தேர்தலில் வாக்களித்தல் ; ஓர் இஸ்லாமியப் பார்வை

0 1,498

தேர்தலில் வாக்களித்தலானது இஸ்லாத்தின் பார்வையில் பிரதான நான்கு அம்சங்களின் அடிப்படையில் அமையப்பெற்றுள்ளதை நம்மால் நோக்க முடிகிறது.

1- ஷஹாதத் – சாட்சி கூறுதல்.

அதாவது குறித்த ஒருவருக்கு நாம் வாக்களிக்கும் போது நமது வாக்குகளினூடாக அவர் சமூகத்தின் தலைமைக்கோ குறித்த ஒரு பதவிக்கோ பொருத்தமானவர் என நாம் சாட்சி கூறுகிறோம். நாம் சொல்கின்ற, வழங்குகின்ற சாட்சியங்கள் எப்போதும் உண்மையானதாகவே இருக்க வேண்டும்.

பொய் சாட்சி சொல்வதனை இஸ்லாம் பெரும்பாவங்களில் ஒன்றாக கருதுகிறது.  இறைவன் திருமறையில் கூறுகிறான்: “எனவே விக்கிரகங்கள் எனும் அசுத்தத்திலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள். மேலும் பொய் சொல்வதையும் நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள், அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாக்காது, அவனுக்கே ஒருமனப்பட்டவர்களாய்த் திகழுங்கள்”
(சூரா- அல் ஹஜ் 30,31)

அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ”பெரும் பாவங்களில் மிகப் பெரும் பாவத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கேட்டார்கள்! அதற்கு நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! அறிவியுங்கள் என்றோம். அதற்கவர்கள், அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோரை நிந்திப்பது என்று கூறினார்கள். சாய்ந்திருந்த அவர்கள் நிமிர்ந்து உட்கார்ந்து, அறிந்து கொள்ளுங்கள்! பொய் சொல்வதும் பொய் சாட்சி கூறுவதும் தான், அறிந்து கொள்ளுங்கள்! பொய் சொல்வதும் பொய் சாட்சி கூறுவதும் தான் என்று கூறினார்கள். நிறுத்தமாட்டார்களா? என்று நான் கூறும் அளவுக்கு அவற்றைத் திரும்ப திரும்பக் கூறிக் கொண்டிருந்தார்கள்.  (ஆதாரம் : புஹாரி 2654, முஸ்லிம் 87)

அல்லாஹ் கூறுகிறான்: இறை நம்பிக்கையாளர்களே! நீங்கள் நீதியின் மீது நிலையானவர்களாக(வும்), உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ, அல்லது (உங்கள்) உறவினர்களுக்கோ பாதகமாக இருப்பினும் சரியே, அல்லாஹ்விற்காக சாட்சி கூறுபவர்களாக இருங்கள்.

(நீங்கள் எவருக்கு எதிராகச் சாட்சி கூறுகின்றீர்களோ) அவர், செல்வந்தராக(வோ), அல்லது ஏழையாக(வோ) இருந்தாலும் சரியே. ஏனெனில், அல்லாஹ் அவ்விருவருக்கும் (நன்மையை நாடுவதில்) மிக மேலானவன்.

எனவே, நீதி செய்வதை விட்டு (உங்கள்) மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்கள். இன்னும், நீங்கள் சாட்சியத்தை மாற்றிக் கூறினாலும், அல்லது புறக்கணித்து விட்டாலும் நிச்சயமாக அல்லாஹ், நீங்கள் செய்கின்றவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான். (அல் குர்ஆன் – 4:135)

பொய் மற்றும் பொய் சாட்சி போன்ற அநியாயத்திலிருந்து நாம் தவிர்ந்து கொள்வது அவசியமாகும், பிறரையும் அந்த பாவத்தை விட்டு பாதுகாத்து நீதியின் பக்கம் நிலைத்திருப்பதின் பால் வழிகாட்டுவது எமது கடமையாகும், எமது வாக்குகளினூடாக உண்மையை மாத்திரம் உரைப்பதே இறையச்சத்தின் அடையாளமாகும்.

