கிழக்கின் தொல் பொருளியல் முகாமைத்துவ செயலணி : முஸ்லிம் சமூகம் எங்கே நிற்கின்றது?

0 1,100

பேராசிரியர் மௌலவி எம்.எஸ்.எம்.ஜலால்தீன் (கபூரி)
முன்னாள் பீடாதிபதி, இஸ்லாமிய கற்கைகள் அறபு மொழிப்பீடம்
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்

இவ்வருடம் ஜூன் மாதம் 2 ஆம் திகதி வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட கிழக்கு மாகாண தொல் பொருளியல் பாரம்பரிய முகாமைத்துவம் தொடர்பான ஜனாதிபதி செயலணி(A Presidential Task Force Appointed for Archaeological Heritage Management in the Eastern Province)  உருவாக்கப்பட்டதிலிருந்து அது பற்றிய விடயம் இன்று இலங்கையில் வாழும் சிறுபான்மை மக்களினதும், சமூக செயற்பாட்டாளர்கள், புத்திஜீவிகள், அரசியல்வாதிகள், நடுநிலை பேணும் ஊடகங்களினதும் முக்கிய பேசுபொருளாக இருந்துவருகின்றது.

“கொவிட் 19” எனப்படும் கொரோனா நோயின் பயங்கர தாக்கம், நாடுதழுவிய ஊரடங்கு, நாட்டின் செயற்பாடுகளின் முடக்கம் என கடந்த மூன்று மாத பயங்கர நிலைகளிலிருந்து நாடும், மக்களும் மீண்டும் ஓரளவு நிம்மதிப் பெருமூச்சு விடத்தொடங்கிய ஜூன் மாத ஆரம்ப வாரத்திலேயே, இலங்கை மக்கள் யாருமே எதிர்பாராத வகையில் ஜனாதிபதியை சந்தித்த, பௌத்த பிக்குகள் அடங்கிய ஒரு குழுவினரின் வேண்டுகோளை அடிப்படையாக வைத்தே ஜனாதிபதி இச்செயலணியை திடீரென உருவாக்கி, அதற்கு அரசியல் அந்தஸ்த்தையும் வழங்கினார்.

இச்செயலணியில்,
01. வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான பிரதம பௌத்த மதகுரு, “தொல்பொருளியல் சக்கரவர்த்தி” என்று அழைக்கப்படும் எல்லாவல மேதானந்த தேரர்.
02. தமன்கடுவ பிரதம சங்க நாயக்கரும், அரிசிமலை ஆரண்யவின் பிரதம குருவுமான பன்னமுரே திலகவன்ச தேரர்.
03. ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல், பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன.
04. தொல் பொருளியல் துறை பணிப்பாளர் நாயகம் செனரத் பண்டார திசாநாயக்க.
05. காணி ஆணையாளர் நாயகம் திருமதி சந்திராஹேரத்
06. நில அளவை ஆணையாளர் நாயகம் ஏ.எல்.எஸ்.சி.பெரேரா,
07. களனி பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் ராஜ்குமார் சோமதேவ.
08. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தைச் சேர்ந்த பேராசிரியர் கபில குணவரத்தன.
09. மேல்மாகாண சிரஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன்.
10. கிழக்கு மாகாண காணி ஆணையாளர் எச்.எ.டபிள்யூ. கே.திசாநாயக்க
11. தெரண ஊடக நிறுவனத்தின் தலைவர் திலித் ஜயவீர

ஆகிய பதின்மர் இச்செயலனியின் உறுப்பினர்களாகவும், செயலணியின் தலைவராக பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்னவும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளனர். மொத்தத்தில் நியமிக்கப்பட்ட பதின்மரும் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுவும், கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையினராக வாழும் இலங்கையின் சிறுபான்மை சமூகங்களாகிய தமிழ் (40%), முஸ்லிம் (37%) சமூகங்களிலிருந்து (மொத்தம் 73 வீதமக்கள்) யாருமே இச்செயலணியின் பிரதிநிதியாகவோ நியமிக்கப்படாமல் வெறும் 23மூ மக்களாகிய சிங்கள மக்களிலிருந்து மட்டும் நியமிக்கப்பட்டமையே இச்செயலணி பற்றி நாட்டு மக்களின் தீவிர கவனத்தைப் பெறுவதற்கான முக்கிய காரணமாகும்.

