முஸ்லிம் அரசியல்வாதிகள் பல அணிகளில் போட்டி ; பிரதிநிதித்துவம் வீழ்ச்சியடையும் அபாயம்

0 1,362

இவ்வருடம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு முஸ்லிம் அரசியல்வாதிகள் பல்வேறு கட்சிகளிலும் சுயேச்சைக்குழுக்களிலும் களமிறங்கியுள்ளனர். இதன் மூலம் இம்முறை பொதுத் தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் பல மாவட்டங்களிலும் முஸ்லிம் கட்சிகள் கூட்டாக இணைந்து போட்டியிடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் புத்தளம் மாவட்டத்தைத் தவிர வேறு இடங்களில் அம் முயற்சி வெற்றியளிக்கவில்லை.

இந் நிலையில் முஸ்லிம் வேட்பாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு, தேசிய மக்கள் சக்தி மற்றும் சுயேச்சைக் குழுக்களில் இம் முறை களமிறங்கியுள்ளனர்.

கொழும்பு மாவட்டம்

இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் தொலைபேசி சின்னத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், எஸ்.எம்.மரிக்கார் , ஏ.எச்.எம். பெளஸி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மேலும் கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சியில் யானைச் சின்னத்தில் மொஹமட் பைரூஸ் ஹாஜி மற்றும் ‘பைட் கென்சர்‘ அமைப்பின் தலைவர் எம்.எஸ்.எச். மொஹமட் ஆகியோர் போட்டியிடுகின்றனர்..

கண்டி மாவட்டத்தில்

கண்டி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் தொலைபேசி சின்னத்தில் முன்னாள் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் எம்.எச்.ஏ.ஹலீம் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

இதேவேளை யானைச் சின்னத்தில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான லாபீர் ஹாஜியாரும், முத்தலிப் ஹாஜியாரும் போட்டியிடவுள்ளனர்.

கண்டி மாவட்டத்தில் பொதுஜன பெரமுன கட்சியில் தாமரை மொட்டுச் சின்னத்தில் தொழிலதிபர் ஏ.எல்.எம்.பாரிஸ் போட்டியிடவுள்ளார்.

கண்டி மாவட்டத்தில் அக்குரணை பிரதேச சபை தலைவர் இஸ்திகார் இமாதுதீன் தலைமையிலான குழுவினர் சுயேச்சைக்குழுவாக போட்டியிடுகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில்

மட்டக்களப்பு மாவட்டத்தில் முக்கிய முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் மூன்று அணிகளில் போட்டியிடுகின்றனர்.

முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ், முன்னாள் அமைச்சர் பசீர் ஷேகுதாவூத் ஆகியோர் ஒரு அணியாகவும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிசாஹீர் மௌலானா முன்னாள் முதலமைச்சர் ஹாபீஸ் நசீர அகமட் ஆகிய இருவரும் ஒரு அணியாகவும் முன்னாள் இராஜாங்க அமைச்ச அமீர் அலி ஒரு அணியாகவும் மூன்று அணிகளாக முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் போட்டியிடுகின்றனர்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிசாஹீர் மௌலானா, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக், சட்டத்தரணி றிபான் அகியோரும் ஐக்கிய சமதானக் கூட்டமைப்பில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், முன்னாள அமைச்சர்; பசீர் சேகுதாவூத் ஆகிய இருவரும் போட்டியிடுவதுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகிய கட்சிகள் இணைந்து ஐக்கிய மக்கள் சக்தியான சஜித் பிரேமதாச அணியில் போட்டியிடுகின்றனர். இக் கட்சியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதி தவிசாளர் பொறியியலாளர் எம்.எம்.அப்துர் ரஹ்மான், ஏறாவூர் லத்தீப் உட்பட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் வன்னி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடவுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.அமீர் அலி தொலைபேசி சின்னத்திலும், திருகோணமலை மாவட்டத்தில் அப்துல்லாஹ் மஹ்ரூப் தொலைபேசி சின்னத்திலும் போட்டியிடவுள்ளனர்.

இதேவேளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் சட்டத்தரணி வை.எல்.எஸ்.ஹமீட் தலைமையில் அம்பாறை மாவட்டத்தில் கே.எம். ஜவாத் (அப்துல் ரஸாக்), எஸ்.எல்.எம். ஹனீபா மதனி, நிந்தவூர் பிரதே சபை தவிசாளர் ஏ.எம். தாஹிர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம். மாஹிர், ஊடகவியலாளர் சடத்தரணி முஷாரப் முதுநபீன் உட்பட 10 பேர் போட்டியிடுகின்றனர்.

தேசிய காங்கிரஸ்

முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சி அம்பாறை மாவட்டத்தில் தனித்து குதிரைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளது. இதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி . எஸ்.எம்.எம் இஸ்மாயில் (சம்மாந்துறை) ஏ.எல்.எம்.சலீம் (நிருவாக சேவை உத்தியோகத்தர், சாய்ந்தமருது).
எஸ்.எம்.என்.மர்ஷும் மெளலானா (சடட்டத்தரணி, நிந்தவூர்), றிபாஸ் (சட்டத்தரணி, மருதமுனை ) பழீல் பீ.ஏ (அட்டாளைச்சேனை ) ]உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

திருமலையில் தே.கா. வேட்புமனு நிராகரிப்பு

திருகோணமலை மாவட்டத்தில் தேசிய காங்கிரஸின் முதன்மை வேட்பாளராக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத் நியமிக்கப்பட்டு வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்டபோதிலும் குறித்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதில் ஜோர்தானுக்கான முன்னாள் தூதுவர் லாபிரும் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய சமாதான கூட்டமைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு போட்டியிடுகிறது. இக்கட்சியின் முதன்மை வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் வண்ணாத்திப்பூச்சி சின்னத்தில் போட்டியிடவுள்ளார். அத்துடன் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹில்புல்லாஹ்வும் இங்கு ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பில் வண்ணாத்திப் பூச்சி சின்னத்தில் போட்டியிடவுள்ளார்.

ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.ரி.ஹசன் அலி தேர்தலில் போட்டியிடுவதிலிருந்தும் தவிர்ந்துள்ளார்.

கேகாலை மாவட்டம்

முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயலாளருமான கபீர் ஹாஷிம் ஐக்கிய மக்கள் சக்தியில் தொலைபேசி சின்னத்தில் கேகாலை மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடவுள்ளார். இதேவேளை முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நிஹால் பாரூக் கேகாலை மாவட்டத்தில் யானைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளார். – Vidivelli.lk

Leave A Reply

Your email address will not be published.