ஈஸ்டர் தாக்குதல், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள்: குற்றவாளிகளை சர்வதேச பொறிமுறையின் கீழ் தண்டிக்குக

மத சுதந்திரம் தொடர்பான ஐ.நா. விசேட அறிக்கையாளர் அஹ்மட் ஷஹீத் இலங்கை அரசாங்கத்திற்கு பரிந்துரை

0 2,605

இலங்­கையில் இடம்­பெற்ற ஈஸ்டர் குண்­டுத்­தாக்­குதல் மற்றும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­முறைச் சம்­ப­வங்கள் தொடர்பில் உரிய விசா­ர­ணை­களை மேற்­கொண்டு சர்­வ­தேச மனித உரி­மைகள் பொறி­மு­றை­க­ளுக்­க­மைய குற்­ற­வா­ளி­க­ளுக்கு தண்­டனை வழங்க வேண்டும்.

குறிப்­பாக வன்­மு­றை­களைத் தூண்­டி­ய­வர்கள், ஈஸ்டர் குண்­டுத்­தாக்­கு­த­லுக்கு கார­ண­மானோர் உட்­பட சகல குற்­ற­வா­ளி­களும் தண்­டிக்­கப்­பட வேண்டும் என மத சுதந்­திரம் தொடர்­பான ஐக்­கிய நாடுகள் சபையின் விசேட அறிக்­கை­யாளர் அஹ்மட் ஷஹீத் தெரி­வித்­துள்ளார்.

கடந்த 2019 ஆகஸ்ட் 15 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்டு திரட்­டிய தக­வல்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு ஜெனீவா மனித உரி­மைகள்‌ பேர­வையின்‌ 43 ஆவது அமர்வில்‌ கடந்த மார்ச் 2 ஆம் திகதி முன்­வைத்த அறிக்­கையின் பரிந்­து­ரை­க­ளி­லேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்­கையில் போருக்குப் பின்­ன­ரான நிலை­மாறு காலப்­ப­கு­தியில் சகல சமூ­கங்­க­ளுக்­கு­மி­டையே பாது­காப்­பற்ற சூழல் தோன்­றி­யுள்­ளதை அவ­தா­னிக்க முடி­கி­றது. குறிப்­பாக இக் காலப்­ப­கு­தியில் இன, மத சமூ­கங்­க­ளி­டையே பதற்­றங்கள் பதி­வா­கி­யுள்­ளன. மேலும் 2019 ஈஸ்டர் குண்­டுத்­தாக்­கு­த­லுக்கு முன்னர் பல இன வன்­முறைச் சம்­ப­வங்­களும் மத தீவி­ர­வாத நிகழ்­வு­களும் தொடர்ச்­சி­யாக இடம்­பெற்­றுள்­ளன.

ஈஸ்டர் குண்டுத் தாக்­கு­த­லுக்குப் பின்னர் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான அச்­சு­றுத்­தல்­களும் வன்­மு­றை­களும் சடு­தி­யாக அதி­க­ரித்­தன. முஸ்­லிம்­களின் வர்த்­தக நிலை­யங்கள் பகிஷ்­க­ரிக்­கப்­பட்­டன. முஸ்லிம் பெண்­களின் ஆடை­களை இலக்கு வைத்து தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­ட­துடன் ஊடக பரப்­பு­ரை­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. முஸ்லிம் மக்­களும் அர­சியல் சிவில் தலை­வர்­களும் குண்டுத் தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்­களை முன்­னரே நிரா­க­ரித்­தி­ருந்த போதிலும், முஸ்­லிம்கள் மீது இலக்கு வைக்­கப்­பட்ட இன­வாத பிர­சா­ரங்கள் தொடர்ந்­தன.