இமாம் இப்னு கைய்யிம் அல்ஜௌஸிய்யா  (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:  ஒருவருடைய சாட்சியங்களும், மார்க்கத் தீர்ப்புகளும், குறிப்புகளும், நிராகரிக்கப்படுவதற்கு மிக முக்கியமான காரணம் பொய் பேசுவதாகும். ஏனென்றால், இந்த பொய் அவருடைய சாட்சியத்தையும், மார்க்கத் தீர்ப்புகளையும் மற்றும் குறிப்புகளையும் மாசுபடுத்துகிறது. இது ஒரு குருடன் நான் பிறையைப் பார்த்தேன் என்று சாட்சியம் கூறுவதைப் போன்றது. அல்லது ஒரு செவிடன் ஒருவர் நடந்து சென்ற ஓசையைக் கேட்டேன் என்று சாட்சியம் கூறுவது போன்றதாகும். பொய் பேசும் நாக்கானது வேலையே செய்யாத உறுப்பைப் போன்றது. உண்மையில் அது அதைவிடவும் மோசமானது, ஒருவனிடம் இருக்கும் மிக மிக மோசமான ஒரு பொருள் எதுவென்றால் அது பொய் பேசும் அவனுடைய நாக்கு ஆகும்.  நூல் : இஃலாமுல் முவக்கிஈன் (1/95)

நம்மிடம் நம்பி ஒப்படைக்கப்பட்டிருக்கும் ஓர் அமானிதமான வாக்குரிமை எனும் சாட்சியத்தை துஷ்பிரயோகம் செய்வது ஷரீஆவின் பார்வையில் குற்றத்துக்குரிய செயலாகும். இந்த கருத்தை பல நவீன கால இஸ்லாமிய அறிஞர்களும் முன்வைத்துள்ளனர்.

2- ஷபாஅத் – பரிந்துரைத்தல்.

நாம் வாக்களிக்கின்ற வேட்பாளர்கள் நமது சமூகத்தின் குறை நிறைகளைப் பார்த்து சமூகத்துக்காக உழைப்பார்கள், ஊழல், மோசடிகள் தவிர்த்து நன்மைகளையே சமூகத்துக்குச் செய்வார்கள் எனவும் எமது சமூகத்தின் பிரதிநிதிகளாக இவர்கள் செயல்பட மிக அருகதையானவர்கள் என நாம் எமது வாக்குகளினூடாக பரிந்துரை செய்கிறோம்.

“அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை; அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன்; என்றென்றும் நிலைத்திருப்பவன்; அவனை அரி துயிலோ, உறக்கமோ பீடிக்காது, வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன; அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்; அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது; அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது; அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன்.” (2:255)

“உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?” (என்று கேட்பார்கள்) அவர்கள் (பதில்) கூறுவார்கள்: “தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை. அன்றியும், ஏழைகளுக்கு நாங்கள் உணவும் அளிக்கவில்லை. (வீணானவற்றில்) மூழ்கிக்கிடந்தோருடன், நாங்களும் மூழ்கிக்கிடந்தோம். இந்த நியாயத் தீர்ப்பு நாளை நாங்கள் பொய்யாக்கிக் கொண்டும் இருந்தோம். உறுதியான (மரணம்) எங்களிடம் வரும்வரையில் இவ்வாறாக இருந்தோம்” (எனக் கூறுவர்). ஆகவே, சிபாரிசு செய்வோரின் எந்த சிபாரிசும் அவர்களுக்குப் பயனளிக்காது. (74:42…..48)

மறுமையின் விவகாரங்களில் ஒருவர் மற்றவருக்காக சிபாரிசு செய்வதற்கு இறைவனது அனுமதி வேண்டுமென்ற செய்தியையும் அவனது நாட்டமின்றி எந்த சிபாரிசும் பலனளிக்கப்போவதுமில்லை என்ற செய்தியையும் மேலுள்ள இரண்டு வசனங்களும் தெளிவுபடுத்துகின்றன. உலக விவகாரங்களிலுள்ள நல்ல விடயங்களுக்காக ஒருவர் மற்றவருக்காக பரிந்துரை செய்வதனை இஸ்லாம் வரவேற்கத்தக்க, நன்மை பயக்கும் செயலாகவே முன்வைத்துள்ளது.

