புதிய அச்சுறுத்தல் : பத்திரிகைகளின் பெயரில் தேர்தல் கால போலிச் செய்திகள்
எம்.பி.எம்.பைறூஸ்
2020 செப்டம்பரில் அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பிரதான இடம்வகிக்கப் போவது “போலிச் செய்திகளுக்கிடையிலான போர்தான்” என பிரபல எழுத்தாளர் மெக்கே கொப்பின்ஸ் ‘த அட்லாண்டிக்’ சஞ்சிகையில் கடந்த பெப்ரவரி மாதம் எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். இக் கூற்று இலங்கைக்கும் நிச்சயம் பொருந்தக் கூடியதாகும்.
இலங்கையில் கடந்த 2019 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும் போலிச் செய்திகள் பெரும் தாக்கம் விளைவித்ததாக “ஹாஷ்டெக் ஜெனரேஷன் “ நிறுவனம் சமூக வலைத்தளங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொண்ட கண்காணிப்பு ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது பகிரப்பட்ட சுமார் 169 போலிச் செய்திகளை தமது நிறுவனம் ஆய்வுக்குட்படுத்தியதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்றுதான் எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறப் போகின்ற பொதுத் தேர்தலிலும் போலிச் செய்திகள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளதை எம்மால் அவதானிக்க முடிகின்றது.
போலிச் செய்திகள் பல்வேறு நோக்கங்களில் அடிப்படையில் பரப்பப்படுகின்ற போதிலும், தேர்தல் காலங்களில் அரசியல் தரப்புகளுக்கிடையிலான போட்டி காரணமாக அவை மிக வேகமாகவும் மக்கள் இலகுவாக நம்பக் கூடிய வகையிலும் நுணுக்கமாக திட்டமிட்ட அடிப்படையிலும் பரப்பப்படுகின்றன.
போலிச் செய்திகள்
போலிச் செய்திகளை இரண்டு வகைகளாகப் பிரிக்க முடியும். முதலாவது, Mis Information எனப்படும் தவறான செய்திகள். அடுத்தவை Dis Information எனப்படும் பிழையான செய்திகள். தவறான செய்திகள் என்பது, தனக்குக் கிடைக்கப் பெறும் செய்தி, போலியானது எனத் தெரியாது பரப்புவதாகும். பிழையான செய்திகள் என்பது தனக்கு கிடைக்கப் பெறும் செய்தி போலியானது எனத் தெரிந்து கொண்டே பரப்புவதாகும்.
அந்த வகையில் தேர்தல் காலங்களில் பெரும்பாலும் பிழையான செய்திகளே (Dis Information) அதிகம் பகிரப்படுகின்றன. அரசியல் கட்சிகளின் செயற்பாட்டாளர்களும் அவற்றின் ஆதரவாளர்களும், தமது எதிர்த்தரப்பு பற்றிய போலிச் செய்திகளை வேண்டுமென்றே பரப்புவதை அவதானிக்க முடிகிறது.
பத்திரிகைகளின் பெயரில் போலிச் செய்திகள்
போலிச் செய்திகளைப் பரப்புவோர் கையாளும் புதிய வழிகளில் ஒன்றுதான் பத்திரிகைகளின் இலச்சினையைப் பயன்படுத்தி முகப்புப் பக்கம் ஒன்றை வடிவமைத்து அதில் போலிச் செய்திகளையிட்டுப் பரப்புவதாகும். கடந்த மே மாத நடுப்பகுதியிலும் தேர்தல் அண்மித்துள்ள இந்நாட்களிலும் இவ்வாறான செய்திகள் அதிகம் பரப்பப்படுகின்றன.