பொலி­சாரின் தர­வு­களின் படி ஈஸ்டர் தாக்­கு­தலைத் தொடர்ந்து 2289 பேர் அவ­ச­ர­காலச் சட்டம் அல்­லது பயங்­க­ர­வாத தடைச் சட்டம் அல்­லது ஐ.சி.சி.பி. ஆர் சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்­டனர். இவர்­களில் மிகப் பெரும்­பா­லா­ன­வர்கள் முஸ்­லிம்­க­ளாவர்.

நாடெங்கும் முஸ்­லிம்­களின் வீடு­களும் பள்­ளி­வா­சல்­களும் மத்­ர­ஸாக்­களும் படை­யி­னரால் கடும் தேடுதல் நட­வ­டிக்­கைக்­குட்­ப­டுத்­தப்­பட்­டன. சில இடங்­களில் பள்­ளி­வா­சல்­க­ளுக்குள் நாய்­களும் கொண்டு செல்­லப்­பட்டு எந்­த­வி­த­மான மரி­யா­தை­யு­மின்றி தேடு­தல்கள் இடம்­பெற்­றன. பத்­தி­ரி­கை­களும் தொலைக்­காட்­சி­களும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான செய்­தி­களை தொடர்ந்து வெ ளியிட்­டன.

ஈஸ்டர் தாக்­கு­தலை வாய்ப்­பாக பயன்­ப­டுத்தி இன, மத தீவி­ர­வாத குழுக்கள் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான பாரிய வன்­மு­றை­களை கட்­ட­விழ்த்­தன. அதி­கா­ரிகள் இவற்றைக் கட்­டுப்­ப­டுத்­தாது மெள­னம்­காத்­தமை இச்­சக்­தி­க­ளுக்கு வாய்ப்­பாக அமைந்­தது.

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான தாக்­கு­தல்கள் புதி­யவை அல்ல. அவை 2013 முதலே நடை­பெற்று வரு­கின்­றன. 2013 இல் கிராண்ட்பாஸ் பள்­ளி­வாசல் தாக்­குதல், 2014 இல் பொது பல சேனாவின் பின்­ன­ணியில் அரங்­கே­றிய அளுத்­கம வன்­மு­றைகள், 2017 ஏப்ரல் முதல் ஜூன் வரை நாட்டின் பல பகு­தி­க­ளிலும் முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்­களை இலக்கு வைத்த வன்­மு­றைகள், 2017 நவம்­பரில் கிந்­தோட்­டையில் இடம்­பெற்ற வன்­மு­றைகள், 2018 மார்ச்சில் இடம்­பெற்ற கண்டி, திகன வன்­மு­றைகள் ஆகி­ய­வற்றைக் குறிப்­பிட்டுச் சொல்ல முடியும்.

ஈஸ்டர் தாக்­கு­த­லை­ய­டுத்து முகத்­திரை அணி­வது தடை செய்­யப்­பட்­டது. இத­னை­ய­டுத்து முஸ்லிம் பெண்கள் பொது இடங்­களில் அசெ­ள­க­ரி­யங்­க­ளுக்­குள்­ளாக்­கப்­பட்ட பல சம்­ப­வங்கள் பதி­வா­கின. அர­சாங்க நிறு­வ­னங்­க­ளிலும் கூட முஸ்லிம் பெண்கள் அசெ­ள­க­ரி­யங்­க­ளுக்­குள்­ளாக்­கப்­பட்­டனர்.

இலங்­கையில் வாழும் பெரும்­பான்­மை­யான முஸ்­லிம்கள் இஸ்­லா­மிய தீவி­ர­வாத கொள்­கை­களை ஆத­ரிப்­ப­வர்கள் என்­ப­தற்கு எந்­த­வித ஆதா­ரங்­க­ளு­மில்லை. சஹ்ரான் குழு­வினர் உள்ளூர் சூபி முஸ்­லிம்கள் மீது தாக்­கு­தல்­களை நடத்­திய போதிலும் சஹ்­ரானை சகல முஸ்லிம் அர­சியல், சிவில் தரப்­பு­களும் நிரா­க­ரித்­தன. சஹ்­ரானின் போத­னை­களால் முஸ்லிம் சமூ­கத்தில் தீவிரப் போக்கு வளரும் அபா­யத்தை முஸ்­லிம்கள் தொடர்ச்­சி­யாக அர­சாங்­கத்­திற்கும் பாது­காப்புத் தரப்­பிற்கும் தெரி­யப்­ப­டுத்தி வந்­தனர். எனினும் அர­சாங்க தரப்­பினால் இந்த எச்­ச­ரிக்­கைகள் கவ­னத்திற் கொள்­ளப்­ப­ட­வில்லை.

