“சிந்தனை ரீதியான ஜிஹாத்” என்பது தவறான கருத்து

அல்குர்ஆன் திறந்த கல்லூரி பணிப்பாளர் உஸ்தாத் மன்சூர்

0 1,206

சிங்களத்தில்: ரஸிக்க குணவர்தன
தமிழில்: அஜாஸ் முஹம்மத்

கடந்த சில நாட்களுக்கு முன்பாக கலபொடஅத்தே ஞானசார தேரர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடுசெய்து, அதில் ஸஹ்ரானைப் போன்ற இன்னொருவரும் தீவிரவாத சிந்தனா ரீதியான ஜிஹாத் ஒன்றைச் செய்து வருகிறார், அவர்தான் உஸ்தாத் மன்சூர் என்றும் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லியிருந்தார். அதேபோல உஸ்தாத் மன்சூர் பேருவளைப் பிரதேசத்தில் J.N.I.C – (Jamiah Naleemiah Islamic Center) எனும் பெயரில் ஒரு நிறுவனத்தை நடத்தி வருவதாகவும் அதனூடாக உஸ்தாத் மன்சூர் தனது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

இது குறித்து நாம் மேற்கொண்ட தேடலில் உஸ்தாத் மன்சூர் என்றொருவர் இருக்கிறார் என்றும் ஆனால் அவர் J.N.I.C – (Jamiah Naleemiah Islamic Center) எனும் பெயரில் எந்தவொரு நிறுவனத்தையும் நடாத்திச் செல்லவில்லை என்பதையும் கண்டறிந்தோம். ஆயினும் பேருவளைப் பிரதேசத்தில் N.I.I.S – (Naleemiah Institute of Islamic Studies) எனும் நிறுவனம் ஒன்று இருப்பதையும் உஸ்தாத் மன்சூர் அதில் கல்வி கற்றுள்ளார் என்பதையும் அறிந்துகொண்டோம்.

இருந்தாலும் இது தொடர்பாக விசாரித்துத் தெரிந்துகொள்வதற்காக உஸ்தாத் மன்சூர் அவர்களைச் சந்தித்தோம். நாம் மேற்கொண்ட உரையாடல் கீழே உள்ளது. (இவ்வுரையாடல், மிஷ்காத் ஆய்வு நிறுவனத்தின் மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியோடுதான் நிகழ்ந்தது)

கேள்வி: நீங்கள் யார் ? முதலில் உங்களைப் பற்றியதோர் அறிமுகம் செய்யலாமா..?

பதில்: எனது பெயர் உஸ்தாத் எம்.ஏ.எம். மன்சூர். 1958 ஆம் ஆண்டு அக்குரணை பங்கொல்லாமடையில் பிறந்தேன். ஆரம்பக் கல்வி முதல் சாதாரண தரம் வரை அக்குரணை மத்திய கல்லூரியில் கற்ற நான் அதன் பின்னர் ஜாமிஆ நளீமிய்யாவில் இணைந்தேன். அங்குள்ள கற்கை நெறியைப் பூர்த்தி செய்த பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்றேன். பின்னர் சுமார் இருபதாண்டு காலம் ஜாமிஆ நளீமிய்யாவில் பணிபுரிந்தேன். அப்போது அங்கே கல்வித்துறைத் தலைவராகவும் செயற்பட்டேன்.
அதன்பின்னர் அங்கிருந்து வெளியேறி 2009ஆம் ஆண்டு அக்குரணையில் Al Quran Open College எனும் நிறுவனத்தைத் தொடங்கினேன். அதனைத் தொடர்ந்து கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பாக கொழும்பு மிஷ்காத் ஆய்வகத்தை ஆரம்பித்தேன்.

கேள்வி: நளீமிய்யா கல்வி நிறுவனம் எத்தகையது ?

பதில்: நளீமிய்யா கல்வி நிறுவனம் 1973 இல் தொடங்கப்பட்டது. அங்கு இரு பிரிவுகள் உள்ளன. ஒன்று இலங்கையின் தேசிய பொதுக் கல்வித்திட்டப் பாடவிதானம். மற்றையது, இஸ்லாமிய கற்கைகள் தொடர்பானது. அதேபோன்று இலங்கையின் தேசியக் கல்வித்திட்டப் பாடவிதானங்கள் அங்கு கற்பிக்கப்பட்டாலும் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் நடாத்தப்படும் பட்டப் படிப்புப் பரீட்சைகளுக்கே மாணவர்கள் தோற்ற வேண்டும். நளீம் ஹாஜியார் எனும் கொடைவள்ளலின் ஆதரவிலேயே இது ஆரம்பிக்கப்பட்டது. அது ஆரம்பிக்கப்பட்டபோது நான் அக்குரணையில் சாதாரண தரம் கற்றுக் கொண்டிருந்தேன்.

