நாட்டில் கொவிட்19 வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கும் முகமாக சுமார் 3 மாத காலமாக மூடப்பட்டிருந்த அரபு மத்ரஸாக்களை மீளத்திறப்பதற்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. அதற்கிணங்க மத்ரஸாக்கள் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 8 ஆம் திகதி திறக்கப்படுமென முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பி.எம். அஷ்ரப் ‘விடிவெள்ளி’க்குத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் இது தொடர்பாகத் தெரிவிக்கையில், மீளத்திறக்கப்படவுள்ள மத்ரஸாக்கள் கொவிட் 19 தொடர்பாக சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சு, முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வழங்கியுள்ள வழிகாட்டல்கள் மற்றும் சுற்று நிருபங்களைக் கட்டாயமாகப் பின்பற்றவேண்டும்.
மத்ரஸாக்களில் எதிர்வரும் 8 ஆம் திகதி இரண்டு வகுப்புகளே கல்வி நடவடிக்கைகளுக்காக ஆரம்பமாகவுள்ளன. சாதாரண தரம் உயர்தரம் மற்றும் இறுதியாண்டு எனும் வகுப்புகளில் இரண்டு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். சில மத்ரஸாக்களில் இறுதியாண்டு வகுப்புகள் மாத்திரமே இருக்கின்றன. மூன்று வகுப்புகளையும் ஆரம்பிப்பதற்கு சம்பந்தப்பட்ட மத்ரஸா நிர்வாகங்கள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணக்களத்தின் அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். ஏனைய வகுப்புக்கள் ஹஜ் பெருநாளின் பின்னரே ஆரம்பிக்கப்பட வேண்டும்.
திணைக்களம் மத்ரஸாக்கள் திறக்கப்பட்டு கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான வழிகாட்டல்களை மத்ரஸாக்களுக்கு அனுப்பிவைத்துள்ளது.
இவ்வழிகாட்டல் கையேட்டை திணைக்கள இணையதளத்திலும் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். மத்ரஸா நிர்வாகங்கள் கொவிட் 19 சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுவது கட்டாயமாகும். இது விடயத்தில் மத்ரஸா நிர்வாகங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்றார். – Vidivelli