மதரசாக் கல்வியில் மாற்றம் வேண்டும்

0 1,508

கலாநிதி அமீர் அலி, 

மேர்டொக் பல்கலைக்கழகம், மேற்கு அவுஸ்திரேலியா

இந்தத் தலைப்பில் சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் நாட்டின் முஸ்லிம் முரசு சஞ்சிகையில் ஒரு கட்டுரையை நான் எழுதியபோது அதற்குச் சார்பாகவும் எதிராகவும் பலர் கருத்துத் தெரிவித்திருந்தனர். ஆனால் இன்றைய இலங்கையில் மதரசாக்களையே முற்றாக மூடிவிட வேண்டுமென்ற ஒரு குரல் பௌத்த துறவிவேடம் பூண்ட சில இனத்துவேசிகளால் எழுப்பப்பட்டு அது ஆட்சியாளர்களையும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த நல்லாட்சி அரசாங்கம் இவர்களை ஓரளவு திருப்திப்படுத்துவதற்காக எல்லா மதரசாக்களையும் அரசாங்கத்திடம் பதிவுசெய்யுமாறு ஒரு கோரிக்கையை விடுத்து அதற்கான சில நடவடிக்கைகளையும் அது மேற்கொண்டது. அந்த நடவடிக்கையும் அந்த அரசாங்கத்தின் ஏனைய முயற்சிகளைப்போன்ற ஒரு போலி என்பதை உணர்ந்த இவர்கள் எதிர்வரும் பொதுத்தேர்தலை ஓர் ஆயுதமாகப் பாவித்து மீண்டும் அதே பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளனர்.

இந்தப் பிரச்சாரத்துக்கு உடனடிக்காரணமாய் அமைந்தது கடந்த வருடம், 2019 இல் உயிர்த்த ஞாயிறன்று சஹரான் ஹாஷிம் என்ற ஒரு முஸ்லிம் பயங்கரவாதியின் தலைமையில் அரங்கேறிய மிருகத்தனமான தற்கொலைக் குண்டுவெடிப்புச் சம்பவமாகும். சுமார் இருநூற்றைம்பது அப்பாவி கிறித்தவ உயிர்கள் இக்கோரச் சம்பவத்தில் பலியாயின. மனிதாபிமானமுள்ள எந்த ஒரு ஜீவனும் இப்பயங்கரவாதிகளை மன்னிக்க முடியாது. பாதுகாப்புப் படையினர் இக்காட்டுமிராண்டிகளைக் கொன்று குவித்ததை இலங்கை முஸ்லிம் சமூகம் ஒட்டுமொத்தமாக ஆதரித்ததுமல்லாமல் அவர்களின் உயிரற்ற சடலங்களைக்கூட  இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய மறுத்தமை இச்சம்பவம் பற்றிய முஸ்லிம்களின் நிலைப்பாட்டினைத் தெளிவுபடுத்திற்று. இருந்தும், சஹரான் ஹாஷிம் ஒரு மதரசாக் கல்வியின் உற்பத்திதான், ஆகவே மதரசாக்களெல்லாம் பயங்கரவாதத்தை வளர்க்கின்றன என்ற ஒரு கதையைப்புனைந்து, அதையே ஒரு பிரச்சாரப் பொருளாக்கி, மதரசாக்களெல்லாம் மூடப்படவேண்டுமென்ற கோரிக்கையை சிங்கள-பௌத்த இனவாதிகள் இன்று பரப்பிவருகின்றனர்.

