சுகாதார விதிகளை பேணாத பள்ளிகள் மீது நடவடிக்கை

கொவிட் 19 இரண்டாவது அலை அபாயம் உள்ளதால் பொறுப்புடன் நடக்குமாறு வக்பு சபை வேண்டுகோள்

0 622

ஏ.ஆர்.ஏ.பரீல்

நாட்டில் ஒரு சில பள்ளிவாசல்களைத் தவிர பெரும் எண்ணிக்கையிலான பள்ளிவாசல்களில் ஜும்ஆ உட்பட கூட்டுத் தொழுகைகளின் போது பின்பற்றபட்ட வேண்டிய சுகாதார பிரிவு மற்றும் வக்பு சபையின் வழிகாட்டல்களும், நிபந்தனைகளும் பின்பற்றப்படுவதில்லை. அவ்வாறான பள்ளிவாசல்களின் நிர்வாகத்துக்கு எதிராக அரசின் சட்டத்தின் கீழும், வக்பு சபையின் சட்டத்தின் கீழும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வக்பு சபையின் தலைவர் சப்ரி ஹலீம்தீன் தெரிவித்தார்.

நாட்டில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை உருவாகும் அபாயம் உள்ளதால் அதுபற்றி ஆராய்வதற்கு வக்பு சபை கலந்துரையாடலொன்றினை நடாத்தியது. நேற்று முன்தினம் மாலை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் வக்பு சபையின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 22 முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகள் கலந்து கொண்டன. நாட்டில் ஒரு சில பள்ளிவாசல்களைத் தவிர ஏனையவற்றில் சுகாதார பிரிவினதும், வக்பு சபையினதும் கொரோனா வழிகாட்டல்கள், நிபந்தனைகள் பின்பற்றப்படுவதில்லை என்பதை, கூட்டத்தில் கலந்து கொண்ட 22 அமைப்புகளும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டன.

வக்பு சபையின் தலைவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில், பள்ளிவாசல்களில் கூட்டுத் தொழுகைகளில் ஈடுபடுவோர் கட்டாயமாகப் பதிவு செய்து கொள்ளவேண்டும், தொழுகை விரிப்பு கட்டாயமாக ஒவ்வொரும் கொண்டு வர வேண்டும், முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். இந் நிபந்தனைகளைப் பின்பற்றாதவிடத்து தொழுகைக்கு  அனுமதிக்கப்படக்கூடாது இது பள்ளிவாசல் நிர்வாகத்தின் கடமையாகும்.

அத்தோடு தொழுகையின் போது ஒரு மீற்றர் இடைவெளிபேணப்படவேண்டும். ஒருவருக்கு 9 சதுர அடிகள் இடம்ஒதுக்கப்படவேண்டும்.
சுகாதார பிரிவினர் வக்பு சபையினதும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினதும் வேண்டுகோளுக்கு இணங்கவே கூட்டுத் தொழுகையில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையை 100 என மட்டுப்படுத்தாது பள்ளிவாசல்களில் இடவசதிக்கேற்ப ஒரு மீற்றர் இடைவெளியைப் பேணி அதற்குரிய எண்ணிக்கையானோர் தொழ முடியும் என அனுமதி வழங்கியுள்ளது. இதே வேளை பெளத்த, இந்து, கிறிஸ்தவ மததலங்களில் 100 பேரே கலந்து கொள்ள முடியும் என மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் முஸ்லிம் சமூகம் அரசு வழங்கியுள்ள சலுகையைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். அரசின் நிபந்தனைகளை பேணாது நாம் செயற்பட்டால் கொரோனா பரவலுக்கு முஸ்லிம்களே காரணம் என குற்றம் சுமத்தப்படுவதுடன் வழங்கப்பட்டுள்ள சலுகை இல்லாமற் செய்யப்படலாம்.

கொரோனா வைரஸின் பரவல் ஏற்படும் ஆபத்து உருவாகியுள்ளதால் தற்போது கூட்டுத்தொழுகைக்கு மட்டுப்படுத்தப்படாத எண்ணிக்கையானோர் உரிய சமூக இடைவெளியைப் பேணி கலந்து கொள்வதை தொடர்ந்தும் அனுமதிப்பதா? இல்லையேல் கூட்டுத் தொழுகைக்கு 100 பேராக மட்டுப்படுத்துவதா என்பது தொடர்பில் வக்பு சபை சம்பந்தப்பட்ட சுகாதார பிரிவினருடன் கலந்துரையாடவுள்ளது. இது தொடர்பான தீர்மானம் அடுத்த ஜும்ஆ தொழுகைக்கு முன் அறிவிக்கப்படும்.

தற்போதைய சூழ்நிலையில் முஸ்லிம்கள் கண்டிப்பாக சுகாதார பிரிவு மற்றும் வக்பு சபையின் வழிகாட்டல்களையும் சுற்று நிருபங்களையும் பின்பற்ற வேண்டும். இவற்றுக்கான ஏற்பாடுகளைச் செய்வதும் கண்காணிப்பதும் பள்ளிவாசல் நிர்வாகங்களின் கடமையாகும். இதற்கு அனைவரும் ஒத்துழைக்குமாறு வக்பு சபை கோரிக்கை விடுக்கிறது என்றார்.

நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, சூரா கவுன்ஸில், தரீக்கா கவுன்ஸில், ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் , வை.எம்.எம்.ஏ. உட்பட 22 அமைப்புகள் கலந்து கொண்டன.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.