வெறுப்புப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?

0 847

எம்.பி.எம்.பைறூஸ்

“ஒரு நபர் அல்லது குழு ஒன்றினைக் குறிப்பிட்டு, அவர்களின் மதம், இனம், தேசியம், குலம், நிறம், பரம்பரை, பால்நிலை அல்லது ஏனைய அடையாளக் காரணிகளின் அடிப்படையில் தாக்குதல் தொடுக்கும் வகையில் அமைந்த இழிவான அல்லது பாகுபாடுமிக்க மொழியில் மேற்கொள்ளப்படும் பேச்சு, எழுத்து அல்லது நடத்தை வடிவில் அமைந்த எந்த ஒரு தொடர்பாடலும் வெறுப்புப் பேச்சு எனப்படும்” – ஐக்கிய நாடுகள் சபையின் வெறுப்புப் பேச்சு மீதான மூலோபாயம் மற்றும் செயற்பாட்டுத் திட்டம்

2020 பாராளுமன்றத் தேர்தல் பிரசாரங்களில், தேர்தல் திணைக்களத்தினதும் தேர்தல் கண்காணிப்புக் குழுக்களினதும் அதிக கவனத்தையீர்த்த விடயமாக மாறியிருப்பது வெறுப்புப் பேச்சுக்களின் அதிகரிப்பாகும்.

தேர்தல் பிரசாரத்தின் ஆரம்ப வாரங்களில் வெறுப்புப் பேச்சுக்கள் அவ்வளவு தாக்கம் செலுத்தாவிடினும், தேர்தல் பிரசார இறுதி வாரங்களில் சகோதர இனங்களையும் எதிரணி வேட்பாளர்களையும் இலக்கு வைத்த வெறுப்புப் பேச்சுக்கள் நாடு முழுவதும் கணிசமாக அதிகரித்திருந்ததாக கண்காணிப்பாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தேர்தல் காலத்தில் மாத்திரமன்றி தேர்தல் முடிந்த பின்னரும் வெறுப்புப் பேச்சுக்களும் அதனைக் காரணமாகக் கொண்ட வன்முறைகளும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தின் (சி.எம்.ஈ.வி) தேசிய இணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க குறிப்பிடுகிறார்.

தேர்தல் கால வெறுப்புப் பேச்சுக்கள் குறித்து ஆய்வொன்றை மேற்கொண்டு வரும் ஹாஷ்டெக் ஜெனரேஷன் நிறுவனம் ஜூலை மாத முதல் இரு வாரங்களில் மேற்கொண்ட கண்காணிப்புகளை அடிப்படையாகக் கொண்டு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. ‘இணையத்தில்  வெறுப்பு மற்றும் அபாயகரமான பேச்சுக்களை கண்காணித்தல்’ எனும் தலைப்பிலான அவ்வறிக்கையில், முஸ்லிம்களை இலக்கு வைத்து 58 வீதமான வெறுப்புப் பேச்சுக்களும் அரசியல் கட்சிகளை இலக்கு வைத்து 10.5 வீதம், தமிழர்களை இலக்கு வைத்து 5.3 வீதம்,   பெண்களை இலக்கு வைத்து 2.6 வீதம், மாற்றுத்திறனாளிகளை இலக்கு வைத்து 2.6 வீதம் என வெறுப்பு மற்றும் அபாயகர பேச்சுக்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 55.6 வீதமானவை அரசியல் ரீதியானவையாகும். 22.2 வீதமானவை பால்நிலை சார்ந்தவையாகும்.

இந் நிலையில் இவ்வாறான வெறுப்புப் பேச்சுக்களை கட்டுப்படுத்துவதற்கான தேர்தல்கள் திணைக்களம் எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பதே இன்றை காலகட்டத்தில் பலராலும் எழுப்பப்படும் கேள்வியாகும். இது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் கருத்து வெளியிடுகையில், “ தேர்தல்கள் ஆணைக்குழு, பேஸ் புக் நிறுவனத்துடன் இணைந்து வெறுப்புப் பேச்சு பதிவுகளை நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் இதில் உள்ள சிக்கல் என்னவெனில், எது வெறுப்புப் பேச்சு என சரியாக வரையறுக்க முடியாதிருப்பதாகும். பேஸ் புக் நிறுவனம் வெறுப்புப் பேச்சை நீக்குவதற்கு ஒத்துக் கொள்கின்ற அதேநேரம், கருத்துச் சுதந்திரத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறார்கள். நாம் இதுவரை 1200 பேஸ் புக் பதிவுகளை இனங்கண்டு அவற்றை நீக்குமாறு பேஸ் புக் நிறுவனத்தை கோரினோம். எனினும் அவற்றில் 800 பதிவுகளையே அகற்றினார்கள். மிகுதி 400 பதிவுகளையும் அவர்கள் வெறுப்புப் பேச்சாக காணவில்லை என்பதே இதன் அர்த்தமாகும். இவ்வாறான பல்வேறு சிக்கல்கள் இதுவிடயத்தில் நிலவுகின்றன. இதற்கு ஒரு வாரத்துக்குள் தீர்வு காண முடியாது. அடுத்து வரும் வருடங்களில் இதுபற்றி தேர்தல் ஆணைக்குழு கூடுதல் கவனம் செலுத்தும் என நம்புகிறேன்” என்றார்.

