நாட்டில் அரசாங்கம் இல்லை; நான் மட்டுமே அதிகாரத்தில் அடுத்த 24 மணி நேரம் முக்கியமானது என்கிறார் ஜனாதிபதி
நீதிமன்ற தீர்ப்பினை அடுத்து தற்போது நாட்டில் அரசாங்கம் ஒன்று இல்லை, ஜனாதிபதி நான் மட்டுமே அதிகாரத்தில் உள்ளேன். அடுத்த 24 மணி நேரத்தில் எனக்கு அதிக பொறுப்புகள் உள்ளது. ஆகவே அரசாங்கத்தை அமைத்துவிட்டு உடனடியாக பாதுகாப்பு சபையை கூட்டி தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில் தீர்வு பெற்றுத் தருகின்றேன் என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களான எம்.எ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் ஆகியோர் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் நிகழ்கால அரசியல் நெருக்கடிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். நேற்று பிற்பகல் நான்கு மணியளவில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் அரசியல் கைதிகள் குறித்து எந்த இறுதித் தீர்மானமும் எடுக்கப்படாமல் முடிவுக்கு வந்துள்ளது.
இந்த சந்திப்பில் சட்டமா அதிபர், பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட அரச தரப்பினரும் கலந்துகொண்டுள்ளனர். இதன்போது சட்டமா அதிபர் சார்பில் தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. நீண்டகால சிறைவாசம் அனுபவிக்கும் தமிழ் கைதிகளின் பட்டியலை முன்வைத்துள்ளனர். எனினும் இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் அதனை மறுத்து தம் தரப்பு நியாயங்களை முன்வைத்துள்ளனர். குறிப்பாக பத்து ஆண்டுகளுக்கு மேலான காலம் சிறையில் இருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும், எந்தவித ஆதராமும் இல்லாத குற்றச்சாட்டுகளில் இவர்கள் 15 தொடக்கம் 20 ஆண்டுகள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஆகவே இவர்களை விடுவிக்க வேண்டும். தமிழ் அரசியல் கைதிகள் விவாகரத்தில் அரசியல் ரீதியில் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற காரணிகளை முன்வைத்துள்ளனர்.
எனினும் தற்போதுள்ள அரசியல் நெருக்கடி நிலைமை, அரசாங்கம் ஒன்று இல்லாத நிலையில் உடனடியாக தீர்மானம் எதுவும் எடுக்க இயலாது உள்ளது. ஆகவே இப்போதுள்ள அரசியல் நெருக்கடிகளை தீர்த்துவிட்டு தாம் தீர்வு ஒன்றினை பெற்றுத் தருவதாக ஜனாதிபதி தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளார்.
சந்திப்பு குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் கூறுகையில்,
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தொடர்சியாக பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இன்று (நேற்று )ஜனாதிபதியுடன் எமக்கு சந்திப்பொன்று வழங்கப்பட்டது. இதற்கமைய இன்றைய தினம் (நேற்று ) நாம் ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். இதன்போது அரசியல் கைதிகள் விவகாரம் மற்றும் அரசியல் நெருக்கடிகள் குறித்து கலந்துரையாடினோம். அரசியல் கைதிகளை விடுதலை செய்வதில் ஏன் இந்தத் தாமதம் என்ற கேள்வி எம்மால் எழுப்பப்பட்டது. எனினும் இப்போதுள்ள அரசியல் நெருக்கடிகள் மற்றும் நீதிமன்றம் நிகழ்கால அரசாங்கத்திற்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் நாட்டில் அரசாங்கம் ஒன்று இல்லை, ஜனாதிபதியாக நான் மட்டுமே அதிகாரத்தில் உள்ளேன், ஆகவே இப்போது எந்த தீர்மானமும் எடுக்க இயலாது உள்ளது என ஜனாதிபதி எம்மிடம் தெரிவித்தார். அத்துடன் அடுத்த 24 மணித்தியாலங்கள் எனக்கு மிகவும் நெருக்கடியான காலமாகும். இந்த 24 மணித்தியாலத்தில் நான் முக்கியமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது ஆகவே இப்போது அரசியல் கைதிகளின் நிலைமைகள் குறித்து ஆராய முடியாது. அரசாங்கம் ஒன்றினை அமைத்துவிட்டு விரைவில் பாதுகாப்பு சபையைக் கூட்டி இந்த பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வினை எடுப்பதாக வாக்குறுதியளித்துள்ளார் என தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.
-Vidivelli