“இந்த செயலணி மகாநாயக்கர்கள் உட்பட பௌத்த ஆலோசனைக் கவுன்சிலின் ஆலோசனைக்கமைய உதித்ததாகும்” என்று ஜனாதிபதி கூறிய அதே வேளை, நாட்டின் பிரதமரோ “வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த மத உரிமைகளை பாதுகாக்க உயிர்த்தியாகம் செய்த பௌத்த பிக்குகளுக்கு உபகாரம் செய்யும் விதமாகவே இச்செயலணி ஸ்தாபிக்கப்பட்டதாக” தத்தமது அறிக்கைகளில் குறிப்பிட்டுள்ளார்கள்.

எவ்வாறெனினும், மிகவும் திட்டமிட்டவாறு சிங்கள – பௌத்த – குடியேற்றங்களை கிழக்கில் அதிகரிப்பதற்கான நீண்டகால சிங்கள அரசுகளின் முயற்சிகளின் ஒரு அங்கமாகவே இச்செயலணியின் செயற்பாடுகள் அமையப் போகின்றது என்பது மட்டும் உண்மையாகும்.

வரலாற்று ரீதியாக இவ்வாறு சிங்கள குடியேற்றங்களை கிழக்கில் மேலோங்கச் செய்வதற்கான முயற்சிகள், டி.எஸ். சேனநாயக்காவின் ஆட்சிக் காலத்திலிருந்தே தொடர்ந்து அரங்கேற்றப்பட்டு வருகின்றன. சிறுபான்மையினருக்கு எதிராக புனிதபூமி, வன திணைக்கள காணி, காட்டு யானைகளின் பாதை, அரச காணி, மகாவலிக் காணி, வனஜீவராசிகள் காணி, தொல்லியல் காணி எனப் பல பெயர்களில் வடகிழக்கு மாகாணங்களில் காணப்படும் சிறுபான்மையினருக்குச் சொந்தமான காணிகள் அரசாங்கத்தினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சனத்தொகையில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றம்

உதாரணமாக, 1921 ஆம் ஆண்டின் சனத்தொகை மதிப்பீட்டின்படி, கிழக்கு மாகாணத்தில் சிங்களவரின் தொகை 4.5 வீதமாகும். ஏனையவர்கள் தமிழர்களும், முஸ்லிம்களுமாவர். இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னர் முதல் பிரதமர் டி.எஸ். சேனநாயக்கர் கல்லோயா, கந்தளாய், அல்லை ஆகிய குடியேற்றத்திட்டங்களின் மூலமாக வெளி மாகாணங்களிலிருந்து கிழக்கு மாகாணத்திற்கு சிங்களவர்களை குடியேற்றம் செய்தார். இதனால் கிழக்கு மாகாணத்தில் 1921 இல் 4.5 வீதமாக இருந்த சிங்களவர்களின் சனத்தொகை, 1963 ஆம் ஆண்டு 20.4 வீதமாக அதிகரித்தது. 2012 ஆம் ஆண்டின் சனத்தொகை மதிப்பீட்டின்படி சிங்களவர்களின் சனத்தொகை 23.15 வீதமாக அதிகரித்து காணப்பட்டது. இவ்வாறு டி.எஸ்.சேனநாயக்கா ஆரம்பித்து வைத்த சிங்கள குடியேற்றத் திட்டங்களை ஒவ்வொரு ஆட்சிக் காலத்திலும், தொடர்ந்து பல்வேறு வழிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளதை புள்ளிவிபரங்களினூடாக நாம் அறிய முடிகின்றது.

இத்தகையதொரு பின்னணியில்தான், தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள கிழக்கு மாகாண தொல்பொருளியல் முகாமைத்துவ செயலணியும், புதிய அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பொதுவாக சிறுபான்மை மக்களிடையே ஒரு பலமான சந்தேகம் நிலவுகின்றது. கிடைக்கின்ற தகவல்களின்படி கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையில் சுமார் 74 இடங்களும், மட்டக்களப்பு, மாவட்டத்தில் சுமார் 55 இடங்களும், அம்பாரை மாவட்டத்தில் சுமார் 83 இடங்களும் பௌத்த மதம் மற்றும் தொல்லியல் சார்ந்த பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இவ்விடங்கள் யாவும் தமிழ், முஸ்லிம் மக்களின் பூர்வீக காணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