இதற்கமைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் கூறியதாக போலியான செய்திகளை, பல்வேறு தமிழ் மொழி பத்திரிகைகளின் இலச்சினைகளைப் பயன்படுத்தி வடிவமைத்து பகிரப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது. அதேபோன்றுதான் கொழும்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன் மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோரின் பெயர்கள் மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்தியும் இவ்வாறான போலிச் செய்திகள் பகிரப்பட்டன. மேலும் பிரபல சிங்கள பத்திரிகை ஒன்றின் முகப்புப் பக்கத்தை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட பல போலிச் செய்திகள் கடந்த சில வாரங்களாக பகிரப்பட்டு வருகின்றன.
ஊடக நிறுவனங்களுக்கு சவால்
இவை மேற்படி அரசியல்வாதிகளுக்கு மாத்திரமன்றி பத்திரிகைகளுக்கும் சவாலாக அமைந்துள்ளதுடன் வாசகர்களையும் குழப்பத்தில் ஆழ்த்துவதாக அமைந்துள்ளன. இதன் மூலம் பத்திரிகைகளின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அப் பத்திரிகைகள் வெளியிட்டுள்ள விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வாறு பத்திரிகைகளின் பெயரைப் பயன்படுத்தி போலிச் செய்திகளை பரப்புவோர் தொடர்பில் பொலிஸ் திணைக்களத்தின் கீழ் வரும் கணினி குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் பிரிவுக்கு முறைப்பாடளித்துள்ள மேற்படி பத்திரிகைகளுள் ஒன்றின் டிஜிட்டல் பிரிவு முகாமையாளர் தெரிவித்தார்.
“இலங்கையைப் பொறுத்தவரை பத்திரிகைகள் மின்னிதழாக வெளியிடப்படுவதில்லை. எனினும் கொவிட் 19 ஊரடங்கு காலத்தில் பத்திரிகைகளை அச்சிட்டு விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டதால் நாட்டிலுள்ள எல்லா பத்திரிகைகளும் மின்னிதழ் வடிவில் இலவசமாகவே சமூக வலைத்தளங்கள் வழியாக பகிரப்பட்டன. இது இவ்வாறான போலிச் செய்திகளை வடிவமைப்பவர்களுக்கு சாதமாக அமைந்துவிட்டது. அவர்கள் பத்திரிகைகளின் மின்னிதழை பிரதிபண்ணி அதில் மாற்றங்களைச் செய்து, பத்திரிகைகளில் வெளிவந்ததுபோன்றே செய்திகளைப் பரப்புகிறார்கள். இது நாம் எதிர்நோக்கும் புதிய சவாலாகும். இது பற்றி எமது வாசகர்களை தொடர்ந்து அறிவூட்ட வேண்டியுள்ளது. இதனை எல்லா ஊடக நிறுவனங்களும் ஒன்றுபட்டே முன்னெடுக்க வேண்டியுள்ளது” என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை போலிச் செய்திகள் இன்று சமூக வலைத்தளங்களிலேயே அதிகம் பகிரப்படுகின்றன. எனினும் அங்கீகரிக்கப்பட்ட ஊடக நிறுவனங்களினால் வெளியிடப்படும் பத்திரிகைகளின் பெயரில் போலிச் செய்திகளை பரப்புவதானது அப் பத்திரிகைகளின் வாசகர்களை குழப்பத்தில் ஆழ்த்துவதாக அமைந்துள்ளதாகவும் தமது பத்திரிகையின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்குவதாகவும் பத்திரிகை ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார். குறித்த ஒரு செய்தி போலியானது என தாம் மறுப்பறிக்கை வெளியிட்டு வாசகர்களைத் தெளிவுபடுத்துகின்ற போதிலும் அந்த விளக்கம், போலிச் செய்தி மக்களைச் சென்றடைந்த வேகத்திலோ வீச்சிலோ வாசகர்களைச் சென்றடைவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான போலிச் செய்திகள் பகிரப்படும்போது அவற்றை எதிர்கொள்ள நீங்கள் முன்னெடுத்த நடவடிக்கைகள் என்ன என மற்றொரு பத்திரிகை ஆசிரியரிடம் வினவியதற்கு “ எமது பத்திரிகை முகப்பை பயன்படுத்தி போலிச் செய்தி ஒன்று பகிர்வதாக எமக்கு தகவல் கிடைத்ததும் உடனடியாக அது போலியானது என உறுதிப்படுத்தும் அறிவித்தல்களை தயாரித்து எமது பத்திரிகையின் சமூக வலைத்தள கணக்குகள் ஊடாக வாசகர்களைத் தெளிவூட்டினோம். இது அப் போலிச் செய்தி குறித்த விளக்கத்தை எதிர்பார்த்து எமது சமூக வலைத்தள கணக்குகளை அணுகிய வாசகர்களுக்கு ஆறுதலைக் கொடுப்பதாக அமைந்திருந்தது. மேற்படி போலிச் செய்தியில் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த அரசியல்வாதி ஒருவரும் எம்மைத் தொடர்பு கொண்டு, இதுவொரு போலிச் செய்திதான் என வாசகர்களுக்கு அறிவிக்க நீங்கள் எடுத்த நடவடிக்கை என்ன என்று எம்மிடம் வினவினார். அவருக்கும் நாம் எமது சமூக வலைத்தள அறிவித்தல்களை காண்பித்தோம். அது அவருக்கு திருப்தியளிப்பதாக அமைந்தது “ அவர் குறிப்பிட்டார்.
குழப்பத்தில் வாசகர்கள்
இவ்வாறான போலிச் செய்திகள் மக்களை தவறாக வழிநடாத்துகின்ற அதேநேரம் பத்திரிகைகளின் நீண்ட கால வாசகர்களையும் குழப்பத்தில் ஆழ்த்துவதாக அமைந்துவிடுகின்றன.
பத்திரிகைகளின் முகப்புப் பக்கம் போன்று வடிவமைக்கப்பட்டு பகிரப்படும் போலியான செய்திகளால் தாம் அதிகம் குழப்படைந்துள்ளதாக தினசரிப் பத்திரிகைகளின் வாசகரான பாரா தாஹிர் குறிப்பிடுகிறார். “ நான் தினசரி பத்திரிகைளை வாசிப்பவர் என்ற வகையில் தேசிய பத்திரிகைகள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். அவற்றில் பொதுவாக போலிச் செய்திகள் வெளியிடப்படுவதில்லை. எனினும் நான் அங்கம் வகிக்கும் பல வட்ஸ் அப் குழுமங்களில் இவ்வாறான போலிச் செய்திகள் எனக்கு நன்கு அறிமுகமான பத்திரிகைகளின் முகப்பைப் பயன்படுத்தி வருகின்ற போது நான் கூட ஒரு கணம் தடுமாறிவிடுகிறேன். எனினும் அது தொடர்பில் பத்திரிகைகளின் ஆசிரிய பீடத்தை தொடர்பு கொண்டு வினவும்போது அவர்கள் இது போலியானது என்பதை உறுதிப்படுத்துகின்றனர். இதன் பிற்பாடு குறித்த வட்ஸ் அப் குழுமத்தில் இச் செய்தி போலியானது என நான் தெளிவுபடுத்துவேன். சில சமயங்களில் தெளிவு வழங்கிய பின்னரும் பலரும் அதனைப் பகிர்வார்கள். இதற்கு எவ்வாறு முற்றுப்புள்ளி வைப்பது எனத் தெரியவில்லை” என்றார்.