மூன்று விடயங்களை இவர்கள் முதலில் உணரவேண்டும். ஒன்று, சஹரான் ஒரு மதரசாவின் உற்பத்தியல்ல, மாறாக, அவன் மதரசாவால் துரத்தப்பட்டு வெளிநாட்டு முஸ்லிம் தீவிரவாதிகளின் பிரச்சாரத்தினால் ஈர்க்கப்பட்ட ஒரு போலி மதபோதக நடிகன். உலக அரங்கிலே முஸ்லிம்கள் அனுபவிக்கின்ற அவலங்களையும் வேதனைகளையும் ஒலி, ஒளி ஊடாக அறிந்து வெதும்பும் எத்தனையோ உள்ளங்கள் தாமும் ஏதாவதொன்று செய்ய முடியாதா என்று ஏங்கும் நிலையில் தீவிரவாத முஸ்லிம் பிரச்சாரகர்களின் வங்குறோத்து அரசியல் கருத்துக்கள் அவ்வுள்ளங்களை இலகுவில் ஈர்ப்பதை உலகெங்கும் காண்கிறோம். அவ்வாறு ஈர்க்கப்பட்ட ஒரு கூட்டமே சஹரானின் தேசிய தௌஹீத் ஜமாஅத். இவ்வியக்கத்தை முளையிலேயே கிள்ளியெறியும் வாய்ப்பிருந்தும் அவ்வியக்கத்தினரின் ஆதரவால் அரசியல் இலாபம் சம்பாதித்த அரசியல் தலைவர்களை முதலில் தண்டிக்கவேண்டும்.

இரண்டாவதாக, இலங்கையின் மதரசாக்களுக்கு ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்ட வரலாறுண்டு. அந்த நீண்டகால வரலாற்றில் எந்தக் கட்டத்திலும் எந்த ஒரு மதரசாவும் தீவிரவாதத்தைப் போதிக்கவுமில்லை, வளர்க்கவுமில்லை. மதரசாக்களை மூடவேண்டுமெனத் துடிக்கும் இந்த இனவாதிகள் ஏதாவதொரு மதரசாவுக்குச் சென்று அங்கே என்ன புகட்டப்படுகின்றதென்பதை எப்போதாவது அவதானித்திருக்கிறார்களா? அல்லது அவர்களின் பிரச்சாரத்துக்கு ஆதாரமாக ஏதாவதொரு மதரசாவின் பாடங்களையோ பாடப் புத்தகங்களையோ உதாரணம் காட்டுவார்களா? அந்தப் பாடங்களின் மொழியே இவர்களுக்குப் புரியாத நிலையில் ஏன் இந்தப் பித்தலாட்டம்? உண்மையிலேயே இவர்களின் குறிக்கோள் மதரசாக்களல்ல, முஸ்லிம்கள். இந்த நாட்டில் யுகயுகமாக ஒட்டியும் ஆம்பலும்போல் வாழ்ந்துவரும் முஸ்லிம்களின் பொருளாதாரத்தையும், சனத்தொகை வளர்ச்சியையும், அரசியல் செல்வாக்கையும் அழித்தொழித்து முஸ்லிம்களை ஒரு குற்றேவல் புரியும் அடிமைகளாக மாற்றுவதே அவர்களின் அந்தரங்க அபிலாஷை. அதற்குக் கிடைத்த பிரச்சாரத் துரும்பே மதரசாக்கள். சஹரானின் கொலைத் தாண்டவம் அவர்களுக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம்.

மூன்றாவதாக, உலகளாவிய ரீதியில் மதரசாக்களின் மகத்தான வரலாற்றை இவர்கள் அறியார். இஸ்லாமியரின் அறிவுலக வரலாற்றில் மதரசாக்களுக்கு ஒரு தனியிடமுண்டு. நபிகளாரின் காலத்திலேயே மதரசாக் கல்வி ஆரம்பித்துவிட்டது. மதீனாவிலே சபா என்னும் மலைக்குன்றருகே சையித் பின் அக்ரம் என்பவருக்குச் சொந்தமான ஒரு தோட்டத்தில் முதலாவது மதரசா ஆரம்பிக்கப்பட்டதாகவும் அங்கே நபி பெருமானாரே பாடம்சொல்லிக் கொடுத்ததாகவும் ஒரு தகவலுண்டு. அதனைத் தொடர்ந்து மதீனா பள்ளிவாசலே மதரசாவாக இயங்கியதுமுண்டு. பின்னர், உலகின் நாலா திசைகளுக்கும் முஸ்லிம்கள் பரவத்தொடங்கவே மதரசாக்களும் பெருகத் தொடங்கின. அவற்றையெல்லாம் பெயருடன் பட்டியலிட்டால் இக்கட்டுரை மிகவும் நீண்டுவிடும். உதாரணத்துக்காக ஒன்றிரண்டைக் குறிப்பிடுவோம்.