இறைவன் திருமறையில் கூறுகிறான்:  (எவரேனும் யாதொரு நன்மையானவற்றுக்கு சிபாரிசு செய்தால் அந்த நன்மையில் ஒரு பங்கு அவருக்குண்டு யாதொரு தீமைக்கு யாரும் சிபாரிசு செய்தால் அத்தீமையில் ஒரு பாகம் அவருக்குண்டு) (சூரா – அந்நிஸா 85 ஆவது வசனம்)

தோழர்களே பரிந்துரை செய்யுங்கள். அதற்கான நன்மை அளிக்கப்படுவீர்கள், என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர் : அபூ மூஸா அல் அஷ்அரி (ரழி) (ஆதாரம் – புஹாரி 1432)

உண்மையான, தூய உள்ளத்தோடு பிறருக்காக பரிந்துரைப்பது இறைவன் புறத்தால் கூலி வழங்கப்படும் நல்லறமாகவே காணப்படுகிறது. உலக விவகாரங்களில் பரிந்துரை செய்யுமாறு கோரிக்கை வந்தால் பரிந்துரை செய்து சிரமத்தைக் குறைப்பதற்கு உதவ வேண்டும். நபியவர்கள் தம்முடைய தோழர்களுக்காக அவ்வாறு பரிந்துரை செய்துள்ளார்கள்.

(நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில்) எனக்கு அப்துல்லாஹ் பின் அபீஹத்ரத் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் தர வேண்டியிருந்த ஒரு கடனை (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் வைத்து திருப்பித் தரும்படி கேட்டேன். (இது தொடர்பாக எங்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு) எங்கள் இருவரின் குரல்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டிலிருந்தபடியே அதைக் கேட்கும் அளவிற்கு உயர்ந்தன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களிருவரையும் நோக்கி வந்தார்கள். தமது அறையின் திரையை விலக்கி, கஅபே! என்றழைத்தார்கள். நான், இதோ வந்துவிட்டேன், அல்லாஹ்வின் தூதரே! என்று பதிலளித்தேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உன் கடனிலிருந்து இந்த அளவை தள்ளுபடி செய்துவிடு! என்று கூறி பாதியளவு கடனைக் குறைத்துக் கொள்ளும்படி (என்னிடம் விரலால்) சைகை செய்தார்கள். அவ்வாறே செய்து விட்டேன் அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினேன். பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (அப்துல்லாஹ் பின் அபீஹத்ரத் அவர்களை நோக்கி,) எழுந்து சென்று கடனை அடைப்பீராக! என்று சொன்னார்கள். அறிவிப்பவர் : கஅப் இப்னு மாலிக் (ரழி)  (நூல் : புஹாரி 457, 471, 2418)

நல்ல விடயங்களுக்காகப் பரிந்துரை செய்து பிறரது சுமையை அவரை விட்டும் நீக்குவது போன்றே ஒருவர் சமூகத்தின் தலைமைக்கோ குறித்த பதவிக்கோ தகுதியானவர் என நேர்மையான உள்ளத்துடன் சிபாரிசு செய்வதும் மெச்சத் தகுந்த சிறந்த நற்காரியமாகும்.