செயலணியின் முதலாவது இலக்கு

கிழக்கிலங்கையின் அம்பாரை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பிரதேசம், 12000 குடிமக்களைக் கொண்ட பிரதேசமாகும். இலங்கையின் பிரபல்யமான சுற்றுலாத்தலமான அறுகம்பே நகரத்திலிருந்து 2 கி.மி. தூரத்திலுள்ள பொத்துவில் பிரதேசத்தில் வாழும் குடிமக்களில் 90 வீதமானோர் முஸ்லிம்களாவர். கடந்த மே மாதம் 14ம் திகதி ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் இராணுவ உயர் மட்ட ஆளணியினர் இப்பிரதேசத்திற்கு விஜயம்செய்து இப்பிரதேசத்தில் அண்மைக்காலங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் தொல்லியல் முக்கியத்துவமிக்க இடங்களில் நடைபெறும் அத்துமீறல்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டனர் என சிங்கள ஊடகங்கள் அப்போது செய்தி வெளியிட்டன. இராணுவ தூதுக்குழு தீகவாபி பிரதேசத்திற்கும், நுரைச்சோலை வீடமைப்புத் திட்டத்திற்கும் கூட விஜயம் செய்தது. 1971ம் ஆண்டில் தொல்பொருள் திணைக்கள அப்போதைய ஆணையாளர் பேராசிரியர் செனரத் பரணவித்தாரண என்பவர் பொத்துவிலிலுள்ள முகுது மகா விகாரை பிரதேசத்திற்கு 72 ஏக்கர் தொல்லியல் இடமாக சுற்று நிருபம் மூலம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு பிரகடனம் செய்யப்பட்ட பல பிரதேசங்களில் முஸ்லிம்கள் அத்துமீறி குடியேறியுள்ளதாகவும் சிங்கள ஊடகங்கள் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்தன. உண்மையில் முகுது மகாவிகாரைக்குரிய 32 ஏக்கர் நிலம் தவிர்ந்த பிரதேசங்களிலேயே முஸ்லிம்களின் குடியிருப்புக்கள் பல நூற்றாண்டுகளாக காணப்படுகின்றன. எனினும் பொத்துவில் முகுது மகாவிகாரையின் பிரதம மதகுரு வரகாபொல இந்திர திஸ்ஸ தேரரும், அவரது குழுவினரும் முஸ்லிம்களின் குடியிருப்புக்களுக்கு சென்று, முஸ்லிம்களை அங்கிருந்து வெளியேற்றும் பல்வேறு அடாவடித்தனங்களை மேற்கொண்டிருந்தனர். ஜனாதிபதி செயலணியின் உதயமும், அவர்களின் பல அதிரடி நடவடிக்கைகளும், முஸ்லிம்களை வெளியேற்ற துடித்தவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தன. எவ்வாறெனினும் பொத்துவில் பிரதேச முஸ்லிம் சமூக ஆர்வலர்கள் மேற்கொண்ட துரித நடவடிக்கையின் காரணமாக இவ்விடயம் நீதிமன்ற சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு, சென்றவாரம் நீதிமன்றம் நில அளவை விடயங்களுக்கு இடைக்கால தடையுத்தரவைப் பிறப்பித்துள்ளது.

