ஜனாஸாக்களை எரிப்பதன் பின்னணி என்ன?

தொகுப்பு : எம்.ஏ.எம். அஹ்ஸன்

0 1,646

கொரோனா வைரஸ் பரவலால் நாடு முடக்கப்பட்டுள்ள இந்த தருணத்தில் முஸ்லிம்கள் மீது அநியாயமாக பல்வேறு  குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றமை கவலைக்குரியதாகும்.  உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள் இன, மத பேதங்களுக்கப்பால் கொரோனாவில் இருந்து தம்மைப் பாதுகாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதேவேளை இலங்கையில் இவ் வைரஸ் விவகாரமும் இனவாதக் கண்ணோட்டத்தில் நோக்கப்படுகின்றமை உள்நாட்டில் மாத்திரமன்றி சர்வதேச அளவிலும் கண்டனங்களைத் தோற்றுவித்துள்ளது.

குறிப்பாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவுறுத்தல்களையும் மீறி இலங்கையில் கொவிட் 19 தொற்றினால் உயிரிழப்பவர்களின் ஜனாஸாக்களை எரிப்பது பாரிய மனித உரிமை மீறலாகவே நோக்கப்படுகின்றது.
சுகாதார அமைச்சரின் சுற்று நிருபமே இவ்வாறு தகனம் செய்வதை கட்டாயப்படுத்தினாலும், இதில் தலையிட்டு முஸ்லிம் சமூகத்திற்கு தீர்வைப் பெற்றுக் கொடுப்பதில் அரசாங்கமும் தயக்கம் காட்டுகின்றமை இதன் பின்னணி பற்றிய கேள்வியை எழுப்புகிறது.

இந் நிலையில் இந்த விவகாரம் குறித்து முஸ்லிம் சமூகத்தின் முக்கியஸ்தர்களான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர் சட்டத்தரணி ஜாவிட் யூசுப் ஆகியோருடன் “குளோப் தமிழ்” இணையத்தளத்தின் ஆசிரியர் அருண் ஆரோக்கியநாதர் நடாத்திய கலந்துரையாடலின் முக்கிய விடயங்கள் இங்கு தொகுத்து தரப்படுகின்றன.



விஞ்ஞான ரீதியாக தகுந்த காரணமின்றி
எரிப்பது முஸ்லிம்களின் மனதை நோகடிக்கும் 

பொது ஜன பெரமுன முக்கியஸ்தர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி

எமது நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத செயற்பாடுகள் கட்டவிழ்த்து விடப்படுவது இதுவே முதல் தடவை கிடையாது. 2009 இற்கு முன்னர் தமிழ் மக்களை அனைவரும் எப்படி ஒரு எதிரியாக பார்த்தார்களோ அந்த அடிப்படையில்தான் முஸ்லிம்களை இன்று பெரும்பான்மை சமூகங்கள் எதிரியாக பார்க்கும் நிலை தோன்றியுள்ளது. இதனால் சுமார் 70 வருடங்கள் கடந்தும் எங்களால் இலங்கையர் என்ற அடிப்படையில் ஒன்றுபட முடியவில்லை.

கொரோனா வைரஸ் என்பது அனைத்து சமூகங்களும் எதிர்நோக்கும் ஒரு பாரிய பிரச்சினை என்பதை பலர் உணர்ந்து வைத்திருக்கின்றார்கள். ஆனால் ஒரு சிலர் ஒரு குறிப்பிட்ட இனத்தின் மீது மாத்திரம் குற்றச்சாட்டினை முன்வைக்கின்றார்கள். ஜனாஸாக்களை எரிக்காமல் அடக்கம் செய்வது விஞ்ஞான ரீதியாக சிரமங்களை ஏற்படுத்துமாக இருந்தால் ஜனாஸாக்களை எரிப்பதில் எனக்கு பிரச்சினை கிடையாது என்று நான் உள்நாட்டு ஊடகம் ஒன்றுக்குதான் தெரிவித்திருந்தேன். அத்துடன் எனது முகநூலிலும் தெரிவித்தேன். அல் ஜஸீராவுக்கு தெரிவிக்கவில்லை. ஆனாலும் அவர்கள் நான் தெரிவித்ததாக குறிப்பிட்டிருந்தார்கள்.

ஒரு சிலரைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு வேலையே இனவாதத்தை தோற்றுவிப்பதுதான். கொரோனா தொற்றில் உயிரிழந்தவர்களை 182 நாடுகளில் அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கியிருக்கிறார்கள். இலங்கையில் அதற்கு அனுமதியில்லை என்றால் அதற்கு விஞ்ஞான ரீதியாக தகுந்த காரணம் வேண்டும். அவ்வாறு தகுந்த காரணமின்றி எரிப்பது, முஸ்லிம்களின் மனதை நோகடிக்கும் ஒரு செயற்பாடாகும். இதைப் பற்றி ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் பேசியிருக்கிறேன். அத்துடன் இது பற்றி கலந்தாலோசிக்க இரண்டு கூட்டங்களை ஏற்பாடு செய்தேன். மற்ற அரசியல்வாதிகள் போல செய்வதையெல்லாம் மக்களிடம் சொல்லி பெயர் வாங்க விரும்பாததால்தான் இதை வெளிப்படுத்தவில்லை. இத்தனை விமர்சனங்கள் வந்த பின்னரும் சொல்லாமல் இருக்க முடியாது.

பேராசிரியர்களான ரிஸ்வி ஷெரீப், ஷெரீப்தீன் கமால்தீன் மற்றும் ரவீந்ர பெர்னான்டொ போன்ற பல நிபுணர்கள் உள்ளடங்கிய மருத்துவக் குழுவினர் சுகாதார அமைச்சின் அதிகாரிகளுடன் தலா 3 மணி நேரம் 2 நாட்களாக பேசினோம். எனக்கு விளங்கியதன் அடிப்படையில் இலங்கையில் உள்ள வைத்தியர்கள் இதை புரிந்து கொள்ளாமல்தான் முடிவெடுத்துள்ளார்கள். வழங்கப்பட்ட முடிவு அரசியல் சார்ந்த ஒன்றல்ல. ஜனாஸாக்களை எரிப்பதற்கு எடுக்கப்பட்ட முடிவு உள்நாட்டு வைத்தியர் குழுவின் முடிவாகும்.

சிறுபான்மையினருக்கு ஒரு பிரச்சினை ஏற்பட்டால் பெரும்பான்மை இனத்தவருடன் இணைந்து ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும். ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் இதில் கோத்தாபய ராஜபக்சதான் வெற்றி பெறுவார் என்பதை ஊகித்துக் கொண்ட நான் அவருடன் சேருவோம் என்று சொன்னபோது, என்னை பலர் துரோகியாகப் பார்த்தார்கள். முஸ்லிம்கள் யாரும் எனக்கு வாக்களிக்கவும் இல்லை. இப்போது எல்லாவற்றையும் நான்தான் செய்ய வேண்டும் என்பது போல எனக்கு எதிராக வீடியோ, ஓடியோ என அனுப்பி வசைபாடிக் கொண்டிக்கிறார்கள்.

மற்றவர்கள் என்னை விமர்சிப்பதைப் பற்றி எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. ஒரு முஸ்லிம் நபர் தேசியப் பட்டியலில் தெரிவு செய்யப்பட்டால் அது முஸ்லிம் சமூகத்துக்கு குரல் கொடுக்க ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்பதற்காக இவர்களோடு இருக்கிறேன். அதற்காக என்னை தேசிய பட்டியலில் தெரிவு செய்யுங்கள் என்று யாரிமும் நான் சென்று கேட்கப்போவதுமில்லை.

முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்தை கிளப்பி விடுவது ஒரு குறிப்பிட்ட இனவாதக்குழுதான். அவர்கள்தான் இப்போதும் நேரடியாக அல்லது மறைமுகமாக பிரச்சினைகளை தோற்றுவிக்கின்றார்கள். நான் எல்லா சமூகத்துக்காகவும் குரல் கொடுக்கத்தான் வந்திருக்கிறேன். விஞ்ஞானத்துக்கு முரணானது என்றுபடும் ஒரு விடயத்துக்கு எதிராக நான் நிச்சயமாக குரல் கொடுப்பேன். எதற்காகவும் வாயை மூடிக்கொண்டு இருக்கப் போவதில்லை.

