கொரோனாவும் முஸ்லிம்களும் ; கற்றுக்கொண்ட பாடங்களும் ஏற்றிவைத்த சிந்தனைகளும்

0 1,383

பேராசிரியர் ஏ.ஜீ. ஹுஸைன் இஸ்மாயில்

கொரோனா தொற்று சீனாவின் ‘யூஹான்’ பிரதேசத்தில் முதலில் பரவத்துவங்கியது. சில முஸ்லிம்கள் அதனை அல்லாஹ்வின் சாபமாகப் பார்த்தனர். சிலர் ஒரு படி மேலே சென்று முஸ்லிம்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாது எனக்குறிப்பிட்டனர். கோட்டை பள்ளிவாயிலில் ஒரு மௌலவி ஜும்ஆவின் போது இதனைக் குறிப்பிட்டார். அவரது அறிவு மட்டம் அவ்வளவுதான். ஆகவே அதனைப்பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால், புத்திஜீவி எனப் பிரயல்யம் பெற்ற ஒரு மார்க்க போதகர் கூட ஜும்ஆவில் ‘‘சீனாவில் முஸ்லிம்களுக்கு அரசு புரியும் சிந்திரவதைகளை அல்லாஹ் சகித்துக் கொண்டிருந்தான். இப்போது, காலம் தாழ்த்தியாவது தண்டிக்க துவங்கிவிட்டான்” எனக்குறிப்பிட்டது எனக்கு கவலையையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது.சீனாவில் 1400 வருடங்களுக்கு முன் இஸ்லாம் அறிமுகப்படுத்தப்பட்டது.கி.பி. 620 இல் ‘சஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி)  அவர்களும் (மதீனாவில் அவுஸ்கோத்திரத்தைச் சேர்ந்தவர்) ரசூல் (ஸல்) அவர்களுக்கு பாலூட்டிய ஹலீமா நாயகியின் கணவனும் ரஷ்யாவின் தாஷ்கன்ட் ஊடாக சீனாவில் இஸ்லாத்தை அறிமுகம் செய்வதற்கு அனுப்பப்பட்டார்கள். அவர்களது இருவரினதும் அடக்கஸ்தலம் சீனாவில் குவான்சோ மாகாணத்தில் சீன அரசால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. வழிபாடு என்பதை விட நான் வரலாற்று உண்மைகளையே தெளிவுபடுத்துகிறேன். அவர்களது அடக்கஸ்தலத்தை சூழவுள்ள பகுதி இப்போது உல்லாசப் பிரியாணிகள் தரிசிக்கும் பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் மாத்திரம் பள்ளிக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படுகின்றனர். இலங்கையைச் சேர்ந்த சில முஸ்லிம் சகோதரர்கள் சில வருடங்களுக்கு முன் அங்கு சென்று வந்ததாக என்னிடம் கூறினர். தற்போது சீனாவில் 5 கோடி முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.

சீனா தற்போது ஒரு கம்யூனிச நாடு, அங்கு பெரும்பான்மையினர் பௌத்தர்கள். இருப்பினும் அரசு எந்த மதத்துக்கும் முக்கியமளிப்பதில்லை, ‘மதம்’ ஒரு தனிப்பட்ட விடயம் என்பது கம்யூனிசக் கொள்கை. இதனை அங்கு வாழும் முஸ்லிம்கள் நன்கு புரிந்து கொண்டு வாழ்கின்றனர். அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தின் கட்டுக் கோப்புகளிலிருந்து விலகிச் செல்லவில்லை. யார் நாட்டின் கொள்கைகளை அனுசரித்து புரிந்துணர்வோடு வாழ்கிறார்களோ அவர்களுக்கு அங்கு பிரச்சினையில்லை. யார் கலாசாரத்தையும், பாரம்பரியங்களையும் மார்க்கத்தின் அடிப்படைகள் என நினைத்து மிதக்க வருகின்றார்களோ அவர்களை அடக்க முயல்கின்றனர். சில பிராந்தியங்களில் அடக்குமுறை எல்லைகடந்து, முஸ்லிம்கள் சித்திரவதைக்கும் ஆளாவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. மேலை நாடுகளால் உருவாக்கப்பட்ட இஸ்லாத்தை பற்றிய அச்சம்(Islamophobia),  சிறுபான்மை முஸ்லிம்களுக்குள் இஸ்லாமிய தீவிரவாதிகளின் ஊடுருவல் என்பன தற்போது சில பிராந்தியங்களில் நிலைமையை மேலும் மோசமாக்கி வருகின்றன.

