2020 இல் மட்டுப்படுத்தப்பட்ட ஹஜ்

0 884

ஏ.ஆர்.ஏ. பரீல்

தினம் இலட்சக்கணக்கில் உலலெங்குமிருந்து பக்தர்களை, யாத்திரிகர்களை உள்வாங்கிய மக்கா மாநகரும், புனித கஃபத்துல்லாவும் இன்று மனித நடமாட்டமின்றி காட்சியளிக்கின்றன.

வருடாந்தம் உலகெங்குமிருந்து சுமார் 3 மில்லியன் மக்கள் சவூதி அரேபியாவுக்கு ஹஜ் யாத்திரை மேற்கொண்டார்கள். மக்காவில் கஃபத்துல்லாவிலும் மதீனா நகரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கஸ்தலத்திலும் வணக்கங்களில் ஈடுபட்டார்கள். மனமுருகி, அழுது கண்ணீர் வடித்து துஆ பிரார்த்தனைகளில் ஈடுபட்டார்கள். ஹஜ் யாத்திரையைப் பூர்த்தி செய்து விட்டு அங்கிருந்தும் பிரிய மனமின்றி கவலையில் ஆழ்ந்தார்கள்.

ஆனால் இவ்வருடம் 3 மில்லியன் பேருக்கும் அந்தப் பாக்கியம் கிடைக்கமாட்டாது. முழு உலகையுமே கதிகலங்கச் செய்த கொவிட்-19 வைரஸ் புனித ஹஜ்ஜையும் விட்டு வைக்கவில்லை. சவூதி ஹஜ் விவகார அமைச்சு இவ்வருட ஹஜ் கடமைக்கு வெளிநாடுகளிலிருந்து எவரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையிலிருந்தும் எவருக்கும் ஹஜ் யாத்திரையை மேற்கொள்ள முடியாது. கொவிட் -19 வைரஸிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காகவே இந்த ஏற்பாடு என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ஏ.பி.எம். அஷ்ரப் அறிவித்துள்ளார்.

இவ்வருட  ஹஜ் கடமைக்கு 10000 பேருக்கே அனுமதி

இவ்வருட ஹஜ் கடமைக்கு 10 ஆயிரம் யாத்திரிகர்களே அனுமதிக்கப்படவுள்ளனர். இத்தகவலை சவூதி அரேபிய அரசு உத்தியோகபூர்வமாக கடந்த 23 ஆம் திகதி அறிவித்துள்ளது. இத்தகவல் சவூதி அரேபிய ஹஜ் விவாகாரங்களுக்கான அமைச்சர் கலாநிதி முஹம்மட் சாலே பெந்தனினால் இலங்கை அரச ஹஜ்குழுவின் தலைவர் மரீஜான் பளீலுக்கு தொலைபேசியூடாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளிலிருந்து இவ்வருடம் ஹஜ் யாத்திரிகர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பதையும் அவர் கவலையுடன் தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபியாவில் வாழும் வெளிநாட்டவர்களில் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு தொகையினருடன் சேர்த்தே ஹஜ் கடமைக்கு10 ஆயிரம் பேர் அனுமதிக்கப்படவுள்ளனர்.

எதிர்வரும் ஹஜ் யாத்திரையின் போது கொரோனா வைரஸ் (கொவிட்-19) பரவாமலிருப்பதற்காக சவூதி அரேபிய அரசு சில கடுமையான சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டிருப்பதாக சவூதி அரேபிய சுகாதார அமைச்சர் தெளபீக் அல் ராபியா தெரிவித்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை நடாத்திய செய்தியாளர் மாநாட்டிலே இத்தகவல் அவரால் தெரிவிக்கப்பட்டது. சவூதி அரேபிய சுகாதார அமைச்சும் ஹஜ் மற்றும் உம்ரா விவகாரங்களுக்கான அமைச்சும் இணைந்து இந்தச் செய்தியாளர் மாநாட்டினை நடாத்தின. இவ்வருட ஹஜ் கடமைக்காக சவூதி அரேபியாவிலிருந்து மாத்திரம் 10 ஆயிரத்துக்குட்பட்ட யாத்திரிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் சவூதி அரேபியாவுக்கு வெளியிலிருந்து எவரும் ஹஜ் யாத்திரைக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பதையும் அவர் உறுதிசெய்துள்ளார்.

