சவூதியில் உம்ரா தடை; ஈரானில் ஜும்ஆ இடைநிறுத்தம்
முஸ்லிம்களின் வணக்க வழிபாடுகளையும் பாதித்துள்ள கொரோனா வைரஸ்
உலக மக்கள் தற்போது சனக்கூட்டமிக்க இடங்களுக்கு செல்வதைத் தவிர்தது வருகின்றனர். அவசியமற்ற பயணங்களை இரத்துச் செய்கின்றனர். கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டிலிருந்தவாறே கடமையாற்றும் முறையினையும் கைக்கொண்டு வருகின்றனர்.
ஒருவரையொருவர் வாழ்த்திக்கொள்ளுதல் அல்லது குறித்த சில பண்டிகைகளைக் கொண்டாடுவதில் மாற்றங்களை ஏற்படுத்துமாறு பல நாடுகள் தமது பிரஜைகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன. கொவிட் -– 19 என்ற கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் ஆபத்திலிருந்து தவிர்ந்து கொள்ளும் வகையில் எவ்வாறு தொழுகையில் ஈடுபட வேண்டும் அல்லது புனித தினங்களை அனுஷ்டிக்க வேண்டும் சமயம் சார்ந்த நிறுவனங்கள் ஆலோசனைகளை முன்வைத்துள்ளன.
சீனாவில் ஆரம்பித்த இந்த வைரஸ் தாக்கம் உலகளவில் 93,000 இற்கும் அதிகமானோருக்கு தொற்றியுள்ளதோடு 3,000 இற்கும் அதிகமானோரைக் காவுகொண்டுள்ளது. தொழுகையில் ஈடுபடுபவர்கள் மற்றும் புனித யாத்திரைகளில் ஈடுபடுவோருக்கு முஸ்லிம் நாடுகள், அமைப்புக்கள், இஸ்லாமிய இணையத் தளங்கள் வழங்கியுள்ள ஆலோசகைளை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
உம்ரா கடமையை நிறைவேற்றத் தடை
சவூதி அரேபியா உம்ரா கடமையினை நிறைவேற்றுவதற்காக புனிதத் தலங்களுக்கு வெளிநாட்டவர்கள் விஜயம் செய்வதற்கு முதலில் தடை விதித்தது.
பின்னர் கடந்த புதன்கிழமை முதல் சவூதி அரேபியா தனது நாட்டுப் பிரஜைகளுக்கும் ஏனைய நாட்டவர்களுக்கும் உம்ரா கடமையினை நிறைவேற்ற தடை விதித்துள்ளதாக சவூதி ஊடக முகவரகம் அறிவித்தது.
இந்த நகர்வு வளைகுடா நாடுகளில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக சவூதி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை என சவூதி ஊடக முகவரகம் தெரிவித்தது.
கடந்த வாரம் மக்காவுக்கும் பெரிய பள்ளிவாசலின் மத்தியில் அமைந்திருக்கும் கஃபாவுக்கும் வெளிநாட்டவர்கள் வருவதை சவூதி அரசாங்கம் தடை செய்திருந்ததோடு மதீனாவில் அமைந்துள்ள இறைத் தூதரின் பள்ளிவாசலுக்குச் செல்வதற்கும் இடைக்காலத் தடை விதித்திருந்தது.
இவ்வருட ஹஜ் கடமை ஜூலை 28 ஆந் திகதி தொடக்கம் ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி வரை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் வழக்கமாக மூன்று மில்லியன் மக்கள் கலந்து கொள்வர். ஏற்கனவே இவ்வருட ஹஜ் கடமைக்காக 60,000 இற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ள போதிலும் இதுவரை சவூதி அரசாங்க அதிகாரிகள் எவ்வித கட்டுப்பாடுகளையும் அது தொடர்பில் அறிவிக்கவில்லை.
சவூதி அரேபியாவில் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை இதுவரை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஈரானில் ஜும்ஆ தொழுகை இடைநிறுத்தம்
ஈரானின் பிரதான நகரங்களில் வெள்ளிக்கிழமைத் தொழுகை இடைநிறுத்தப்பட்டுள்ளது. நாளாந்தம் ஈரானில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவோரினதும் உயிரிழப்போரினதும் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றது. கடந்த புதன்கிழமை மாலை வரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,922 ஆகவும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 92 ஆகவும் காணப்பட்டது. இதனையடுத்து ஈரானில் அனைத்து மாகாணங்களின் தலைநகரங்களிலும் வெள்ளிக்கிழமை தொழுகை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நோய் பரவக்கூடிய ஒன்றாகும் என தனது அமைச்சரைவைக் கூட்டத்தில் தெரிவித்த ஈரானின் ஜனாதிபதி ஹஸன் ரூஹானி, கிட்டத்தட்ட எமது நாட்டின் அனைத்து மாகாணங்களையும் அது ஆக்கிரமித்துள்ளது. உலகின் பெரும்பாலான நாடுகள் இத் தொற்றுக்குள்ளாகியுள்ளன. எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக இதனைக் கட்டுப்படுத்த நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.
