அல் ஜெஸீரா ஊடகவியலாளரான மஹ்மூட் ஹுஸைன் விசாரணைகள் எதுவுமின்றி 713 நாட்களை சிறையில் கழித்துள்ள நிலையில் அவரது தடுப்புக் காவல் எகிப்திய அதிகாரிகளால் மேலும் 45 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளன.
நவம்பர் 19 ஆம் திகதி நடைபெற்ற விசாரணையின் பின்னரே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எனினும் இது தொடர்பில் அவரது சட்டத்தரணிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமையே அறிவிக்கப்பட்டது.
கட்டாரைப் பிறப்பிடமாகக் கொண்ட செய்தித் தயாரிப்பாளரான மஹ்மூட் ஹுஸைன் பொய்யான செய்திகளை பரப்புவதாகவும், அரசாங்க நிறுவனங்களுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்காக வெளிநாட்டு நிதிகளைப் பெற்றுக் கொள்வதாகவும் எகிப்து குற்றம்சாட்டியுள்ளது. எனினும் முறையாக அவர் மீது இக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவில்லை.
இக் குற்றச்சாட்டுக்களை ஹுஸைனும் அல்-ஜெஸீராவும் மறுத்துள்ள அதேவேளை இந்த நடவடிக்கை அவரைத் தொடர்ந்தும் தடுத்து வைத்திருப்பதாற்காக அணுகுமுறையாகும் எனத் தெரிவித்துள்ள அதேவேளை இது சர்வதேச விமர்சனங்களை எழச் செய்துள்ளது.
ஹுஸைன் தடுத்து வைக்கப்பட்டமை எகிப்தின் குற்றவியல் தண்டனைச் சட்டக் கோவைக்கு முரணானதாகும். விசாரணையின்றி குற்றம்சாட்டப்பட்ட நபரொருவரை 620 நாட்கள் மாத்திரமே தடுத்து வைத்து விசாரிக்க முடியும். ஆனால் அவர் 713 நாட்கள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அதிகாரிகள் ஹுஸைனை ஒன்றில் விடுவிக்க வேண்டும் அல்லது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்.
வருடாந்த விடுமுறையில் தனது குடும்பத்தினரைச் சந்திப்பதற்காக கெய்ரோவுக்கு வந்தபோதே கடந்த 2016 டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி எகிப்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அன்றிலிருந்து தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு சட்ட உரிமைகள் மறுக்கப்பட்டன.
ஹுஸைனின் தடுத்து வைப்பினை முறையற்ற தடுத்து வைப்பு என கடந்த பெப்ரவரி மாதம் அறிவித்த ஐக்கிய நாடுகள் சபை ஹுஸைனை உடனடியாக விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது.