கொரோனாவை வென்ற மனிதாபிமானம்!

எம்.பி. முகமட்

0 1,163

கொரோனா வைரஸ் தொற்றினால் முழு உலகுமே முடங்கியிருக்கிறது. இலங்கையும் இதற்கு விதிவிலக்கல்ல. மக்கள் சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். ஆனாலும் இத்தனைக்கு மத்தியிலும் எந்தக் கொரோனாவாலும் தோற்கடிக்க முடியாத ஒன்றாக கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது மனிதாபிமானம். இந்த நெருக்கடி காலத்தில், தமக்கு இல்லாவிட்டாலும் பிறருக்கு கொடுத்து உதவ வேண்டும் எனும் அடிப்படையில் தம்மால் இயன்ற உதவிகளை செய்து வரும் மக்களின் கதைகள் நமக்கு நம்பிக்கை தருவதாகவுள்ளன.

இந்த நெருக்கடி காலத்தில் பண வசதியுள்ளவர்கள் மாத்திரம் உதவிகளைச் செய்யவில்லை. மாறாக ஏழைகள், அன்றாடம் உழைப்பவர்களும் தம்மாலியன்ற உதவிகளைச் செய்கிறார்கள். அவ்வாறான ஒருவர்தான் சம்மாந்துறை பிரதான வீதியில் சிறு வர்த்தகம் செய்யும் 60 வயது மதிக்கத்தக்க அன்சார். கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நாட்டை பாதுகாக்க கடமையாற்றும் சுகாதாரத் துறையினர் மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கு முக கவசங்கள் மற்றும் தண்ணீர் போத்தல்களை இலவசமாக வழங்கி வருகிறார் அவர்.

‘கொவிட்19 : இந்த பொருட்கள் கொவிட் 19 இற்காக கடமையாற்றும் தொழிலாளர்களுக்கு முற்றிலும் இலவசம்’ என அறிவித்தல் பலகை ஒன்றையும் அவர் வீதியோரம் காட்சிப்படுத்தியுள்ளார். இதனைக் காணும் அதிகாரிகள் தமது வாகனத்தை நிறுத்தி இம்முதியவரிடமிருந்து முக கவசம் மற்றும் தண்ணீர் போத்தல்களை பெற்றுச் செல்கின்றனர். தனது இப் பணி குறித்து அவர் கூறுகையில், “ஊரடங்கு அமுலில் உள்ளதால் கடைகள் மூடப்பட்டுள்ளன. நம்மை பாதுகாக்க கஸ்டப்படும் இந்த அதிகாரிகளுக்கு என்னால் இயன்ற சிறு உதவியையேனும் செய்ய வேண்டும் என்ற நோக்கில்தான் இதனைச் செய்கிறேன்” என்றார். அவரது இந்த சிறிய நற்பணியினால் பயனடைந்த பலரும் அவருக்கு நன்றி கூறிச் செல்கின்றனர். இவரைப் போன்று மேலும் பலரும் தம்மால் இயன்ற சிறு உதவிகளையேனும் தமது பங்கிற்குச் செய்து கொண்டிருப்பது மனிதாபிமானத்தின் மகத்துவத்தைப் பறைசாற்றுகிறது.

