அருள்கள் நிறைந்த பத்து தினங்கள்

0 1,068

திருக்குர்ஆனில் அல்லாஹ் தான் படைத்த படைப்புக்களில் தனக்கு விருப்பமான சில பொருட்கள் மீது சத்தியமிட்டு பல்வேறு செய்திகளைச் சொல்கிறான், அவற்றுள்
வைகறை பொழுதின் மீதும், பத்து இரவுகளின் மீதும் சத்தியமாக’ என்று அல்லாஹ் சூரதுல் பஜ்ரை ஆரம்பம் செய்கிறான்.

ஹிஜ்ரி ஆண்டு கணிப்பின்படி பனிரெண்டாவது மாதமான துல் ஹஜ் மாதத்தின் முதற் பத்து தினங்களையே பத்து இரவுகளின் மீது சத்தியமாக என்ற இந்த வசனம் குறிக்கிறது என இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரழி), இப்னு சுபைர் (ரஹ்), முஜாஹித் (ரஹ்), போன்ற அறிஞர்களின் கூற்றை ஆதாரமாகக் குறிப்பிடுகின்றார்கள். தப்ஸீர் இப்னு கஸீர் : 8 / 413

அப்படி அந்த பத்து நாட்களுக்கும் என்ன சிறப்புக்கள் உள்ளன என்பது பற்றி நபிகளாரின் பொன்மொழிகள் மிகத் துல்லியமாக விவரிக்கின்றன.

துல் ஹஜ் முதல் பத்து நாட்களின் சிறப்புக்கள்

பற்றி வந்துள்ள குர்ஆன், சுன்னா மற்றும் அறிஞர்களின் கூற்றுக்கள் என பத்து சிறப்புக்களினூடாக இந்நாட்களின் மகத்துவத்தை புரிந்து கொள்ள முயற்சிப்போம்.

1- திருக்குர்ஆன் சூரா பஜ்ரின் ஆரம்ப வசனங்களில் “வைகறைப் பொழுதின் மீது சத்தியமாக மேலும் பத்து இரவுகளின் மீது சத்தியமாக. (89-1,2)

இப்பத்து நாட்களையும் அல்லாஹ் சத்தியம் செய்து கீர்த்திப்படுத்தியுள்ளான், அல்லாஹ் ஒரு பொருளில் சத்தியம் செய்தால் அதற்கு ஏனைய பொருட்களை விட அதி கூடிய சிறப்பும்,கண்ணியமும் மகத்துவமும் அந்துஸ்துக்களும், படிப்பினைகளும் நிச்சயமாக அதில் இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமிருக்காது.

2- துல்ஹஜ் முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல்லமல்கள் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பத்துக்குரிவையாகும். வேறு எந்த நாட்களில் செய்யப்படும் நல்லமல்ளும் அதற்கு ஈடாகமாட்டாது. அப்போது அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் போராடுவதை விடவுமா? என நபித் தோழர்கள் கேட்டார்கள். ஆம் அல்லாஹ்வின் பாதையில் போராடுவதைவிடவும் அந்த நாட்களில் செய்யும் அமல்கள் எனக்கு மிகவும் விருப்பமானது. ஆனால் ஒருவன் அல்லாஹ்வின் பாதையில் போராடப் புறப்பட்டு, தன் பொருளையும் உயிரையும் இழந்து ஷஹீதான அந்த மனிதனைத் தவிர என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
நூல் – புகாரி

3- நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: துல்ஹஜ் மாதத்தின் முதுல் பத்து தினங்களிலும் செய்யும் அமல்கள் அல்லாஹ்விடத்தில் மிகவும் மகத்தானதாகவும், விருப்பத்திற்குரியதாகவும் உள்ளன. இது போல் அந்தஸ்தும் உயர்வும் கொண்ட வேறு எந்த நாட்களும் கிடையாது. எனவே இந்த நாட்களில் லாஇலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர், அல்ஹம்துலில்லாஹ், ஆகிய திக்ர்களை அதிகமதிகம் கூறுங்கள்.
நூல் – முஸ்லிம்

4- நபி (ஸல்) அவர்கள் துல் ஹஜ் மாதம் முதல் ஒன்பது நாட்களும் நோன்பு பிடித்தார்கள் என ஹுனைதா பின் காலித் (ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
நூல் – அஹ்மத், நஸாஈ, அபூதாவூத்.

