ஏ.ஆர்.ஏ. பரீல்
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்பும் நோக்கில் பல்வேறு நாடுகளும் அமைப்புகளும் இலங்கைக்கு உதவிகளை வழங்க முன்வந்ததை நாம் அறிவோம். அவ்வாறான உதவித் தொகைகளுள் குறிப்பிடத்தக்க ஒன்றுதான் முஸ்லிம்கள் சார்பில் உலக முஸ்லிம் லீக் அமைப்பினால் வழங்கப்பட்ட 5 மில்லியன் டொலர் நிதியாகும். ஆனால் குறித்த நிதியானது இலங்கைக்கு வழங்கப்பட்டதா? வழங்கப்பட்டிருப்பின் அந் நிதிக்கு என்ன நடந்தது? உண்மையாகவே பாதிக்கப்பட்ட மக்களை அந்நிதி சென்றடைந்ததா? என அண்மைய நாட்களில் பலரும் கேள்விகளை எழுப்பி வந்தனர். இந் நிலையில்தான் இந்த விவகாரம் கடந்த வாரம் ஊடகங்களில் கவனயீர்ப்புக்குள்ளானது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் கடந்த ஜுன் 24 ஆம் திகதி, கத்தோலிக்க ஆலயங்களின் தர்மகர்த்தா பிரிவுக்குப் பொறுப்பான ‘செத்சரன’ பணிப்பாளர் அருட்தந்தை நிஸாந்த லோரன்ஸ் ராமநாயக்க இந்த நிதி தொடர்பில் கேள்வியெழுப்பியதையடுத்தே இந்த விவகாரம் சூடுபிடித்தது.
அவரது வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ‘உலக முஸ்லிம் லீக் அமைப்பு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக அறிவிப்புச் செய்தது.
2019 ஆம் ஆண்டு ஜுலை மாதம் தாமரைத் தடாகத்தில் நடைபெற்ற நல்லிணக்கத்துக்கான தேசிய மாநாட்டிலே இவ் அறிவிப்பு விடுக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் மற்றும் பிரமுகர்கள் முன்னிலையில் விடுக்கப்பட்டது. மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உலக முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் கலாநிதி ஷெய்க் மொஹம்மத் பின் அப்துல் கரீம் அல் ஈசாவினால் 5 மில்லியன் அமெரிக்க டொலருக்கான மாதிரி காசோலையொன்றும் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
முன்னைய அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் முன்னிலையில் இந்த அறிவிப்புச் செய்யப்பட்டாலும், இந்த நிதி தொடர்பான ஏற்பாடுகள் பற்றி இதுவரை நாம் எதுவும் அறியவில்லை. இந் நிதியினை முன்னைய அரசாங்கம் பெற்றுக்கொண்டதா? இல்லையா? என்பது தொடர்பிலும் எமக்கு எதுவும் தெரியாது” என அருட்தந்தை ராமநாயக்க ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் தெரிவித்திருந்தார். உலக முஸ்லிம் லீக் அமைப்பு இது பற்றி மாநாட்டில் வைத்து அறிவிப்புச் செய்வதற்கு முன்பு பேராயருக்கு அறிவித்துள்ளது எனவும் அவர் சாட்சியமளித்துள்ளார்.
இவரது சாட்சியம் ஊடகங்களில் வெளியிடப்பட்டதும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பில் மக்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைக்க ஆரம்பித்தனர். இதனையடுத்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினது ஊடகப்பிரிவினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு இவ்விகாரம் குறித்து தெளிவுபடுத்தப்பட்டது.
உலக முஸ்லிம் லீக் இலங்கைக்கு வழங்கியதாகக் கூறப்படும் 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தொடர்பில் ஊடகங்கள் வெளியிட்டு வரும் பொய் பிரசாரத்தை தெளிவுபடுத்துவதற்கான ஊடக அறிக்கை எனத் தலைப்பிடப்பட்ட அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உலக முஸ்லிம் லீக் 2019 ஜுன் 30 ஆம் திகதி இலங்கையில் நல்லிணக்கத்துக்கான மாநாடொன்றினைக் கூட்டியது. அம்மாநாட்டில் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக 5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டதாகவும், அந் நிதி பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் பல்வேறு சந்தர்ப்பங்களில் மதகுருமார் மற்றும் பலதரப்பட்ட நபர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்து வந்துள்ளனர்.
