தவக்குலுக்கும் தற்காப்புக்குமிடையில் கொரோனா வைரஸ்

அஷ்ஷெய்க் முபாரிஸ் தாஜுதீன் (ரஷாதி)

0 3,213

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பற்றிய அச்சமும் பீதியும் மனிதர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. மனிதன் என்ற வகையில் இவ்வாறான கொடிய நோய்களைக் கண்டு ஒருவர் அஞ்சுவதும் அவற்றிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள, முடியுமான முயற்சிகளில் ஈடுபடுவதும் இயல்பான விடயமே. எனினும் இது பற்றிய இஸ்லாத்தின் பரந்த பார்வை அவருக்கு வழங்கப்படுமாயின் ஓரளவு அவர் மனதளவில் தன்னைத் தானே வலுப்படுத்திக்கொள்ள ஏதுவாக இருக்கும்.

ஈமானின் உறுதிக்குப்பிறகு மனிதனுக்குக் கொடுக்கப்படுகின்ற மிக உன்னதமான ஓர் அருள் தான் இந்த ஆரோக்கியம். “ஒருதடவை நபி (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்த மேடை மீது ஏறினார்கள்; பிறகு அழுதார்கள்; பின்பு, ‘இறைவனிடம் மன்னிப்பையும், உடல் ஆரோக்கியத்தையும் வேண்டிக்கொள்ளுங்கள்; ஏனென்றால், ஈமானின் உறுதிக்குப்பிறகு உடல் ஆரோக்கியத்தை விட சிறந்த செல்வம் எவருக்கும் கொடுக்கப்படவில்லை’ என நபி (ஸல்) கூறினார்கள்”. அறிவிப்பவர்: அபூ பக்ர் சித்தீக் (ரழி) நூல் : திர்மிதி 3558

ஆரோக்கியத்தைப் பாதுகாத்து நோயின்றி வாழ்வதற்கு இறைவன் மீதான ஆழ்ந்த நம்பிக்கையும் தவக்குலும் பிரார்த்தனையும் எவ்வளவு முக்கியமோ அது போன்று தற்காப்பு முயற்சியில் ஈடுபடுவதும் மிக அவசியமாகும். அல்லாஹ் பார்த்துக்கொள்வான் என்று ஒரு போதும் இருந்து விடக்கூடாது. அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதேபோன்று துறை சார்ந்தவர்களின் மருத்துவ, சுகாதார வழிகாட்டல்களையும் கடைப்பிடித்து ஒழுக வேண்டும்.

பொதுவாக நோய்கள் யாவுமே ஒரு முஸ்லிமின் பாவங்களை மன்னிக்கக் கூடியவைகளாகும்.

“ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் கஷ்டம், நோய், கவலை, நோவினை, துக்கம், அவனது காலில் குத்தி விடும் முள்ளின் வேதனை உட்பட அனைத்தின் மூலமும் அவனது பாவங்களை அல்லாஹ் அழித்து விடுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரழி), நூல்: புகாரி 5641

சர்வதேச அளவில் விஸ்வரூபம் எடுத்துள்ள கொரோனா வைரஸ் போன்ற தொற்று நோய்கள் பற்றிய ஓர் இறை விசுவாசியின் பார்வை எப்படி இருக்க வேண்டும் என்பதனை பின்வரும் நபிமொழிகள் எமக்கு விளக்குகின்றன.