2012 முதல் பொது பல சேனா அமைப்பு தனது செயற்­பா­டு­களை ஆரம்­பித்து மிகக் குறு­கிய காலத்தில் நாட்டில் செல்­வாக்குச் செலுத்தும் அமைப்­பாக மாறி­யது. இலங்­கையில் முஸ்­லிம்­களின் சனத்­தொகை அதி­க­ரிப்­ப­தா­கவும் இஸ்­லா­மிய அச்­சு­றுத்தல் உள்­ள­தா­கவும் பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்­தது. இதன் மூலம் சமூ­கங்­க­ளி­டையே பிள­வுகள் தோற்­று­விக்­கப்­பட்­டன.

இலங்­கையின் சட்ட முறை­மை­யா­னது சகல மக்­க­ளுக்கும் சம­மான உரி­மை­களை வழங்­கு­கின்ற போதிலும் இந்த உரி­மை­களை அனு­ப­விப்­பதில் பல சவால்கள் நில­வு­கின்­றன. மத சிறு­பான்­மை­யினர் பல்­வேறு தடை­களை எதிர்­கொள்­கின்­றனர். மத நிகழ்­வு­க­ளுக்கும் நிறு­வ­னங்­க­ளுக்கும் இடை­யூ­றுகள் விளை­விக்­கப்­பட்­டுள்­ளன. சிறு­பான்மை சமூ­கங்கள் தமது மத நிலை­யங்­களை நிர்­மா­ணிப்­பதில் தடைகள் உள்­ளன. குறிப்­பாக கத்­தோ­லிக்­கர்­க­ளுக்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் எதி­ராக மத தீவிரப் போக்­கா­ளர்­களால் வெறுப்­பூட்டும் பிர­சா­ரங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

இப் பின்­ன­ணியில் இலங்கை அர­சாங்­கத்­திற்கு பின்­வரும் பரிந்­து­ரை­களை முன்­வைக்க விரும்­பு­கிறேன்.

1. இலங்­கையில் மத சகிப்­புத்­தன்­மையும் பதற்­றமும் நீடிப்­ப­தற்­கான அடிப்­படைக் கார­ணி­களைக் கண்­ட­றிந்து சகல இனங்கள் மற்றும் மதங்­க­ளி­டையே நம்­பிக்­கையைக் கட்­டி­யெ­ழுப்பும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்டும்.

2. சகல வன்­முறைச் சம்­ப­வங்கள் தொடர்­பிலும் உரிய விசா­ர­ணை­களை மேற்­கொண்டு சர்­வ­தேச மனித உரி­மைகள் பொறி­மு­றை­க­ளுக்­க­மைய குற்­ற­வா­ளி­க­ளுக்கு தண்­டனை வழங்க வேண்டும். குறிப்­பாக வன்­மு­றை­களைத் தூண்­டி­ய­வர்கள், ஈஸ்டர் குண்­டுத்­தாக்­கு­த­லுக்கு கார­ண­மானோர் உட்­பட சகல குற்­ற­வா­ளி­களும் தண்­டிக்­கப்­பட வேண்டும்.

3. சர்­வ­தேச சட்­டங்­க­ளுக்கு உட்­பட்ட வகையில் தீவி­ர­வாத வன்­மு­றை­க­ளையும் பயங்­க­ர­வா­தத்­தையும் தடுத்து நிறுத்­து­வ­தற்­கான பொறி­மு­றையை வகுக்க வேண்டும்.

