எம்.பி.எம்.பைறூஸ்
கொவிட் 19 நெருக்கடி நிலையினால் முழு உலக நாடுகளுமே பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு இலங்கையும் விதிவிலக்கல்ல. விசேடமாக இலங்கையில் பொதுத் தேர்தல் ஒன்றுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட மறுதினமே நாடு முழுமையாக முடக்கப்பட்டது. குறித்த ஊரடங்கு காலப்பகுதியில் மக்கள் பலத்த நெருக்கடிகளை எதிர்கொண்ட நிலையில் அவர்களுக்கு பல்வேறு அரச, தனியார் தொண்டு நிறுவனங்களுடன் அரசியல்வாதிகளும் உதவிகளை வழங்கினர். அவ்வாறானவர்களுள் இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத்தாக்கல் செய்திருந்த அரசியல்வாதிகள் குறிப்பிடத்தக்கவர்களாவர்.
பொதுவாக அனர்த்த சூழ்நிலைகளில் அரசியல்வாதிகள் நிவாரணப் பணிகளில் ஈடுபடுவது வழக்கமாயினும், தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்ட நிலையில் கொவிட் 19 நெருக்கடி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நிவாரணப் பணிகளைக் கொண்டு அரசியல் ஆதாயம் தேடுவது தவிர்க்கப்பட வேண்டும் என்பது தேர்தல்கள் ஆணைக்குழுவின் நிலைப்பாடாகும்.
தேர்தல் திணைக்கள அறிக்கை
கொவிட் 19 நிவாரணப் பணிகளில் அரசியல்வாதிகள் ஈடுபடும் போதும் அவற்றை ஊடகங்களில் பகிரங்கப்படுத்தும்போதும் அது அரசியல் நலன்கொண்டதாக மாற இடமுண்டு என்பதால் அதனைத் தவிர்ந்து கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு இவ்வறிக்கை மூலம் கோரிக்கை விடுத்திருந்தது.
தேர்தல் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல் இவ்வாறிருந்த போதிலும் பல அரசியல்வாதிகளும் கொவிட் 19 நெருக்கடி காலத்தின்போது தாம் செய்த பணிகளை உடனுக்குடன் தமது சமூக வலைத்தள கணக்குகளில் பதிவேற்றியிருந்ததை அவதானிக்க முடிந்தது. தற்போதும் கூட சில அரசியல்வாதிகள் மேற்படி புகைப்படங்கள், வீடியோ காட்சிகளை தமது தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தியிருப்பதை காண முடிகிறது.
எனினும் கொவிட் 19 நிவாரணப் பணிகளில் அரசியல்வாதிகள் ஈடுபடுவதை தேர்தல் விதிமுறை மீறலாக கருத முடியாது என நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும தெரிவிக்கிறார். அத்துடன் தான் அரசியல் இலாபம் கருதி இவ்வாறான நிவாரணப் பணிகளை முன்னெடுத்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுதலித்தார்.
“மனித நேயம் என்பது என்னுடன் ஒட்டிப் பிறந்த பண்பாகும். அரசியலுக்காக இதையெல்லாம் நான் செய்யவில்லை. கடந்த காலங்களில் ஏற்பட்ட பல நெருக்கடிகளின்போதும் நான் இவ்வாறே மக்களுக்காக செயற்பட்டுள்ளேன். துரதி~;டவசமாக எனது அரசியல் எதிரிகள் நான் நிவாரணப் பணிகள் ஊடாக அரசியல் இலாபம் பெறுவதாக பொய்யான முறைப்பாடுகளை மேற்கொண்டனர். இதனால் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என பொலிசார் என்னைத் தடுத்தனர். எனது ஆதரவாளர்களை அச்சுறுத்தினர். கொவிட் 19 இனால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்த எனது பிரதேச மக்களுக்கு உதவியதில் எவரும் பிழை காணமுடியாது” என அவர் மேலும் குறிப்பிட்டார்.
முகக்கவசம் ஊடாக பிரசாரம்
கொவிட் 19 பரவல் காலத்தில் மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார விதிமுறைகளில் முக்கியமானதாக முகக்கவசம் அணிவது வலியுறுத்தப்பட்டது. இந் நிலையில் முகக்கவசத்திற்கு மக்கள் மத்தியில் எழுந்துள்ள கிராக்கியை அவதானித்த அரசியல்வாதிகள், முகக்கவசங்களில் தமது கட்சியின் இலச்சினையை பொறித்து அவற்றை மக்களுக்கு இலவசமாக விநியோகிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடத் தொடங்கினர். குறிப்பாக ஆளும் தரப்பின் தாமரை மொட்டுச் சின்னம் மற்றும் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னம் பொறிக்கப்பட்ட முகக்கவசங்கள் பல்வேறு மாவட்டங்களிலும் விநியோகிக்கப்பட்டன. இவற்றை புகைப்படம் எடுத்து பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தனர்.