கேள்வி: தற்போது உங்களுக்கு அந்த நிறுவனத்துடன் ஏதாவது தொடர்புகள் உண்டா?

பதில்:  இவ்வாண்டு பெப்ரவரி மாதம் தொடக்கம் வாரத்தில் ஒரு நாள் மாத்திரம் வெளிவாரி விரிவுரையாளராகச் சென்று வருகிறேன்.

கேள்வி: நளீமிய்யா நிறுவனத்தில் “இஹ்வா முஸ்லிம்” மார்க்கம் கற்பிக்கப்படுவதாக ஞானசார தேரர் குற்றஞ்சாட்டுகிறாரே…?

பதில்: இல்லை. அங்குள்ள பாடத்திட்டத்தை எடுத்துப் பார்த்தால் அங்கே அவ்வாறான எதுவும் கற்பிக்கப்படுவதில்லை என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

கேள்வி:   அதேபோன்று அந்த ஊடகவியலாளர் சந்திப்பில், ஸஹ்ரான் “இஹ்வா முஸ்லிம்” சிந்தனைப் போக்கையே பின்பற்றினார் என்றும் ஞானசார தேரர் குறிப்பிட்டார். அது உண்மையா ?

பதில்: இல்லை, இல்லை. அவர் பின்பற்றியது தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் சிந்தனைப் போக்காகும். ஸஹ்ரானின் உரைகளைக் கேட்டாலே அதைப் புரிந்துகொள்ளலாம். அதைத்தான் வஹாபிஸம் என்கிறார்கள். அதுதான் தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தின் சிந்தனைப் போக்கு.

கேள்வி: அல்குர்ஆன் ஓப்பன் கொலேஜ் என்பது யாது ?

பதில்: நான் அதைத் தொடங்கியபோது அதை ஒரு திறந்த பல்கலைக்கழக முறையில்தான் நடாத்தத் திட்டமிட்டிருந்தேன். எனினும் அது வெற்றியளிக்கவில்லை. பின்னர் திருக்குர்ஆனை வெளிப்படையாகக் கற்கவும் கற்றுக்கொடுக்கவுமான ஓர் இடமாக அதை மாற்ற வேண்டுமென நினைத்தோம். அதற்கான மாணவர்கள் ஆகக்குறைந்த பட்சம் உயர்தரம் சித்தியெய்திய அல்லது அதைவிடவும் படித்த சட்டத்தரணிகள், மருத்துவர்கள், ஆசிரியர்களே அந்தக் கற்கை நெறிக்குத் தெரிவுசெய்யப்பட்டனர். அதேபோல அந்த நிறுவனத்தின் இன்னொரு பகுதி வாடகைக்கு விடப்பட்டுள்ளது. அதில் ஆங்கிலம் போன்ற பல்வேறு பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.

கேள்வி: இந்த நிறுவனத்தில் கல்வியைப் பெற்றுக்கொள்ள ஏதாவது கட்டணங்கள் செலுத்த வேண்டுமா ?

பதில்: நாம் ஆரம்பத்தில் இப் பாடநெறிக்கான ஒரு கட்டணத்தை அறவிட்டே தொடங்கினாலும் காலப்போக்கில் அது வெற்றியளிக்கவில்லை. எனவே தற்போது முடியுமான ஒரு தொகையைச் செலுத்திக் கற்றுக் கொள்ளலாம் எனச் சொல்லி இருக்கிறோம்.

கேள்வி: மிஷ்காத் ஆய்வு நிறுவனத்தில் என்ன செய்கிறீர்கள்..?

பதில்: இங்கு குர்ஆன் பற்றிய ஆய்வுகள் நிகழ்கின்றன. குறிப்பாக, முஸ்லிம் அல்லாத சமூகங்களுடன் நாம் எவ்வாறு உறவாடுவது, இலங்கைக்குப் பொருத்தமான இஸ்லாமிய சிந்தனைப் போக்கு என்ன என்பன பற்றிய ஆய்வுகளிலும் அவை குறித்த நூல்களை வெளியிடுவதிலும் மிஷ்காத் நிறுவனம் கவனம் செலுத்துகிறது.  “அல்குர்ஆன் வன்முறைக்குத் தூண்டுகிறதா ?” எனும் நூல், அல்குர்ஆனின் முதலாம், இரண்டாம் அத்தியாயங்களுக்கான விளக்கவுரை நூல்கள் போன்றவை நாம் வெளியிட்ட நூல்களாகும்.

கேள்வி: இந்த நிறுவனத்தை நடாத்திச் செல்ல மத்திய கிழக்கில் அல்லது வேறு நாடுகளில் உள்ள ஏதாவது அமைப்புகளிடமிருந்து உங்களுக்கு நிதியுதவிகள் கிடைக்கின்றனவா ?