நான் மலேசிய இஸ்லாமிய விஞ்ஞான பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக கடமையாற்றியபோது எனது வீட்டுக்குப் பக்கத்தே ஒரு சீனக் குடும்பம் வாழ்ந்தது. அவர் எமது பல்கலைக்கழகத்தில் ஒரு விரிவுரையாளர் என்பதை நான் அறிந்துகொண்டேன். ஒரு நாள் அவருடன் காரில் பயணம் செய்யும் போது மேலும் சில விவரங்களைத் தெரிந்து கொண்டேன். அவரது பெயர் ‘லியோ’ (சீனா மொழிப் பெயர்). அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் குர்ஆன்– தப்சீர் கலையில் கலாநிதிப் பட்டம் பெற்றுள்ளார். அவர் ஆரம்பக் கல்வி, மார்க்கக்கல்வி என்பவற்றை சீனாவில் கற்றுக் கொண்டவர். அங்கிருந்துதான் கலாநிதிப் பட்டப் படிப்புக்காக கெய்ரோ சென்றுள்ளார். சிறிது நாட்களுக்கு பின் கெய்ரோவிலிருந்து விடுமுறைக்காக மலேசியா வந்திருந்த அவரது மகனைச் சந்தித்தேன். அவர் சீனாவில் கல்வி கற்று ‘ஹதீஸ் கலையில்’ கலாநிதிப் பட்டப் படிப்பை அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் தொடர்கிறார்.
“நீங்கள் முஸ்லிம்கள் அல்லவா. உங்கள் பெயர் ஏன் ‘சீனா மொழியில்’ உள்ளது” எனக்கேட்டேன். அழகான பொருளுடைய பெயர்களை வைத்துள்ளோம். அது அரபியில் இருக்க வேண்டும் என அவசியமில்லை. சீனா மொழி நமது நாட்டு மொழி, அப்பெயரைத்தான் நாம் பிறப்புச்சாட்சிப் பத்திரம், கல்விச்சான்றிதழ்கள், திருமணப் பதிவு என்பறவற்றில் உபயோகிக்க வேண்டும் என்பது அரசின் சட்டம். பிறந்தவுடன் எனக்கு ‘நூஹ்’ எனப் பெயர்வைத்தார்கள். ஆனால், பிறப்பு பதிவுக்காக சீன மொழி பெயர் உபயோகிக்கப்பட்டது. இப்போது சீன மொழியில் உள்ள எமது பெயரைப் பாவிக்கின்றோம் எனக்குறிப்பிட்டார். அக்குடும்பம் அல்லாஹ்வுக்கு பயந்து வாழ்கிறது. உடை, ஒழுக்கம் என்பன நல்ல முஸ்லிம்கள் என்பதைக் காட்டின. சுன்னத்து நோன்புகளைக் கூட நோற்கின்றனர். எப்போதும்  குர்ஆன் ஓதிக் கொண்டிருப்பர். அவர்கள் வெளித்தோற்றத்தில் அராபிய கலாசாரத்தையோ, பாகிஸ்தான், கலாசாரத்தையோ நுழைக்கவில்லை. தனித்துவத்துடன் ‘சீனா முஸ்லிம்கள்’ என்ற பெருமையோடு வாழ்கின்றனர்.

‘கொரோனா’ சீனாவுக்கு அல்லாஹ்வின் சாபம் எனக்கூறியோர் ஒன்றை மறந்து விட்டனர். ‘அல்லாஹ்’ ரஹ்மான் எல்லா உயிர்களையும் படைத்து பரிபாலிப்பவன். அவன் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமானவன் அல்ல. அவன் நாடினால் ஒருவனுக்கு நோயைக் கொடுப்பான் நாடினால் குணப்படுத்துவான் அவனது நாட்டப்படியே எல்லா உயிர்களது இறப்பும் தீர்மானிக்கப்படும். இதுதான் எமது அகீதா. இதனை மறந்து நாம் உணர்ச்சிவசப்பட்டுவிட்டோம். கொரோனா இலங்கையில் முஸ்லிம்கள் மத்தியில் பரவத்துவங்கிய பின்தான் ‘அல்லாஹ்’ ரஹ்மான் என்பதை விளங்கிக்கொண்டோம்.