எட்டாம் நூற்றாண்டில் அப்பாசியர் ஆட்சியில் கலிபா ஹாறுன்-அல்-றஷீத் பக்தாதிலே உருவாக்கி, பின்னர் அவரின் புதல்வர் அல்-மாமுன் கலிபாவால் வளர்க்கப்பட்ட அறிவகம் (House of Wisdom) ஒரு மதரசாவாக இயங்கி அங்கே முஸ்லிம் அல்லாத விற்பன்னர்களும் கல்விபோதித்ததை வரலாறு புகட்டுகிறது. அதேபோன்று பதினோராம் நூற்றாண்டில் அதே பக்தாதில் நிசாமுல் முல்க் ஆரம்பித்த நிசாமியா மதரசாவிலே மாமேதை கஸ்ஸாலி பணியாற்றியதை யார்தான் மறுப்பர்? மேலும் எகிப்திலே இன்று பல்கலைக்கழகமாக விளங்கும் அல்-அஸ்ஹர் ஒரு மதரசாவாகவே ஆரம்பித்தது. அதே போன்று மொரோக்கோவிலும் தூனீசியாவிலும் டமஸ்கஸிலும் இஸ்தான்புலிலும் எத்தனையோ. அண்டை நாடான இந்தியாவிலும் மொகலாயராட்சியில் புகழ்பெற்ற மதரசாக்கள் பல இயங்கின. இந்த வரலாற்றினுள் புதைந்து கிடக்கும் ஒரு வரலாற்று உண்மையை இவர்களின் கவனத்துக்காகக் கூறவேண்டியுள்ளது.

அதாவது, பக்தாதின் மதரசாக்களிலிருந்து உருவாகிய முஃதஸிலா அறஞர்களின் சிந்தனைகள்தான் பகுத்தறிவுவாத இயக்கத்தைத் தோற்றுவித்து அதுவே பின்னர் ஐரோப்பிய விழிப்பியக்கத்துக்குப் பாதை வகுத்ததென்பதையும் அந்தப்பாதை வழியாகப் பிறந்ததுதான் விஞ்ஞான வளர்ச்சியும், அதனைத் தொடர்ந்த முதலாவது கைத்தொழிற் புரட்சியும், இன்றைய நவீனத்துவமும் என்பதை இந்த அறிவிலிகள் அறிவார்களா? அதை அறிந்திருந்தால் அப்படிப்பட்ட மதரசாக்களாக இன்றைய மதரசாக்களை மாற்றுங்கள் என்று கூறுவார்களேயன்றி மதரசாக்களை மூடுங்களென்று கர்ஜிக்கமாட்டார்கள். நாய்கள் குரைக்கிறேதே என்று கார்வான் தனது பயணத்தை நிறுத்த முடியாது.