யாராவது சொல்வதை கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுவதற்காக நாங்கள் இங்கு இல்லை. மனச்சாட்சிக்கு சரி என்று படுவதை நான் செய்து கொண்டிருக்கிறேன். மக்கள் நினைப்பது போல இது தொடர்பாக முடிவெடுக்கும் உரிமை அரசாங்கத்துக்கு கிடையாது. இதைப்பற்றி முடிவெடுக்க உரிமை உள்ளவர் டொக்டர் அனில் ஜயசிங்கதான். அவரிடம் நாங்கள் கலந்துரையாடிய போது எந்த விதமான பலனும் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை.

கொரோனா வைரஸினை கட்டுப்படுத்துவதில் மிகச்சிறப்பாக செயற்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கையும் ஒன்றாகும். நானும் யாரையும் முஸ்லிம், தமிழ், சிங்களம் என்றெல்லாம் பார்க்கவில்லை. ஒரு குழுவினர் முஸ்லிம்களுக்கு எதிராக பேசுவதற்கு எங்களைச் சார்ந்தவர்களும் ஒரு வகையில் காரணம்தான். அவர்கள் பேசினார்கள் என்பதற்காக இவர்களும் பேச பிரச்சினை முடிந்த பாடில்லை. இப்போது ஏற்பட்டுள்ள ஜனாஸாவை எரிக்கும் பிரச்சினையை ஒரு உணர்வு ரீதியான விடயமாக பார்க்காமல் பெரும்பான்மை இனத்தவருடன் இணைந்து விரைவில் தீர்வு காண முயற்சி செய்ய வேண்டும்.

அரசாங்கம், சுகாதார அமைச்சர், பணிப்பாளர்
சட்டத்தின் கண்ணில் இருந்து தப்ப முடியாது

மு.கா. செயலாளர் நாயகம் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர்
முஸ்லிம்களின் மனம் காலம் காலமாக நோகடிக்கப்படுகின்றது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது அரசியல் ரீதியாக முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டார்கள். தற்கொலை தாக்குதல் என்ற ஒரு சம்பவத்தை வைத்து தேர்தல் பிரசாரத்தினை மேற்கொண்டார்கள். இப்போது கொரோனா வைரஸினை முஸ்லிம்கள் பரப்புகிறார்கள் என்ற மாயையை உருவாக்கி விட முயற்சி செய்த போதும் அது பயனளிக்கவில்லை. கொரோனா இன மதம் அறிந்து தாக்காது என்பதை பலர் புரிந்து கொண்டுள்ளார்கள்.

இலங்கையில் முதலாவதாக கொரோனா தொற்று உள்ளவர் என இத்தாலி சுற்றுலா வழிகாட்டி என அடையாளம் காணப்பட்டிருந்தார். அவர் முஸ்லிமாக இருந்திருந்தால் நிலைமை மோசமாக இருந்திருக்கும். இப்படியொரு பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுக்கும் இந்த சந்தர்ப்பத்திலும் இனவாதம் பேசுவது வெட்கப்பட வேண்டிய ஒரு விடயம்.

உண்மையில் ஏப்ரல் முதலாம் திகதி வரை ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. முதலாவதாக ஒரு முஸ்லிம் மரணித்த பின்னர் இந்த சட்டம் திடீரென மாற்றப்பட்டது. இதன் பின்னணியில் என்ன நடந்தது என்பது தெரியாது. ஆனால் முஸ்லிம்கள் ஒரு சில நாசகாரிகளால் குறி வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பது புலனாகிறது. அவர்கள் முஸ்லிம்கள் வருத்தப்பட வேண்டும் என நினைக்கிறார்கள்.

முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து இலங்கையில் ஜனாஸாவை தகனம் செய்வது தொடர்பாக மிகக்கவலையுடன் ஒரு கடிதத்தை வெளியிட்டிருந்தன. அனைவரும் இது தொடர்பாக கரிசனை காட்டுகின்றார்கள். உலக சுகாதார தாபனத்தின் கவனத்திற்கு இந்த விடயத்தை நாங்கள் கொண்டு சென்றுள்ளோம். முஸ்லிம், சிங்களம், பௌத்தம் என்ற பிரிவினையை ஓரங்கட்டி வையுங்கள். அவற்றைத் தாண்டி இறந்த ஒருவருக்கு வழங்க வேண்டிய இறுதி மரியாதை என்ற ஒன்று இருக்கிறது. மோசமானவர்கள், சிறைக்கைதிகள், கொலையாளிகள் என யார் இறந்தாலும் மன்னர் காலந்தொட்டு அவரவருடைய சமய முறைப்படி அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படுகின்றது. அது மனித நேயமாகும்.