ஒருபுறம் ‘கொரோனா’ பரவும்போது அடுத்தவர்களைக் குறை கூறினோம். மறுபுறம் பெருமையடித்தோம். கொரோனா பரவுவதை தடுப்பதற்கு முகமூடி அணியும் படி அரசும் உலக சுகாதார ஸ்தாபனமும் அறிவுறுத்தியபோது, முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்திரையுடன் அதனை ஒப்பிட்டு , முகத்திரை அணிவதை தடுத்தோர் இப்போது அணியும் படி கூறுகின்றனர் என முகநூல்களில் குறிப்பிட்டனர். கொரோனா பெண்களை விட ஆண்களையே அதிகம் தாக்குவதாயும், அதிகமான ஆண்களே உயிரிழப்பதாயும் தரவுகள் காட்டுகின்றன. ஆகவே ஆண்களுக்கு முகத்திரையணியும்படி இஸ்லாம் ஏன் கட்டளையிடவில்லை என எம்மிடம் இப்போது திருப்பிக் கேட்கிறார்கள். ஆகவே முஸ்லிம்களுக்கு செயல்களை ஒப்பீடு செய்யும் சிந்தனை மட்டுமே உள்ளது. ஒவ்வொரு செயலுக்குமான நோக்கங்களை புரிந்து கொள்ளும்  ‘காரண காரிய’ அறிவு போதவில்லை என்பதையே இது காட்டுகிறது.

ஆசிய நாடுகளில் முஸ்லிம்கள் கொரோனாவை பரப்புகிறார்கள் என்ற குற்றச்சாட்டு இப்போது முன்வைக்கப்படுகிறது. முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வை வளர்க்கும் சில நாடுகள், மத இயக்கங்கள், ஊடகங்கள்  இக்கருத்தை வளர்த்து வருகின்றன. இது ஒரு தவறான குற்றச்சாட்டு. இருப்பினும் அவர்களது குற்றச்சாட்டுகளுக்கு சில பின்னணி நிகழ்வுகள் காரணமாகின்றன. இதற்கு முஸ்லிம்கள் பொறுப்புக்கூற வேண்டும். மலேசியாவில் கொரோனா வேகமாக பரவுவதற்கு  அங்கு நடைபெற்ற ஒரு சர்வதேச முஸ்லிம் ஒன்று கூடல் தான் காரணம் என்பதை மலேசியா சுகாதார அமைச்சர் குறிப்பிடிருந்தார். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,000 பேர் மலேசிய தலைநகரில் ஒன்று கூடினர். இவர்களில் பலருக்கு கொரோனா தொற்று காணப்பட்டது. சிலர் தலைமறைவாகினர். அது அந்நாட்டை அச்சத்துக்குள்ளாக்கியது. அதே போல் சீனாவில் கொரோனா பரவும் சமகாலத்தில் இந்தியா, இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளிலும் முஸ்லிம் சமய மாநாடுகள் நடந்துள்ளன. இலங்கையிலும் கூட புத்தளம், அக்குரண போன்ற ஊர்களில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றுள்ளோர் இந்த சமய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நாடு திரும்பியோராவர். ஏனைய சமூகங்களைச் சேர்ந்தோரும் பெரிய ஒன்று கூடல்களை கொரோனா காலத்தில் நடத்தினர்கள் என்பது ஒரு பொது உண்மை. ஆனால் நாம் அடுத்தவர்கள் விட்ட தவறைச் சுட்டிக்காட்டி நாம் செய்த தவறை மறைக்க முயலக்கூடாது. சவூதி அரேபியா உம்ரா, ஹஜ் என்பவற்றுக்கு  வருகை தருவதற்கு தடை விதித்த போது நாமும் இவ்வாறான மாநாடுகளை தவிர்த்திருக்கலாம்.

கலாநிதி சாகிர் நாயிக்கின் இலங்கை விஜயத்தின்  பின் மியன்மார் (பர்மா) சமய தீவிரவாதி ‘ அஷின் விராது’ இலங்கைக்கு வரவழைக்கப்பட்டு மகத்தான வரவேற்பு கொடுக்கப்பட்டது. பல்லினம், பல மதங்கள் வாழும் இலங்கைக்கு இஸ்லாத்தின் உயர்வுபற்றி மட்டும் பேசுகின்ற சாகிர் நாயிக்கை வரவழைத்தவர்களின் உள்நோக்கம் புரியவில்லை. அவர் மதங்களிடையே பிளவுகளை ஏற்படுத்த முயல்கிறார் என்ற குற்றச் சாட்டு இந்தியா, மலேசியா போன்ற நாடுகளில் வலுவடையும் ஒரு சூழலில் அவரது இலங்கை வருகை, விராதுவின் இலங்கை வருகைக்கு தூபமிட்டது. தற்போது இலங்கை, மியன்மார், தாய்லாந்து போன்ற நாடுகளில் உள்ள பௌத்த தீவிரவாதிகள் முஸ்லிம்களுக்கெதிரான வலையமைப்பை ஏற்படுத்தியுள்ளதாயும் இந்தியாவின் ஹிந்து மதத் தீவிர வாதிகளும் இதனோடு இணைந்துள்ளதாயும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இவர்களது முஸ்லிம் எதிர்ப்பு செயல்பாடுகளுக்கு  இஸ்ரேல் உட்பட சில ஐரோப்பிய நாடுகளின் அனுசரணை கிடைக்கிறது. அவர்கள் எப்போதும் முஸ்லிம்களில் குறைகளைத் தேடி, படம் பிடித்துக்காட்டும் முயற்சியில் இறங்கியுள்ளனர். ஆகவே முஸ்லிமகள் மிக அவதானமாக நடக்க வேண்டியுள்ளது.