ஒவ்வோர் வருடமும் சுமார் 3 மில்லியனுக்குட்பட்டோர் சவூதியில் ஹஜ் கடமைக்காக புனித நகர்களான மக்கா, மதீனாவுக்கு விஜயம் செய்கிறார்கள். இவ்வாறு மில்லியன் கணக்கில் இங்கு யாத்திரிகர்கள் ஒன்று கூடுவது கொவிட் 19 வைரஸ் தொற்று சவூதிக்குள்ளும் ஏனைய நாட்டு மக்களுக்கும் பரவலாம் என்ற காரணத்தினாலே சவூதி அரேபியாவினால் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாத்திரிகர்களுக்கு மத்தியில் கொவிட் 19 பரவுவதைத் தடுப்பதற்காக சவூதி அரேபிய சுகாதார அமைச்சும் ஹஜ் மற்றும் உம்ரா விவகாரங்களுக்கான அமைச்சு யாத்திரிகர்களின் பாதுகாப்பு கருதி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் திட்டமொன்றினைத் தயாரித்துள்ளது.

சவூதி அரேபிய ஹஜ் மற்றும் உம்ரா விவகாரங்களுக்கான அமைச்சின் தீர்மானங்கள்

* சவூதி அரேபியாவிலிருந்து மாத்திரம் 10 ஆயிரத்துக்கு உட்பட்ட தொகையினர் ஹஜ் யாத்திரைக்கு அனுமதிக்கப்படுவார்கள். உலக நாடுகளிலிருந்து எவரும் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

*யாத்திரிகர்கள் புனித தலங்களைத் தரிசிப்பதற்கு செல்வதற்கு முன்பு சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

* 65 வயதுக்கு உட்பட்டவர்களே இவ்வருட ஹஜ் கடமைக்கு அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் எவ்வித நோய்த் தொற்றும் அற்றவர்களாக இருக்க வேண்டும்.

*யாத்திரிகர்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றியதன் பின்பு சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படவேண்டும் என வேண்டப்படுகிறார்கள்.

* ஹஜ் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பு ஹஜ் தொடர்பான பணியாளர்கள மற்றும் தொண்டர்கள் சுகாதார பரிசோதனைக்கு  உட்படுத்தப்படுவார்கள்.

*அனைத்து ஹஜ் யாத்திரிகர்களினதும் சுகாதார நிலைமை தினமும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும்.

* ஹஜ் பருவகாலத்தின் போது எதிர்கொள்ளும் எவ்வித அவசர நிலைமைகளைச் சமாளிப்பதற்காக வைத்தியசாலையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

*யாத்திரிகர்களுக்கிடையே சமூக இடைவெளி கட்டாயப்படுத்தப்படவுள்ளது.

சவூதி ஹஜ் உம்ரா அமைச்சின் அறிக்கை

சவூதி அரேபிய ஹஜ் , உம்ரா அமைச்சு வெளியிட்டுள்ள  அறிக்கை பின்வருமாறு தெரிவிக்கிறது. கொரோனா வைரஸ் (கொவிட் 19) உலகெங்கும் 180 க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி பாரிய உயிர்ச் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. உலகெங்கும்  5 இலட்சத்துக்குட்பட்ட மக்கள் இவ்வைரஸ் காரணமாக இறப்புக்குள்ளாகியுள்ளனர். உலகளாவிய ரீதியில் 7 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் இந்நோய்த் தொற்றுக்கு உட்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சவூதி அரேபிய சுகாதார அமைச்சு இது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளது. இந்த பயங்கர தொற்று நோய்க்கு உரிய மருந்துகள் இல்லாமை காரணமாக நோய்த் தொற்றுக்குள்ளானவர்களிலிருந்தும் உலகளாவிய ரீதியில் ஏனையவர்களைப் பாதுகாக்க வேண்டியுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் நிறுவனங்கள் உலகளாவிய ரீதியில் மக்கள் ஒன்றுகூடும் இடங்களிலே இந்நோய் விரைவில் பரவுவதாகத் தெரிவித்துள்ளன. மக்கள் ஒன்று கூடலின் போது சமூக இடைவெளியினை அவர்களிடையே பேணுவதில் உள்ள இயலாமையே இதற்குக் காரணமாகும்.

