முன்கூட்டி பதிவு செய்யும் 50 பேர் மாத்திரமே ஜும்ஆவில் பங்கேற்கலாம் : வக்பு சபை

0 2,448

முன்கூட்டியே தம்மைப் பதிவு செய்து கொள்ளும் 50 பேருக்கு மாத்திரமே ஜும்ஆ தொழுகையில் பங்கேற்க அனுமதி வழங்க வேண்டும் என வக்பு சபையும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் பள்ளிவாசல்கள் நிர்வாகங்களை அறிவுறுத்தியுள்ளன.

அத்துடன் கொவிட் 19 காலத்தில் ஜும்ஆ தொழுகையை நடாத்த விரும்பும் ஜும்ஆப் பள்ளிவாசலாக பதிவு செய்யப்படாத பள்ளிவாசல்கள், தக்கியாக்கள், ஷாவியாக்கள் அதற்கான அனுமதியை திணைக்களத்திடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் குறித்த அனுமதியானது தற்காலிகமானதே என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ஏ.பி.எம். அஷ்ரப் இன்று வெளியிட்டுள்ள அறிவித்தலின் முழு விபரம் வருமாறு:

வணக்கஸ்தலங்களில்‌ ஒரே நேரத்தில்‌ அதிகூடியது 50 நபர்களை மட்டும்‌ அனுமதிப்பது எனும்‌ அரசாங்கத்தின்‌ வரையறையை கருத்திற்‌ கொண்டு பின்வரும்‌ நிபந்தனைகளுக்குட்பட்டவாறு வக்பு சபையில்‌ ஜும்‌ஆப்‌ பள்ளிவாசலாக பதிவு செய்யப்படாத பள்ளிவாசல்கள்‌ / தக்கியாக்கள்‌ / ஷாவியாக்களில்‌ ஜும்‌ஆ நடாத்துவதற்கு அனுமதியளிப்பது என இலங்கை வக்பு சபை தீர்மானித்துள்ளது.

1. மேலே குறிப்பிடப்பட்ட அனுமதியானது. அவ்வாறு வழங்கப்படுமிடத்து கொவிட்‌ – 19
தொற்று நோய்க்‌ காலத்துக்கு மாத்திரம்‌ மற்றும்‌ / அல்லது வக்பு சபையின்‌ மறு
அறிவித்தல்‌ வரையில்‌ செல்லுபடியாகும்‌. அதன்‌ பின்னர்‌ அத்தகைய அனுமதி
வலுவற்றதாக / மீளப்‌ பெற்றுக்‌ கொள்ளப்பட்டதாகக்‌ கருதப்படும்‌.

2. ஜும்‌ஆ நடாத்துவதற்கு விரும்புகிற அத்தகைய பள்ளிவாசல்கள்‌ / தக்கியாக்கள்‌ /
ஷாவியாக்களின்‌ நம்பிக்கையாளர்கள்‌ / நம்பிக்கைப்‌ பொறுப்பாளர்கள்‌ முறையாக
பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்‌ படிவத்தை திணைக்களத்தின்‌ மாவட்ட
உத்தியோகத்தர்களிடம்‌ ஒப்படைத்து அனுமதி பெறல்‌ வேண்டும்‌ (விண்ணப்பப்‌ படிவத்தை திணைக்கள இணையத்தளத்தில் பெறலாம்)

3. வக்பு சபையின்‌ மறு அறிவித்தலின்‌ போது மற்றும்‌ / அல்லது கொவிட்‌ – 19
தொற்றுநோய்‌ தொடர்பான கட்டுப்பாடுகள்‌ தளர்த்தப்படுகின்ற போது ஜும்‌ஆத்‌ தொழுகை உடனடியாக நிறுத்தப்படும்‌ என குறித்த நம்பிக்கையாளர்கள்/‌ நம்பிக்கைப்‌
பொறுப்பாளர்கள்‌ குறிப்பிட்ட விண்ணப்பப்‌ படிவத்திவூடாக உறுதிமொழி அளித்தல்‌
வேண்டும்‌.