அதேபோன்று மற்றொரு பத்திரிகை வாசகரும் பாடசாலை அதிபருமான எம்.ஏ.சி.எம். முனவ்வர் குறிப்பிடுகையில், பத்திரிகைகளின் முகப்பைப் பயன்படுத்தி ஏட்டிக்குப் போட்டியான வகையில் அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் திட்டமிட்டு பரப்பும் போலிச் செய்திகள் அப் பத்திரிகைகள் மீதான மக்களின் நம்பிக்கையை வெகுவாகப் பாதிக்கின்றன என்பதை நான் சமீபத்தில் உணர்ந்து கொண்டேன். அண்மையில் தமிழ் பத்திரிகைகள் சிலவற்றின் நாமங்களைப் பயன்படுத்தி இவ்வாறான போலிச் செய்திகள் பகிரப்பட்ட போது ஓரிடத்தில் அவற்றை நம்பிவிட்டேன். எனினும் ஒரு பத்திரிகையின் ஆசிரியர் எனக்கு நெருக்கமானவர் என்பதால் அவரை நேரடியாகத் தொடர்புகொண்டு வினவியபோது அச் செய்தி போலியானது என என்னைத் தெளிவுபடுத்தினார். எனினும் இவ்வாறு எல்லா வாசகர்களும் பத்திரிகை ஆசிரியர்களைத் தொடர்பு கொண்டு தெளிவு பெறுவார்களா என்பது சந்தேகமே. மேலும் இவ்வாறான செய்திகள் போலியானது என்பதை வாசகர்கள் அறிகின்ற பொழுது அவ்வாறான போலிச் செய்திகளை வெளியிடுபவர்களின் எண்ணங்களுக்கு மாற்றமான எதிர் விளைவுகள்தான் இறுதியில் ஏற்படும்” என்றார்.
வன்முறைகளுக்கு வித்திடும் போலிச் செய்திகள்
இதற்கிடையில் எதிர்வரும் பொதுத் தேர்தலை மையப்படுத்தி போலிச் செய்திகள் பகிரப்படும் வேகம் அதிகரித்துள்ளதாக குறிப்பிடும் ‘கபே’ எனும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் தேசிய இணைப்பாளர் மனாஸ் மக்கீன், மேற்படி போலிச் செய்திகள் குறித்து தாம் கண்காணித்து அறிக்கையிட்டு பொலிசாருக்கும் தேர்தல்கள் திணைக்களத்திற்கும் வழங்கி வருவதாக சுட்டிக்காட்டினார்.
“ தேர்தல் காலத்தில் சமூக வலைத்தளங்கள் ஊடாக பரப்பப்படும் போலிச் செய்திகளையும் வெறுப்பூட்டும் பேச்சுக்களையும் நாம் கண்காணித்து அறிக்கையிட்டு வருகிறோம். இவ்வாறான போலிச் செய்திகள் ஏற்படுத்தக் கூடிய தாக்கங்கள் குறித்து நாம் உடனடியாக பொலிஸ் திணைக்களத்துக்கும் தேர்தல்கள் திணைக்களத்துக்கும் தொடர்புடைய ஏனைய அதிகாரிகளுக்கும் நாம் அறிவிக்கிறோம். இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் போலிச் செய்திகள் ஒப்பீட்டளவில் அதிகரித்துள்ளதால் இதன் மூலம் வன்முறைகளும் அதிகரிக்கலாம் என நாம் அஞ்சுகிறோம். இதன் காரணமாக இதன் பாரதூரத்தை மக்கள் மத்தியிலும் அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் மத்தியிலும் எடுத்துச் சொல்வதற்கான வேலைத்திட்டம் ஒன்றை 25 மாவட்டங்களிலும் நாம் ஆரம்பித்துள்ளோம்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.
உண்மைச் சதுக்கம்
இதேவேளை இம்முறை தேர்தலில் அரசியல் கட்சிகள் மூலமாக போலிச் செய்திகள் பரப்பப்படுவதை தடுக்கும் வகையிலும் போலிச் செய்திகள் மூலமாக வாக்காளர்கள் தவறாக வழிநடாத்தப்படுவதை தவிர்க்கும் நோக்கிலும் “உண்மைச் சதுக்கம் – பொய் செய்திகளை முடக்குவோம் “ எனும் தலைப்பிலான வேலைத்திட்டம் ஒன்றை நாட்டிலுள்ள பிரதான அரசியல் கட்சிகளின் இளைஞர் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து ஆரம்பித்துள்ளனர். இதில் சிவில் செயற்பாட்டாளர்கள், சிரேஷ்ட ஊடகவியலாளர்கள், கல்விமான்கள் என பலரும் அங்கம் வகிக்கின்றனர்.