சவூதி அரேபிய எப்போதும் ஹஜ் உம்ரா யாத்திரிகர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து வந்துள்ளது. இதனடிப்படையில் கொவிட் 19 வைரஸ் பரவல் ஆரம்பமானதிலிருந்து யாத்திரிகர்களின் பாதுகாப்புக்கான அனைத்து நடவடிக்கைகளையும் சவூதி அரேபியா மேற்கொண்டது. அச்சந்தர்ப்பத்தில் சவூதி அரேபியாவின் புனித தலங்களின் பாதுகாப்பு கருதி உம்ரா யாத்திரை தடை செய்யப்பட்டது. இத் தீர்மானத்துக்கு இஸ்லாமிய மாற்றும் சர்வதேச அமைப்புகள் ஒத்துழைப்பு வழங்கின. இதன்மூலம் கொவிட் 19  உலகளாவிய ரீதியில் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு ஒத்துழைக்க முடிந்தது. இஸ்லாத்தின் போதனைகள் மக்களை பயங்கர தொற்று நோய்களிலிருந்தும் பாதுகாக்க வேண்டும் எனத் தெரிவிக்கின்றன.

சவூதி அரேபியவுக்கு ஹஜ் உம்ராவுக்கு மில்லியின் கணக்கில் வருடாந்தம் வருகை தரும் யாத்திரிகர்களின் பாதுகாப்புக்கு சவூதி அரசு முன்னுரிமை வழங்கி வருகிறது அவர்கள் சவூதியிலிருந்து தங்கள் நாடுகளுக்கு திரும்பும் வரை பாதுகாப்பு வழங்கப்படவேண்டும்.  இதற்காகவே சவூதி அரசு இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
அனைத்து நாடுகளையும் இவ்வைரஸ் தொற்றிலிருந்தும் பாதுகாத்து அனைத்து மக்களுக்கும் அல்லாஹ் பாதுகாப்பு வழங்கவேண்டும். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவூதியில் 1300 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

சவூதி அரேபியாவில் இதுவரை 1300க்கும் மேற்பட்டோர் கொவிட் 19 வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை 1,61,000 கொவிட் 19 தொற்றாளர்கள் அங்கு அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு வருட காலமாக சவூதியில் கொவிட் 19 தொற்று அதிகரித்து வருகிறது. அங்கு சமூக இடைவெளியைப் பேணியே பள்ளிவாசல்களில் தொழுகைகளும் இடம்பெற்று வருகின்றன. மக்கள் சுகாதார வழிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறும் முகக்கவசம் அணிந்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில் இவ்வருட ஹஜ் கடமைக்கு உலக மக்கள் அனுமதிக்கப்படாமை வரவேற்கத்தக்கதாகும்.

ஹஜ் 2020- இலங்கை நிலைவரம்

இவ்வருட ஹஜ்ஜை முன்னெடுப்பதற்காக இலங்கை அரசு ஏற்கனவே ஆயத்தங்களை மேற்கொண்டிருந்தமையை நாம் அறிவோம். கலாச்சார அமைச்சராகப் பதவி வகிக்கும் பிதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வருட ஹஜ் ஏற்பாடுகளை குறைந்த கட்டணத்தில் ஹஜ் யாத்திரிகர்களுக்கு சகல வசதிகளுடன் வழங்குமாறு ஹஜ் முகவர்களுக்கு கட்டளையிட்டிருந்தார். பிரதமருக்கும் ஹஜ்குழு உறுப்பினர்களுக்கு இடையில் கடந்த பெப்ரவரி மாத நடுப்பகுதியில் இடம்பெற்ற ஹஜ் ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலில் பிரதமர் தனது தீர்மானத்தை வெளியிட்டிருந்தார்.