அதே நேரம் நமது பரிந்துரை தீமைக்காகவும் தீயவர்களுக்காகவும் அமையும் பட்சத்தில் அத்தீமையிலிருந்தும் தீயோர்களின் தீய செயற்பாடுகளிலிருந்தும் எமக்கும் பங்குண்டு என்ற விடயத்தை தேர்தலில் நாம் வாக்குகளை ஒருவருக்கு வழங்குகின்ற போது நமது சிந்தனைகளில் ஆழப்பதியவைத்துக் கொள்வது சாலச்சிறந்ததாகும்.

3- அமானத் – அமானிதம், நம்பகத்தன்மையுடன் செயற்படல், அமானிதம் பேணல்.

நாம் அளிக்கின்ற வாக்குகள் நமக்குக் கிடைத்த நமது உரிமைகளாகும். அந்த உரிமைகளை துஷ்பிரயோகம் செய்வது நாம் மோசடியில் ஈடுபடுகின்றோம் என்று பொருளாகும். யார் எதற்கு பொருத்தமானவர்களோ, தகுதியானவர்களோ அவர்களை இனங்கண்டு அவர்களுக்குப் பொருத்தமானவற்றை ஒப்படைத்தல் அமானத் சார்ந்த அம்சமாகும். தகுதியற்றவர்கள் தாமாக பொறுப்புக்கு வருவதும் தகுதியற்றவர்களுக்கு பதவிகள், பொறுப்புக்கள் வழங்கப்படுவதும் இஸ்லாத்தின் பார்வையில் மிகப்பெரும் குற்றச்செயல்களாகும்.

இறைவன் கூறுகின்றான்: அமானிதங்களை அதற்குரியோரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும் போது நீதியாக நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். அல்லாஹ்வின் இந்த அறிவுரை உங்களுக்கு மிகவும் நல்லது. அல்லாஹ் செவியுறுபவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான்.  (அல் குர்ஆன் ஸூரா அந்நிஸா – 4:58)

அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகிறான். “இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால் தங்களின் அமானிதங்களையும், (தாங்கள் செய்த) வாக்குறுதிகளையும் பேணிக்கொள்கின்றனர்.”

“அவர்கள் தங்களுடைய சாட்சியங்களை நிறைவேற்றுவதில் உறுதியாக இருக்கின்றவர்கள்.  “இன்னும் அவர்கள், தங்கள் தொழுகையின் மீது பேணுதலுடையவர்கள்.”

“மேற்கூறப்பட்ட தகுதியுடைய அவர்கள் சுவனங்களில் மிக்க கண்ணியப்படுத்தப்படுவார்கள்.” (சூரத்துல் மஆரிஜ்: 32-35)

மேலுள்ள வசனங்கள் யாவும் முஃமின்களினதும் தூய்மையான வணக்கசாலிகளினதும் பண்பாடுகள், குணநலன்கள் பற்றிப் பேசுகின்றன. வணக்கங்களின் மிக முக்கியமான வெளிப்பாடாகவே நம்பகத்தன்மையுடன் செயற்படல், வாக்குறுதிகளைப் பேணிக்கொள்ளுதல், சாட்சியங்களை நிறைவேற்றுவதில் உறுதியாக இருத்தல் போன்ற அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

நம்பிக்கை கொண்டோரே! அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கும் இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) மோசடி செய்யாதீர்கள்! உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்டவற்றிலும் மோசடி செய்யாதீர்கள்! (அல்குர்ஆன் 8:28)

அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். “மோசடி செய்பவன் ஒவ்வொருவனுக்கும் மறுமை நாளில் (அடையாளக்) கொடி ஒன்று இருக்கும். அது அவனது மோசடியின் அளவுக்கு (உயரமாக) ஏற்றப்படும். அறிந்துகொள்ளுங்கள்! பொதுமக்களுக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்று மோசடி செய்தவனை விட மாபெரும் மோசடிக்காரன் வேறெவருமில்லை.
இதனை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.” (நூல்: முஸ்லிம் 3579)

