‘ஒபெக்’ கிலிருந்து விலகும் கத்தாரின் திடீர் அறிவிப்பு

0 969

பெற்றோலியப் பொருட்கள் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பான ‘ஒபெக்’ அமைப்பிலிருந்து விலகப்போவதாக கத்தார் அறிவித்துள்ளமையானது கச்சா எண்ணெய் சந்தையில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. அத்துடன் மத்திய கிழக்கு நாடுகளிடையே நிலவும் முறுகல் நிலையை இது மேலும் மோசமாக்கும் என்றும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

தீவிரவாதிகளுக்கு கத்தார் ஆதரவளிப்பதாக குற்றஞ்சாட்டி அந்த நாட்டுடன் சவூதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 4 நாடுகள் தூதரக உறவைத் துண்டித்தன. இதனால் மிகப்பெரிய பின்னடைவையும்,  பொருளாதார பாதிப்பையும் கத்தார் சந்தித்தது. இதன் பிறகு ரஷ்யா உள்ளிட்ட  நாடுகள் தலையிட்டு பிரச்சினையின் தீவிரத்தை தணித்தன.

இந்நிலையில், எண்ணெய் வள நாடுகளான அரபு நாடுகளை மையமாகக் கொண்டு இயங்கும் பெற்றோலியப் பொருட்கள் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பான ‘ஒபெக்கில்’ இருந்து வெளியேறப்போவதாக கத்தார் நேற்று  திடீரென அறிவித்துள்ளது.

இதுகுறித்து கத்தார் பெற்றோலியத்துறை அமைச்சர் சத் அல் காஃபி தோஹாவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘ கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் எங்கள் இடத்தை நிலை நிறுத்திக் கொள்ளவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எங்களது கச்சா எண்ணெய் உற்பத்தியை நாளொன்றுக்கு 48 இலட்சம் பரல்களில் இருந்து 65 இலட்சம் பரல்களாக அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். அதுபோலவே திரவ இயற்கை எரிவாயு உற்பத்தியை 7.7 கோடி தொன்களில் இருந்து 11 கோடி தொன்களாக உயர்த்த முடிவு செய்துள்ளோம். இனிமேல் இயற்கை எரிவாயு வர்த்தகத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளோம்’’ என்றார்.

கத்தாரின் இந்த முடிவு உலகளாவிய பெற்றோல், டீசல் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது. உலக அளவில் இயற்கை எரிவாயு உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள கத்தார் அதனை அதிகரிக்கப்போவதாகவும், கச்சா எண்ணெய் உற்பத்தியை கணிசமாக உயர்த்த போவதாக கூறியுள்ளதும் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கச்சா எண்ணெய் சந்தையை பொறுத்தவரை சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்றுள்ள ‘ஒபெக்’ தவிர, ரஷ்யா போன்ற அந்த அமைப்பில் இல்லாத நாடுகளும் கோலோச்சி வருகின்றன. ‘ஒபெக்’ நாடுகள் உற்பத்தியை குறைத்தாலும் கூட அந்த அமைப்பில் இல்லாத மற்ற நாடுகள் உற்பத்தியை சமன் செய்து வந்தன.

இந்த நிலையில் சவூதி அரேபியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே சமீபத்தில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தாகியுள்ளது. அதன்படி இருநாடுகளும் கச்சா எண்ணெய் உற்பத்தியை சந்தையின் நிலைவரத்துக்கு ஏற்ப குறைக்க ஒப்புக் கொண்டுள்ளன.

இந்த சூழலில் தான் 1960களில் இருந்து ‘ஒபெக்’ அமைப்பில் அங்கம் வகித்து வரும் கத்தார் அதில் இருந்து வெளியேறப்போவதாக அதிரடியாக அறிவித்துள்ளது. கச்சா எண்ணெய் சந்தையில் கோலோச்சும் சவூதிக்கு அச்சுறுத்தவும், அதேசமயம் தனக்கான இடத்தை நிலை நிறுத்தவும் ஈரான் பாணியில் பயணத்தை தொடங்க கத்தார் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் பல செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானின் கச்சா எண்ணெய் வணிகத்தை முடக்கும் அமெரிக்காவின் நடவடிக்கைகள் பலனளிக்காத நிலையில் ஈரானைப் போலவே கத்தாரும் தனிப்பாதையில் பயணம் செய்யுமா என்ற கேள்வியும் எழுகிறது.  அதுபோலவே கத்தார் எடுத்துள்ள முடிவு துணிச்சலானது என்றும், அரபு நாடுகளின் புறக்கணிப்புக்கு பிறகு அதன் பொருளாதார வலிமை குறையவில்லை என்பதை காட்டும் விதத்தில் இருப்பதாகவும் மத்திய கிழக்கு அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கச்சா எண்ணெய் விலையை தங்கள் கட்டுப்பாட்டில் தொடர்ந்து வைத்திருக்க ‘ஒபெக்’ நாடுகளுடன் ரஷ்யா போன்றவை இணைந்து செயல்படும் நிலையில் கத்தாரின் தனிப்பாதை எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அடுத்த சில நாட்களில் தெரிய வரும். இந்த முடிவு உலக சந்தையில் எரிபொருளின் விலையை அதிகரிக்குமாயின் இலங்கையிலும் இதன் தாக்கம் பிரதிபலிக்கும். அது நிச்சயமாக நமது நாட்டில் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதாகவே அமையும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.