இப்போது முஸ்லிம்கள் மத்தியில் எழுப்ப வேண்டிய முக்கிய வினா, ஊரடங்குச்சட்டம் நீக்கப்பட்டதும், நாம் பழைய வரம்புக்குள் பிடிவாதமாக இருந்து கொண்டு நமது செயல்களை தொடரப்போகின்றோமா? தஃவா, தர்பியத் என்பவற்றை மேற்கொள்வதற்கு மாற்றுவழிகளை அறிமுகம் செய்யப் போகிறோமா? என்பதே.

இதுவரை நாம் பின்பற்றிய செயல் முறைகள் நம்மை  அவமானத்துக்கும் , அழிவுக்கும் இட்டுச் சென்றுள்ளன. ஆகவே சமூக மறுமலர்ச்சிக்காக புதிய நடைமுறைகளைப் பின்பற்றுவது காலத்தின் தேவையாகிவிட்டது.

கொரோனா தொற்று வந்தபின் தான் நாம் சுத்தம் பற்றியும் தொற்று நோய் தடுப்பு பற்றியும் அதிகம் கதைக்கின்றோம் அதற்கு முன்  தொழுகை, நோன்பு, ஹஜ் என்பவற்றை ஓர் அமலாக வற்புறுத்தினர். மனிதனின் சுகவாழ்வுக்கும், சமூக வாழ்வுக்கும் அந்த அமல்களால் ஏற்படும் நன்மைகள் பற்றி விளக்கப்படவில்லை. 1400 ஆண்டுகளாக இதனை மறைத்து வைத்தோம். இந்த அமல்களின் சமூகப் பெறுமானம், தனிநபர் பயன்பாடுகள் நூல்களில் மட்டும் எழுதப்பட்டிருந்தன. தஃவாவில் காணப்பட்டட பிழையான அணுகுமுறையே இதற்கான காரணமாகும்.
சுத்தம் ஈமானில் பாதி என்பதைக்கூட நாம் பெரிதாக எடைபோடவில்லை. நம் வீடுகளை சகோதர இனங்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். பள்ளிவாயில்கள், மத்ரசாக்கள், முஸ்லிம் பாடசாலைகளின் உட்சுத்தம் பற்றி அவதானியுங்கள்.

நான் திடீரென ஒரு மத்ரசாவை தரிசித்தேன். காலை உணவு உண்ட பின் எச்சில்கள் அப்படியே இருந்தன. அங்கு சில பாத்திரங்களும் இருந்தன. அவற்றில் ஈக்கள் மொய்த்தன. மாணவர்கள் இந்த இடத்தில் உணவு உட்கொண்ட பின் சுத்தம் செய்வதில்லையா என அங்கிருந்த ஒரு முதர்ரிசிடம் கேட்டேன் ‘மாணவர்கள் நேரத்துக்கு பாடத்துக்கு போகவேண்டியுள்ளது. சமையல் காரர் அவருக்கு நேரம் கிடைக்கும் போது துப்புரவு செய்வார்’’ என அவர் பதிலளித்தார். மாணவர்களும் ஆசிரியர்களும் உபயோகிக்கும் குளியலறை, கழிவறையிலிருந்து துர்நாற்றம் வீசியது.  அதிகமான பள்ளிவாயில்களில் உட்பிரவேசிக்கும் இடத்திற்குப் பக்கத்தே சிறுநீர் கழிக்கும் இடங்களை அமைத்துள்ளனர். பள்ளிக்குள் நுழைய முன்பே துர்நாற்றம் வீசுகிறது. மலேசியாவில் சில பள்ளிவாயில்களில் கழிவறைகள் இல்லை. மிகத் தூரத்தே, ஒதுக்குப்புறத்தில் அதனைக் கட்டி வைத்துள்ளனர்.