இனி, இக்கட்டுரையின் முக்கிய விடயத்துக்கு வருவோம். பொதுவாகவே, உலக அரங்கில் மதரசாக்கள் எல்லாம் இன்று இழிச்சொல்லுக்கு ஆளாகியுள்ளன. முஸ்லிம் தீவிரவாதத்தின் பிறப்பிடம் மதரசாக்கள் என்ற கருத்து உலகளாவிய ரீதியில் பேசப்படுகின்றது. இதற்கொரு முக்கிய காரணம் அமெரிக்காவும் அதன் ஆத்ம நண்பன் சவூதி அரேபியாவும் இணைந்து மதரசாக்களின் புனிதத்தைக் கெடுத்தமையாகும். றொனல்ட் றீகன் ஜனாதிபதியாகவிருந்த காலத்தில் சோவியத் படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து விரட்டியடிப்பதற்காக அமெரிக்காவின் ஆயுதங்களும் சவூதி அரேபியாவின் பணமும் சேர்ந்து பாகிஸ்தானிய, ஆப்கானிஸ்தானிய மதரசாக்களைப் போர்ப் பயிற்சிப் பாசறைகளாக்கி அவற்றின் மாணவர்களைப் போராளிகளாகப் பயிற்றுவித்தன. இன்று ஆப்கானிஸ்தானை ஆட்டுவிக்கும் தலிபான்கள் அமெரிக்காவினதும் சவூதி அரேபியாவினதும் அன்றைய செல்லப் பிள்ளைகளே. ஆனால் சோவியத் படைகளை விரட்டியடித்து வெற்றிகொண்ட மமதையில் அமெரிக்காவையே முஸ்லிம் நாடுகளிலிருந்து விரட்டியடிப்பதற்காக அந்த மதரசா வீரர்கள் அல்கைதாவுடன் இணைந்து தமது போராயுதங்களை அமெரிக்காவின் பக்கம் திருப்பியவுடன் மதரசாக்கள் அமெரிக்காவின் கண்டனத்துக்குள்ளாகின. மதரசாக்களை தீவிரவாதிகளின் பிறப்பிடமென்றும் அவை மூடப்படல் வேண்டுமென்றும் அமெரிக்காவும் அதன் நேசநாடுகளும் பிரச்சாரம் செய்யத்தொடங்கின. அதன் விளைவாகவே இன்று மதரசாக்கள் இழிப்பெயருக்கு ஆளாகியுள்ளன. அதன் எதிரொலியையே இலங்கையிலும் இனவாதத்தைக் கக்கும் பௌத்த துறவிகள் சிலரிடமிருந்து கேட்கிறோம்.

இத்தனைக்கும் மத்தியில் மற்றவர்களின் தூற்றுதல்களை ஒரு புறம் தள்ளிவைத்துவிட்டு மதரசாக் கல்வி முறையில் முக்கியமான சில மாற்றங்களை முஸ்லிம் சமூகத்தின் வருங்கால சுபீட்சத்துக்காக மேற்கொள்ள வேண்டியுள்ளது. இன்றைய மதரசாக்கள் அதன் மாணாக்கர்களை இளம்வயதிலிருந்தே சிறந்த பண்புள்ள இளைஞர்களாக உருவாக்குவதை யாரும் மறுக்க முடியாது. சாதாரண பாடசாலைகளிலும் கல்லூரிகளிலும் ஏன் பல்கலைக்கழகங்களிலும்கூட நுழைந்துள்ள எத்தனையோ ஒழுக்கச் சீர்கேடுகளை மதரசாக்களுக்குள்ளே காண்பதரிது. அதுமட்டுமல்ல, பெரும்பாலான மதரசா மாணவர்கள் பொருளாதார ரீதியில் குறைந்த மட்டத்தில் வாழும் குடும்பங்களிலிருந்து வருபவர்கள். இந்த மதரசாக்களும் இல்லையென்றால் அவர்களில் பெரும்பாலானோர் சமூகத்தின் சாக்கடைகளாக மாறக்கூடிய ஆபத்துமுண்டு. இந்த ஒரு காரணமே மதரசாக்கள் தொடர்ந்தும் இயங்குவதன் அவசியத்தை வலியுறுத்துகின்றது. ஆனாலும் காலத்துக்கேற்றவாறு மதரசாக்கள் தமது போதனா முறையையும் பாடவிதானங்களையும் மாற்றாமல் பழமையையே போற்றியும் போதித்தும் வருவதால் அவற்றிலிருந்து வெளியேறும் மாணவர்களின் எதிர்காலம் ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே சுழல்கிறது.