“உங்களுக்கு முந்திய சில சமூகங்களைத் தண்டிக்கவே கொள்ளை நோய்கள் அனுப்பப்பட்டன. அதில் எஞ்சிய சில (கொள்ளை நோய்களே) அவ்வப்போது ஆங்காங்கே வந்து செல்கின்றன. எனவே, ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியிருப்பதை ஒருவர் செவியுற்றால், அவர் அங்கு செல்ல வேண்டாம். மேலும், நீங்கள் வசிக்கும் ஊரில் கொள்ளை நோய் பரவி விட்டால், அதிலிருந்து தப்பிக்க நீங்கள் அங்கிருந்து வெளியேறவும் வேண்டாம்.” என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: உஸாமா (ரழி) நூல்: புகாரி 6974

கொள்ளை நோய் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் நான் வினவினேன். அதற்கு அன்னார், “அது அல்லாஹ், தான் நாடியோர் மீது அனுப்பும் தண்டனையாகும். அதையே முஃமின்களுக்கு அருளாகவும் அல்லாஹ் ஆக்கி விட்டான். எனவே, கொள்ளை நோய் பரவியிருக்கும் ஓர் ஊரில் வாழும் ஒருவர், அதில் அல்லாஹ்வின் அருளை எதிர்பார்த்தவராகவும், அல்லாஹ் விதித்ததைத் தவிர வேறெதுவும் தன்னை அடையாது என்று நம்பிக்கை வைத்தவராகவும் பொறுமையோடு தனது ஊரிலேயே தங்கியிருந்து, (அதில் அவர் மரணிக்க) நேர்ந்தால், ஓர் உயிர்த் தியாகிக்குக் கிடைக்கும் நன்மை அவருக்குக் கிடைக்கும்.” என்று கூறினார்கள்.அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி) நூல்: புகாரி 3474
மேலுள்ள நபி மொழிகள் கொள்ளை நோய்கள் பற்றிய இஸ்லாத்தின் பார்வையையும் அதனால் பீடிக்கப்பட்டவர்களின் நிலை குறித்தும் பேசுகிகின்றன. தற்காப்பு முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்கள் ஒரு வேளை இந்த நோயால் மரணித்துவிட்டால் கூட ஓர் உயிர்த் தியாகிக்குக் கிடைக்கும் நன்மை நிச்சயம் அவர்களுக்குக் கிடைக்கும் என்ற நன்மாராயத்தையும் இந்த இறை செய்திகள் எமக்கு சொல்கின்றன.

அல்லாஹ்வின் ஏற்பாட்டை பொருந்திக் கொள்ள வேண்டும், அவனது தீர்மானத்தை உறுதியாக நம்ப வேண்டும் என்று போதித்த நபிகளார் தற்காப்பு முயற்சியில் ஈடுபடும் பொருட்டே பின்வருமாறு எமக்கு வழிகாட்டியுள்ளார்கள்.

தகீஃப் கோத்திர தூதுக் குழுவில் குஷ்டரோகி காணப்பட்டார் . நபியவர்கள், நாம் உமக்கு பைஅத் செய்துவிட்டோம். திரும்பிச் செல்லுங்கள் ” என்று கூறினார்கள் . (நூல் : முஸ்லிம் : 2231 )

சிங்கத்திடமிருந்து விரண்டோடுவதைப் போன்று குஷ்டரோகியை விட்டும், விரண்டு ஓடு. என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) (நூல் : புஹாரி : 5707)

கொரோனா வைரஸால் பீடிக்கப்பட்டவர்களின் தொகை நாளாந்தம் அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றது. இதனை கட்டுப்படுத்துவதற்கான பணிகள் சர்வதேச அரங்கில் பல்வேறு கோணங்களில் மிக வேகமாக முன்னெடுக்கப்படுகின்றன. மருத்துவ ஆய்வுகள் ஒரு பக்கமும் தற்காப்பு நடவடிக்கைகள் மறுபக்கமும் என உலகமே இது பற்றிய சிந்தனையில் திளைத்திருக்கின்றது.