4. வெறுப்புப் பேச்சை எதிர்­கொள்­ளவும் அது தொடர்­பான முன்­னெச்­ச­ரிக்­கை­களை வழங்­கவும் சர்­வ­தேச மனித உரிமைச் சட்­டங்­க­ளுடன் இணைந்­த­தாக கண்­கா­ணிப்புப் பொறி­முறை ஒன்றை கட்­டி­யெ­ழுப்ப வேண்டும்.

5. 1979 ஆம் ஆண்டின் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை மீளப் பெறு­வ­துடன் மதம் சார் வன்­மு­றை­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்­களை தண்­டிக்கும் வகையில் தண்­டனைச் சட்டக் கோவையில் கோவையில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

6. பாடசாலை மாணவர்கள் மத்தியில் திறந்த சமூகம், புரிந்துணர்வு, சமாதானம், சகிப்புத்தன்மை, பாலின சமத்துவம் மற்றும் நட்புறவை கட்டியெழுப்புவதை அடிப்படையாகக் கொண்டு கல்வி முறைமையில் திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும்.

7. மிதவாத மத தலைவர்களின் கருத்துக்களை ஊக்குவிப்பதுடன் இனங்கள், மதங்களுக்கிடையிலான கலந்துரையாடலுக்கு ஆதரவளிக்க வேண்டும்.

8. மதங்களுக்கி டையிலான கலந்துரையாடலில் பங்கேற்கும் வகையில் பெண்களை வலுப்படுத்துவதுடன் மத ரீதியான திருமண சட்டங்கள் மூலம் அவர்களது உரிமைகள் கட்டுப்படுத்தப் படாதிருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். முஸ்லிம் தனியார் சட்டத்தின் கீழ் பெண்களுக்கு பாகுபாடு காட்டப்படுவது தொடர்பிலும் எனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

இதில் உரிய திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டியது அவசியமாகும்.

இலங்கை அர­சாங்­கத்தின் பதில்

அஹ்மத் ஷஹீதின் மேற்படி அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் ஜெனீவா அமர்வில் பதில் வழங்கியுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
சிறப்பு அறிக்­கை­யா­ளரின்‌ அறிக்­கை­யா­னது, உயிர்த்­தெ­ழுந்த ஞாயிறு தாக்­கு­தல்­களைத்‌ தொடர்ந்து சில மாதங்­க­ளி­லேயே இலங்­கையில்‌ மத சுதந்­திரம்‌ அல்­லது நம்­பிக்­கைக்­கான இடத்தை தீர்­மா­னிக்க முற்­பட்­டது துர­திர்ஷ்­ட­வ­ச­மா­னது என்று நாங்கள்‌ கரு­து­கிறோம்‌. இந்த தாக்­கு­தல்­களின்‌ அளவு இலங்­கையில்‌ ஒரு தேசிய அவ­ச­ர­கால நிலையை ஏற்­ப­டுத்தி, அனைத்து சமூ­கங்­களின்‌ பாது­காப்பு மற்றும்‌ பாது­காப்பின்‌ நல­னுக்­காக நாட்டின்‌ பல்­வேறு பகு­தி­க­ளி­லுள்ள பயங்­க­ர­வாதக்‌ கூறு­களை அடை­யாளம்‌ கண்டு மட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு அர­சாங்கம்‌ உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மென்ற நிலையை ஏற்­ப­டுத்­திய அதே­வேளை, தேசிய பாது­காப்பு மற்றும்‌ மனித உரி­மை­க­ளுக்கு இடை­யி­லான நுட்­ப­மான சம­நி­லை­யையும்‌ பேண­வேண்­டி­யி­ருந்­தமை நினை­வு­கூ­ரத்­தக்­கது. இத்‌ தாக்­கு­தல்­க­ளுக்குப்‌ பின்னர்‌, உள்­நாட்டு அமை­தி­யின்­மையின்‌ எந்­த­வொரு பழி­வாங்கும்‌ செயல்­க­ளையும்‌ தடுக்­கவும்‌, சட்டம்‌ ஒழுங்கை பரா­ம­ரிக்­கவும்‌, மிக முக்­கி­ய­மாக அனைத்து மக்­க­ளதும்‌, குறிப்­பாக முஸ்லிம்‌ சமூ­கத்தின்‌ பாது­காப்­பையும்‌ உறுதி செய்ய அர­சாங்கம்‌ உட­ன­டி­யாக அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும்‌ எடுத்­தது.

