சர்வதேசத்தினால் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்திற்கும் ஹெளதி போராளிகளுக்கும் இடையே இம் மாதம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் முயற்சியின் ஒரு கட்டமாக ஐக்கிய நாடுகள் சபையின் யெமனுக்கான பிரதிநிதி மார்டின் கிரிபித்ஸ் கிளர்ச்சிக்காரர்களின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு கடந்த திங்கட்கிழமை விஜயம் செய்தார்.
சவூதி அரேபியா உள்ளிட்ட அரேபிய கூட்டுப் படைகளின் பின்னணியைக் கொண்ட யெமனின் இராணுவ நடவடிக்கைகள் இலக்காகக் கொண்டுள்ள இறக்குமதி மற்றும் உதவிகளுக்கான உயிர்நாடியாகக் காணப்படுகின்ற ஹெளதிகளின் கட்டுப்பாட்டிலுள்ள ஹுதைதா துறைமுகத்தைச் சூழவுள்ள பகுதிகளில் மோதல்கள் தணிந்துள்ள நிலையில் மார்டின் கிரிபித்ஸின் இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது.
தமது இயக்கத்திற்கு எதிராக சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் இணைந்த அணியினர் மேற்கொண்டுவரும் தாக்குதல்களை நிறுத்துவார்களானால் தாமும் வன்முறைகளை கைவிடுவதாக இதற்கு முன்னதாக ஹெளதி குழுவின் உச்சநிலை விடுதலைக் குழுவின் தலைவரும் செல்வாக்கு மிக்க அரசியல் பிரமுகருமான மொஹம்மட் அலி அல்-ஹெளதி தெரிவித்திருந்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் தூதுவரான கிரிபித்துடனான கலந்துரையாடலின் அடிப்படையிலேயே எமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்Jவதற்காகவும் சமாதான முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்காகவும் இத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக மொஹம்மட் அலி அல்-ஹெளதி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
சுமார் நான்கு ஆண்டுகளாக றியாதின் ஆதரவுடனான ஜனாதிபதி அப்துர் ரப்பு மன்சூர் ஹாதியின் அரசாங்கத்திற்கு எதிராக சண்டையில் ஈடுபட்டுவரும் கிளர்ச்சிக் குழுவினர் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் இணைந்த படையணியினர் சமாதானத்தை விரும்பினால் விரிவான யுத்த நிறுத்தமொன்றிற்கு ஆயத்தமாக இருப்பதாக அறிவித்திருந்தனர்.
அண்மைக்காலக் கணிப்பீடுகளின் பிரகாரம் ஏலவே உலகின் வறுமையான நாடுகளுள் ஒன்றாகக் காணப்பட்ட யெமனில் யுத்தத்தின் காரணமாக 56,000 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.