‘இலங்கையின் அடுத்த தலைமுறை’ எனும் அமைப்பின் நெறிப்படுத்தலில் முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டத்தின் நோக்கம் தேர்தலை மையப்படுத்தி பகிரப்படும் போலிச் செய்திகளுக்கு எதிராக சகல கட்சிகளையும் சிவில் சமூகத்தையும் இணைத்துக் கொண்டு போராடுவதேயாகும் என இவ் வேலைத்திட்டத்தில் பங்கெடுத்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர் பிரதிநிதி ரசிக ஜயக்கொடி தெரிவித்தார்.
தேர்தல் காலத்தில் போலிச் செய்திகள் ஏற்படுத்தும் தாக்கம் உடலியல் தாக்குதல்கள், வன்முறைகள், சொத்துக்களை சேதமாக்குதல் என்பவற்றை விடவும் வீரியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். வாக்காளர்கள் உண்மையானதும் உறுதிப்படுத்தப்பட்டதுமான தகவல்களை அடிப்படையாகக் கொண்டே யாருக்கு வாக்களிப்பதென தீர்மானிக்க வேண்டும். மாறாக போலியான செய்திகளை அடிப்படையாகக் கொண்டு அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தப் போலிச் செய்திகள் சில அரசியல்வாதிகளின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக அமைகின்றன. இதனால் அவர்களால் சமூகத்தில் தலைநிமிர்ந்து நிற்க முடியாத நிலை ஏற்படுகிறது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
அதேபோன்று இவ் வேலைத்திட்டத்தில் பங்கெடுத்துள்ள ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மிலிந்த ராஜபக்ஷ கூறுகையில், மக்களும் குறிப்பாக இளம் தலைமுறையினரும் அரசியலை வெறுப்பதற்கு போலிச் செய்திகளும் ஒரு காரணமாக அமைந்துள்ளன என்றார். குறிப்பாக போலிச் செய்திகள் மூலமாக பெண்கள் மீது சேறு பூசும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதால் பெண்கள் அரசியலில் பங்கேற்க தயக்கம் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேற்படி ‘இளம் தலைமுறைகள்’ அமைப்பினரால் முன்னெடுக்கப்படும் இவ் வேலைத்திட்டத்தின் மூலம் தினமும் 24 மணி நேரமும் சமூக வலைத்தளங்கள் கண்காணிக்கப்பட்டு அதன் வாராந்த அறிக்கைகள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனை அடிப்படையாகக் கொண்டு தேர்தல்கள் ஆணைக்குழு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என இவ்வமைப்பு தெரிவிக்கிறது.
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சவாலாகும் போலிச் செய்திகள்
இதேவேளை தேர்தல் காலங்களில் இவ்வாறான போலிச் செய்திகள் பகிரப்படுவதானது தேர்தல்கள் திணைக்களத்தில் பணிகளுக்கு பலத்த சவாலாக அமைந்துள்ளதாக முன்னாள் தேர்தல் ஆணையாளரும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தற்போதைய ஆலோசகருமான எம்.எம். முஹம்மட் குறிப்பிட்டார். “ சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் இவ்வாறான போலிச் செய்திகள் தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகளை முன்வைக்கும் பட்சத்தில் நாம் அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்போம். இது பற்றி மாவட்ட ரீதியாக அமைக்கப்பட்டுள்ள தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையங்களிலோ அல்லது தலைமையகத்தில் உள்ள தேர்தல் முறைப்பாட்டு மத்திய நிலையத்திலோ முறையிட்டால் நடவடிக்கை எடுக்க முடியும். போலிச் செய்திகளை அகற்றுவது தொடர்பில் பேஸ் புக் நிறுவனத்துடனும் நாம் பேச்சுக்களை நடாத்தியுள்ளோம். நாம் விசாரணை நடாத்தி, சிபாரிசுகளை முன்வைக்கும்பட்சத்தில் பேஸ் புக் நிறுவனம் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கும். எனினும் இவற்றைக் கண்காணித்து கையாள்வது பெரும் சவாலான விடயமாகும்” என்றார்.