நிலை­மையைக்‌ கட்­டுப்­ப­டுத்த உத­விய நாட்டின்‌ சிவில்‌ மற்றும்‌ அர­சியல்‌ தலை­மையின்‌ ஆக்­க­பூர்­வ­மான மற்றும்‌ நல்­லி­ணக்க அணு­கு­மு­றைகள்‌ மற்றும்‌ அழைப்­புகள்‌ பர­வ­லாக ஏற்­றுக்­கொள்­ளப்­பட்டு பாராட்­டப்­பட்­டன.

குறிப்­பாக முஸ்லிம்‌ சமூ­கத்­தினர்‌ விசா­ர­ணைகள்‌ மற்றும்‌ தேடல்‌ நட­வ­டிக்­கை­களில்‌ பாது­காப்பு நிறு­வ­னங்­க­ளுடன்‌ ஒத்­து­ழைப்­ப­தற்குச்‌ செய­லூக்­க­மான நட­வ­டிக்­கை­களை எடுத்­தனர்‌. கைதான சந்­தேக நபர்­க­ளுக்குச்‌ சட்­ட­ரீ­தி­யான பாது­காப்­புகள்‌ வழங்­கப்­பட்­ட­துடன்‌ அவர்­களின்‌ நிலை­மையைக்‌ கண்­கா­ணிக்க சுயா­தீன நிறு­வ­னங்­க­ளுக்கும்‌ அனு­மதி வழங்­கப்­பட்­டது. பயங்­க­ர­வாத தாக்­கு­தல்கள்‌ நடந்த 3 வாரங்­க­ளுக்குப்‌ பின்‌ இடம்­பெற்ற குழு­வன்­முறைச்‌ சம்­ப­வங்கள்‌ இன­ரீ­தி­யாக ஊக்­க­ம­ளிக்­கப்­ப­ட­வில்லை, அவை சட்­டத்­திற்கு கட்­டுப்­ப­டா­தோரால்‌ மேற்­கொள்­ளப்­பட்­டன. சிலரைக்‌ கைது செய்தல்‌ மற்றும்‌ சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை நீதியின்‌ முன்‌ நிறுத்­து­வதன்‌ மூலம்‌ அர­சாங்கம்‌ இக்­கும்­பல்­களைத்‌ திறம்­பட கட்­டுப்­பாட்­டுக்குள்‌ கொண்­டு­வந்­தது. விரைவில்‌ இந்த நாடு சாதா­ரண நிலைக்குத்‌ திரும்­பி­ய­துடன்‌, சகல இலங்­கை­யர்­க­ளுக்கும்‌, நாட்­டுக்கு வருகை தரு­ப­வர்­க­ளுக்­கு­மான பாது­காப்பும்‌ உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது.

சம்­பந்­தப்­பட்ட சட்ட ஏற்­பா­டு­க­ளையும்‌ மற்றும்‌ தேவை­யான சட்ட செயற்­பா­டு­க­ளையும்‌ செயற்­ப­டுத்­து­வதன்‌ மூலம்‌ சட்­டமும்‌ ஒழுங்கும்‌ வலு­வாக மீள நிறு­வப்­பட்­டது. இது­வி­ட­யத்தில்‌ இலங்கை பாது­காப்பு படை­யி­னரின்‌ உட­ன­டி­யான, தொழில்‌ ஈடு­பா­டுள்ள நட­வ­டிக்­கை­யா­னது குறிப்­பாகப்‌ பாராட்­டப்­பட்­டது.