இதுவரை காலம் ஹஜ் முகவர்கள் இதனை ஒரு வர்த்தகமாகவே செய்து வந்திருக்கிறார்கள். ஹஜ் யாத்திரிகர்களின் நலன் பேணப்படவில்லை. ஹஜ் ஏற்பாடுகளில் பல மோசடிகள் இடம் பெற்றிருக்கின்றன. யாத்திரிகர்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள் எனத் தெரிவித்த பிரதமர், 5 இலட்சம் ரூபா கட்டணத்துக்கு ஹஜ் யாத்திரிகர்கள் இணங்க வேண்டும் என்றும் கூடுதலான வசதிகளுடன் ஹஜ் யாத்திரையை மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு 6 1/2 இலட்சம் ரூபா கட்டணத்தில் ஹஜ் பொதியொன்றினை அறிமுகப்படுத்த முடியும் என்றும் தனது தீர்மானத்தை வெளியிட்டார். இதற்கு ஹஜ் முகவர் சங்கங்கள் இணக்கம் தெரிவிக்கவில்லை.

இறுதியில் முகவர் சங்கங்களின் பிரதிநிதிகளை சந்தித்த பிரதமரே தனது இறுதித் தீர்மானத்தை வெளியிட்டார். அதற்கமைய பிரதமர் ஹஜ் கட்டணத்தை 5 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாவாக நிர்ணயித்தார்.

சவூதி அரேபிய அரசாங்கத்தினால் இவ்வருட ஹஜ்ஜுக்கு இலங்கைக்கு 3500 கோட்டா வழங்கப்பட்டது. இந்நிலையில் அரச ஹஜ் குழுவின் தலைவர் மர்ஜான் பளீல். ஹஜ் கோட்டா  மூன்று ஹஜ் பொதியின் கீழ் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார். 5 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா பொதியில் 2000 கோட்டாவும் 6 1/2 இலட்சம் ரூபா பொதியில் 1150 கோட்டாவும் 7 1/2 இலட்சம் ரூபா பொதியில் 350 கோட்டாவும் வகைப்படுத்தப்பட்டன.

இவ்வருட ஹஜ்ஜுக்காக சுமார் 4700 பேர் 25 ஆயிரம் ரூபா பதிவுக் கட்டணம் செலுத்தி தங்களைப் பதிவு செய்து கொண்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. இவர்களில் 3500 பேர் பதிவு இலக்க வரிசையின் படி ஹஜ்ஜுக்காக தெரிவுசெய்யப்பட்டிருந்தனர்.

பதிவுக்கட்டணத்தை திரும்பிப் பெறலாம்

சவூதி அரேபியாவில் வாழும் வெளிநாட்டவர்களில் மட்டுப்படுத்தப்பட்ட தொகையினர் உட்பட சவூதி அரேபியாவைச் சேர்ந்த 10000 பேரே இவ்வருடம் ஹஜ் கடமைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால் இலங்கையிலிருந்து எவரும் ஹஜ் கடமையை மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அதனால் ஹஜ் கடமைக்காக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் 25 ஆயிரம் ரூபா பதிவுக்கட்டணம் செலுத்தி தங்களைப் பதிவு செய்து கொண்டுள்ள விண்ணப்பதாரர்களில் விரும்பியோர் தாம் செலுத்திய பதிவுக் கட்டணத்தை மீளப்பெற்றுக் கொள்ளலாம் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ஏ.பி.எம். அஷ்ரப் தெரிவித்துள்ளார்.

பதிவுக் கட்டணத்தை மீளப்பெற்றுக் கொள்ள விரும்பும் ஹஜ் விண்ணப்பதாரிகள் அதற்காக கொழும்புக்கு திணைக்களத்துக்கு வருகை தரவேண்டியதில்லை.  மாவட்ட ரீதியில் பிரதான நகரில் உள்ள பெரிய பள்ளிவாசல்கள் மூலம் இதற்கான ஏற்பாடு செய்யப்படும். பதிவுக் கட்டணத்தை மீளப்பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பப் பத்திரத்தை திணைக்கத்தின் இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். மாவட்ட ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிவாசல்களிலும் பெற்றுக்கொள்ளலாம் எனவும் பணிப்பாளர் அஷ்ரப் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், பதிவுக் கட்டணத்தை மீளப் பெற்றுக் கொள்வதற்கு திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள பணம் பெற்றுக் கொண்டதற்கான ரசீதை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும். அத்தோடு தங்களது வங்கிக் கணக்கின் இலக்கம், பெயர் விபரம் அடங்கியுள்ள வங்கி புத்தகத்தின் பிரதியொன்றினையும் சமர்ப்பிக்க வேண்டும். வங்கி கணக்கு இல்லாதவர்கள் தங்கள் உறவினர்கள் அல்லது பிள்ளைகளின் வங்கிக் கணக்கின் பிரதியைச் சமர்ப்பிக்க முடியும். தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் செலுத்தப்பட்டுள்ள 25 ஆயிரம் ரூபா பதிவுக்கட்டணம் சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கில் இடப்படும் எனவும் கூறினார்.