திருகோணமலை என்.சி வீதியில் அமைந்துள்ள மொடர்ன் டெயிலரிங் நிறுவனத்தினர் ஆயிரக்கணக்கான முகக்கவசங்களை இலவசமாக தைத்து வழங்கி வருவது அப்பகுதியில் கவனயீர்ப்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.
இதுபற்றி நிறுவன உரிமையாளர் முகமட் முஜீப் கூறுகையில் “இந்த வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற எமது மக்களுக்கு என்னாலான உதவிகளை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இப் பணியினை தொடங்கியுள்ளோம்.
சந்தையில் முக கவசத்திற்கு தட்டுப்பாடு நிலவுகிறது. அதேபோன்று தினமும் கொரோனா ஒழிப்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகளும் முக கவசங்களின்றி கஸ்டப்படுகின்றனர். இதனால்தான் கழுவிப் பாவிக்க கூடிய வகையில் கொட்டன் துணியினால் மாஸ்க் தைக்கின்றோம். வசதியுள்ளவர்கள் பணம் கொடுத்து வாங்குவார்கள். வருமானம் குறைந்த சாதாரண மக்கள் இதற்காக செலவு செய்யமாட்டார்கள். குடும்பத்தில் 5 பேர் என்றால் அதற்கே ஒரு தொகை பணம் தேவை. அதனால்தான் இந்த சேவை மூலம் நாமும் கொரோனா தடுப்பு போராட்டத்தில் இணைந்து கொள்வதையிட்டு உளத் திருப்தியாகவுள்ளது. தற்போது எமது மாவட்டத்திலுள்ள அரச திணைக்களங்கள், வைத்தியசாலைகள், முப்படைகளுக்கும் ஆயிரக் கணக்கான முக கவசங்களை இலவசமாக வழங்கி வருகிறோம். தேவையுள்ளவர்கள் எம்மிடம் வந்து இலவசமாக பெற்றுச்செல்கிறார்கள். சிலர் இப்போது எங்களை ‘கொரோனா டைலர்ஸ்’ என்றும் அழைக்கத் தொடங்கியிருக்கிறார்கள்” என்கிறார் சிரித்துக் கொண்டே.

வெரே கெல்லி, கொழும்பில் வசிக்கும் இளம் சமூக செயற்பாட்டாளர். கொவிட் 19 ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது முதல் தன்னால் இயன்ற உதவிகளை மக்களுக்கு வழங்கி வருகிறார். அதில் ஒன்றுதான் தனது தெருவில் வசிக்கும் குடும்பத் தலைவிகளை உள்ளடக்கி அவர் ஆரம்பித்துள்ள வட்ஸ்அப் குழுமம். இது ஒரு சிறிய பணிதான் என்றபோதிலும் அதனூடாக கிடைக்கும் பலன் பெரிது என்கிறார் அவர்.
“இதனை ஆரம்பித்ததன் நோக்கம், இந்த நெருக்கடியான நேரத்தில் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டும் என்பதுதான். நாட்கணக்காக நீடிக்கும் ஊரடங்கினால் அத்தியவசிய பொருட்களை பெற்றுக் கொள்ள முடியாதுள்ளது. சமையல் உள்ளிட்ட அவசிய தேவைகளின்போது பற்றாக்குறையாகும் பொருட்களை இந்தக் குழுவில் இட்டால் இருப்பவர்கள் கொடுத்து உதவுவார்கள். அதேபோன்று டெலிவரி சேவைகள் பற்றிய தகவல்களை பகிர்வார்கள். எல்லோரும் சேர்ந்து மொத்தமாக குறைந்த விலையில் பொருட் கொள்வனவில் ஈடுபடவும் இது உதவியாகவுள்ளது. எல்லா இன, மதங்களை பின்பற்றுவோரும் இதில் இருப்பதும் பகிர்ந்து கொள்வதும்தான் இதன் விசேஷம்” என அவர் குறிப்பிடுகிறார்.

இதேபோன்றுதான் மற்றொரு குழுமத்தை தொடங்கி நடாத்தி வருபவர் கிறிஸ்டினா பிராங்கி. கொரோனா நெருடிக்க தனக்கு அயவலர்களுடனான நெருக்கத்தை அதிகரித்துள்ளதாக குறிப்பிடுகிறார் “நான் இப்பகுதியில் நான்கு வருடங்களாக வசிக்கிறேன். ஆனால் அயலவர்களுடன் அவ்வளவு அறிமுகமில்லை. இந்த வட்ஸ்அப் குழு இன்று புதிய உறவுகளை தேடித் தந்துள்ளது. இப்போதுதான் என் அயலவர்களான மூன்று குடும்பத் தலைவிகளின் பெயரே எனக்குத் தெரிய வந்துள்ளது. அத்தியாவசிய பொருட்களை வாங்கி எமக்குள் பகிர்ந்துகொள்கிறோம். இந்த நெருக்கடியான காலகட்டத்தில் ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பதன் மூலம் எமக்கிடையில் குறுகிய காலத்திலேயே நல்லுறவு வளர்ந்துள்ளது” என்கிறார்.

இன்று கட்டாய சமூக விலகல் கடைப்பிடிக்கப்படுவதால் மத தலங்கள் அனைத்திலும் வணக்க வழிபாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்களும் அங்கு ஒன்றுகூடுவதில்லை. ஆனாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக நாட்டிலுள்ள பல மத தலங்களின் கதவுகள் திறந்தேயுள்ளன.