சொந்தமாக தொழுகை விரிப்பை பயன்படுத்த வேண்டும் சொந்தமாக தொழுகை விரிப்பை பயன்படுததுமாறும் கைலாகு கொடுப்பதை தவிர்ந்துகொள்ளுமாறும் சிங்கப்பூர் முஸ்லிம் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சிங்கப்பூரின் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சரான மசாகொஸ் ஸுல்கிப்லி முஸ்லிம்களை பள்ளிவாசலுக்கு தொழுகை விரிப்புக்களைக் கொண்டுவருமாறும் ஒருவரோடு ஒருவர் கைலாகு கொடுப்பதை தவிர்ந்துகொள்ளுமாறும் ஆலோசனை வழங்கியுள்ளதாக த ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த சூழ்நிலையில் நாம் கைலாகு கொடுக்கக் கூடாது, அவ்வாறு செய்தால் கைகளை கழுவிக் கொள்ளுங்கள், முகத்தில் கை வைப்பதைத் தவிர்ந்து கொள்ளுங்கள். இதனை எப்போதும் மறந்துவிடுகின்ற எம்மைப் போன்ற பலருக்கான முன்னெச்சரிக்கை ஆலோசனை இதுவாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
தொழுகைக்கு வருபவர்கள் அனைவரினதும் உடல் வெப்பநிலையைப் பரிசோதிப்பது சாத்தியமற்றதாகக் காணப்படுகின்றது. கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமைக்கான அறிகுறிகள் தென்படும் முஸ்லிம்கள் தமது வீடுகளிலேயே இருந்துகொள்ளுமாறு மசாகொஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் 100 இற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள போதிலும் பெரும்பாலான நோயாளர்கள் குணமடைந்துள்ளனர்.
சுத்தம் தொடர்பான ஆலோசனைகளைப் பின்பற்றுக சுத்தம் தொடர்பான ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு ஐக்கிய இரச்சியத்திலுள்ள முஸ்லிம் நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
பிரித்தானியாவில் பல முஸ்லிம் நிறுவனங்களை ஒன்றிணைத்துச் செயற்படும் பெரிய அமைப்பான பிரித்தானிய முஸ்லிம் கவுன்ஸில் அரசாங்கத்தின் ஆலோசனைகளைப் பின்பற்றுவதோடு ஒன்றுகூடல்களின்போது அவதானமாகவும் இருக்குமாறு பள்ளிவாசல்களுக்கும் இஸ்லாமியப் பாடசாலைகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது. மதரஸாக்கள், பாடசாலைகள் கை கழுவுவதை ஊக்குவிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள பிரித்தானிய முஸ்லிம் கவுன்ஸில் பள்ளிவாசல்கள் விஷேடமாக வுழு செய்யும் இடங்களில் போதியளவு சவர்க்காரங்களை வைக்குமாறும் ஆலோசனை வழங்கியுள்ளது.
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 87 ஆக அதிகரித்துள்ளது.
வீட்டிலேயே தொழுங்கள்
முஸ்லிம்களை வீட்டிலேயே தொழுதுகொள்ளுமாறு தஜிகிஸ்தான் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஒன்பது மில்லியன் மக்கள் வாழும் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தஜிகிஸ்தான் அண்டை நாடுகளான சீனா மற்றும் ஆப்கானிஸ்தான் அதேபோன்று தென்கொரியா, ஈரான் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுடனான தனது எல்லையை மூடியுள்ளது. மார்ச் 21 தொடக்கம் 25 வரை அந் நாட்டில் கொண்டாடப்படும் நௌருஸ் அல்லது பேர்சியன் புதுவருடக் கொண்டாட்டத்தை இரத்துச் செய்துள்ளது. தஜிகிஸ்தானில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் எவரும் இல்லாதபோதிலும் வெள்ளிக்கிழமைத் தொழுகை இடைநிறுத்தப்பட்டுள்ளது.-Vidivelli
- எம்.ஐ.அப்துல் நஸார்