இலங்கைக்கு முன்னுதாரணமான நியூஸிலாந்தின் தீர்ப்பு

0 859

நியூஸிலாந்தின் கிரைஸ்ட்சர்ச் நகரில் அமைந்துள்ள இரு பள்ளிவாசல்கள் மீது வெள்ளை நிறவெறி தீவிரவாதி ஒருவனால் கடந்த 2019 மார்ச் மாதம் நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 51 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதையும் அச் சம்பவம் உலகளாவிய ரீதியில் ஏற்படுத்திய அதிர்வலைகளையும் நாம் இலகுவில் மறந்துவிட முடியாது.

அந்தவகையில் மிகக் கொடூரமானதொரு பள்ளிவாசல் படுகொலையாக வரலாற்றில் பதிவான இச் சம்பவம் குறித்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது. இதற்கமைய அவுஸ்திரேலியரான 29 வயது தீவிரவாதி பிரென்டன், தன் மீது சுமத்தப்பட்ட 51 கொலைக் குற்றச்சாட்டுகள், 40 கொலை முயற்சிக் குற்றச்சாட்டுகள், பயங்கரவாதச் செயலுக்கான ஒரேயொரு குற்றச்சாட்டு ஆகியவற்றை ஒப்புக் கொண்டதையடுத்து எந்தவொரு காரணத்திற்காகவும் வெளிவரமுடியாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 1961 ஆம் ஆண்டு நியூஸிலாந்தில் மரண தண்டனை ஒழிக்கப்பட்ட பிற்பாடு, அந்நாட்டின் வரலாற்றிலேயே முதல் தடவையாக இவ்வாறானதொரு உயர்ந்தபட்ச தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

கடந்த நான்கு நாட்களாக கிரைஸ்ட்சர்ச் மேல் நீதிமன்றில் நடைபெற்ற இந்த இறுதி அமர்வில், இத் தீவிரவாத தாக்குதலில் சிக்கி உயிர்தப்பியவர்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் பலரும் தமது கவலைகளை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கப்பட்டது. இதன்போது அவர்கள் அனைவரும் கண்ணீர் மல்க தமது கொடிய அனுபவத்தையும் உறவுகளின் இழப்பினால் ஏற்பட்ட வலிகளையும் நீதிமன்றில் பகிர்ந்து கொண்டனர். இவற்றையெல்லாம் அதே அறையிலிருந்து பார்த்தும் செவிமடுத்தும் கொண்டிருந்த குற்றவாளி பிரென்டனின் முகத்தில் எந்தவித பிரதிபலிப்பையும் காண முடியவில்லை.
தீர்ப்பை அறிவித்து கருத்து வெளியிட்ட நீதிபதி கேமரூன், “குற்றவாளி பிரென்டனின் குற்றங்கள் மிகவும் கொடூரமானவை, ஆயுள் முழுவதும் சிறை என்பது கூட அந்த கொலைப் பாதகங்களுக்கு பிராயச்சித்தமாகாது, மிகவும் கறைபடிந்த ஒரு பாவ கருத்தியலிலிருந்து இந்தக் கொலை பாதகம் நடந்துள்ளது” என்று தெரிவித்திருந்தார். தீர்ப்புக்கு முன்னதாக, அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டனும் இக் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட வேண்டும் எனும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

உண்மையில், இத்தீவிரவாத தாக்குதலை நியூஸிலாந்து எதிர்கொண்ட விதமும், பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு ஆதரவாக அந்நாட்டு பிரதமர் முதல் சாதாரண குடிமகன் வரை குரலெழுப்பி, உணர்வுகளைப் பகிர்ந்து கொண்ட விதமும் அதேபோன்று நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பும் ஏனைய உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாகும். இவ்வாறான தீவிரவாத சம்பவங்கள் உலகின் பல்வேறு நாடுகளிலும் அடிக்கடி நடைபெறுகின்ற போதிலும் குற்றவாளிகளைத் தண்டிப்பதில் நியூஸிலாந்து போன்று முன்மாதிரியான வகையில் எந்தநாடும் நடந்து கொண்டதாகத் தெரியவில்லை.

குறிப்பாக இந்த விடயத்திலிருந்து இலங்கை கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உள்ளன. இவ்வாறான பல படுகொலைகள் இலங்கையில் நடந்துள்ளன. 1990 இல் காத்தான்குடியின் இரு பள்ளிவாசல்களில் இடம்பெற்ற படுகொலைகளும் ஏறாவூரில் இடம்பெற்ற படுகொலைகளும் குறிப்பிடத்தக்கவை. இப் படுகொலைகள் தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்படவோ குற்றவாளிகள் தண்டிக்கப்படவோ இல்லை. இப் படுகொலைகளின் சூத்திரதாரிகள் யார் என்பது தெரிந்த போதிலும் அவர்களுக்கு எதிராக எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. மாறாக அவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பி அழகுபார்க்கின்ற அரசாங்கங்களே இலங்கையில் அமையப் பெற்றமை துரதிஷ்டவசமானதாகும்.

அதேபோன்றுதான் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் உயிரிழந்துவிட்ட போதிலும் அதன் பின்னணியிலிருந்து இயக்கியவர்கள் இதுவரை கண்டறியப்படவில்லை. அது தொடர்பான விசாரணைகளும் முடிவின்றி நீண்டு செல்கின்றன. இதுவிடயத்திலும் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ சமூகத்திற்கு நீதி நிலைநாட்டப்படுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளன.

எனவேதான், சமகால உலகில் நடந்த பயங்கரவாத செயல்களிலேயே கூடிய விரைவில் விசாரணைகள் பூர்த்தியாக்கப்பட்டு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட்ட சம்பவமாக கிரைஸ்ட்சர்ச் படுகொலை வழக்கு பதிவாகியுள்ளது. இதனை முன்னுதாரணமாகக் கொண்டு இவ்வாறான படுகொலைகள் விடயத்தில் விரைந்து நீதி நிலைநாட்டப்படுகின்ற பொறிமுறை இலங்கை போன்ற நாடுகளில் கொண்டுவரப்பட வேண்டும்.

அதுவே எதிர்காலத்தில் இவ்வாறான துரதிஷ்ட சம்பவங்கள் நடக்காது தடுக்கவும் குற்றவாளிகள் வெளியுலகில் சுதந்திரமாகத் திரிவதைத் தடுக்கவும் வழிசமைக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.