அதனால்‌, சிறப்பு அறிக்­கை­யா­ளரின்‌ அறிக்­கை­யி­லுள்ள; “இலங்கை பாது­காப்பு படை­யினர்‌ வன்­மு­றையைத்‌ தடுக்­கவோ நிறுத்­தவோ செயற்­ப­டாது வன்­மு­றைக்­கும்­ப­லுடன்‌ ஒத்­து­ழைத்­தமை” தொடர்­பான “கடு­மை­யான கரி­ச­னங்கள்‌”, “இந்த வன்­மு­றைக்­கெ­தி­ரான அதி­கா­ரி­களின்‌ நட­வ­டிக்­கை­யின்மை” மற்றும்‌ “வன்­முறைச்‌ செயல்கள்‌ அதி­கா­ரி­களின்‌ மெளனம்‌ மற்றும்‌ செயற்­பா­டின்­மையால்‌ மகிழ்­விக்­கப்­பட்­டமை” ஆகிய தவ­றான குறிப்­புக்­களை இந்த அர­சாங்கம்‌ நிரா­க­ரிக்­கி­றது. சம்­ப­வங்கள்‌ நடந்­த­தாகக்‌ கூறப்­பட்­ட­வு­ட­னேயே அவை முழு­மை­யாக மறுக்­கப்­பட்டு விளக்­க­ம­ளிக்­கப்­பட்ட பின்­னரும்‌ கூட, இந்த தவ­றான சம்­ப­வங்கள்‌ அறிக்­கையில்‌ சேர்க்­கப்­பட்­டுள்­ளமை வருந்­தத்­தக்­கது. சட்­டத்­திற்­கேற்ப பயங்­க­ர­வாத செயல்­களைத்‌ தடுக்க குற்­ற­வியல்‌ விசா­ர­ணைகள்‌ நடத்­தப்­பட்ட நிகழ்­வு­களை, மதத்தின்‌ அல்­லது நம்­பிக்­கையின்‌ சுதந்­தி­ரத்தை மீறும்‌ முயற்­சி­யாகச்‌ சித்­த­ரிக்க இந்த அறிக்கை முயன்­றதும்‌ வருந்­தத்­தக்­கது.

ஆடை விதிகள்‌ மீதான கட்­டுப்­பா­டுகள்‌ தொடர்­பான குறிப்­பு­களைப்‌ பொறுத்­த­வரை, அந்த நேரத்­தி­லி­ருந்த உட­ன­டி­யான பாது­காப்பு அச்­சு­றுத்­தலைக்‌ கருத்தில்‌ கொண்டு, அடை­யா­ளத்தை மறைப்­பதைத்‌ தடுக்கும்‌ நோக்கில்‌, அவ­ச­ர­கால விதி­மு­றை­களின்‌ கீழ்‌ சம்­பந்­தப்­பட்ட ஒழுங்­கு­முறை ஒரு தற்­கா­லிக நட­வ­டிக்­கை­யா­கவே இருந்­த­தென்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

பொது­மக்­களின்‌ பாது­காப்பு, ஒழுங்கு, உடல்­நலம்‌, அல்­லது ஒழுக்கம்‌ அல்­லது மற்­ற­வர்­களின்‌ அடிப்­படை உரி­மைகள்‌ மற்றும்‌ சுதந்­தி­ரங்­களைப்‌ பாது­காக்கும்‌ நோக்­கத்­திற்­காக ஒரு­வரின்‌ மதம்‌ அல்­லது நம்­பிக்­கை­களின்‌ சுதந்­தி­ரத்தை சட்­டத்­தினால்‌ மட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு அனு­ம­திக்­கி­றது என, சிவில்‌ மற்றும்‌ அர­சியல்‌ உரி­மைகள்‌ தொடர்­பான சர்­வ­தேச ஒப்­பந்­தத்தில்‌ குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது என்­பதை சபையின் கவ­னத்­திற்கு கொண்­டு­வர விரும்­பு­கிறோம்‌.