நபிகளாரின் மனைவிமார்களில் ஒருவரான ஹப்ஸா (ரழி) அவர்களும் இந்த நாட்களில் நபிகளார் (ஸல்) நோன்பு பிடித்தார்கள் என்பதை கூறியுள்ளார்கள்.
நூல் – அபூதாவூத்

எனினும் மேலுள்ள “துல் ஹஜ் மாதம் முதல் ஒன்பது நாட்களும் நோன்பு பிடித்தார்கள்” என்ற கருத்தில் வருகின்ற செய்திகள் அனைத்தும் பலவீனமானவை என்பதாகவும் அறிஞர்கள் கூறியுள்ளனர்.

“துல்ஹஜ் மாதம்” பத்து நாட்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் நோன்பு நோற்று நான் கண்டதில்லை என்று ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார்கள்.(முஸ்லிம்) .

ஆயிஷா (ரழி) அவர்களின் இந்த அறிவிப்பு மிகவும் தரமானது என்ற வகையில் துல் ஹஜ் முதல் ஒன்பது நாட்களும் நோன்பு பிடிப்பது குறிப்பான தனித்துவமான ஒரு ஸுன்னா என்று புரிந்து கொள்ளாது மேலுள்ள செய்திகளையும் இந்த செய்தியையும் மேலும் துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களில் பொதுவாக நன்மைகள் செய்யும் படி ஆர்வமூட்டி வந்துள்ள நபிமொழிகளையும் சேர்த்து இந்த ஒன்பது நாட்களிலும் நோன்பு பிடிப்பது வரவேற்கத்தக்க பொதுவான ஓர் அம்சமாகும் என்றே நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

5- அரபா நோன்பு அதற்கு முந்திய ஆண்டின் பாவங்களுக்கும் அதற்கு பின்னுள்ள வருடத்தின் பாவங்களுக்கும் குற்றப்பரிகாரமாக அமையும் என நான் அல்லாஹ்விடம் எதிர்பார்க்கின்றேன்’ என ரஸுல் (ஸல்) கூறியதாக கதாதா (ரழி) அறிவிக்கும் நபிமொழி ஸஹீஹ் முஸ்லிமில் பதிவாகியுள்ளது

“அல்லாஹ் தனது அடியார்களை நரகிலிருந்து அதிகமாக விடுதலை செய்யும் நாள் அரஃபா நாளாகும். இதைவிட வேறு எந்த நாட்களிலும் இவ்வாறு விடுதலை செய்வதில்லை. இந்நாளில் அல்லாஹ் இறங்கி வந்து எனது அடியார்கள் என்ன விரும்புகிறார்கள்? ( கேட்பதைக் கொடுப்பதற்கு சித்தமாக உள்ளேன்.) என அமரர்களிடம் பெருமையோடு கூறிக்கொள்வான்” என ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அறிவிக்கும் செய்தி முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.

துல் ஹஜ் மாத்தின் பிறை ஒன்பதில் அரபா நோன்பு வைப்பது நபிகளாரின் மிக முக்கியமான சுன்னாவாகும். நபிகளார் அதன் மகத்துவத்தை பல்வேறு சந்தர்ப்பங்களில் மேலுள்ள நபிமொழிகளைப் போன்று உணர்த்தியுள்ளார்கள்.

6- சூரதுல் ஹஜ்ஜின் 28வது வசனத்தில் “அவர்கள் அந்தக் குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வின் பெயரை நினைவு கூறுவதற்காக” என்று வந்துள்ள அல்குர்ஆன் வசனமும் துல்ஹஜ் முதல் பத்து நாட்களைத்தான் குறிக்கும் என இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
நூல் – தப்ஸீர் இப்னு கஸீர்.