செயலணிக்கு எதிராக தமிழ் மக்களின் போராட்டம்

செயலணி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, இலங்கைவாழ் தமிழ் மக்களில் காணப்படும் தமிழ் அரசியல் வாதிகள், கல்வியியலாளர்கள், சமூக ஆர்வலர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரிடமிருந்தும் பல்வேறு வடிவிலான எதிர்ப்பலைகளும் பல்வேறு கோசங்களும், உணர்வலைகளும் தொடர்ந்து வெளிவந்த வண்ணமுள்ளன. தற்போதைய அரசுக்கு சார்பான தமிழ் அரசியல்வாதிகள், எதிர்நிலை அரசியல்வாதிகள் என அனைவருமே இவ்விடயத்தில் முக்கியமான ஒரு விடயத்தை மிக அழுத்தமாக தெரிவித்த வண்ணமுள்ளார்கள். ‘தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையினராக (73%)  வாழும் கிழக்கு மாகாணத்திற்கென அமைக்கப்பட்ட தொல் பொருளியல் முகாமைத்துவ ஜனாதிபதி செயலணியில் ஒரு தமிழ் பேசும் மகனாவது உறுப்பினராக நியமிக்கப்படாதது தமிழ் பேசும் மக்களுக்கு செய்யும் துரோகம்’ என அவர்கள் பல்வேறு வழிகளில் அரசுக்கு மிகத் தெளிவான செய்தியை சொல்லியுள்ளார்கள். தமிழ் தேசிய பத்திரிகைகள் ஏனைய சமூக வலைத்தளங்களிலும் இதற்கு எதிரான பல்வேறு கட்டுரைகள், அறிக்கைகள், கண்டனங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றார்கள். தமிழ் மக்களின் பாரிய எதிர்ப்பின் காரணமாக ஜூன் மாதம் 26ம் திகதி நடைபெற்ற அரச தரப்பு ஊடகவியலாளர் சந்திப்பின் போது, கருத்து வெளியிட்ட அரச தரப்பு பேச்சாளர், “இச்செயலணியில் தமிழ் பேசும் எவரும் உள்ளடக்கப்படாதது மிகப் பாரிய தவறு” என்றும், “இது விடயமாக தான் ஜனாதிபதியிடம் விளக்கமளிக்கப் போவதாகவும்” பகிரங்கமாக கூறினார். அதுமட்டுமன்றி இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரும் இவ்விடயத்தில் தனது ஆட்சேபனையை மிகத் தெளிவாக முன்வைத்துள்ளார். எதிர்வரும் காலங்களில் இச்செயலணியில் தமிழ் மக்கள் சார்பிலான ஏதாவது மாற்றங்கள் இடம்பெறுமா என்பதை பலரும் கூர்மையாக அவதானித்து வருகின்றனர்.

முஸ்லிம் சமுதாயம் என்ன செய்கின்றது?

அம்பாரை மாவட்டத்தில் பல்வேறு அத்துமீறிய சிங்கள குடியேற்றங்கள் நடந்தும், இன்றுவரை இம்மாவட்டத்தில் பெரும்பான்மையினராக வாழும் முஸ்லிம் சமுதாயத்தின் சார்பில் இச்செயலணிக்கு எதிராக ஒரு சில கருத்துக்கள், கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டபோதும், அவை எதுவும் அரசாங்கத்தின் முழுக் கவனத்தையும் பெறவில்லை என்பதுவும் முஸ்லிம் சமுதாயம் பற்றிய எவ்வித சலசலப்பும் அரச மட்டத்தில் இதுவரை உணரப்படவில்லை என்றே அறியமுடிகின்றது. பொத்துவில் பிரதேச முஸ்லிம் சிவில் செயற்பாட்டாளர்களின் நீதிமன்ற நடவடிக்கையைத் தவிர, வேறெந்த நடவடிக்கைகளும் முஸ்லிம் சமுதாயத்தால் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

ஆளும் அரசாங்கத்திற்கு சார்பாக அம்பாரை மாவட்ட முஸ்லிம் கட்சிகள், தேசிய ரீதியிலான ஓரிரண்டு முஸ்லிம் கட்சிகள், அரசாங்கத்தின் சார்பில் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற முஸ்லிம் வேட்பாளர்கள் என பல  தரப்பினரும் அம்பாரை மாவட்ட முஸ்லிம்களை பிரதிநிதித்துவப் படுத்தி காணப்படுகின்ற போதும், இவர்கள் எல்லோரும் இவ்விடயத்தில் மௌனிகளாக, அல்லது அக்கறையற்று காணப்படுகின்றமையை எம்மால் அவதானிக்க முடிகின்றது. பொதுவாக முஸ்லிம்களின் குரல் இன்றுவரை அரசாங்கத்தின் காதுகளை சென்றடையவில்லை.