மைத்திரிபால சிறிசேன அப்போதைய ஜனாதிபதி என்பதால் குறிப்பிட்ட மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். எவ்வாறாயினும் இந்நிதி தொடர்பாக முரண்பாடான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டதையடுத்து இம்மாநாட்டை ஏற்பாடு செய்த குழுவினரிடம் நாம் விசாரணை செய்தோம். அப்போதைய மேல் மாகாண ஆளுநராகப் பதவி வகித்த ஏ.ஜே.எம். முஸம்மில் இது தொடர்பில் உலக முஸ்லிம் லீக்கைத் தொடர்பு கொண்டு வினவியதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து உலக முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் ஷெய்க் மொஹமத் பின் அப்துல் கரீம் அல்ஈசா, ஆளுநர் முஸம்மிலுக்கு பதிவு கடிதம் ஒன்று அனுப்பி வைத்துள்ளார்.
உலக முஸ்லிம் லீக் கோரிய பிரதான 7 விடயங்கள் தொடர்பில் உரிய விபரங்கள் இதுவரை இலங்கை அரசாங்கத்திடமிருந்து கிடைக்காததால் குறித்த நிதி இதுவரை விடுவிக்கப்பட்டவில்லை என முஸ்லிம் லீக் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பிட்ட 7 பிரதான விடயங்கள் வருமாறு:
1. தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை
2. பாதிக்கப்பட்டவர்களது மதங்கள்
3. பாதிக்கப்பட்டோர் மற்றும் காயங்களுக்குள்ளானோரின் பெயர்ப்பட்டியல்
4. தாக்குதல் காரணமாகவும், அது தொடர்பாகவும் சேதங்களுக்குள்ளான சொத்துகளின் பெறுமதி
5. தாக்குதலினால் விதவைகளானவர்கள் மற்றும் அநாதைகளான பிள்ளைகளின் எண்ணிக்கை
6. மேலும் விபரங்கள்
7. ஜனாதிபதி அல்லது பிரதமரின் தர்ம நிதி கணக்கிலக்கம்
குறிப்பிட்ட அமைப்பு கையளிப்பதற்கு எதிர்பார்த்த நிதியுதவி இலங்கை அரசுக்கோ, தர்ம நிறுவனத்துக்கோ அல்லது வேறு தரப்பினருக்கோ இதுவரை வழங்கப்படவில்லை.
மேலும் தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடி மற்றும் மதவிவகார அமைச்சருடனும் தொடர்பு கொண்டு தேவையான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தவுள்ளதாக உலக முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் முன்னாள் ஆளுநர் முஸம்மிலுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையிலே கடந்த சில தினங்களாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உலக முஸ்லிம் லீக் குறிப்பிட்ட நிதியினைக் கையளித்தாக இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் பொய்ப் பிரசாரம் செய்து வருவதை கவலையுடன் மறுதலிக்கிறோம். இந்ந நிதி மைத்திரிபால சிறிசேனவினால் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்த பிரசாரங்களுக்கு சமமான பிரசாரங்களை முன்னெடுத்து செய்தியை திருத்தி பிரசாரம் செய்வீர்களென எதிர்பார்க்கிறோம் என முன்னாள் ஜனாதிபதியின் ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர்
முன்னாள் ஆளுநர் முஸம்மிலுக்கு கடிதம்
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலால் பாதிக்கப்பட்டோருக்காக முஸ்லிம் லீக் வழங்குவதாக அறிவிப்புச் செய்த 5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி தாமதமாவது குறித்து மேல் மாகாண முன்னாள் ஆளுநரும் தற்போதைய வடமேல் மாகாண ஆளுநருமான ஏ.ஜே.எம். முஸம்மில் உலக முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலாளருக்கு கடந்த 24.04.2020 இல் கடிதமொன்றை எழுதியிருந்தார்.