இவ்வாறு சமூக ஊடகங்களை கட்டுப்படுத்துவது சிரமமான காரியமாக அமைந்துள்ள போதிலும் வெறுப்புப் பேச்சுக்களை அறிக்கையிடும் விடயத்தில் வெகுஜன ஊடகங்கள் தமது பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் தீபிகா உடாகம சுட்டிக்காட்டியுள்ளார். “மத நம்பிக்கைகள், சமய பின்பற்றுதல்கள், பேச்சு மொழி, இனம், பழக்க வழக்கங்கள், குலம் கோத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் இலங்கை மக்களிடையே வெறுப்பூட்டும் வகையிலான பிரசார நடவடிக்கைகளை ஒலி அல்லது ஒளி பரப்புதல் பிரசாரம் செய்தல் அல்லது பிரசுரிப்பதனை தவிர்க்க வேண்டும்”  என அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெறுப்புப் பேச்சுக்கள் ஒன்றும் புதிய விடயமல்ல. ஆனாலும் சமூக வலைத்தளங்களின் வருகையும் அவற்றைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்புமே இன்று வெறுப்புப் பேச்சுக்கள் அதிகம் தாக்கம் செலுத்தக் காரணமாகும். இலங்கையில் சுமார் 65 இலட்சம் பேர் முகநூலைப் பயன்படுத்துவதும் வட்ஸ் அப் செயலியின் பாவனை அதிகரித்திருப்பதும் அரசியல் பிரசார ஊடகமாக சமூக வலைத்தளங்களை அதிகம் நாடியிருப்பதும் வெறுப்புப் பேச்சுக்கள் பரந்த வீச்சில் மக்களைச் சென்றடையக் காரணமாயமைந்துள்ளன.

எனினும் கடந்த ஜனாதிபதித் தேர்தலுடன் ஒப்பிடுகையில் இம்முறை சமூக ஊடகங்கள் வாயிலாக வெறுப்புப் பேச்சுக்கள் பகிரப்படுவது குறைவடைந்துள்ளதாக சி.எம்.ஈ.வி.யின் அறிக்கை குறிப்பிடுகிறது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் பேஸ் புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் இலங்கையில் போலிச் செய்திகள் மற்றும் வெறுப்புப் பேச்சுக்கள் கொண்ட பதிவுகளை நீக்குவதற்கு எடுத்துள்ள நடவடிக்கைகளே இதற்குக் காரணம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.பல்வேறு அரச சார்பற்ற நிறுவனங்கள் வெறுப்புப் பேச்சு குறித்து மக்களை விழிப்பூட்டி வருகின்ற போதிலும் வெறுப்புப் பேச்சுக்களை கட்டுப்படுத்த ஒரேவழி இறுக்கமான சட்டங்களை அறிமுகப்படுத்துவதே என்கிறார் தென் கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி ரமீஸ் அபூபக்கர்.  “பல்லின சமூகங்கள் வாழக் கூடிய இலங்கை போன்ற நாடுகளில் வெறுப்புப் பேச்சுக்கள் தொடர இடமளிப்பது ஆரோக்கியமானதல்ல. எனவேதான் இவற்றைத் தடுக்க வெறுப்புப் பேச்சுக்கு எதிரான இறுக்கமான சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும். இவ்வாறானவர்களை சட்டத்தினால் தண்டிப்பதன் மூலம் மாத்திரமே இதனைக் கட்டுப்படுத்தலாம். வேறு வழிகளால் கட்டுப்படுத்த முடியாது” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

இலங்கையைப் பொறுத்தவரை சாதாரண தண்டனைச் சட்டக் கோவையின் கீழும் ஐ.சி.சி.பி.ஆர். எனப்படும் சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சட்டத்தின் கீழும் வெறுப்புப் பேச்சில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும். சமூக வலைத்தளங்களில் பதிவுகளை இட்டமைக்காக பலர் மேற்படி சட்டத்தின் கீழ் அநியாயமாக கைது செய்யப்பட்ட போதிலும் உண்மையாகவே வெறுப்பைக்கக்கும் அரசியல்வாதிகள் மீதோ அல்லது தேர்தல் பிரசாரத்தின் போது வெறுப்புப் பேச்சுக்களை முன்வைத்து இன முறுகல்களுக்கு வித்திடுவோர் மீதோ இதுவரை எந்தவித சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பது கவலைக்குரியதாகும்.

எனவேதான் அடுத்து அமையவுள்ள பாராளுமன்றத்தில், வெறுப்புப் பேச்சுக்களைக் கட்டுப்படுத்தும் வகையிலான சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டு தேர்தல் காலங்களிலும் ஏனைய நாட்களிலும் வெறுப்புப் பேச்சுக்கள் இடம்பெறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தேர்தல்கள் திணைக்களமும் தேர்தல் கண்காணிப்புக் குழுக்களும் இதுவிடயத்தில் தீவிர கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.