போலிச் செய்திகளை சரிபார்க்கும் நிறுவனங்கள்
இவ்வாறான போலிச் செய்திகள் பரவும் போது அவற்றை சரிபார்த்து உறுதிப்படுத்தி மக்களை அறிவூட்டும் பல நிறுவனங்கள் இலங்கையில் தற்போது செயற்படுகின்றன. AFP Factcheck, Factcrescendo Sri lanka மற்றும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் ஆகியன இவற்றுள் முக்கியமானவை. இவற்றின் இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தள கணக்குகளை பின்தொடர்வதன் மூலமும் இவ்வாறான போலிச் செய்திகள் தொடர்பில் பொது மக்கள் தெளிவுகளைப் பெற்றுக் கொள்ள முடியுமாகவிருக்கும்.
போலிச் செய்திகள் கிடைக்கப் பெற்றால்….
இவ்வாறான போலிச் செய்திகள் பகிரப்படும்போது அவை தொடர்பில் மக்கள் அவதானமாகவிருப்பதுடன் அவற்றின் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ள முயற்சிக்க வேண்டியது அவசியமாகும்.
அந்த வகையில் ஒரு செய்தியை சரிபார்க்கும்போது பின்வரும் விடயங்களை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
1. உங்களுக்கு கிடைக்கப் பெறும் எல்லா தகவல்களையும் பகிராதீர்கள். பிறருக்கு அவசியமான தகவல்களை மாத்திரம் தெரிவு செய்து பகிருங்கள். பகிர முன்னர் சிந்தியுங்கள்.
2. கிடைக்கப் பெறும் தகவல் உத்தியோகபூர்வ தரப்புகளால் வெளியிடப்பட்டுள்ளதா என்பதை அவதானியுங்கள்.
3. பத்திரிகைகளின் பெயரில் செய்திகள் பகிரப்படும்போது பத்திரிகைகளின் இலச்சினை, பிரசுரிக்கப்பட்டுள்ள திகதி, பயன்படுத்தப்பட்டுள்ள எழுத்துருக்கள் பற்றி கூர்ந்து அவதானியுங்கள். சந்தேகங்களிருப்பின் பத்திரிகை அலுவலகத்தை தொடர்பு கொண்டு வினவுங்கள்.
4. தேர்தல் தீர்மானங்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு, அரசாங்க தகவல் திணைக்களம், தேர்தல் கண்காணிப்புக் குழுக்களின் உத்தியோகபூர்வ தகவல்களை மாத்திரம் பின்பற்றுங்கள்
5. நாட்டிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையதள நிறுவனங்களின் செய்திகளை பின்தொடருங்கள்.
6. உங்களால் தகவல்களை உறுதிப்படுத்த முடியாவிடின் அத் தகவல் பிரதான ஊடகங்களில் பிரசுரமாகியுள்ளதா என தேடுங்கள். இன்றேல் உங்களுக்குப் பரிச்சயமான அதிகாரிகள், ஊடகவியலாளர்களின் உதவியை நாடுங்கள்.
7. போலிச் செய்திகளை உருவாக்குதல், பகிர்தல் என்பன தண்டனைக்குரிய குற்றமாகும். உங்கள் சமூக ஊடக பதிவுகள் அனைத்தும் கண்காணிக்கப்படுகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
8. தயவு செய்து நீங்களும் போலிச் செய்திகளை பரப்புவோரில் ஒருவராக இருக்காதீர்கள். – Vidivelli