4. இறுதி அனுமதி வக்பு சபையினால்‌ வழங்கப்பட வேண்டும்‌ எனும்‌
நிபந்தனைக்குட்பட்டவாறு, குறிப்பிட்ட விண்ணப்பம்‌ தொடர்பாக திருப்தியடையும்‌ பட்சத்தில்‌ திணைக்களத்தின்‌ மாவட்ட உத்தியோகத்தர்‌ தற்காலிக அனுமதியை வழங்குவார்‌.

ஜும்ஆ தொழுகையை முகாமை செய்தல்/‌ ஒழுங்கு செய்தல்

வணக்கஸ்தலங்களில்‌ ஒரே நேரத்தில்‌ கூடுவதற்கு அதி கூடியது 50 நபர்களுக்கு மாத்திரம்‌ அனுமதி வழங்கல்‌ எனும்‌ அரசாங்கத்தின்‌ வரையறை பேணப்படுவதை உறுதி செய்யுமுகமாக ஜும்‌ஆத்‌ தொழுகையை நடாத்துவதற்கு விரும்புகின்ற நம்பிக்கையாளர்கள்‌ / நம்பிக்கைப்‌ பொறுப்பாளர்கள்‌ பின்வரும்‌ ஏற்பாடுகளை செய்துகொள்ள வேண்டும்‌ என இலங்கை வக்பு சபை பணிக்கின்றது.

1. ஜும்‌ஆத்‌ தொழுவதற்கு விரும்புகிற எல்லா நபர்களினதும்‌ பெயர்‌, முகவரி, தேசிய
அடையாள அட்டை இலக்கம்‌ மற்றும்‌ தொலைபேசி இலக்கம்‌ ஆகியவற்றை
உள்ளடக்கியதாக ஒரு பதிவேட்டை ஆரம்பித்து பேணி வரவேண்டும்‌.

2. நாளை 18.06.2020 வியாழக்கிழமை ழுஹர்‌ தொழுகையுடன்‌ குறித்த பதிவேடு வெள்ளிக்‌ கிழமை ஜும்‌ஆத்‌ தொழுகையில்‌ கலந்து கொள்ளும்‌ 50 நபர்களைப்‌ பதிவு செய்வதற்காக திறக்கப்படல்‌ வேண்டும்‌. எதுவித பாரபட்சமும்‌ காட்டவோ வேறு எந்த முறைகேடான நடவடிக்கைகளில்‌ ஈடுபடுவதோ முற்றாக தவிர்க்கப்படல்‌ வேண்டும்‌.

3. முதலில்‌ வருபவர்‌ முதலிடம்‌ பெறுவார்‌ எனும்‌ அடிப்படையில்‌ அத்தகைய பதிவு
செய்யப்படல்‌ வேண்டும்‌.

4. அவ்வாறு பதிவு செய்யும்‌ 50 நபர்களுக்கு ஜும்‌ஆத்‌ தொழுகையில்‌ கலந்து
கொள்வதற்கான நுழைவுச்‌ சீட்டாக பயன்படுத்தக்கூடிய டோக்கன்கள்‌ (எண்கள்‌)
வழங்கப்படல்‌ வேண்டும்‌.

5. குறித்த டோக்கன்களோடு வரும்‌ 50 நபர்கள்‌ மாத்திரம்‌ பள்ளிவாசலினுள்‌
அனுமதிக்கப்படுவார்கள்‌ என்றும்‌ ஏனையோர்‌ பள்ளிவாசலுக்கு வருவதிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும்‌ எனவும்‌ நம்பிக்கையாளர்களினால்‌ / நம்பிக்கைப்‌
பொறுப்பாளர்களினால்‌ தெளிவான அறிவித்தல்கள்‌ செய்யப்படல்‌ வேண்டும்‌.

6. ஜும்‌ஆத்‌ தொழுகை நேரத்தில்‌ 50 நபர்களை விட அதிகமானோருக்கு பள்ளிவாசலினுள்‌ இடமளிக்காமல்‌ இருப்பது நம்பிக்கையாளர்கள்‌ / நம்பிக்கைப்‌ பொறுப்பாளர்களின்‌ பொறுப்பாகும்‌. – Vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.