அரச ஹஜ் குழு விளக்கம்

சவூதியில் வாழும் வெளிநாடுகளைச் சேர்ந்தோரில் ஒரு குறிப்பிட்ட தொகையினருக்கே ஹஜ் வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. இவ்வருடம் ஹஜ் கடமையை மேற்கொள்ள தீர்மானித்துள்ள சவூதியில் உள்ள இலங்கையர்கள் 65 வயதுக்குட்பட்டோர் சவூதியில் உள்ள இலங்கை தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு அரச ஹஜ் குழு தெரிவித்துள்ளது. அவ்வாறு பதிவு செய்து கொள்ளும் இலங்கையர்களில் சவூதி அரேபியா அங்கீகரிக்கும் எண்ணிக்கையானோருக்கு அரச ஹஜ்குழு அனுமதி வழங்கும் என ஹஜ் குழுவின் தலைவர் மர்ஜான் பளீல் தெரிவித்தார்.

இதே வேளை சவூதியில் வாழும் இலங்கையர்களில் பலர் தற்போது தொழிலில் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதால் அவர்கள் ஹஜ் கடமையை மேற்கொள்வதற்கு பொருளாதார ரீதியில் சலுகைகளை வழங்குமாறு ஹஜ் குழுவின் உறுப்பினர் அஹ்கம் உவைஸ் சவூதி ஹஜ், உம்ரா விவகாரங்களுக்கான அமைச்சரைக் கோரியுள்ளார்.

முகவர்கள் முற்பணங்களை திருப்பி கையளிக்கவும்

இவ்வருடம் ஹஜ் கடமையை மேற்கொள்வதற்காக ஹஜ் விண்ணப்பதாரிகள் எவரும் ஹஜ் முகவர்களுக்கு முற்பணம் செலுத்தியிருந்தால் அப்பணத்தை உடனடியாக மீளச் செலுத்துமாறு அரச ஹஜ் குழு முகவர்களைக் கோரியுள்ளது. இது தொடர்பில் ஹஜ் விண்ணப்பதாரிகளிடமிருந்து வரும் முறைப்பாடுகள் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட முகவர் நிலையங்களின் அனுமதிப் பத்திரம் ரத்துச் செய்யப்படும் என ஹஜ்குழு உறுப்பினர் அஹ்கம் உவைஸ் தெரிவித்தார்.

பிராத்திப்போம்

கொவிட் 19 கொடிவைரஸ் தொற்றிலிருந்தும் ஹஜ் யாத்திரிகர்களைப் பாதுகாப்பதற்காகவே சவூதி அரசாங்கம் உலக நாட்டு மக்களுக்கு இவ்வருட ஹஜ்ஜை தடைசெய்துள்ளது. மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் ஹஜ் கனவுகள் கலைந்துவிட்ட நிலையில் மனமுடைந்து போயுள்ளார்கள். குறிப்பாக வயோதிபர்கள் தங்களுக்கு ஹஜ் வாய்ப்பு கிட்டாமலே போய்விடுமா என்று கலங்கிப் போயிருக்கிறார்கள். அவர்கள் மறுமை வாழ்வை எதிர்பார்த்திருப்பவர்கள். இவ்வருட ஹஜ் கடமைக்காக காத்திருந்தவர்கள் அனைவருக்கும் அடுத்த வருடம் அந்த வாய்ப்பு கிடைக்க வேண்டுமென நாமும் பிராத்திப்போம். அல்லாஹ் அனைவரதும் துஆக்களை ஏற்றுக்கொள்வானாக! – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.