எமது நாட்டிலும் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான பாரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்கள் கூடுகின்ற பொது இடங்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று அரசால் வழங்கப்படிருக்கின்ற அறிவுறுத்தல் இதன் ஓர் அங்கமாகும். இந்த அறிவுறுத்தலுக்கமைய முஸ்லிம்களாகிய நாம் பள்ளிவாசல்களில் தொழுகைக்காக ஒன்று கூடுவதை தவிர்ப்பது பற்றி சிந்திக்க கடமைப்பட்டிருக்கின்றோம். வணக்கஸ்தலங்களில் ஒன்று கூடுவதற்கான நேரடித் தடையை அரசாங்கம் விதிக்கவில்லையென்றாலும் சிறுபான்மை முஸ்லிம்களாகிய நாம் அரசாங்கம் நேரடியான தடையை விதிக்கும்படி நடந்து கொள்ளாமல் இந்த இக்கட்டான சூழலில் சமயோசிதமாகவும் இங்கிதமாகவும் செயல்படுவது எமது தார்மிகக் கடமையாகும்.

“ நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:குளிரும் காற்றும் நிறைந்த ஓர் இரவில் இப்னு உமர் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்தார்கள். அப்போது “அலா ஸல்லூ ஃபிர்ரிஹால்” (ஒரு முக்கிய அறிவிப்பு! நீங்கள் (உங்கள்) இருப்பிடங்களிலேயே தொழுதுகொள்ளுங்கள்) என்றும் அறிவிப்புச் செய்தார்கள். பிறகு “(கடுங்)குளிரும் மழையும் உள்ள இரவில் “ஒரு முக்கிய அறிவிப்பு! நீங்கள் (உங்கள்) இருப்பிடங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்” என்று அறிவிக்குமாறு தொழுகை அறிவிப்பாளரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பணிப்பார்கள்” என்றும் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். நூல் : முஸ்லிம் 1240

அப்துல்லாஹ் இப்னு அல் ஹாரிஸ் அறிவிக்கிறார்கள் : ‘அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ்’ என்று கூறிய பிறகு ஹய்ய அலஸ் ஸலாஹ் (தொழுகைக்கு வாருங்கள்) என்பதைக் கூறாமல் (ஸல்லூ ஃபீ புயூதிகும்) உங்கள் வீடுகளிலேயே தொழுது கொள்ளுங்கள் என்று கூறுவீராக என்று பாங்கு சொல்பவரிடம் ஒரு மழை நாளில் இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள். (இவ்வாறு கூறியதை) மக்கள் வெறுப்பது போல் இருந்தபோது ‘என்னை விட மிகவும் சிறந்தவ(ரான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளனர்’ என்று கூறினார்கள். நிச்சயமாக ஜும்ஆ அவசியமானது தான்; எனினும், நீங்கள் சேற்றிலும், சகதியிலும் நடந்து வந்து அதனால் உங்களுக்குச் சிரமம் தருவதை நான் விரும்பவில்லை’ என்றும் குறிப்பிட்டார்கள். நூல் : புகாரி 901

உயிருக்கே அச்சுறுத்தலாக அமைந்திருக்கும் இக்கொடிய நோயிலிருந்து நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ள இஸ்லாம் வழங்குகின்ற சலுகைகளை பிரயோகிப்பது காலத்தின் கடமையாகும். மழை பொழிவதனால் ஆடை அழுக்காகிவிடும் எனவே நீங்கள் வீட்டிலே தொழுது கொள்ளுங்கள் என்று சொன்ன இஸ்லாம் உயிருக்கே ஆபத்து எனும் போது நீங்கள் கூட்டாக பள்ளியில் தான் தொழுதாக வேண்டும் என்று எப்படிச் சொல்லும்? சற்று சிந்தித்து நாம் செயல்பட வேண்டும்.

இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலைகளில் ஒவ்வொருவரும் தமது வீடுகளில் குடும்பம் சகிதம் ஜமாஅத்தாக தொழுவதனால் பள்ளிவாசல்களில் தொழுவதற்கு என்ன கூலி வழங்கப்படுமோ அதே கூலி நிச்சயம் அவர்களுக்கு வழங்கப்படும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எமது நாட்டின் அரசாங்கத்துக்கு இவ்விடயத்தில் ஒத்துழைத்து, அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற வழிகாட்டல்களை கடைப்பிடித்து நோய்த் தொற்றுக்கு ஆளாகாமல் இருக்க இயலுமான அளவு பாதுகாப்பாக இருப்பதோடு அல்லாஹ்விடம் உலக மக்களின் நலனுக்காகவும் நாட்டுக்காகவும் நமக்காகவும் பிரார்த்திக்க வேண்டும்.
எமது பாதுகாப்புக்காக காலையிலும் மாலையிலும் மூன்று முறை இந்த துஆவை ஓதிவருவோம்.