முஸ்லிம்களுக்கு எதிரான கடும்போக்கை கொண்டுள்ள பொது பல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், தனது விகாரையில் வைத்து கொவிட் 19 நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள பல முஸ்லிம் குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்களை வழங்குகின்ற காட்சிகள் அண்மையில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டதுடன் மக்களது பாராட்டையும் பெற்றன.
அதேபோன்றுதான் கம்பளை, இல்லவதுறை பள்ளிவாசல் தமது பகுதியில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு மாத்திரமன்றி தமிழ், சிங்கள மக்களுக்கும் ஆயிரக்கணக்கான ரூபா பெறுமதியான உலருணவுப் பொருட்களை அண்மையில் வழங்கியது. அவ்வாறு உதவியைப் பெற்றுக் கொண்ட ஒரு குடும்பம்தான் ராகுல் கருணாதிலகவுடையது. இது பற்றி அவர் தனது முகநூலில் இவ்வாறு பதிவிட்டுள்ளார். ” இங்குள்ள பொருட்கள் எனது தாயாருக்கு கம்பளை, இல்லவதுறை பள்ளிவாசலிடமிருந்து கிடைக்கப்பெற்றவையாகும். இந்த உலருணவுப் பொருட்கள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள ஒரு குடும்பத்திற்கு வாரக் கணக்கில் போதுமானவை. இந்தச் சிறிய செயல் நமக்கு ஒரு பெரிய செய்தியைச் சொல்கிறது. அதுதான் கம்பளையில் வாழும் சமூகங்களுக்கிடையிலான ஐக்கியம், ஒருமைப்பாடு மற்றும் சகோதரத்துவமாகும். இல்லவதுறை பள்ளிவாசலுக்கு எனது இதயம் நிறைந்த நன்றிகள். இதுதான் இலங்கையின் உண்மையான பன்மைத்துவத்துக்கு உதாரணமாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் பெரும்பான்மையாக வாழ்கின்ற போதிலும் அங்கு வாழும் சிறு தொகை சிங்கள குடும்பங்களையும் அவர்கள் அரவணைக்கத் தவறவில்லை. கொரோனா வைரஸ் நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் , முஸ்லிம் மக்களுக்கு மாத்திரமன்றி சிங்கள மக்களுக்கும் தாம் உதவிகளை வழங்கி வருவதாக கல்குடா சமூக நிறுவனங்களின் கூட்டமைப்பின் தலைவரும் கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான எம். ரீ.எம். ரிஸ்வி குறிப்பிடுகிறார். “ இது இன மத பேதம் பார்க்கும் காலமல்ல. கொரோனாவும் இன மத பேதம் பார்த்து தாக்கவில்லை. எல்லா மக்களும்தான் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதனால் நாம் எமது உதவித் திட்டங்களை ஓர் இனத்துடன் மாத்திரம் மட்டுப்படுத்தவில்லை. கல்குடா பிரதேசத்திற்குட்பட்ட சுமார் 50 சிங்கள குடும்பங்களுக்கு நாம் உதவிகளை வழங்கினோம். மட்டக்களப்பு வீதி, புணானையிலுள்ள பௌத்த விகாரைக்குச் சென்று அங்குள்ள தலைமை பிக்கு மூலமாக அப் பகுதி மக்களுக்கு உதவிகளை வழங்கினோம். கொரோனா நெருக்கடியை நாம் சகவாழ்வைக் கட்டியெழுப்புவதற்கான சாதகமான ஒரு காலமாகமாக மாற்றியுள்ளோம்” என்றார்.

இன்று கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஆயிரக் கணக்கான மக்கள் தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறானதொரு பாரிய முகாம் மட்டக்களப்பு மாவட்டத்தின் புணானை பிரதேசத்தில் அமைந்துள்ளது. இம் முகாமை முழுக்க முழுக்க இராணுவத்தினரே நிர்வகித்து வருகின்றனர். ஒரு புறம் ஊரடங்குச் சட்டத்தை நிலைநாட்டுவதற்காக இராணுவத்தினர் கடுமையான முறையில் நடந்து கொள்கின்ற நிலையில், மறுபுறும் தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு அவர்கள் காட்டுகின்ற கனிவும் ஆதரவும் மக்களின் மனங்களை வென்றுள்ளன.