சிறு­பான்­மை­யி­னரைப்‌ பாது­காக்க சிவில்‌ மற்றும்‌ அர­சியல்‌ உரி­மைகள்‌ தொடர்­பான சர்­வ­தேச ஒப்­பந்த சட்டம்‌ பயன்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை, ஆனால்‌ மதம்‌ அல்­லது நம்­பிக்­கையின்‌ சுதந்­தி­ரத்தைக்‌ குறைக்கும்‌ ஒரு “அடக்­கு­முறைச்‌ சாத­ன­மாக” மாறி­யுள்­ளது என்று அறிக்­கையில்‌ தவ­றாக குறிப்­பி­டப்­பட்­டி­ருப்­பதை இலங்கை திட்­ட­வட்­ட­மாக நிரா­க­ரிக்­கி­றது. 2007 இல்‌ சிவில்‌ மற்றும்‌ அர­சியல்‌ உரி­மைகள்‌ தொடர்­பான சர்­வ­தேச ஒப்­பந்தச்‌ சட்டம்‌ இயற்­றப்­பட்­ட­தி­லி­ருந்து, இச்­சட்­டத்தின்‌ கீழ்‌ கைது செய்­யப்­பட்ட சந்­தேக நபர்­களில்‌ 90% பேர்‌ பெரும்­பான்­மை­யான சிங்­கள சமூ­கத்தைச்‌ சேர்ந்­த­வர்கள்‌ என்­பதை இது தொடர்பில்‌ நாம்‌ சுட்­டிக்­காட்ட விரும்­பு­கிறோம்‌.

பெளத்­த­ம­தத்தின்‌ “மேலா­திக்­கத்தை” அடிப்­ப­டை­யா­கக்­கொண்டு மற்ற மதங்­களின்‌ மீது பாகு­பாடு காட்­டு­வது பற்றி இவ்­வ­றிக்­கையில்‌ கூறப்­பட்­டுள்ள கருத்­து­களைப்‌ பொறுத்­த­வ­ரையில்‌, அர­சி­ய­ல­மைப்பின்‌ 9 வது பிரிவு புத்த சாச­னத்தை பாது­காக்­கவும்‌ வளர்க்­கவும்‌ அர­சுக்கு தேவைப்­ப­டு­கி­றது என்­ப­தையும்‌ அதே­நேரம்‌, அந்த அர­சி­ய­ல­மைப்பின்‌ கீழ்‌ சகல மதங்­க­ளுக்­கு­மான உரி­மைகள்‌ வழங்­கப்­பட்­டுள்­ளன என்­ப­தையும்‌ நாம்‌ வலி­யு­றுத்த விரும்­பு­கிறோம்‌.

இலங்கை அர­சி­ய­ல­மைப்பு அல்­லது தேசிய சட்­டங்­களில்‌ எந்­த­வொரு ஏற்­பாடும்‌ மதம்‌ அல்­லது பொது வாழ்வின்‌ எந்­த­வொரு பிரி­விலும்‌ உள்ள நம்­பிக்­கையின்‌ அடிப்­ப­டையில்‌ ஒரு நபரை பாகு­ப­டுத்த அனு­ம­திக்­காது. மாறாக, அர­சி­ய­ல­மைப்பின்‌ 12 வது உறுப்­பு­ரை­யா­னது, இனம்‌, மதம்‌, மொழி, சாதி, பாலினம்‌, அர­சியல்‌ கருத்து, பிறந்த இடம்‌ அல்­லது அத்­த­கைய கார­ணங்­களை அடிப்­ப­டை­யாகக்‌ கொண்ட பாகு­பாட்டைத்‌ தடை செய்­கி­றது.