இவ்வாறான மனித நேயப் பண்பினை பின்பற்றுவதில் பௌத்த சமயத்திற்கு பிரதான இடம் எப்போதும் உண்டு. ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் அந்த உணர்வை யாரும் மதிக்கவில்லை. ஏப்ரல் முதலாம் திகதியன்று ஒரு ஜனாஸாவை தகனம் செய்யப் போகின்றார்கள் என்ற போது எனது வீட்டில் உள்ள எனது தாய் பதறிப்போனார். வேதனைப்பட்டார். இதே போன்ற உணர்வுதான் எல்லா முஸ்லிம்களுக்கும் இருந்திருக்கும். தமக்கு கொரோனா வைரஸ் தாக்கும் என்ற அச்சத்தை விட இறந்து போனால் எரித்து விடுவார்கள் என்ற பயம்தான் அனைவருக்கும் இருக்கிறது.

அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை நாங்கள் செய்தோம். அனுமதி வழங்கப்படும் பட்சத்தில் உரிய சுகாதார வரையறைகளை பின்பற்றுகின்றோம் என கலந்தாலோசித்து அவற்றை முன்வைத்தோம். ஏப்ரல் 1 முதல் இரண்டு வாரங்களாக அலி சப்ரியுடன் இணைந்து ஓயாது உழைத்தோம். இதை நாங்கள் அரசியல் ஆக்கவில்லை. எமது சமூகத்துக்கு தேவையான ஒரு உணர்வு ரீதியான விடயமாக கருதிதான் செயற்பட்டோம். இதனால்தான் மக்களுக்கு ஊடகங்கள் மூலம் கருத்து தெரிவிக்கவில்லை.

மார்ச் 27 ஆம் திகதி வர்த்தமானியில் அடக்கம் செய்ய முடியும் என்று தெரிவித்தவர்கள் ஏப்ரல் முதலாம் திகதி அனுமதி வழங்கவில்லை. இது சட்டத்துக்கு விரோதமானது என்பது வெளியப்படையாக தெரிகின்றது. இந்த விடயத்தை அரசியல் ரீதியாக அணுகாமல் பிரத்தியேகமாகவே கையாள வேண்டியிருந்தது. நீதிமன்றத்துக்கு செல்லுங்கள் என்று சிலர் சொன்னார்கள். ஆனால் நீதிமன்றத்துக்கு செல்வதாக இருந்தால் அரசியல் சாராமல் இதற்கு தீர்வு காண முடியாது.

இந்தப்பிரச்சினை தொடர்பாக ரவூப் ஹக்கீம் பிரதம மந்திரியிடம் முறையிட்ட போது அவர் எனக்குப் பிரச்சினையில்லை. அனில் ஜாசிங்கவிடம் இதுபற்றி கேளுங்கள் என்று சொல்லிவிட்டார். அதற்கு பதிலளித்த அனில் ஜாசிங்க ஒரு இடத்தில் கூட தகனம் செய்வது ஏன் என்று காரணம் சொல்லவில்லை. கேட்டதற்கு மாறாக வேறு ஏதோ ஒன்றை சொல்லி மழுப்பிக் கொண்டு இருந்தார். இதன் பின்னர்தான் ஒரு குழுவை அமைத்து தகனம் செய்வதற்கான விஞ்ஞான ரீதியான காரணங்களை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று சொல்லப்பட்டது.