இதுவும் கொவிட் 19 நிவாரணம் என்ற போர்வையில் முன்னெடுக்கப்படும் தேர்தல் விதிமுறை மீறல் என தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. இது குறித்து கருத்து வெளியிட்ட பெப்ரல் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி, கொழும்பு, ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இவ்வாறு வேட்பாளர்கள் முகக்கவசங்களில் தேர்தல் சின்னங்களைப் பொறித்து விநியோகித்த பல சம்பவங்கள் தொடர்பில் தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக குறிப்பிட்டார். அதிலும் குறிப்பாக வட மத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத், பொலனறுவையில் நடைபெற்ற கொவிட் 19 செயலணி கூட்டத்தில் பங்குபற்றியபோது அணிந்திருந்த முகக்கவசத்தில் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன கட்சியின் சின்னமும், அதில் போட்டியிடும் அவரது மகனின் பெயரும் விருப்பிலக்கமும் பொறிக்கப்பட்டிருந்தமை குறித்து தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
5000 ரூபா நிதியுதவி வழங்கல்
கொவிட் 19 காலத்தில் இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட வருமானம் குறைந்த குடும்பங்களுக்கான 5000 ரூபா நிதியுதவி வழங்கும் மக்களுக்கு நன்மையளிப்பதாக இருந்தபோதிலும் மறுபுறம் கடும் விமர்சனங்களையும் சம்பாதித்திருந்தது.
இந் நிதியுதவியை விநியோகிக்கும் நடவடிக்கையில் ஆளும் கட்சியின் உள்ளுர் அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டதன் காரணமாக இதனூடாக அரசியல் இலாபம் தேடப்படுவதாக எதிர்க்கட்சிகளும் தேர்தல் கண்காணிப்புக் குழுக்களும் விமர்சனங்களை முன்வைத்தன. அதுமாத்திரமன்றி தேர்தல் ஆணைக்குழுவும் இதுவிடயத்தில் தனது விசேட கவனத்தைச் செலுத்தியிருந்தது.
மே 17 ஆம் திகதி ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜயசுந்தரவுக்கு கடிதம் ஒன்றை எழுதிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, இந்நிதி வழங்கும் திட்டம் ஊடாக, கொவிட் 19 நிலைமையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மத்தியில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் அரசியல் நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்படுவதாக தமக்கு ஏராளமான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டியிருந்தார்.
தேர்தல் கண்காணிப்பு குழுக்களின் அவதானம்
இதேவேளை மேற்படி 5000 ரூபா நிதியுதவி வழங்கல் தொடர்பில் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளும் தமது கரிசனையைச் செலுத்தியிருந்தன. 5000 ரூபா விநியோகத்தில் ஆளும் பொது ஜன பெரமுன கட்சியின் அரசியல்வாதிகள், அரசியல் ரீதியாக முழுமையான பிரயோசனத்தை அடைந்து கொண்டதாக சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு (பெப்ரல்) நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். “கொவிட் 19 காலப்பகுதியில் அரசாங்கம் முன்னெடுத்த 5000 ரூபா விநியோகத்தில் ஆளும்தரப்பு அரசியல்வாதிகளே முழுமையாக நன்மை பெற்றுக் கொண்டார்கள் என்பதை என்னால் உறுதிபடக் கூறமுடியும். ஆளும் கட்சி என்ற வகையில் மக்களுக்கு அவர்கள் நிவாரணம் வழங்க முடியும். அந்த வகையில் 5000 ருபா நிதியுதவியை அரசியல் இலஞ்சமாக நாம் கருதவில்லை. ஆனால் அதனை அரசியல் பிரசாரத்துக்காக பயன்படுத்தியது உண்மைதான்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.
அதேபோன்றுதான் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தின் தேசிய இணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க, தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஏப்ரல் 17 ஆம் திகதி எழுதிய கடிதத்தில், சமுர்த்தி காத்திருப்பு பட்டியலில் உள்ளோருக்கு 5000 ரூபா நிதியுதவி வழங்கும் வேலைத்திட்டத்தில் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன கட்சிக்கு சார்பானவர்கள் அரசியல் இலாபம் தேட முற்பட்டதை ஆதாரத்துடன் வெளிப்படுத்தியிருந்தார். இதற்கு ஆதாரமாக சமுர்த்தி வங்கிகளுக்கு பிரதேச செயலகங்களால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்ட 2019 ஆம் ஆண்டுக்காள வாக்காளர் இடாப்பின் பிரதியில் SLPP எனும் நான்கெழுத்துக்கள் பெரிதாக அச்சிடப்பட்டிருந்ததை அந் நிறுவனம் சுட்டிக்காட்டியிருந்தது. இது மேற்படி 5000 ரூபா நிதியுதவி வழங்கும் திட்டத்தில் அரசியல் கட்சி ஒன்று ஆதிக்கம் செலுத்தியுள்ளதை நிரூபிப்பதாக அமைந்துள்ளது.
அரசியல் இலாபம் வேண்டாம்
கொவிட் 19 நெருக்கடி நாம் முன்னொருபோதும் சந்தித்திராத ஒரு புதிய சவாலாகும். அந்தவகையில் அதனை சகல தரப்பினரும் ஒன்றுபட்டே எதிர்கொள்ள வேண்டும். அதில் அரசியல்வாதிகளும் வதிவிலக்கல்ல. நாடு முழுமையாக முடக்கப்பட்டிருந்த காலத்தில், அரசாங்கமும் சகல கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல்வாதிகளும் முன்னெடுத்த பணிகள் பாராட்டத்தக்கவை. மக்கள் அதன் மூலம் நன்மை பெற்றதை மறுப்பதற்கில்லை. இருப்பினும் நாட்டில் தேர்தல் ஒன்றுநடைபெறவுள்ள நிலையில், கொவிட் நெருக்கடிகாலத்தில் மக்களுக்குத் தாம் செய்த சேவைகள் ஊடாக யாரேனும் அரசியல் இலாபம் தேட முனைவார்களாயின் அது அறமல்ல. இது விடயத்தில் அரசியல்வாதிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். – Vidivelli