7- இப்னு உமர் (ரலி) அபூஹுரைரா (ரலி) ஆகிய இரு நபித்தோழர்களும் துல்ஹஜ் (மாதம் ஆரம்ப) பத்து தினங்களிலும் கடைவீதிகளுக்கு செல்லும் போதெல்லாம் தக்பீர் கூறுவார்கள் இவ்விருவரும் கூறுவதை கேட்கின்ற மற்ற மக்களும் தக்பீர் கூறுவார்கள். ஆதாரம் – புகாரி

இந்நாட்களில் கடமையான தொழுகைகளுக்குப் பின்னரும் பள்ளிவாசல், வீடு, கடைவீதி போன்ற எல்லா இடங்களிலும் தக்பீர் கூறுவது விரும்பத்தக்க அம்சமாகும்.

துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை. ஆகவே லாஇலாஹா இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர், அல்ஹம்து லில்லாஹ் போன்ற திக்ருகளை அதிகமாக செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : முஸ்னத் அஹ்மத்

அல்லாஹுஅக்பர் அல்லாஹு அக்பர் லாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹுஅக்பர். அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து” என்ற திக்ருகளை அய்யாமுத் தஷ்ரீகுடைய நாட்களில் இப்னு மஸ்ஊது ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மொழியக் கூடியவர்களாக இருந்தார்கள். நூல் – முஸன்னப் இப்னு அபீ ஷைபா , இர்வாஉல் கலீல் – அல்லாமா அல்பானி.

ஆதாரபூர்வமான வேறு அறிவிப்புக்களில் அலி (ரழி) உமர் (ரழி) ஆகியோரும் இவ்வாறு மொழியக்கூடியவர்களாக இருந்தார்கள் என்று பதிவாகியுள்ளது. எனவே இந்நாட்களில் மேலுள்ள திக்ருகளை அதிகமாக மொழிந்து வருவது மிகவும் சிறப்புக்குரிய அம்சமாகும்.

8- ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை மேலும் குத்பா பிரசங்கத்தில் கலந்து கொள்வது

நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் கன்னிப்பெண்கள் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் (உட்பட) முஸ்லிம்களின் பிரார்த்தனைகளிலும் நல்ல அமல்களிலும் கலந்து கொள்ள வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு கட்டளையிட்டார்கள். மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் தொழுகையில் கலந்து கொள்ளாமல் தொழுகை நடக்கும் பகுதிக்கு வெளியே இருந்து கொள்ள வேண்டும் என்றார்கள். ஆதாரம் :- புகாரி முஸ்லிம்

9- ஹாபிழ் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி (ரஹ்) அவர்கள் தமது பத்ஹுல் பாரி : 2/ 534 என்ற ஸஹீஹுல் புஹாரியின் விளக்கவுரை நூலில் கூறுகிறார்கள்; துல் ஹஜ் மாதத்தின் இந்தப் பத்து நாட்களின் சிறப்புக்கான காரணம் இஸ்லாத்தின் அடிப்படை வணக்க வழிபாடுகள் இந்நாட்களில் ஒருங்கே அமைந்திருப்பதாகும். தொழுகை, நோன்பு, தர்மம், ஹஜ் ஆகிய யாவும் இந்நாட்களில் நிறை வேற்றப்படுகின்றன. இந்த நிலை வேறு எந்த நாட்களிலும் அமைவதில்லை. எனவே நாம் இந்நாட்களில் நல்அமல்களில் அதிக கவனம் செலுத்துவது சிறப்புக்குரிய அம்சமாகும்.

10- துல்ஹஜ் பத்தாம் நாளின் சிறப்புக்களையும் மகத்துவத்தையும் முஸ்லிம்களில் அதிகமானவர்கள் உணராமல் இருக்கின்றார்கள், குர்பானி நாள் அல்லாஹ்விடத்தில் மிகவும் சிறப்பான நாள் அதுவே ஹஜ்ஜுல் அக்பர் என்ற நாளாகும். என இமாம் இப்னு கையிம் அல் ஜௌஸிய்யா (ரஹ்) அவர்கள் தமது ஸாதுல் மஆத் 1/54 என்ற நூலில் கூறுகிறார்கள்.

அருள்கள் நிறைந்த இந்த பத்து நாட்களையும் பயனுள்ள நல்ல வணக்கங்களில் கழித்து இறையன்பையும் அவனது அருளையும் பெற முயற்சிப்போமாக. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.