பதில்: இல்லை. எங்களுக்கு எந்தவொரு வெளி நாட்டிலிருந்தும் நிதி வருவதில்லை. நாம் ஏற்கனவே சொன்னதுபோல உள்நாட்டில் நம்மோடு தொடர்புடையோருடைய ஒத்துழைப்புகள் மூலமாக மட்டுமே நமது பணிகள் அனைத்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கேள்வி: அதாவது, இது தொடர்பாக ஏதாவது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டால் இந்த நிறுவனம் சம்பந்தப்பட்ட எல்லா ஆவணங்களையும் கணக்கு விபரங்களையும் முன்வைக்கத் தயாராக இருக்கிறீர்கள் ?

பதில்: ஆம், நிச்சயமாக ! ஸஹ்ரானின் குண்டு வெடிப்புகளைத் தொடர்ந்து புலனாய்வுத் துறையினர் இங்கும் வந்து எல்லாவற்றையும் விசாரித்தனர். தேடுதல் நடத்தினர். எங்கள் ஆவணங்கள் அனைத்தையும் கொண்டுசென்றனர். ஆனாலும் இதுவரை அது தொடர்பில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் வரவில்லை.

கேள்வி: இஸ்லாத்தில் பல்வேறு வகையான பிரிவுகளும் நம்பிக்கை மரபுகளும்  இருப்பதாக நாம் அறிகிறோம். அவற்றுள் நீங்கள் எந்தப் பிரிவினைச் சார்ந்தவர்கள் ?

பதில்: நீங்கள் குறிப்பிட்டதைப் போல முஸ்லிம் சமூகத்தை இரண்டு பிரிவாக அவதானிக்கலாம். ஒன்று சட்ட ரீதியான சிந்தனைப் பிரிவுகள். அடுத்தது, சாதாரண கருத்து வேறுபாடுகள் அடிப்படையிலான பிரிவுகள். இவ்விரு வகையான பிரிவுகளுக்குள்ளும் நாம் அடங்க மாட்டோம்.
இலங்கைச் சூழலுக்கு ஏற்ற வகையிலான ஒரு சிறுபான்மை முஸ்லிம் சமூகமாக எவ்வாறு வாழ்வது என்பது குறித்த தெளிவுபடுத்தலையே நாம் மேற்கொண்டு வருகிறோம்.

கேள்வி: “இலங்கைக்குப் பொருத்தமான ஒரு முஸ்லிம் சிறுபான்மை வாழ்வொழுங்கு” என்றால் என்ன ? சற்று தெளிவுபடுத்துங்கள் !

பதில்: பொது வாழ்வில் ஈடுபடும்போது முஸ்லிம் அல்லாதவர்களுடனான தொடர்புகளை – பேணிக்கொள்வது எப்படி ? அவர்களுடன் வாழும் போது எங்களது மத அனுஷ்டானங்களை எவ்வாறு வடிவமைத்துக் கொள்வது ? போன்ற விடயங்களை நாம் விளக்க வேண்டும்.

உதாரணமாக, எங்கள் மார்க்கத்தில் ‘உழ்ஹிய்யா’ என்றொரு விடயம் உள்ளது. அது மாடறுப்பு என்று பொதுவாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. மாடுகள் அறுக்கப்படுவதை விரும்பாத இன்னொரு பெரும்பான்மைச் சமூகத்தினரின் உணர்வுகள் பாதிக்கப்படாதவாறு இந்த உழ்ஹிய்யாவை எவ்வாறு நிறைவேற்றலாம் என்பதற்கான ஒரு வழிகாட்டலை நாம் முன்வைத்துள்ளோம். அதாவது விரும்பியோர் மாட்டை அறுத்து இறைச்சியைப் பங்கீடு செய்யலாம். அப்படிச் செய்வது பொருத்தமில்லாத இடங்களில் அந்த மாட்டின் பெறுமதிக்கான பணத்தை சமூக நலனுக்காக பங்கீடு செய்யுங்கள் எனச் சொல்லி உள்ளோம். உண்மையில் இவ்வாறு மாட்டின் பெறுமதிக்கான பணத்தைப் பங்கீடு செய்வதன் மூலமாக பெரும்பான்மை சமூகங்களது உணர்வுகள் பாதிக்கப்படுவதை தவிர்த்து விடலாம்.

அதேபோல, கறுப்பிலான ஆடைகளை அணிதல், முகம் மூடி ஆடை அணிதல் இலங்கைக்குப் பொருத்தமற்றவை என்றும் சொல்லியுள்ளோம். இஸ்லாத்தில் உள்ள விவகாரங்களை இலங்கைக்கு ஏற்ற விதத்தில் எடுத்துச் சொல்வதையே நாம் செய்து வருகிறோம்.

