இந்தோனேஷியாவில் 10 ஆயிரம் பள்ளிவாசல்களில் கிருமி நீக்கம்  

எம்.ஏ.எம். அஹ்ஸன்

0 1,152

இந்தோனேஷியாவில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த அங்குள்ள ஆயிரக் கணக்கான பள்ளிவாசல்களில் கிருமிநீக்கல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை மாத்திரம் புதிய 21 கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்தோனேஷியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 134 ஆக உயர்வடைந்துள்ளது.

ஜகார்த்தாவின் மத்திய பகுதியிலள்ள தென் கிழக்காசியாவின் மிகப்பெரிய பள்ளிவாசலான இஸ்திக்லால் பள்ளிவாசலின் கிருமி நீக்கச் செயற்பாடுகளை பார்வையிட கடந்த வெள்ளிக்கிழமை விடோடோ சென்றிருந்தார். இந்தோனேஷிய பள்ளிவாசல்கள் கவுன்சிலின் தலைவர் ஜஸப் கல்லா தெற்கு ஜகார்தாவிலுள்ள அல்–முனவ்வரா பள்ளிவாசலின் சுத்திகரிப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்தார்.

‘மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள பகுதிகளிலே இந்த வைரஸ் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன. அவ்வாறான இடங்களில் பள்ளிவாசல்கள் பிரதானமானதாகும்’ என கல்லா தெரிவித்துள்ளார்.

குறித்த சபை ஜகார்த்தா வளாகத்திலுள்ள பள்ளிவாசல்களை சுத்திகரிக்க பல்வேறு சுத்திகரிப்பு சேவை வழங்குநர்களுடன் இணைந்து செயற்படுகின்றது. ‘ஜகார்த்தா மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களில் உள்ள சுமார் 10,000 பள்ளிவாசல்களை சுத்திகரிப்பு செய்வதே எங்களது இலக்காகும். எங்களுடைய குழு அங்கத்தவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய வேவையுள்ளது. அவ்வாறு செய்தால் ஒரு நாளைக்கு 200 பள்ளிவாசல்கள் வரை சுத்திகரிப்பு செய்யலாம். ஒரு பள்ளியை சுத்திகரிக்க 30 நிமிடம் வரை தேவைப்படுகின்றது. பள்ளிகளின் நில அளவைப் பொறுத்து இந்த நேரம் வித்தியாசப்படுகின்றது. நாங்கள் ஏற்கனவே இரண்டு பள்ளிகளில் இந்த செயற்றிட்டத்தை பரீட்சித்து பார்த்து விட்டோம்” என கிருமிநீக்க சேவை கம்பனியொன்றின் இயக்குநர் செய்னுல் அரபீன் தெரிவித்தார்.

அல் முனவ்வர் பள்ளிவாசலின் தலைமை முகாமையாளர் அடிக்கடி குறித்த பள்ளிவாசலின் உட்புறத்தை சுத்தம் செய்வதாக தெரிவித்தார். நாடு முழுவதுமுள்ள அனைத்துப் பள்ளிவாசல்களும் இவ்வாறு கிருமி நீக்கம் செய்யப்படவுள்ளதாக சமய விவகார அமைச்சர் பக்ருல் ராஸி தெரிவித்துள்ளார். எனவே, உரிய அதிகாரிகள் வருவதற்கு முன்னர் தண்ணீர் குழாய்கள் சீரான முறையில் வேலை செய்கின்றதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு சமய விவகார அமைச்சு வேண்டியுள்ளது.

நாட்டின் எல்லா இடங்களிலும் பொது நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிவாசல்கள், சுற்றுலா தலங்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. ஜகார்த்தாவிலுள்ள அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் அலுவலக ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தவாறே வேலை செய்யும் சலுகையை வழங்கியுள்ளது.

நகரம் முழுக்க கொரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவி வருவதால் யாரும் வெளிச்செல்லாமல் வீட்டுக்குள்ளே இருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ளுமாறு ஜகார்த்தா அரசின் பிரதிநிதி அனீஸ் பஸ்வேடன் கேட்டுக்கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.