குற்றச்சாட்டுக்களுக்கு உரிய இடத்தில் பதில் வழங்குவது அவசியம்

0 943

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று ஒரு வருடத்திற்கு மேலாகின்ற போதிலும் அது தொடர்பான விசாரணைகள் இன்னும் முடிவடையவில்லை. புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகள் ஒருபுறம், நீதிமன்ற விசாரணைகள் ஒருபுறம், ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் ஒருபுறம் என விசாரணைகள் தொடர்ந்த வண்ணமேயுள்ளன.

அந்த வகையில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் கவனத்தை ஈர்ப்பதாக உள்ளன. இவ்விசாரணைகளில் சாட்சியமளிப்பவர்களால் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளமையே இதற்குக் காரணமாகும்.
இதில் பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர், தனது வழக்கமான பாணியில் குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசியுள்ளார். இலங்கையில் உள்ள முன்னணி முஸ்லிம் அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் மீது அவர் பயங்கரவாத, அடிப்படைவாத குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளார். அவரது குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஊடகங்கள் வாயிலாக மக்களைச் சென்றடைந்துள்ளன.

இந் நிலையில் இவற்றுக்கு முறையாக பதிலளிக்க வேண்டியது முஸ்லிம் சமூகத்தின் கடமையாகும். அந்த வகையில் ஞானசார தேரரின் குற்றச்சாட்டுக்களைச் சந்தித்துள்ள முஸ்லிம் அமைப்புகள், நிறுவனங்கள் அதே ஜனாதிபதி ஆணைக்குழு முன் சென்று தமது தரப்பு நியாயங்களை முன்வைக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.
மேற்படி குற்றச்சாட்டுக்களுக்கு தமிழ் மொழி ஊடகங்களில் பதில் வழங்குவதாலோ தமிழில் அறிக்கைகளை எழுதி வெளியிடுவதாலோ எதுவும் நடந்துவிடப் போவதில்லை. சிங்கள மொழியில் உரிய விளக்கங்கள் முன்வைக்கப்பட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

கடந்த அரசாங்க காலத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக் குழு முன்னிலையிலும் இதேபோன்று பல குற்றச்சாட்டுக்கள் முஸ்லிம்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டன. இறுதியில் அந்தக் குழுவின் அறிக்கை, முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான பல சிபாரிசுகளை உள்ளடக்கியதாக வெளிவந்ததை நாம் மறந்துவிட முடியாது. அக் குழுவில் முஸ்லிம் பிரதிநிதிகள் அங்கம் வகித்தும் கூட அவ்வறிக்கை முஸ்லிம்களுக்கு பாதகமாகவே அமைந்திருந்தது.

அந்த வகையில் தற்போது விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் முஸ்லிம் சமூகம் சார்பில் சம்பந்தப்பட்ட தரப்புகள் ஆஜராகி வாக்குமூலமளிக்க வேண்டும். ஆணைக்குழு உறுப்பினர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம். தேவைப்படின் முஸ்லிம் சட்டத்தரணிகளையும் துணைக்கு அழைத்துச் செல்வது சாட்சியங்களை தெளிவாக வழங்க உதவியாக அமையும்.

அதேபோன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளை தண்டிப்போம் எனக் கூறியே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆட்சியமைத்து 7 மாதங்கள் கடந்துவிட்ட போதிலும் இதுவரை எவரும் தண்டிக்கப்படவில்லை. விசாரணைகள் துரிதமடையவில்லை. வெறுமனே இந்த விவகாரத்தை வைத்து, பெரும்பான்மை மக்களைத் தூண்டி, அடுத்து வரும் பொதுத் தேர்தலையும் வெற்றி கொள்வதற்கே அரசாங்கம் முயற்சிப்பது தெளிவாக விளங்குகிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் இலங்கையில் வாழுகின்ற சகல சமூகங்களுமே கடும் பாதிப்புக்களை சந்தித்துள்ளன. முஸ்லிம் சமூகமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதையே முஸ்லிம்களும் விரும்புகின்றனர். இத் தாக்குதலின் பின்னர் விசாரணைகளுக்கு முஸ்லிம் சமூகம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகிறது. இதனை பாதுகாப்புத் துறையினரே பகிரங்கமாக தெரிவித்துள்ளனர்.

ஆக, முஸ்லிம் சமூகத்திலிருந்து கிளம்பிய ஒரு சிறு குழு செய்த தாக்குதலை வைத்துக் கொண்டு, விசாரணைகள் என்ற பெயரில் ஒட்டுமொத்த முஸ்லிம்களையுமே தீவிரவாதிகளாக சித்தரிக்கின்ற போக்கு ஆரோக்கியமானதல்ல.
எனவேதான் விசாரணைகளை துரிதப்படுத்தி குற்றவாளிகளை தண்டிப்பதுடன் அநியாயமாக கைது செய்யப்பட்டுள்ள நிரபராதிகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.