நான் ஹஜ் கடமை நிறைவேற்றச் சென்றபோது ஆசிய நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் ‘சுத்தம்’ என்பதை எவ்வாறு கடைப்பிடிக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டேன்.
சிலர் கழிவறைகளுக்குச் சென்ற பாதணிகளை ஓர் உறையுள்போடாது, வெறுமனே அடுத்தவர்கள் ‘சுஜுது’ செய்யும் இடங்களில் வைக்கின்றனர். ஹஜ் வழிகாட்டிகளில், பயான்களில் எப்படி ஹஜ் செய்வது என்பது பற்றி மட்டும் விளக்கமளிக்கப்படுகிறது. ஹஜ்ஜுக்குச் செல்வோர் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் பற்றி எதுவும் சொல்லிக் கொடுப்பதில்லை.

இனியாவது நமது பயான்களில் ஓர் அம்சமாக அதிகமான மக்கள் கூடும் இடங்களில் நடந்து கொள்ளவேண்டிய ஒழுக்கமுறைகள், சுகாதார நடைமுறைகள் பற்றிச் சேர்த்துக் கொள்வோமா? ‘மினாவில்’ ஐரோப்பிய முஸ்லிம்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிக்கு ‘அஸர்’ தொழுகைக்காகச் சென்றேன். அவர்களது கழிவறை , குளியலறை என்பன மிகச் சுத்தமாக இருந்தன. இப்பண்புகள் ஐரோப்பிய முஸ்லிம்கள் மேலைத்தேய வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொண்டார்களா? அல்லது இஸ்லாம் இப்பண்புகளை வளர்த்ததா? என்பது ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.
இப்போது புனித ரமழான் வந்து போனது. ஊடரடங்கு சட்டம் காரணமாக எமது அமல்களை சிறப்பாகச் செய்து கொள்ள முடியவில்லையே என நாம் கவலைப்படுகிறோம்  இக்கவலை இயல்பானது. ஆனால் இந்த ஊரடங்குச் சட்டம் இனிவரும் ரமழான் காலங்களில் பின்பற்ற வேண்டிய நல்லொழுக்கங்களைக் கற்றுத்தந்துள்ளது.

மலேசியாவில் வாடகைக் காரொன்றில் பிரயாணம் செய்து கொண்டிருந்தேன். அதன் சாரதி ’ஷீக்’ மதத்தைச் சேர்ந்த ஓர் இந்தியர். அவர் திடீரென என்னிடத்தில் ‘நாளை முஸ்லிம்களுக்கு நோன்பு ஆரம்பமாகிறது. இனி வரும் முப்பது நாட்களுக்கு எங்களுக்கு  தூங்கமுடியாது’’ எனக்கவலை தெரிவித்தார். ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் என அவரிடம் கேட்டேன். நாங்கள் தொடர் மாடி வீடுகளில் வாழ்கிறோம். அங்கு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். அவர்கள் நோன்பு துpறப்பதற்கு வாகனங்களை நடுத்தெருவில் வைத்துவிட்டுச் செல்வார்கள் பாதை எங்கும் ஒரே கூட்டம். போக்குவரத்து நெரிசல். முஸ்லிம்கள் நோன்பு திறந்த பின் வரும் வரை நாங்கள் காத்திருப்போம்.  இரவில் பள்ளிக்குச் செல்வதற்கு (தராவீஹ் தொழுகைக்காக) மின்தூக்கிக்கு (Lift)  பக்கத்தே ஒரே சண்டை. தராவீஹ் முடிந்து வரும் போது பெரிய சத்தம். தொலைக்காட்சி, வானொலி என்பன உச்ச ஒலியில் முடுக்கிவிடப்பட்டிருக்கும். இடையிடையே நடு இரவில் வெடிகளையும் கொழுத்துகின்றனர்’’ என பதில் கிடைத்தது.

