இலங்கை முஸ்லிம்கள் மீது பாரபட்சங்கள் அதிகரிப்பு

மத நம்பிக்கைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளருக்கு சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கை

0 869

2013 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத வன்முறைகளும் பாரபட்சங்களும் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை, கொவிட் 19 வைரஸ் பரவல் காலத்திலும் இவ்வாறான பாரபட்சங்கள் தொடர்ந்ததாகவும் தெரிவித்துள்ளது.

மத நம்பிக்கைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளருக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே சர்வதேச மன்னிப்புச் சபை இதனைச் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் பாரபட்சங்களின் போக்கு எனும் தலைப்பில் அமைந்துள்ள குறித்த அறிக்கையில், 2013 ஆம் ஆண்டு முதல் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் மற்றும் பாரபட்சமான சம்பவங்களையும் பட்டியலிட்டுக் காட்டியுள்ளது.

இதற்கு மேலதிகமாக, கொவிட் 19 அச்சுறுத்தல் காலத்தில் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்க அனுமதிக்காது, எரித்தமை தொடர்பிலும் இலங்கையில் முஸ்லிம்களின் சனத்தொகை அதிகமுள்ள பகுதிகளிலேயே வைரஸ் பரவல் அச்சுறுத்தல் அதிகமாக உள்ளதாக இன ரீதியான நோக்கில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிக்கை வழங்கியமை ஆகியவற்றையும் குறிப்பிட்டுக்காட்டியுள்ளது.

மேலும் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மற்றும் வலைத்தள பதிவாளர் ரம்ஸி ராஸிக் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளமை குறித்து தாம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபை தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

ஐசிசிபிஆர் சட்டத்தை தான்தோன்றித்தனமாக பயன்படுத்துவதன் மூலம் முஸ்லிம்கள் இலக்குவைக்கப்பட்டதற்கு மேலதிகமாக எழுத்தாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களைக் கைதுசெய்து தடுத்துவைக்க முடியுமான நிலை காணப்படுவதாகவும் அந்த அமைப்பு  தெரிவித்துள்ளது.

இந்த அரசாங்கம் பதவிக்கு வந்து ஒரு வருட காலமாக முன்னரே இலங்கை முஸ்லிம் சமூகம்  அடிக்கடி துன்புறுத்தல்களுக்கும் பழிவாங்கல்களுக்கும் உள்ளாக்கப்படுகின்றமை குறித்து சர்வதேச மன்னிப்பு சபை கவலை வெளியிட்டுள்ளது.

முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடருமாயின், இலங்கையினுள் மற்றுமொரு  சிறுபான்மைக் குழு ஓரங்கட்டப்படும் அவதானம் இருப்பதாகவும் அந்நிறுவனம் விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளது.  – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.