ஒரு குறிப்­பிட்ட மதச்‌ சமூ­கத்தைச்‌ சேர்ந்த இளை­ஞர்­களை பயங்­க­ர­வாதச்‌ செயல்­களில்‌ ஈடு­படும்‌ அள­விற்கு தீவி­ர­ம­ய­மாக்­கு­வ­தற்­கான இயக்­கிகள்‌ மற்றும்‌ மூல கார­ணங்­களை இந்த அறிக்கை போது­மான அளவில்‌ விவா­திக்கத்‌ தவ­றி­ய­துடன்‌, பாதிக்­கப்­பட்­ட­வர்­களின்‌ குடும்ப உறுப்­பி­னர்கள்‌, சந்­தேக நபர்கள்‌ மற்றும்‌ நடு­நி­லை­யா­ளர்கள்‌ உள்­ளிட்ட, இலங்கை சமூ­கத்தின்‌ வெவ்­வேறு தரப்­பி­ன­ரி­ட­மி­ருந்த பரந்த அள­வி­லான உள்­ளீ­டு­களைக்‌ கொண்­டி­ருக்­க­வில்லை என்­பதும்‌ தெரி­கி­றது.

வழி­பாட்டுத்‌ தலங்­க­ளுக்கு எதி­ரான தாக்­கு­தல்கள்‌ மற்றும்‌ அவ­ம­திப்பு ஆகி­ய­வற்றை விவ­ரிப்­பதில்‌, பெளத்த வழி­பாட்டுத்‌ தலங்கள்‌ மீதான தாக்­கு­தல்கள்‌, அழித்தல்‌ போன்ற சம்­ப­வங்கள்‌ மற்றும்‌ நாட்டின்‌ சில பகு­தி­களில்‌ பெளத்த வழி­பாட்­டா­ளர்­களைத்‌ தடுத்த நிகழ்­வுகள்‌ ஆகி­ய­வற்றைக்‌ குறிப்­பிட அறிக்கை தவ­றி­விட்­டது.

சகல தரப்­பி­லு­முள்ள தீவி­ர­வாத அம்­சங்­களைக்‌ கவ­னத்தில்‌ கொள்­ளுதல்‌, வன்­மு­றையால்‌ பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு இழப்­பீடு வழங்­கு­வ­தற்­கான அலு­வ­லகம்‌ மூலம்‌ இழப்­பீடு வழங்­குதல்‌, மற்றும்‌ மதங்­க­ளுக்­கி­டை­யே­யான சபை­களை அமைப்­ப­தற்­கான பொறி­மு­றை­களை அமைத்­த­லுக்­கான வழிமுறைகளை அமைத்தல்‌ போன்ற மத நல்லிணக்கத்தை வளர்ப்பதற்காக அரசாங்கமும்‌ சட்ட அமுலாக்க முகவரமைப்புக்களும்‌ மேற்கொண்ட உறுதியான நடவடிக்கைகளில்‌ இந்த அறிக்கை போதுமான அளவில்‌ கவனஞ்செலுத்தவில்லை.

ஏப்ரல்‌ 21 க்குப்‌ பின்னர்‌, அனைத்து மதங்களின்‌ சகல குடிமக்களையும்‌ பாதுகாத்து உதவுவதில்‌ இலங்கையர்களின்‌ எழுச்சி மற்றும்‌ ஒற்றுமையானது; முஸ்லிம்களின்‌ தொழுகையின்போது பெளத்தர்களும்‌ கிறிஸ்த வர்களும்‌ அவர்களைப்‌ பாதுகாத்ததன்‌ மூலம்‌ நிரூபித்துக்காட்டப்பட்டமை, சேதமடைந்த சொத்துக்களை புதுப்பித்தமை மற்றும்‌ சேதமடைந்த தேவாலயங்களை பாதுகாப்பு படையினர்‌ புதுப்பித்தமை ஆகியவை இந்த அறிக்கையில்‌ பிரதிபலிக்கவில்லை என்பதும்‌ துரதிர்ஷ்டவசமானது.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.