வைதீகத்தின் தூண்களாக மதரசா மாணவர்கள் வெளியேறுவதால் தொழில்நுட்ப விஞ்ஞான யுகம் தோற்றுவிக்கும் சவால்களுக்கு ஈடுகொடுக்க முடியாதவர்களாகத் திணறுகிறார்கள். சொன்னதையே சொல்லும் கிளிப்பிள்ளைகள்போல் மனனஞ்செய்த பழங்கதைகளையே மீண்டும் மீண்டும் எடுத்துரைப்பதால் புதுமையின் சவால்களுக்குமுன் பழமையின் பதில்கள் பொருத்தமற்றதாய் விடுகின்றன. இந்த நிலை இரண்டு காரணங்களால் ஏற்படுகின்றது. ஒன்று, தர்க்க ரீதியான சிந்தனை வளராமை. இரண்டு, பரந்த வாசிப்பும் அதற்கேற்ற மொழிவல்லமையும் இல்லாமை.

முதலாவது குறைபாடு போதனாமுறையைச் சார்ந்தது. ஐயம் அறிவின் அடிப்படை என்ற அடித்தளத்திலிருந்து பிறந்ததே இன்றைய அறிவியற்கலைகள். என்ன, எது, யார், எங்கே, எப்போது, போன்ற வினாக்கள் மூளையின் ஞாபகசக்தியை வளர்க்க, ஏன், எப்படி, எவ்வாறு, போன்ற கேள்விகள் மூளையின் தர்க்க சிந்தனைச் சக்தியை வளர்க்கின்றன. முன்னையவை பழமையையே பாதுகாக்க பின்னையவை புதுமைக்கு வழிவகுக்கின்றன. ஐயத்தை வளர்க்கும் மூளை சாத்தானின் தொழிற்சாலை என்று போதிக்கப்பட்டால் அந்தப்போதனையால் உருவாகும் மாணவ சமுதாயம் புதுமையைப் படைக்குமா? எனவே, அவர் சொன்னார், இவர் சொன்னார், இந்த நூலில் உண்டு அந்தக் கிரந்தத்திலுண்டு, ஆகையால் அவை யாவும் உண்மை என்று போதிக்கும் முறை இந்த யுகத்துக்குப் பொருந்தாது. இதை மதரசாப் போதனையாளர்கள் உணர்ந்து தமது போதனாமுறையை மாற்றவேண்டும். ஐயத்தை வரவேற்றதனாலேதான் அன்றைய முஸ்லிம்கள் அறிவுலகின் முன்வரிசையில் நின்று அதன் எல்லைகளை விரிவாக்கினர். பின்னர் ஐயத்தை மட்டந்தட்டி பழமைக்கு ஆமாப்போடும் மந்தைகளை உருவாக்கியதால் முஸ்லிம்கள் அறிவுலகின் ஓரத்துக்குத் தள்ளப்பட்டனர். இது ஓர் ஆயிரம் ஆண்டுகால வீழ்ச்சி. இதன் விளைவாக, மதரசாக்கள் பழமையின் கருவூல அறைகள் எனப் பெயரெடுக்கலாயின. ஆகவே மதரசாக்கல்வி முறையில் மாற்றம் ஏற்படவேண்டியது அவசியம். அங்கே பணியாற்றும் போதனாசிரியர்களும் ஆசிரியத் தொழிற் பயிற்சி பெறல் வேண்டும். அதை எப்படி யார் செய்வதென்பதை பின்னர் விளக்குவோம்.