நம்பிக்கை மோசடியில் ஈடுபடும் குறித்த நபருக்கு எவ்வித தண்டனைகள் சொல்லப்பட்டுள்ளனவோ அதே அளவிலான தண்டனைகள் ஊழல் புரிபவர்கள், வாக்கு மீறுபவர்கள், மோசடிக்காரர்களுக்கு உதவுபவர்களுக்கும் அவர்களை ஆதரிப்பவர்களுக்கும் உண்டு என்பதனையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு சமுதாயத்தார் (வர) இருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கை மோசடி செய்வார்கள். அவர்களிடம் எதனையும் நம்பி ஒப்படைக்கப்படமாட்டாது. அவர்கள் சாட்சியாக இருக்கத் தாமாகவே முன்வருவார்கள். ஆனால் சாட்சியம் அளிக்கும் படி அவர்களை யாரும் கேட்கமாட்டார்கள். அவர்கள் நேர்ச்சை செய்வார்கள். ஆனால் அதை நிறைவேற்ற மாட்டார்கள். அவர்களிடையே பருமனாயிருக்கும் (தொந்தி விழும்) நிலை தோன்றும். அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுசைன் (ரலி) (நூல்: புஹாரி 2651)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  “விரைவில் ஒரு காலம் வரும். அப்போது மக்களில் சிறந்தவர்கள் (இந்த உலகை விட்டும்) அகற்றப்பட்டு இழிவானவர்கள் மட்டும் எஞ்சியிருப்பார்கள். அவர்களுடைய உடன்படிக்கைகளும் அமானிதங்களும் (அவர்களின் அக்கறையின்மையால்) சீர்கெட்டு, கருத்து வேறுபாடும் பட்டுக் கொள்வார்கள்” என்று கூறி, நபி (ஸல்) அவர்கள் தம்முடைய விரல்களைக் கோர்த்து, “அவர்கள் இவ்வாறு (நல்லவருக்கும் தீயவருக்கும் வித்தியாசம் இல்லாமல்) இருப்பார்கள்”என்று கூறினார்கள். அப்போது மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! அப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் (எதை உண்மை என்று) அறிந்துள்ளீர்களோ அதை எடுத்துக் கொண்டு, (எதை பொய்யென்று) மறுக்கிறீர்களோ அதை விட்டு விடுங்கள். பொதுமக்களின் காரியங்களை விட்டு விட்டு உங்களுக்கு நெருங்கியவர்களின் விடயத்தில் ஈடுபடுங்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) (நூல்: அபூதாவுத் 3779)

” நல்லவருக்கும் தீயவருக்கும் வித்தியாசம் இல்லாமல்) இருப்பார்கள்”என்று கூறினார்கள். அப்போது மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! அப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் (எதை உண்மை என்று) அறிந்துள்ளீர்களோ அதை எடுத்துக் கொண்டு, (எதை பொய்யென்று) மறுக்கிறீர்களோ அதை விட்டு விடுங்கள்”  மேலுள்ள செய்தியில் வருகின்ற இந்த அம்சம் இன்றைய தேர்தல் காலங்களில் ஆழ்ந்து அவதானிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான போதனையாகும்.

அல்லாஹ்வுக்குப் பயந்து நாம் முயற்சி செய்து இவர் நல்லவர் என்று  நாம் இனம் காண்கின்றவர்களை நாம் ஆதரிப்பதும் நலவுகளின் அடிப்படையில் நமக்கு நெருக்கமானவர்களை ஆதரிக்கச் செய்வதும் வரவேற்கத்தக்க செயல்களாகும். அதே போன்று தெரிந்து கொண்டே அநியாயத்துக்கு துணைபோவது இறைவனிடம் தண்டனையைப் பெற்றுத்தரும் மிகப்பெரும் மோசடியாகும்.

4- வகாலத் – பொறுப்பேற்றல், பொறுப்புச்சாட்டல்.