பொதுவாக ஆடைகள் என்பன கலாசாரத்தோடு சம்பந்தப்பட்டவையே. இஸ்லாத்திற்கென்று தனியானதொரு கலாசாரம் இல்லை. இறுதி இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் அணிந்த அந்த ஆடைகள் அரேபிய நாட்டுக்கு தனித்துவமான ஆடைகளாகும். அந்த நாட்டுக்கு உரிய ஆடைகளாகும். அதாவது பெரிய அளவிலான ஆடைகளை அணிந்து பெரிய தாடிகளையும் கொண்டிருந்தனர். வெளிப்படையாகப் பார்த்து அதுதான் முஸ்லிம்களுக்கான ஆடைக்கலாசாரம் என நாம் சொல்வதில்லை. இலங்கைக்கு ஏற்ற விதத்திலாகவே நாம் ஆடை அணிய வேண்டும் என்கிறோம்.

உதாரணமாக, பெண்கள் தங்கள் மணிக்கட்டு மற்றும் முகம் தவிர்ந்த உடலின் ஏனைய பகுதிகளை மறைக்க வேண்டுமென இஸ்லாத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆயினும் அது எவ்வாறு, எந்த விதமாக மறைக்கப்பட வேண்டுமென இஸ்லாத்தில் சொல்லப்பட்டில்லை. அதை ஒவ்வொருவரும் தாம் வாழும் நாடுகளுக்கு ஏற்ப ஒழுங்கமைத்துக் கொள்ளலாம்.

கேள்வி: ஸஹ்ரானைப் போலவே நீங்களும் போதித்து வருவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஸஹ்ரானின் போதனைகளுக்கு எதிராக நீங்கள் ஏதாவது செய்திருக்கிறீர்களா ?

பதில்: ஸஹ்ரானின் போதனைகளுக்கு எதிராக நாம் நிறையவே செயற்பட்டுள்ளோம். அதற்கான நல்லதொரு உதாரணம்தான் “அல்குர்ஆன் வன்முறைக்குத் தூண்டுகிறதா ?” எனும் தலைப்பில் நாம் வெளியிட்டுள்ள நூல்.

கேள்வி: நீங்கள் ஒரு சிந்தனா ரீதியான ஜிஹாதில் ஈடுபட்டிருப்பதாக அண்மையில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஞானசார தேரர் சொல்லியுள்ளார். இது தொடர்பில் உங்களது பதில் என்ன ?

பதில்: சிந்தனா ரீதியான ஜிஹாத் என்பதனூடாக அவர் எதைக் கருதுகிறார் என்று உண்மையில் எங்களுக்குப் புரியவில்லை. உதாரணமாக, முஸ்லிம் அல்லாத ஒருவருக்குப் பலாத்காரமாக இஸ்லாத்தைத் திணிப்பதைத்தான் அவர் கருதுகிறாரெனில், அப்படியொரு கருத்தை அவர் சொல்லி இருந்தால் அது முற்றிலும் தவறானதாகும்.

சிந்தனா ரீதியான ஜிஹாத் என்பதன் மூலம் நாம் கருதுவது என்னவென்றால் – சிங்களச் சமூகத்தோடு முரண்பட்டுக்கொள்வதையோ, அவர்களுக்குப் பலாத்காரமாக இஸ்லாத்தைத் திணிப்பதையோ அல்ல. மாறாக, முஸ்லிம் அல்லாத சமூகத்தாரோடு முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளாத விதமாக எவ்வாறு சுமுகமாக வாழ்வது என்பதைப் பற்றிச் சிந்திப்பதேயாகும்.

அதேபோன்று, இந்த பெளத்த பிக்கு அவர்களுக்கு நாம் மிகவும் அன்புடன் சொல்லிக் கொள்வதாவது; இவ்வாறு செயற்படாமல் எங்களுடன் நேரடியாகப் பேசிக் கலந்தாலோசித்து, எங்களிடமுள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டி, நாமெல்லோரும் ஒருமித்துச் செயற்பட்டு முன்செல்வதுதான் மிகச்சிறிய நடைமுறை என நாம் நம்புகிறோம்.

அதேபோன்று குறித்த பிக்கு அவர்கள் நளீமிய்யாவுக்குச் சென்று அங்கு கற்பிக்கப்படும் பாடத்திட்டத்தை ஆய்வுசெய்து அதிலுள்ள குறைபாடுகளைச் சுட்டிக் காட்டினால் அவர்களும் தங்களை மாற்றிக்கொள்ள முடியும். சமூகங்களுக்கிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தாமல் அழகிய கலந்துரையாடல்கள் மூலமாக இவ்விவகாரங்களைத் தீர்த்துக்கொண்டு முன்செல்வதே மிகவும் நல்லதென நாம் நினைக்கிறோம் ! – Vidivelli

நன்றி : ராவய, 14.06.2020

Leave A Reply

Your email address will not be published.