கூட்டுத் தொழுகை மீண்டும் தொடங்கும் வரை பள்ளிவாயல்கள் மூடப்பட்டிருக்க வேண்டும்

இங்கிலாந்து முஸ்லிம் தலைவர்கள் கோரிக்கை

0 1,015

எம்.ஐ.அப்துல் நஸார்

‘தனிப்பட்ட பிரார்த்தனைகளுக்காக’ வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படலாம் என அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும் இங்கிலாந்தில் உள்ள முஸ்லிம் தலைவர்கள் பள்ளிவாயல்கள் மூடப்பட்டே இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேவாலயங்கள், பள்ளிவாயல்கள் மற்றும் ஜெப ஆலயங்களை மீண்டும் திறக்கும் திட்டங்கள் இமாம்களால் விமர்சிக்கப்பட்டுள்ளன. பள்ளிவாயல்களில் தொழுகைகள் பெரும்பாலும் கூட்டாகவே நடைபெறுகின்றன என்பதை அவர்கள் கருத்திலெடுக்கத் தவறிவிட்டனர் எனத் தெரிவித்துள்ளனர்.

வழிபாட்டுத் தலங்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தனிப்பட்ட பிரார்த்தனைகள் எதிர்வரும் ஜூன் 15 தொடக்கம்  நடைபெறலாம், ஆனால் திருமணங்களுக்கும் பிற குழு நடவடிக்கைகளுக்கும் ஜூலை 4 ஆந் திகதி வரையாவது தடை விதிக்கப்படும்.

பள்ளிவாயல்களில் கூட்டுத் தொழுகையின் இயல்பு காரணமாக இந்த அணுகுமுறையை பின்பற்றுவது ‘அதிக சவால்களை கொண்டதாக இருக்கும்’ என பள்ளிவாயல்கள் மற்றும் இமாம்களின் தேசிய ஆலோசனைக் குழுவின் (மினாப்) தலைவர் இமாம் காரி அசிம், எச்சரித்தார்.

பள்ளிவாயல்களில் கூட்டுத் தொழுகையினை நடத்துமளவிற்கு நிலைமை பாதுகாப்பானதாகும் வரை மீள அவற்றைத் திறக்க வேண்டாம் எனவும் இமாம் அசிம் கேட்டுக்கொண்டுள்ளார்.

பள்ளிவாயல்களுக்கும் வேறு சில வழிபாட்டுத் தலங்களுக்கும் இடையிலான அடிப்படை வேறுபாடு என்னவென்றால், பள்ளிவாயல்கள் கூட்டுத் தொழுகைக்காக முதன்மையாகவும் முக்கியமாகவும் பயன்படுத்தப்படுகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தனியாகத் தொழும் செயற்பாட்டினை எங்கும் மேற்கொள்ள முடியும் குறிப்பாக வீடுகளில் தொழுது கொள்ளலாம். அதன் பிரகாரம் ஜூன் 15 ஆந் திகதி பள்ளிவாயல்களைத் திறப்பது பள்ளிவாயல்கள் மற்றும் இமாம்களுக்கு அதிக சவால்களை ஏற்படுத்தும், ஏனெனில் சமூகத்தின் எதிர்பார்ப்பு கூட்டு தொழுகையினை மீண்டும் ஆரம்பிப்பதாகவே இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

பிரிட்டன் முஸ்லீம் கவுன்சில் (எம்.சி.பி) அரசாங்கத்தின் திட்டத்தின் நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பு தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளது.

பள்ளிவாயல்களில் முதன்மையாக கூட்டுத் தொழுகைகளே இடம்பெறுகின்றன, எனவே தற்போதைய புதிய விதிமுறைகளை எவ்வாறு நடைமுறைப்படுத்த முடியும் என்பது குறித்து பள்ளிவாயல் தலைவர்களிடம் நிச்சயமற்ற தன்மையும் கவலையும் காணப்படுகின்றது என பிரிட்டன் முஸ்லீம் கவுன்சிலின் பொதுச் செயலாளர் ஹருன் கான் தெரிவித்தார்.

பிரிட்டன் முஸ்லீம் கவுன்சிலினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் அண்மைய திட்டங்களைச் சுற்றியுள்ள ‘குறிப்பிடத்தக்க நிச்சயமற்ற தன்மை’ தொடர்பில் எச்சரிக்கப்பட்டுள்ளதுடன், ‘அனைவரின் பாதுகாப்பையும் நல்வாழ்வையும் உறுதிப்படுத்த, திறம்பட திட்டமிட தெளிவானதும் வழிகாட்டுதல்களை வழங்குமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வழிபாட்டுத் தலங்களை மீண்டும் திறக்க பிரித்தானிய அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளது. ‘ஆறுதல், சாந்தம், ஸ்திரத்தன்மை மற்றும் கௌரவம் குடிகொண்ட இடங்கள் நம் நாட்டின் பொது நன்மைக்கு தெளிவான பங்களிப்பை வழங்குவதாக சமூகங்களின் செயலாளர் ரொபர்ட் ஜென்ரிக் தெரிவித்தார். தொற்றுநோயின் நிச்சயமற்ற தன்மைகளை தொடர்ந்தும் காணப்படுவதால் வழிபாட்டுத் தலங்களின் தேவை மிக அதிகம் எனவும் அவர் தெரிவித்தார்

கொரோனா வைரஸ் தொற்று மற்றும் உயிரிழப்புக்கள் அதிகரித்து வந்த நிலையில் இங்கிலாந்தில் கடந்த மார்ச் மாதம் பள்ளிவாயல்களும் ஏனைய வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டன.

முடக்க நிலை அறிவிக்கப்பட்ட காலத்தில் அனைத்து சமயத்தவர்களும் தமது சமயம் சார்ந்த நிகழ்வுகளை சடுதியாக மாற்றிக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. பிரித்தானிய முஸ்லிம்கள் புனித ரமாழான் கால வணக்க வழிபாடுகளை புதிய தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி புதுமையான வழிகளில் மேற்கொண்டனர்.  – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.