தமது பிரதிநிதிகளான வேற்பாளர்கள் சமூகத்தின் தேவைகளையும் அபிலாசைகளையும் நிறைவேற்றி வைப்பதற்கு பொருத்தமானவர்கள் தான் என்பதனை எமது வாக்குகளை அவர்களுக்கு வளங்குவதினூடாக அவர்களை நாம் பொறுப்பேற்றுக் கொள்கிறோம். எமது வாக்குகளினூடாக குறித்த அதிகாரத்தை அவர்களுக்கு வழங்குகின்றோம்.

இறைவன் திருமறையில் நபி மூஸா (அலை) அவர்கள் உதவி செய்த அந்த இருபெண்களில் ஒரு பெண்ணைப்பற்றி குறிப்பிடும் போது (அவ்விரு பெண்களில் ஒருத்தி என் தந்தையே அவரைப் பணியில் அமர்த்துங்கள். நிச்சயமாக நீங்கள் பணியில் அமர்த்துபவர்களில் சிறந்தவர் நம்பிக்கைக்குரியவராகவும் சக்தியுடையவராகவும் உள்ளவரே) (சூரா – அல்கஸஸ் 26 ஆவது வசனம்)

அலீ (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்;  அறுக்கப்பட்ட ஒட்டகங்களுக்கு அணிவிக்கப்பட்டிருந்த சேணங்களையும் தோல்களையும் தர்மம் செய்யுமாறு நபி (ஸல்) அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள்.   (நூல்: புஹாரி 2299) (அதற்கு பொறுப்பாக அவர்களை நியமித்தார்கள்)

உக்பா இப்னு ஆமிர் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்; நபி(ஸல்) அவர்கள் சில ஆடுகளைத் தம் தோழர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்குமாறு என்னிடம் கொடுத்தார்கள். (அவ்வாறே நான் பங்கிட்டு முடித்தபின்) ஓர் ஆட்டுக்குட்டி எஞ்சியது. அது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் நான் கூறியபோது, ‘அதை நீர் (அறுத்து) குர்பானி கொடுப்பீராக!’ எனக் கூறினார்கள். (நூல்: புஹாரி 2300)

அதேபோன்று இன்னுமொரு சந்தர்ப்பத்தில் ரஸூல் (ஸல்) அவர்கள் தன் சார்பில் ஆடொன்றை வாங்கி, பலியிட்டு தர்மமாகப் பங்கிடும் பொறுப்பை தம்மிடம் ஒப்படைத்திருந்ததாக உர்வா இப்னு அபில் ஜஃத் அல் பாரிகி (ரழி ) அவர்கள் கூறுகிறார்கள்.  (புகாரி 3642)

நபிகளார் (ஸல்) அவர்கள் ஸகாத் பொருட்களை வசூலித்தல், நன்கொடைகளைப் பங்கிடல், பிணக்குகளைத் தீர்த்து வைத்தல் போன்ற தமது நிர்வாக விடயங்களைப் பராமரிக்கும் பொறுப்பை தனிமனிதர்கள் மற்றும் திணைக்களங்களிடமும் ஒப்படைத்திருந்தார்கள்.

நாம் ஒருவரை பொறுப்பேற்று அவரை தலைமைக்கோ பொறுப்புக்களுக்கோ பதவிகளுக்கோ அனுப்புகின்ற போது அவர் நம்பிக்கைக்குரியவராகவும் மனித சமூகத்துக்கு பயனுள்ளவராகவும் நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைப்பவராகவும் நீதமாக செயல்படுபவராகவும் இருக்கவேண்டும். இந்த கருத்தை பல நவீன கால இஸ்லாமிய அறிஞர்களும் முன்வைத்துள்ளனர்.

எனவே எமது பொன்னான வாக்குகளை கட்சி, குடும்பம், ஊர், உறவு என்ற ஜாஹிலிய்ய உணர்வுகளைத் தாண்டி குர்ஆன், ஸுன்னா வழிகாட்டுகின்ற முறைப்படி தகுதி வாய்ந்தவர்களுக்கு வழங்கி ஈருலகிலும் நன்மை பெறுவோமாக! – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.