இச்செயலணியின் அடுத்த இலக்கு எமது சமூகத்துக்குரிய ஏனைய காணிகளையும், நிலங்களையும், புனித இடங்களையும், ஏன் மஸ்ஜிதுகளையும் கூட இலக்கு வைக்கப்பட்டிருக்கலாம். அதற்கு ஏற்றாற்போல் முஸ்லிம்களுக்குரிய இறக்காமம் மாணிக்கமடு பிரதேசம், தீகவாபி பிரதேசம் சார்ந்த பாரிய வயல் நிலங்கள், அஷ்ரப் நகர் வீட்டுத்திட்டம் போன்ற பல இடங்கள் தொடர்ச்சியாக பௌத்த பிக்குகளினால் அடையாளப்படுத்தப்பட்டு, முத்திரை குத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே அம்பாரை மாவட்டத்தில் மட்டுமன்றி, முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பிரதேசங்களிலும் ஏனைய மாவட்டங்களிலும் முஸ்லிம்கள் எதிர்காலத்தில் பரந்து வாழ்வதற்கான நிலப்பற்றாக்குறை முஸ்லிம்களை பாரிய அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளன. முஸ்லிம்களுக்கென 4 வீதமான நிலங்களே காணப்படுவதாக கடந்த சில வருடங்களுக்கு முன்னர் செய்யப்பட்ட ஆய்வொன்று சுட்டிக்காட்டியது. தீகவாபிப் பிரதேசத்தில் தீகவாபி புனித பிரதேசத்தை ஒட்டிய முஸ்லிம்களுக்கு சொந்தமான 4000  ஏக்கர் வயல் காணி தீகவாபி புனித பிரதேசத்துக்கு உரியதென முன்னைய காலங்களில் உரிமை கோரப்பட்டதும், இந்த விடயத்தில் ஆய்வுகளை மேற்கொண்ட பேராதனை பல்கலைக்கழக சிங்கள் பேராசிரியர் ரியூடர் சில்வா (Tudor Silva) போன்றவர்களே “தீகவாபி புனித பூமிக்கு சுமார் 632 ஏக்கர் காணிகள் மட்டுமே சொந்தமானது” என பகிரங்கமாக ஆய்வு முடிவை வெளியிட்டனர். அவ்வாறான – நிதானமான – பக்கச் சார்பற்ற சிறந்த ஆய்வாளர்களை இன்று இலங்கையில் எந்த வகையிலும் காண முடியாதுள்ளது.

வரலாறு, தொல்பொருள் ஆய்வும் முஸ்லிம் சமுதாயமும்

இலங்கை பல்கலைக்கழகங்களில் பேராதனை, களனி, ஸ்ரீஜயவர்த்தனபுர, யாழ்ப்பாணம், கிழக்கு, தென்கிழக்குப் பல்கலைக் கழகங்களில் வரலாற்றுத்துறை முழுமையாகவும், தொல்பொருளியல்துறை முழுமையாக அல்லது பகுதியாக (Units)  காணப்படுகின்றன. இப் பல்கலைக்கழகங்களில் பல தசாப்தங்களாக பரணவிதாரன, கே.எம்.டி.சில்வா போன்ற சிங்கள சிரேஷ்ட பேராசிரியர்களும், பத்மநாதன், சிற்றம்பலம், புஷ்பரெட்ணம் போன்ற மிக தமிழ் சிரேஷ்ட பேராசிரியர்களும், ஏனைய நூற்றுக்கணக்கான பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஆய்வாளர்கள் என வரலாறு, தொல்பொருளியல் துறைகளில் காணப்படும் அதே வேளை, முஸ்லிம் சமுதாயத்தின் சார்பில் துறைசார்ந்த எந்தப் பேராசிரியர்களும் இதுவரை இனங்காணப்படவுமில்லை.  இத்துறைகள் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் அறிமுகம் கூட செய்யப்படவுமில்லை என்பதை கசப்பாயினும் நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

ஒரேயொரு வரலாற்றுத்துறை முஸ்லிம் பேராசிரியர் காணப்பட்ட போதும், அவரும் மிக நீண்டகாலம் வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் ஒன்றில் கடமையாற்றி விட்டு, தற்போது ஓய்வு பெற்ற நிலையில் இலங்கையில் வசித்து வருகின்றார். வரலாற்றுத் துறையில் ஒரு சில முஸ்லிம்கள் தமது பட்டப்படிப்பை அல்லது பட்டப்பின் படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்த போதிலும், இன்றுவரை அவர்களில் எவருமே தொழில்சார் பல்கலைக்கழக விரிவுரையாளர் நியமனம் எதையும் பெறவில்லை. அதே நேரத்தில் தொல் பொருளியல் துறையில் எந்த முஸ்லிம் விரிவுரையாளர்களும், ஆய்வாளர்களும் இன்றுவரை இல்லை. இவ்வாறான நிலைமையே கடந்த தசாப்தங்களில் தமிழ் சமுதாயத்திலும் காணப்பட்டது. ஆனால் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டதன் பின்னர், தமிழ் மக்களிடையே பேராசிரியர் புஷ்பரெட்ணம் போன்ற தலைசிறந்த தொல்பொருளியல் விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் தோன்றி தமிழ் சமூகத்தின் இருப்பையும், தொல்பொருளியல் சார்ந்த சான்றுகளையும் சர்வதேச ஆய்வுலகத்துக்கு சமர்ப்பிப்பதில் வெற்றி கண்டுள்ளனர்.