இரண்டாவதாக, மாணவர்களுக்குப் பரந்த வாசிப்பு அவசியம். இது மதரசா மாணவர்களுக்கு மட்டுமல்ல பொதுவாக எல்லா மாணவர்களுக்கும் வேண்டியதொன்று. புதினப் பத்திரிகையையே வாசிக்க இடமளிக்காத எத்தனையோ மதரசாக்கள் நம்மிடையே உண்டு. எத்தனை மதரசாக்களில் நூல் நிலையம் இருக்கின்றது? பழைய கிரந்தங்களையே மீண்டும் மீண்டும் வாசித்து மனப்பாடம் பண்ணுவதால் அறிவு விசாலமடைய முடியாது. இன்று இஸ்லாத்தைப் பற்றியும் அதன் வரலாறு பற்றியும், தற்கால முஸ்லிம் அறிஞர்கள் பற்றியும் அவர்களின் படைப்புகளைப் பற்றியும் நூற்றுக்கணக்கான நூல்கள் புதுமைக் கருத்துக்களுடன் பல மொழிகளிலும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த நூல்களை வாசிக்கும் வாய்ப்பினை மதரசாக்கள் மாணவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டாமா? இன்று புத்தகங்கள் மின்வடிவில் வெளிவருகின்றன. அற்றை கணினி மூலம் வாசிக்கலாம். ஆகவே கணினி வசதிகளை ஏற்படுத்தி அவற்றைப் பயன்படுத்தும் ஆற்றலையும் மதரசா மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கவேண்டாமா?. அந்த வசதிகளை ஏற்படுத்தும் அளவுக்கு எத்தனை மதரசாக்களுக்கு பொருள் வசதி இருக்கின்றது? எனவேதான் மதரசாக்களின் எண்ணிக்கையைக் குறைத்து பொருள் வளத்தைச் சிக்கனப்படுத்தித் தரத்தை உயர்த்துவதற்கான முயற்சிகளை முஸ்லிம் சமூகம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. தொகை முக்கியமல்ல, தரமே முக்கியம்.

பாடவிதானங்களிலும் மாற்றம் வேண்டும். இன்று மதரசாக்களில் உபயோகிக்கப்படும் அத்தனை பாடப்புத்தகங்களும் அவசியந்தானா? அவற்றை ஒவ்வொன்றாக எல்லா மாணவர்களும் பாடநேரங்களில் வாசிக்கத்தான் வேண்டுமா? அவற்றின் போதனைகளை விரிவுரையாளர்கள் சுருக்கமாக விளக்கி அவற்றை வாசிக்கும் பொறுப்பை மாணவர்களின் தனிப்பட்ட பொறுப்பாக விட்டாலென்ன? இது சீர்திருத்தம் கருதிச் சிந்திக்கப்பட வேண்டிய விடயமொன்று.

தொழில்நுட்ப அறிவையும் மொழியாற்றலையும் வளர்க்காமல் மதரசாக் கல்வி நவீன யுகத்துக்கு ஏற்றவாறு மாணவர்களை உற்பத்திசெய்ய முடியாது. இன்றைய நிலையில் ஆங்கில அறிவு இல்லாமல் எந்தப் பட்டதாரியும் தனது அறிவினை ஆழமாக்குவதும் விசாலமாக்குவது கடினம். இது மதரசாப் பட்டதாரிகளுக்கும் பொருந்தும். மதரசாக் கல்வியின் முதலாம் வருடத்தை பிறமொழி ஒன்றைக் கற்பதிலும் கணினிக்கலையைக் கற்பதிலும் செலவிட்டாலென்ன?

மதரசாக் கல்வியின் சீர்திருத்தம் முஸ்லிம்களின் கல்விச் சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாகத்தான் இடம்பெற வேண்டும். சாதாரண ஓதல் பள்ளிக்கூடத்திலிருந்து, ஆரம்பப் பாடசாலை, மதரசாக்கள், மகா வித்தியாலயங்கள், பல்கலைக்கழகம் என்றவாறு ஒவ்வொரு படித்தரத்திலும் எவ்வாறான இஸ்லாமியக் கல்வி புகட்டப்பட வேண்டுமென்பதை கல்விமான்களைக் கொண்ட ஒரு குழுவொன்று ஆராய்ந்து அதற்கு வேண்டிய பாடத் திட்டங்களைத் தீட்டவேண்டும். தனியே மதரசாக்களை மட்டும் இலக்காகக் கொண்டு சீர்திருத்தம் செய்யமுடியாது. அவ்வாறான ஒரு கல்விமான்களின் கருத்தரங்கு மிக அவசியம். அகில இலங்கை ஜமியத்துல் உலமா இதை முன்னின்று நடத்துமா?  – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.