இலங்கையிலும் இதே நிலைதான். மார்க்கக் கடமைகளைச் செய்வது தான் நமது நோக்கம். அதன் மூலம் அடுத்தவர்களுக்கு தொந்தரவு கொடுக்கிறோம் என்பதில் எமக்கு அக்கறையில்லை. ஆகவே ஊரடங்குச் சட்டம் நமக்கு மத வெறியை தவிர்த்து, அடுத்தவர்களுக்கு தொந்தரவு செய்யாது அமல் செய்யும் பக்குவத்தை இப்போது ஏற்படுத்தியுள்ளது. சென்ற சில மாதங்களுக்கு முன் தெஹிவளையில் உள்ள ஒரு பள்ளிவாயிலில் ஜும்மா பிரசங்கத்தில் மௌலவி பின்வருமாறு குறிப்பிட்டார். “நீங்கள் முடியுமான வரை பள்ளிவாயில்களுக்கு நடந்து வாருங்கள். வாகனங்களை பாதை நடுவே நிறுத்திவிட்டு ஜும்மாவுக்கு வருவதைவிட, நீங்கள் ஜும்மாவுக்கு (ஒரு பர்ளான கடமை) வராமல் இருப்பது அல்லாஹ்விடத்தில் மேலானது’ என குறிப்பிட்டார்.

நமது உலமாக்களில் இவ்வாறான ‘புத்திஜீவிகளும்’ இருக்கிறார்கள் என்பது குறித்து நாம் பெருமையடைகிறோம். அவர்களின் எண்ணிக்கை பெருக வேண்டும் என்பது தான் எமது ஒரே எதிர்பார்ப்பு.

கொரோனா முஸ்லிம் அறிஞர்களுக்கு இஸ்லாத்தை பூரணமாக அறிமுகம் செய்ய வேண்டியதன் அவசியத்தைக் கற்றுக் கொடுத்துள்ளது. உலமாக்கள் இப்போது பள்ளியில் இஃதிகாப் இருப்பது போலவே, வீடுகளில் தங்கி அமல் செய்வது, குடும்ப விடயங்களில் அக்கறை காட்டுவது, அந்நியர்களுக்கு முடியுமான வரை உதவி செய்வது பற்றியும், சுகாதாரப் பழக்கங்களை கடைப்பிடிப்பதன் அவசியம் பற்றியும் நல்ல விளக்கம் கொடுக்கின்றனர். முஸ்லிம்கள் மார்க்க சட்டங்களை பேணுவது போலவே அரசாங்க சட்டங்களை மதித்து, அதற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் எனவும் வற்புறுத்துகின்றனர். இங்கு எமது சிந்தனை போக்கில் கொரோனாவால் நல்ல தொரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்ந்தால் நிச்சயம் நமது சமூகத்துக்கு ‘விடிவு’ கிடைக்கும்.

புத்தளம், கற்பிட்டியில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை எனது நண்பர் ஒருவர் (இவர் உலக சர்வதேச அமைப்பொன்றில் கடமையாற்றியவர்) எனக்கு டெலிபோனில் அறிவித்தார்.
அங்கு எமது சகோதர முஸ்லிம் ஒருவர் முகமூடியணியாமல் பாதையில் சென்றுள்ளார். ஏன் முகமூடி அணியவில்லை எனப் படையினர் அவரிடம் விசாரித்தனர். “நான் தாடி வைத்துள்ளேன். தாடி வளர்த்தால் நோய்க்கிருமிகள் தாக்காது” என அவர் விளக்கம் கொடுத்துள்ளார். படையினர் அவரது மேலங்கியில் ஒரு பகுதியைக் கொண்டு வலுக்கட்டாயமாக முகமூடி அணிவித்து அனுப்பினர். தாடி வைப்பது சுன்னத்து. அதே நேரம் நாட்டின் சட்டத்தை மதிப்பது கட்டாயமானது என்ற ஒரு நல்ல படிப்பினையை இச்சம்பவம் கற்றுக் கொடுத்திருக்கும். இவ்வாறு கற்றுக் கொண்ட பாடங்களை நாம் மறந்து விடக்கூடாது.

ஏற்றி வைத்த சிந்தனைகள்:

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் எம் முஸ்லிம்;கள் இலங்கையின் சனத்தொகை விகிதாசாரத்தைப் பொறுத்தவரை மிக அதிகம். கொழும்பிலும் ஏனைய பிரதேசங்களில் உள்ள முஸ்லிம்களுள் மிக வறிய மக்களே தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உண்ண உணவில்லை. சிறு அறைகளில் குடிசைகளில் பலர் வாழ்கின்றனர். பிள்ளைகளின்  அநேகர் பாடசாலைக் கல்வியை தொடர்வதில்லை. முஸ்லிம் பாடசாலைகளில் போதிய வசதிகள் இல்லை. அவர்கள் தரக்குறைவான பாடசாலைகளில் கல்வி பயில்கின்றனர். வசதிபடைத்தவர்கள் தமது பிள்ளைகளை தரம் வாய்ந்த அரச பாடசாலைக்கும் சர்வதேச பாடசாலைகளுக்கும் அனுப்புகின்றனர்.