சில வேளைகளில் வரலாற்றுத் துறையிலும், தொல்பொருளியல் துறையிலும் சிங்கள, தமிழ் பேராசிரியர்களிடையே தொடர்ச்சியான வாதப்பிரதிவாதங்களும் பனிப்போர்களும் நடப்பதை நாம் பல்கலைக்கழக ஆய்வு மட்டத்தில் அவதானித்துள்ளோம். யாழ் குடாநாட்டில் காணப்படும் “வலிகாமம்” என்ற ஊரை சிங்கள வரலாற்றுத்துறை ஆய்வாளர்கள் “வெலிகம” என சிங்களமயப்படுத்தி தொடர்ச்சியாக வரலாற்றுக் குறிப்புகளை இடுவதையும் காண முடிகின்றது. பொதுவாக தமிழ் மக்களிடையே தோன்றியுள்ள வரலாற்றுத்துறை தொல்பொருளியல் பேராசிரியர்களின் தோற்றத்தினால் ஏனைய பல்கலைக்கழகங்களில் காணப்படும் இத்துறைசார் சிங்களப் பேராசிரியர்கள் தமது ஆய்வு முடிவுகளை சற்று அடக்கியே வாசிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

எனினும், இவர்களுக்கு சவால் விடுக்கக்கூடிய இத்துறைசார் எந்த முஸ்லிம் ஆய்வாளர்களோ, விரிவுரையாளர்களோ, பேராசிரியர்களோ இன்றுவரை உருவாகவில்லை என்பதால், ஏனைய இன பேராசிரியர்கள் முஸ்லிம்களைப் பற்றியும், அவர்களின் வரலாறு, தொல்லியல் சார்ந்த நிலைமைகள் பற்றியும் அலட்டிக் கொள்ள வேண்டிய அவசியம் இன்றுவரை ஏற்படவில்லை. நான் களனிப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற காலத்தில் தொல்பொருளியல் துறை தமிழ் மொழியிலும் கற்பிக்கப்பட்டு வந்தது. இத்துறையில் விஷேட துறையாக கல்விகற்ற மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரியும், மருதமுனையைச் சேர்ந்த ஐ.எல்.எம்.கமர்தீன், திருகோணமலையைச் சேர்ந்த அன்வர்தீன் என்போர் இரண்டாம் வகுப்பு விஷேட சித்தி பெற்ற பட்டதாரிகளாக 1978, 1979 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வெளியாகினர்.

எனினும் திடீரென தமிழ் மொழியிலான தொல்பொருளியல்துறை மிகத்திட்டமிட்ட முறையில் களனி பல்கலைக்கழகத்தில் மூடப்பட்டதால், இவர்கள் எவருமே நிரந்தர விரிவுரையாளர் நியமனம் பெறவுமில்லை. இத்துறையில் பேராசிரியர்களாக வருவதற்கான அரிய சந்தர்ப்பம் அன்றே சிறு பான்மை மக்களுக்கு இழுத்து மூடப்பட்டது. சிறுபான்மையினர் யாரும் இத்துறையில் காலடி எடுத்து வைக்கக்கூடாது என்ற பெரும்பான்மையின மனப்பாங்கு அன்றே தனது செயல்வடிவத்தை தொடங்கி விட்டது என்று கூறலாம். இதன் காரணமாக இன்றுவரை இலங்கை முஸ்லிம்களின் தொல்பொருளியலை மட்டுமல்ல, வரலாற்றையும் நிறுவும் முஸ்லிம் சமூகம் சார்ந்;த துறைசார் நிபுணர்கள் தோன்றவில்லை என்பதை கசப்பாயினும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

பிரபல ஆய்வாளர் டி.பி.எச்.அபேசிங்க கூறுவதுபோல் “இலங்கை முஸ்லிம் சமுதாயம் தமது பாரம்பரிய வரலாறுகளை பாதுகாக்காத – பாதுகாக்க முடியாத – துரதிஷ்டவசமான சமுதாயமாகவே” ” (They are a community without historical tradition) நாம் வாழப்போகிறோமா? – vidivelli

Leave A Reply

Your email address will not be published.