2020 ஹஜ் : சவூதியின் தீர்மானத்திற்கு மார்க்க அறிஞர்கள் வரவேற்பு

எடுத்துக்காட்டான நடவடிக்கை என  உலக சுகாதார நிறுவனமும் பாராட்டு

0 888

எம்.ஐ.அப்துல் நஸார்

ஹஜ் யாத்திரிகர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்புக்காக சவூதி அரேபியாவைச் சேர்ந்தவர்களுக்கு மாத்திரம் சந்தர்ப்பம் வழங்கி மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மக்களை ஹஜ் செய்ய அனுமதிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு சவூதி அரேபியாவின் உயர்மட்ட இஸ்லாமிய அமைப்பு கடந்த திங்கட்கிழமை ஒப்புதல் அளித்தது. இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இவ் வருடம் ஹஜ் யாததிரிகர்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைப்பதற்கு சவூதி அரேபியா எடுத்துள்ள தீர்மானத்தை உலக சுகாதார நிறுவனமும் வரவேற்றுள்ளது.

இது ஷரியாவுக்கு இணக்கமானதும் புத்திசாலித்தனமானதுமான முடிவு என தெரிவித்துள்ள இஸ்லாமிய கற்றலின் மிக உயர்ந்த இடத்திலுள்ள அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் இமாம் ஷேக் அஹமட் அல்-தயிப், அல்லாஹ்வின் புனித இல்லத்தில் யாத்திரிகர்களின் பாதுகாப்பிற்கான அக்கறையை பிரதிபலிக்கும் அதே வேளையில் ஹஜ் யாத்திரை தொடர்வதை இந்த முடிவு காட்டுகின்றது எனவும் தெரிவித்தார்.

இஸ்லாமிய சட்டத்தின் மிக முக்கியமான பகுதியாக தனி நபர் பாதுகாப்பு காணப்படுகின்றது எனவும், இந்த நடவடிக்கை கொரோனா வைரஸின் தீவிரத்தன்மை குறித்த சவூதி அரேபியத் தலைமைத்துவத்தின் விழிப்புணர்வையும் பிரதிபலிக்கிறது எனக் குறிப்பிட்ட ஷேக் அல்-தயிப் குறிப்பாக அதன் தீவிர பரவலின் காரணமாக எல்லா இடங்களிலும் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுகின்றது எனவும் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, உலக முஸ்லிம் லீக் அதன் கீழுள்ள இஸ்லாமிய நீதித்துறை சபை மற்றும் உலக பள்ளிவாயல்களின் உச்ச சபை ஆகியவற்றின் அறிஞர்கள் சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இவ்வருட  ஹஜ்ஜுக்காக சவூதி அரசாங்கம் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லீக்கின் பொதுச் செயலாளரும் இஸ்லாமிய அறிஞர்கள் அமைப்பின் தலைவருமான ஷேக் டாக்டர் மொஹமட் பின் அப்துல் கரீம் அல்-இசா வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘யாத்திரிகர்களின் பாதுகாப்பிற்காக வழமைக்கு மாற்றமான கொரோனா வைரஸ் தொற்று நோயின் ஆபத்தான சூழ்நிலையில் ஷரீஆ மிகுந்த கவனத்துடன் கையாளப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த முடிவு எடுக்கப்படவுடனேயே இஸ்லாமிய உலகின் பல மூத்த முஃப்திகளையும் அறிஞர்களையும் லீக் தொடர்பு கொண்டதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ள அவர், உலகளாவிய தொற்று தொடர்ந்தும் ஆபத்தான நிலையில் காணப்படுவதால் சட்டத்தின் தேவை கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவ்வாறு செய்யலாம் என நாட்டின் அறிஞர்கள் உறுதிப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

யாத்திரிகர்களின் உயிர்களையும் பாதுகாப்பதற்கான இஸ்லாமிய ஷரியாவின் விதிகளும் நோக்கங்களும் சவூதி அரேபியாவின் தீர்மானத்துடன் ஒருங்கிசைவதாக எகிப்திய அறிஞரான தார் அல் இப்தா உறுதிப்படுத்தினார்.

மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பத்வா மற்றும் ஷரியா சபை இந்த முடிவைப் பாராட்டியுள்ளது. யாத்திரிகர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்காக சவூதி அரேபியா எடுத்தள்ள தீர்மானத்தை வரவேற்பதாக பாகிஸ்தான் இஸ்லாமிய அறிஞர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. அதன் தலைவர் ஷேக் தாஹிர் மஹ்மூத் அஷ்ரப் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தின் பின்னர் கடந்த செவ்வாயன்று வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் ஹஜ் தொடர்பாக சவூதி அரேபியா எடுத்துள்ள முடிவை அவுஸ்திரேலிய தேசிய இமாம்கள் சபையும் பாராட்டியது. கடந்த செவ்வாயன்று அவுஸ்திரேலிய தேசிய இமாம்கள் சபை வெளியிடப்பட்ட அறிக்கையில், முஸ்லிம்களின் நலனையும் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பதற்காகவும், உள்ளுர் மற்றும் உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் கட்டுப்படுத்துவதற்காகவும், தற்போது சவூதி அரேபியா எடுத்துள்ள முடிவு முக்கியத்துவமிக்கது எனத் தெரிவிதுள்ளது.

உலக சுகாதார நிறுவனம்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இவ் வருடம் ஹஜ் யாததிரிகர்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைப்பதற்கு சவூதி அரேபியா எடுத்துள்ள தீர்மானத்தை கடந்த புதன்கிழமை உலக சுகாதார நிறுவனம் வரவேற்றுள்ளது.

ஏற்கனவே சவூதி அரேபியாவில் வசித்து வரும் 10,000 பேர் மட்டுமே ஹஜ் கடமையை நிறைவேற்ற முடியும் என சவூதி அரேபியா அறிவித்தது. கடந்த ஆண்டு உலகெங்கிலும் இருந்து கிட்டத்தட்ட 2.5 மில்லியன் யாத்திரிகர்கள் ஹஜ் கடமையினை நிறைவேற்றினர்.

‘சில நாடுகள் தங்கள் சமூகங்களையும் பொருளாதாரங்களையும் மீண்டும் திறக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், அதிக எண்ணிக்கையிலான மக்களின் கூட்டங்களை எவ்வாறு பாதுகாப்பாக நடத்துவது என்ற கேள்வி பெருமளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது’ என உலக சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் டெட்ரோஸ் அதானம் தெரிவித்தார். இது உலகின் மிகப்பெரும் ஒன்றுகூடல்களுள் ஒன்றான வருடாந்த ஹஜ் யாத்திரைக்கு குறிப்பாகப் பொருந்துகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

ஜெனீவாவில் நடைபெற்ற கொரோனா வைரஸ் தொடர்பான நாளாந்த ஊடக சந்திப்பின் போது உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிடுகையில், யாத்திரிகர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் நோய்த்தொற்றின் அபாயத்தைக் குறைப்பதற்கும் நிறுவனத்தின் வழிகாட்டுதல்களின் பிரகாரம், இடர் மதிப்பீடு மற்றும் பல்வேறு சம்பவங்களின் பகுப்பாய்வு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவின் முடிவை உலக சுகாதார நிறுவனம் ஆதரிக்கிறது எனவும் எனவும் பொது சுகாதாரத்திற்கு முன்னுரிமையளித்து அனைத்து நாடுகளும் கடினமான தீர்மானங்களை எடுக்க வேண்டும். இது ஒரு எளிதான முடிவு அல்ல என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், மேலும் இந்த ஆண்டு தங்கள் யாத்திரை மேற்கொள்ள எதிர்பார்த்திருந்த பல முஸ்லிம்களுக்கு இது ஒரு பெரிய ஏமாற்றம் என்பதையும் நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஆரோக்கியத்திற்கு முதலிடம் கொடுத்து அனைத்து நாடுகளும் மேற்கொள்ள வேண்டிய கடினமான தெரிவுகளுக்கு இத் தீர்மானம் ஒரு எடுத்துக்காட்டாகும் எனவும் அவர் தெரிவித்தார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.