அதே நேரம் கிராமங்களில் பள்ளிவாசல்கள் பெருகிக்கொண்டிருக்கின்றன. அதிகமாக பள்ளிகள் கட்டுவதிலும் இருக்கின்ற பள்ளிகளை நவீன மயப்படுத்துவதிலும் பணக்காரர்கள் கூடிய அக்கறை காட்டுகின்றனர். தத்தமது கிராமங்களின் அவல நிலையை கண்டும் காணாது வேறு கிராமங்களுக்கும், வெளியூர்களுக்கும் சென்று மார்க்கப் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். மாறாக கிராமப் புறங்களிலும் நகரங்களிலும் சேரிகளிலும் செறிந்து வாழும் மக்களின் மேம்பாட்டுக்கான எந்த திட்டங்களும் நம்மிடம் இல்லை. முஸ்லிம்களில்  பெரும்பான்மை மக்களிடையே நிலவும், வறுமை, படிப்பின்மை சுகாதாரம், குறைந்த சூழல், ஒழுக்க விழுமியங்களில் வீழ்ச்சி என்பன எதிர்காலத்தில் இவ்வாறான தொற்றுவியாதிகள் அதிகம் பரவக்கூடிய ஆபத்தை உருவாக்கும்.

இலங்கை முஸ்லிம் சமூகத்தை மிதக்கும் பனிக்கட்டி (ICE BURG) எனலாம். அதன் மேற்புறத்தே உள்ள சிறு பகுதி மட்டும் வெளியே தென்படுகிறது. பெரும்பகுதி நீருள் மறைந்துள்ளது. இதனை அவதானித்துவிட்டு முஸ்லிம் சமூகம் வர்த்தக சமூகம், பணக்காரர் சமூகம் என ஏனையோர் எடைபோடுகின்றனர். ஆனால், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களில்; சனத்தொகை விகிதாசாரத்தைப் பொறுத்து முஸ்லிம்கள் அதிகமாக உள்ளனர். மாதாந்தம் 30,000 ரூபாய்க்கு குறைந்த குடும்ப வருமானம் பெறுவோர் (மிஸ்கீன்கள்) வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்பவர்களாக வரையறுக்கப்படுகின்றனர். மாதாந்தம் 20,000 ரூபாவுக்கு குறைந்த குடும்ப வருமானம் பெறுவோர் மிக வசதியற்றவர்களாக (பக்கீர்) கருதப்படுகின்றனர். 2019 கணக்கீட்டின் படி தலா வருமானம் மாதம் 5000  பெறுவோர். அதாவது தாய், தகப்பன் உட்பட இரு பிள்ளைகளுடைய வருமானம் கணக்கீடு செய்யப்பட்டே குடும்பத்துக்கு 30,000 என நிர்ணயிக்கப்பட்டது. முஸ்லிம்களைப் பொருத்தவரை குடும்பத்தில் ஒருவர், இருவர் மட்டுமே தொழில் செய்கின்றனர். மற்றும் குடும்ப பருமன் ஆறுக்கு மேல் செல்லும்போது வறுமை மேலும் அதிகரிக்கும். ஆகவே முஸ்லிம்கள் மத்தியில் நிலவும் வறுமை நிலை பற்றிய ஓர் ஆய்வு திடுக்கிடும் தகவல்களை நமக்கு வெளிப்படுத்தும். அல்லாஹ் மிகவும் விரும்பும் ஒரு அமலாக இவ்வாறான ஆய்வுகளுக்காக பணத்தை செலவு செய்வதை குறிப்பிடலாம்.

சமூக முன்னேற்றத்துக்காவும், அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவும் நாம் பின்வரும் வினாக்களுக்கு விடை காண வேண்டியுள்ளது.

1. ஒரு முறைக்கு மேல் ஹஜ் செய்வது அவசியமா?

2. ஒரு முறை ஹஜ் செய்தவர் திரும்பவும் ஒரு முறை உம்ராவுக்குச் செல்லவேண்டுமா? (மாநாடுகளில் கலந்து கொள்வோர், சவூதியில் தொழில் புரிவோர் இதற்கு விதிவிலக்காக அமையலாம்)

3. ரமழானில் இறுதிப் பகுதியில் நோன்பு பிடிக்க மக்கா செல்ல வேண்டுமா?

4. பணம் செலவு செய்து கொண்டு,  வெளியூர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் சமயப் பிரசாரத்துக்காக செல்ல வேண்டுமா?