ஜனாஸாவை நல்லடக்கம் செய்வது முஸ்லிம்களின் பிரச்சினை மாத்திரம் கிடையாது. ஒருவர் இறந்த பின்னர் அவருக்கு வழங்க முடியுமான மிகக்குறைந்த மரியாதை. அவர் தான் விரும்பியபடி அடக்கம் செய்யப்பட வேண்டும். எங்களுடைய முயற்சிகள் வீணாகி விட்டன. இப்போது இறுதியாக ஒரு சிவில் சமூகம் நீதிமன்றத்தை நாடிச் சென்றுள்ளது. அவர்களுக்கு நாங்கள் எங்களது முழுமையான ஆதரவினை வழங்குகின்றோம். ஆனால் அதுவும் இப்போது அரசியலாகிவிட்டது. மக்கள் எங்களையும் குற்றம்சாட்டுகின்றார்கள். அதனால் நாங்களும் நீதிமன்றத்தில்தான் இருக்கின்றோம். அடக்கம் செய்வது விஞ்ஞான ரீதியாக சாத்தியம் என்றால் அரசாங்கமோ சுகாதார அமைச்சோ அல்லது அனில் ஜாசிங்கவோ சட்டத்தின் கண்ணில் இருந்து தப்ப முடியாது.


தகனம் செய்வதை விடவும் அது தொடர்பாக
பரப்பப்படும் இனவாதம் மிகவும் கொடூரமானது

சட்டத்தரணி ஜாவிட் யூசுப்

இந்தியாவிலும் இலங்கையிலும் கொரோனாவை வைத்து இனவாதம் செய்கின்றார்கள். தப்லீக் பணி மற்றும் மர்கஸில் மக்கள் ஒன்றுகூடியதால்தான் இந்தியாவில் கொரோனா பரவியதாக பேசினார்கள். இலங்கையிலும் ஒரு சில குழுக்கள் இதுபோன்று முஸ்லிம்கள் மீது பழிபோட முயற்சித்தபோதும் அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியில் முடிந்தன. ஆனாலும் சமூக வலைத்தளங்களிலும் ஒரு சில தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் அதற்கான பிரயத்தனங்கள் இன்னும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

வாதுவ என்ற இடத்தில் ஒரு சில இளைஞர்கள் ஒன்றுகூடி களியாட்ட நிகழ்வில் ஈடுபட்டிருந்தார்கள். அவர்கள் பெரும்பான்மை இனத்தவர்கள். அதைப் பற்றி யாரும் பெரியளவில் பேசவில்லை. அந்த இனத்தையோ மதத்தையோ அடையாளப்படுத்தி செய்திகள் வெளியிடப்படவில்லை. மனித சமுதாயத்தில் தவறு நடப்பது சகஜம் என்பதால் செய்திகளை ஒரு சமயத்தின் மீது பழி போடும் வகையில் இல்லாமல்  இவ்வாறு பொதுவாக வெளியிடுவதே வரவேற்கத்தக்கது.

ஜனாஸா நல்லடக்கத்தைப் பொறுத்தவரையில் 4 கடமைகள் இருக்கின்றன. அதில் மூன்றை விட்டுக்கொடுத்து விட்டுத்தான் நாங்கள் நல்லடக்கம் செய்வதற்கு அனுமதி கேட்கிறோம். ஆனால் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த பலர் முஸ்லிம்கள் இந்த சந்தர்ப்பத்திலும் விட்டுக்கொடுக்காமல் இருக்கின்றார்கள் என்பது போல பேசுகின்றார்கள். ஜனாஸாக்களை தகனம் செய்வதைக் காட்டிலும் அது தொடர்பாக பரப்பப்படும் இனவாதம் மிகவும் கொடூரமானது.

ஜனாஸாக்களை தகனம் செய்யத்தான் வேண்டுமென்ற முடிவை டாக்டர் அனில் ஜாசிங்க எடுத்ததாக கூறுகின்றார்கள். அவருக்குதான் அதிகாரம் இருக்கிறதென்று கூறி விட முடியாது. அதைத்தாண்டி மேன்முறையீடு செய்து அந்த சட்டத்தை வாபஸ் பெற அரசாங்கத்தினால் முடியும். அது அரசாங்கத்தின் பொறுப்பு. இதில் புதுமையான விடயம் என்னவென்றால் நல்லடக்கம் செய்யாமல் ஜனாஸாவை தகனம் செய்வதினால் யாருக்கும் எந்த நன்மையும் கிடையாது. ஆனாலும் ஒரு சமூகத்தின் மனதை நோகடிக்கும் ஒரே நோக்கத்திலேயே இதை செய்கிறார்கள் என்பது மட்டும் தெளிவாகிறது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.