அல்லாஹும்ம ஆஃபினீ ஃபீ ப(B)தனீ, அல்லாஹும்ம ஆஃபினீ ஃபீ சம்ஈ, அல்லாஹும்ம ஆஃபினீ ஃபீ ப(B)ஸரீ, லா இலாஹ இல்லா அன்த்த.

யா அல்லாஹ்! எனது உடலில் நலனை (ஆரோக்கியத்தை)த் தந்தருள்வாயாக! யா அல்லாஹ்! எனது செவிப்புலனில் நலனை (ஆரோக்கியத்தை)த் தந்தருள்வாயாக! யா அல்லாஹ்! எனது பார்வையில் நலனை (ஆரோக்கியத்தை)த் தந்தருள்வாயாக! யா அல்லாஹ்! உன்னைத் தவிர வேறு இறைவனில்லை. நூல் : அபூதாவூத் 5090
“அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மினல் பரஸி வல் ஜுனூனி வல் ஜுதாமி வமின் ஸய்யிஇல் அஸ்காம்”

பொருள்: இறைவா ! உன்னிடம் வெண்குஷ்டம், பைத்தியம், தொழுநோய், மற்றும் அனைத்து தீய (ஆபத்தான) நோய்களிலிருந்தும் பாதுகாவல் தேடுகிறேன். நூல் : அபூதாவூத் 1554, அஹ்மத் 13027

உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். காலையிலும் மாலையிலும் மூன்று முறை ‘‘பிஸ்மில்லாஹில்லதீ லா யளுர்ரு மஅஸ்மிஹி ஷைஉன் ஃபில் அர்ளி வலா ஃபிஸ்ஸமாஇ வஹுவஸ் ஸமீஉல் அலீம்‘‘ என ஒதி வருவாரோ அவருக்கு எந்தத் தீங்கும் ஏற்படமாட்டாது.

(பொருள் : அல்லாஹ்வின் பெயரால் (பாதுகாப்புக் கோருகிறேன்). அவனது பெயருடன் பூமியிலும் வானத்திலும் எந்தப் பொருளும் இடையூறு அளிக்க முடியாது. அவன் செவியுறுவோனும் நன்கறிந்தோனும் ஆவான். நூல் : அபூதாவூத் 5088 , திர்மிதி 3388
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுகல் முஆஃபாத ஃபித்துன்யா வல் ஆஃகிரா.

யா அல்லாஹ்! நிச்சயமாக நான், உன்னிடம் இவ்வுலகிலும் மறுமையிலும் ஆரோக்கியத்தைத் தருமாறு வேண்டுகின்றேன் என்ற பிரார்த்தனையை விட சிறந்த ஒரு பிரார்த்தனையை எந்த ஒரு அடியானும் கேட்பதில்லை. அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரழி) நூல் : இப்னு மாஜா 3851.

தற்காப்பு முயற்சிகளை கடைப்பிடிப்பதோடு துஆக்கள், இஸ்திஃபார்கள், தர்மங்கள் போன்றவற்றில் அதிகமாக ஈடுபடுவோம். மேலுள்ள துஆக்களை அன்றாடம் நாமும் ஓதி நமது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் கற்றுக்கொடுப்போம். அல்லாஹ்வின் மீது முழுமையான நம்பிக்கை கொண்டு, காரியங்கள் அனைத்தையும் அவனிடம் ஒப்படைத்து மன உறுதியுடன் செயல்பட முயற்சிப்போம். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.