புணானை முகாமில் தங்கியிருந்த அக்குறணை பிரதேசத்தைச் சேர்ந்த முகமட், இராணுவத்தினர் எந்தளவு தூரம் இரக்கத்துடனும் மனிதாபிமானத்துடனும் நடந்து கொண்டனர் என்பதை விபரிக்கிறார். “இந்த முகாமில் நூற்றுக் கணக்கான முஸ்லிம் குடும்பங்கள் தங்கியுள்ளன. நாம் எமக்கும் இந்த நாட்டு மக்களுக்கும் கொடிய கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு வேண்டி நோன்பு நோற்று பிரார்த்திக்க தீர்மானித்தோம். அதிகாலையில் 3.30 மணியளில் எழுந்து சாப்பிட்டுவிட்டே நோன்பு நோற்போம். எனினும் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இரவு 8 மணிக்கே எமக்கு உணவு வழங்கப்படும். இதனால் எமது முகாமுக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரியிடம் இதுபற்றிக் கூறி, 8 மணிக்கு தரும் உணவை சற்று தாமதித்து 10 மணியளவில் தந்தால் அதனைக் கொண்டு எம்மால் நோன்பு பிடிக்க முடியும் எனக் கூறினோம். அதற்கு அவர் ஒன்றும் கூறவில்லை. வழமைபோன்று இரவு 8 மணிக்கே எமக்கு சாப்பாடு வந்தது. இராணுவத்தினர் நமது கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லைப் போலும் என்ற அதிருப்தியில் நாம் அந்த சாப்பாட்டையே அதிகாலையில் நோன்பு நோற்பதற்காக எடுத்து வைத்தோம். சிறிது நேரம் கழித்து எமது அறைக்கு வந்த அதே அதிகாரி “இதை இப்போது சாப்பிடுங்கள். நீங்கள் நோன்பு நோற்பதற்காக பிரத்தியேகமாக உணவு தயாரிக்கச் சொல்லியிருக்கிறேன். அதிகாலை 3 மணிக்கு உங்கள் அறைக்கு உணவு வரும். எங்களுக்காகவும் உங்கள் கடவுளிடம் பிரார்த்தியுங்கள்” என்று கூறிவிட்டுச் சென்றார். இராணுவத்தினரின் இந்த மனிதாபிமான செயலினால் நாம் மனம் நெகிழ்ந்துபோனோம். இராணுவம் பற்றி எம்மிடம் தப்பபிப்பிராயங்களே நிலவின. ஆனால் அவர்களும் நம்மைப்போன்று மனிதாபிமானமிக்கவர்கள்தான் என்பதை இந்த கொரோனா காலம் எமக்கு காட்டித் தந்துள்ளது” என்றார் அவர்.

இவ்வாறு படித்தவர்கள், பாமரர்கள், ஏழைகள், பணக்காரர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், தமிழர்கள் என எந்தவித வேறுபாடுகளுக்குமப்பால் மனிதர்கள் என்ற ஒரே நோக்கில், கொரோனாவின் பிடியிலிருந்து நாட்டைக் காப்பதற்காக மக்கள் அனைவரும் வேறுபாடுகளை மறந்து கைகோர்த்துள்ளனர் என்பதற்கு இந்தக் கதைகள் நல்ல சான்றுகள்.

கொரோனாவினால் ஒரு புறம் நாட்டினதும் மக்களினதும் பொருளாதாரத்தில் பலத்த அடி விழுந்து, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தாலும் இந்த நெருக்கடி காலத்தில் மக்கள் ஒருவருக்கொருவர் உதவி ஒத்தாசையாக இருப்பதுதான் நமது பலமாகும். கொரோனா கற்றுத் தந்துள்ள இந்தப் பாடத்தை காலமெல்லாம் கடைப்பிடிப்பதில்தான் அழகிய இலங்கைத் தீவின் எதிர்காலம் தங்கியிருக்கிறது. கொரோனா உலகிலுள்ள அத்தனையையும் தோற்கடித்திருக்கிறது, ஆனால் ஒன்றைத் தவிர. அதுதான் மனிதாபிமானம்! – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.