கடிதத்துக்கு மக்கா நகரைத் தளமாகக் கொண்டியங்கும் உலக முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலாளர் கலாநிதி ஷெய்க் மொஹம்மத் பின் அப்துல் கரீம் அல்ஈசா பதில் அனுப்பியிருந்தார். அவர் தனது பதில் கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.
‘மதிப்பிற்குரிய ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் அவர்களுக்கு, உங்களது 21.0.2020 ஆம் திகதியிட்ட கடிதத்துக்கு பதில் வழங்கும் முகமாக இக் கடிதம் அனுப்பப்படுகிறது. 8 மாதங்களுக்கு முன்பு இலங்கையில் உங்களதும், ஜனாதிபதியினதும் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற உலக முஸ்லிம் லீக்கின் நல்லிணக்க மாநாட்டில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அறிவிக்கப்பட்ட நிதி இதுவரை வழங்கப்படவில்லை என உங்கள் கடிதத்தில் கவலை தெரிவித்திருந்தீர்கள்.
உலக முஸ்லிம் லீக் உரிய நிதியினை வழங்குவதற்கு சில விதிகள் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யவேண்டும் என்பதை தங்களது கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம். இந்த நிபந்தனைகளையும் விதிகளையும் நாம் ஏற்கனவே உங்களுக்கு அறிவித்திருக்கிறோம். 7 தலைப்புகளில் விபரங்களைக் கோரியிருந்தோம். ஆனால் இதுவரை அந்த அறிக்கை எமக்குச் சமர்ப்பிக்கப்படவில்லை. அறிக்கையைச் சமர்ப்பிப்பதில் உங்கள் தரப்பிலேயே காலதாமதம் ஏற்பட்டுள்ளது. உரிய நிதியினை நேரடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை நாம் துரிதப்படுத்தவுள்ளோம்.
இது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ மற்றும் மத விவகாரங்களுக்கான அமைச்சருடன் தொடர்பினைப் பேணி ஏற்பாடுகளை துரிதப்படுத்துவோம் என உலக முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலாளர் ஆளுநர் முஸம்மிலுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இனியாவது விபரம் வழங்கப்படுமா?
வாக்குறுதியளித்தபடி 5 மில்லியன் டொலர் நிதியை இலங்கைக்கு வழங்குவதற்கு உலக முஸ்லிம் லீக் கோரியுள்ள 7 தலைப்புகளிலான விபரங்களை வழங்குவது ஒன்றும் கடினமான பணியல்ல. அனைத்துமே சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள், திணைக்களங்களின் விபரக் கோவைகளில் உள்ளன. அவற்றை உரிய முறைப்படி அனுப்பி வைக்காமையே குறித்த நிதி கிடைக்கப் பெறாமைக்கான காரணமாகும். மாறாக இந் நிதியில் மோசடிகளோ தில்லு முல்லுகளோ இடம்பெறவில்லை என்பது இப்போது நிரூபணமாகியுள்ளது.
எனவேதான் முன்னாள் ஜனாதிபதி மீதோ அல்லது குறித்த மாநாட்டை முன்னின்று நடத்தியவர்கள் மீதோ சந்தேகம் கொள்வதை விடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்படி விபரங்களை உடனடியாக முஸ்லிம் லீக்கிற்கு அனுப்பி வைக்க வேண்டும். அதன் மூலம் நிதியைப் பெற்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவற்றைப் பகிர்ந்தளிக்க வேண்டும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்து ஒரு வருடம் கடந்து விட்ட போதிலும் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் அந்த வடுக்களிலிருந்து மீளவில்லை. அவர்களது வாழ்வை மீளக் கட்டியெழுப்பவே இந் நிதி பயன்படுத்தப்பட வேண்டும். உலக முஸ்லிம்கள் சார்பில் வழங்கப்படும் இந் நிதி பாதிக்கப்பட்ட மக்களை உரிய முறையில் சென்றடைவதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். – Vidivelli