20 ஆவது திருத்தம் அனைவரையும் அரவணைக்க வேண்டும்

0 907

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு நேற்று இடம்பெற்ற நிலையில், அதில் பங்கேற்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ஆற்றிய கொள்கைப் பிரகடன உரை கவனிக்கத்தக்கதாகும்.

எந்தவொரு சக்திக்கும் அடிபணியாது நாட்டின் இறைமையையும் நாட்டு மக்களையும் பாதுகாத்து நாட்டை சுபீட்சத்தை நோக்கி கொண்டு செல்வேன் என இதன் போது தெரிவித்த ஜனாதிபதி, கடந்த ஜனாதிபதி தேர்தலில் 69 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தன்மீது நம்பிக்கை வைத்து வழங்கிய ஆணையை காப்பாற்றுவேன் என்றும் உறுதியளித்தார்.

பௌத்த சமயத்திற்கான முன்னுரிமையை உறுதிசெய்யும் அதேநேரம், இந்த நாட்டின் எந்தவொரு பிரஜையும் தாம் விரும்பும் சமயத்தை பின்பற்றுவதற்கான சுதந்திரம் மிகச் சிறப்பாக பாதுகாக்கப்பட்டுள்ளது என்பது மக்களுக்கு தற்போது தெளிவாகியுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அரச நிர்வாகத்திற்காக ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கு தான் முன்னணி பௌத்த பிக்குகளைக் கொண்ட ஆலோசனை சபை ஒன்றை அமைத்துள்ளதாகவும் தொல்பொருள் பெறுமதிவாய்ந்த இடங்களை பாதுகாப்பதற்கும் பௌத்த மரபுரிமைகளை பாதுகாப்பதற்கும் விசேட செயலணி ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

“அரசியலமைப்பில் மாற்றத்தை செய்வதற்காக நாம் கோரிய மக்கள் ஆணை எமக்கு கிடைக்கப் பெற்றுள்ள காரணத்தினால் எமது முதலாவது பணியாக நாம் மக்களுக்கு உறுதியளித்தவாறு, 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்க நடவடிக்கை எடுப்போம். அனைவருடனும் இணைந்து நாட்டுக்குத் தேவையானதும் பொருத்தமானதுமான புதிய அரசியலமைப்பொன்றை கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ என்ற எண்ணக்கருவுக்கு முதலிடம் வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நாட்டை பொருளாதார ரீதியாக முன்னேற்றுதல், தொழில்வாய்ப்புகளை வழங்குதல், உள்நாட்டு உற்பத்திக்கு முன்னுரிமையளித்தல், தேசிய பாதுகாப்பு, பாதாள உலக செயற்பாடுகள், போதைப்பொருள் பிரச்சினை போன்ற சமூக சீரழிவுகளிலிருந்து மக்களை மீட்டெடுத்தல், விவசாயத்துறை மேம்பாடு, அரசாங்க சேவையை பலப்படுத்தல், குடிநீர் உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்த்தல் என ஜனாதிபதி தனது கொள்கைப் பிரகடன உரையில் பல்வேறு முக்கியத்துவம்வாய்ந்த விடயங்களைச் சுட்டிக்காட்டியிருந்தார்.

அந்த வகையில் ஜனாதிபதியின் மேற்படி முக்கியத்துவம்வாய்ந்த திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வதற்கு ஒத்துழைக்க வேண்டியது இம்முறை தெரிவு செய்யப்பட்ட ஆளும் தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரதும் கடப்பாடாகும்.
ஏலவே நாடு பல்வேறு சவால்களைச் சந்தித்து வந்த நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் கொவிட் 19 வைரஸ் பரவல் என்பன நாட்டை பல்வேறு துறைகளிலும் மேலும் பின்னோக்கித்தள்ளியுள்ளன. இவற்றிலிருந்து நாட்டை மீட்டெடுத்து அபிவிருத்திப் பாதையில் முன்கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவே மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் ஆற்றிய கன்னியுரையிலும் இந்த நாட்டில் பௌத்த மக்களுக்கு முன்னுரிமையளிக்கின்ற போதிலும் சகல மக்களையும் அரவணைத்துச் செல்வேன் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச சுட்டிக்காட்டியிருந்தார். அதனையே அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதித் தேர்தலின் பிற்பாடு நாட்டில் பாரியளவிலான இன, மத முறுகல்கள் ஏற்படுவதற்கு இடமளிக்கப்படவில்லை. பாராளுமன்ற தேர்தல் பிரசார காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்கள் அதிகரித்திருந்த போதிலும் தேர்தலின் பிற்பாடு வன்முறைகளோ, குழப்பங்களோ ஏற்படாதவாறு பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்திலும் சிறுபான்மை சமூகங்களின் நம்பிக்கையை கட்டியெழுப்பும் வகையிலான வேலைத்திட்டங்களை ஜனாதிபதி முன்கொண்டு செல்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

ஜனாதிபதி தனது நேற்றைய உரையிலும் அரசியலமைப்பு திருத்தத்தையும் ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ எனும் எண்ணக்கருவையும் மீண்டும் வலியுறுத்தியிருந்தார். எனினும் ஒரே நாடு – ஒரே சட்டம் என்பது சிங்கள மக்களை மாத்திரம் முன்னுரிமைப்படுத்துகின்ற, நாட்டில் நடைமுறையிலுள்ள தனியார் சட்டங்களை ஒழிப்பதாக அமைந்துவிடக் கூடாது. மாறாக நாட்டிலுள்ள எல்லா மக்களுக்கும் பொதுவானதாகவும் சிறுபான்மை சமூகங்களின் தனித்துவம், கலாசாரம், பன்முகத்தன்மையை மதிப்பதாகவும் அமைய வேண்டும் என்பதே அனைவரதும் விருப்பமாகும்.

இதேவேளை, அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை ஒழித்து, 20 ஆவது திருத்தத்தை வரைவதற்கான உப குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. இதில் அமைச்சர்களான ஜீ.எல்.பீரிஸ், அலி சப்ரி உள்ளிட்ட ஐவர் நியமிக்கப்பட்டுள்ளனர். இக் குழுவினர் நாட்டின் சகல சமூகங்களையும் அரவணைத்துச் செல்லும் வகையில் திருத்தங்களை வரைவதுடன் கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக நாட்டில் நிலவும் இன, மத முரண்பாடுகளுக்கு இதன் ஊடாக முற்றுப்புள்ளி வைக்கவும் முன்வர வேண்டும். இதுவிடயத்தில் நீதியமைச்சர் அலி சப்ரி, தனது கடமையை சரிவரச் செய்வார் என எதிர்பார்க்கலாம். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.