங்கி வகித்தவர். அப்துல் மனனின் இந்த மரணம் தலிபான்களுக்குப் பெரும் இழப்பாகக் கருதப்படுகிறது.

தலிபான்களின் பிடியில் இருந்த ஆப்கானிஸ்தானை,  கடந்த 2001 ஆம் ஆண்டு அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் மீட்டன. எனினும், ஆப்கானிஸ்தானில் அண்மைக்காலமாக இராணுவத்தினர், பொலிஸாரைக் குறிவைத்து தலிபான்கள் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.