5. பள்ளிவாயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமா? பள்ளிவாயில்கள் இல்லாத சில பின்தங்கிய கிராமங்களில் பள்ளிவாயில்கள் புதிதாக அமைக்கப்படுவது அவசியம் தான். ஆனால் ஏட்டிக்குப் போட்டியாக இயக்கங்களை வளர்க்கும் நோக்குடன் பள்ளிவாயில்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது அவசியமா?

6. நான் திருகோணமலை மாவட்டத்தில் ஒரு கிராமத்துக்குச் சென்றேன். பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தோருக்கு ஏழு பள்ளிகள் இருந்தன. நன்கு சலவைக்கற்கள் பதித்த பள்ளிகள். வெளிநாட்டு உதவி மூலம்தான் இதைச் செய்திருக்கிறார்கள். ஆனால் அங்கு ஒரே ஒரு பாடசாலை. அது கவனிப்பாரற்றுக்கிடந்தது. களுத்துறை மாவட்டத்தில் ஒரு முஸ்லிம் பிரதேசத்தில் 25 பள்ளிகள் உள்ளன. ஒரு பள்ளிக்கு ஐவேளைத் தொழுகைக்காக நால்வர் மட்டும் தூர இடங்களிலிருந்து மோட்டார் சைக்கிளில் வந்து தொழுது விட்டுச் செல்கின்றனர். இவ்வாறு பள்ளிகளுக்குச் செலவு செய்யும் பணத்தை கிராமத்தில் பாடசாலைகளுக்கும், வறுமை ஒழிப்புக்கும், கிராமத்தில் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கும் செலவு செய்ய முடியாதா? வழிபாட்டுத்தலங்களை, தொழுகைக்காக மட்டும்  உபயோகிக்காது சமூக அபிவிருத்தி நிலையங்களாக மாற்ற முடியாதா?

மேற்கூறிய விடயங்கள் பற்றி முஸ்லிம் சிவில் அமைப்புகள் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். உலமாக்கள் பக்கம் சாராமல் பணக்காரர்களுக்கும், இயக்கங்களைச் சேர்ந்தோருக்கும் தற்போதைய இலங்கையில் நிலவும் சூழலில் எது சிறந்தது என்பதை அடித்துக் கூறவேண்டும். முஸ்லிம் புத்திஜீவிகள் வறுமை ஒழிப்பு, படிப்பறிவின்மை, சுகாதார சீர்கேடுகள், தொழில் வாய்ப்புகளை உருவாக்கல், சமூகத்தில் கரைந்து செல்லும் ஒழுக்க விழுமியங்கள், நல்ல பண்புகளுக்கு உயிரூட்டல், அதேபோல் நாட்டின் சட்டங்களை மதிக்கும் மனப்பான்மை, நாட்டுப்பற்று என்பவற்றை வளர்க்கும் திட்டங்களை வகுக்க வேண்டும்.

உலகம் இப்போது பொருளாதார நன்மைகளை (வியாபார நோக்கு) மட்டும் நோக்காகக் கொண்டே தனது செயல் திட்டங்களை நகர்த்துவதாயும், இதன் தீயவிளைவுகள் பற்றியும் மேலைத்தேய கல்விமான்களே கவலைதெரிவித்து வருகின்றனர். மானுட விழுமியங்கள், ஒழுக்கம், சமூகநிதி என்பவற்றை பொருளாதார திட்டங்கள் புறக்கணிப்பதாக இவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆகவே, 21ஆம் நூற்றாண்டு கல்வியில் ஒழுக்கம், மானுட விழுமியங்கள் முக்கிய பகுதியாக அமையவேண்டும் என பெரும்பாலான  கல்விமான்கள் ஏற்றுக் கொள்கின்றனர். இலங்கையின் எதிர்கால கல்வித்திட்டங்களில் இவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது. ஆகவே நமது மதரசாக்களின்  கல்வித்திட்டங்களில் இவை நிச்சயம் உள்வாங்கப்படவேண்டும்.
தேசிய கல்வி நீரோட்டத்தில் இணைந்து இஸ்லாமிய ஒழுக்கம், மானுட விழுமியங்களை அறிமுகம் செய்ய முடியும். ஆழமான விரிந்த சிந்தனையுடைய பரந்த அனுபவமுடைய மார்க்க அறிஞர்களதும், முஸ்லிம் புத்திஜீவிகளதும் பங்களிப்பு இந்த இலக்குகளை அடைவதற்கு மிக அவசியம். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.