19 ஆம் திருத்தம் மூலம் சுயாதீன நிறுவனங்கள் பலமடைந்ததாக இம்முறை ஐ.நா.வின் மனித உரிமை ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். தனிநபர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழித்து அதை முழுதாகப் பாராளுமன்றத்துக்குப் பாரமளித்தால் மட்டும் சுயாதீன நிறுவனங்களின் இருப்பு அர்த்தமுள்ளதாகவும் நிலைத்ததாகவும் இருந்திருக்கும்.
தனிநபர் நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதிக்கும் பாராளுமன்றத்துக்கும் பகிரப்பட்டதாலேயே சுயாதீன நிறுவனங்கள் சுயாதீனத்தை இழந்திருக்கின்றன. இரு கட்சிகளிடம் இரு அதிகாரக் கட்டமைப்புகள் இருந்தாலும் அதே நிலை தான். ஒரே கட்சியிடம் இரு அதிகாரக் கட்டமைப்புகள் இருந்தாலும் அதே நிலைதான். மொத்தத்தில் தனிநபர் நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட்டு முழுதாக அதைப் பாராளுமன்றத்திடம் வழங்கிவிட்டுக் கட்சி ஆதிக்கத்திலிருந்து விடுவிப்பை வழங்கிவிட்டே சுயாதீன நிறுவனங்களை அமைக்க வேண்டும்.
19 ஆம் திருத்தம் மூலம் இரு அதிகாரக் கட்டமைப்புகளை உருவாக்கி நிர்வாக சிக்கலை ஏற்படுத்தியதன் மறுவிளைவே அதில் சுயாதீன நிறுவனங்களை உட்படுத்தியதுமாகும். ஒரே அதிகாரக் கட்டமைப்பாக உருவாக்கி பாராளுமன்றம் கட்சி ஆளுமையிலிருந்து விடுபட்டு அமைய வேண்டும்.
தற்போது 19 ஆம் திருத்த நிறைவேற்று அதிகாரத்தாலும் பிரதமராலும் குறையீட்டு நிதியைப் பாராளுமன்றத்தின் மூலம் பெற்றுக்கொள்ள முடியாதிருக்கிறது. இது அந்த ஷரத்தினால் ஏற்பட்ட விளைவும் அல்ல. பாராளுமன்றத்தில் அதிக ஆசனங்களைக் கொண்டவரே பிரதமர் என்று தான் அந்த ஷரத்தில் உள்ளது. இரு கட்சிகளின் இரு அதிகாரக் கட்டமைப்புகளால் நிர்வாகப் பாதிப்பு ஏற்படாதிருக்கவே பாராளுமன்றத்தில் பெரும்பான்மை கொண்ட கட்சி ஆசனங்கள் குறைந்த கட்சியிடம் நிர்வாகத்தைக் கையளிக்க நேர்ந்தது.
எனினும் கூட இதுவும் 19 ஆம் ஷரத்துக்கு முரணானதேயாகும். ஆக குறைந்த ஆசனங்களைக் கொண்ட இன்றைய பாராளுமன்றத்தால் எந்த தீர்மானத்தையும் நிறைவேற்ற முடியாதிருக்கிறது.
எனினும் கூட 19 ஆம் திருத்தத்தை நீக்க வேண்டும் எனத்தற்போது குரலெழுப்புவோரின் நோக்கம் ஒரே அதிகாரக் கட்டமைப்பை உருவாக்கி நிறைவேற்று அதிகாரத்தைப் பாராளுமன்றத்திடமே வழங்கி விட வேண்டும் என்பதல்ல.
ஒரே அதிகாரக் கட்டமைப்பாக இத்தனி நபர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியிடம் வழங்குவதேயாகும். அதன் பின் மக்களின் ஜனநாயக உரிமைக்கு முரணான 18 ஆம் திருத்தம் போன்ற விதிமுறைகளும் நடைமுறையாகலாம். எனவே 19 ஆம் திருத்தத்தில் சில குறைபாடுகள் இருக்கின்ற போதும் அதன் மூலம் கிடைக்கும் நிறைவு அளப்பரியதாகும்.
ஆக 19 ஆம் திருத்தத்தை முதற்படியாக வைத்துக்கொண்டு எதிர்வரும் காலத்தில் தனிநபர் நிறைவேற்று அதிகாரத்தை முற்றாகவே நீக்கி நிறைவேற்று அதிகாரத்தைப் பாராளுமன்றத்துக்கு வழங்க வேண்டுமே தவிர 19 ஆம் திருத்தத்தை மூன்றில் இரண்டு பங்கு மூலம் அகற்றி மீண்டும் தனிநபர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஏற்பட இடமளித்து விடக்கூடாது.
2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக் ஷ வென்றிருப்பது எதிர்பார்க்கப்பட்டது தான். 74% சிங்களவர் வாழுகையில் இலங்கை அத்தேர்தலில் ஒரே தொகுதியாக இருக்கையில் பெளத்த சிங்களப் பேரினவாதத்தை துருவப்படுத்தியே அவர் 14 இலட்சம் மேலதிக வாக்குகளைப் பெற்றிருந்தார். பல்லின மக்கள் வாழும் ஒரு நாட்டில் தனிநபர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை பொருத்தமற்றது என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது. பெரும்பான்மைச் சமூக வேட்பாளர் 74% பெரும்பான்மையினர் மத்தியில் பேரினவாதத்தைத் துருவப்படுத்தி பெரு வெற்றி பெற்றிருப்பதில் ஆச்சரியமில்லை.
1978 ஆம் ஆண்டிலிருந்தே தனிநபர் நிறைவேற்று ஜனாதிபதி முறை அமுலில் இருப்பினும் இம்முறை நிகழ்ந்த தேர்தலில் தான் அது சிறுபான்மைகளுக்கு எதிரான கொடூர நிலைப்பாட்டை எடுத்திருந்தது. 2015 ஆம் ஆண்டு 19 ஆம் திருத்தம் ஏகமாக பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டு ஜனாதிபதியின் முக்கிய அதிகாரங்கள் பாராளுமன்றத்தோடு பகிரப்படாதிருப்பின் சிறுபான்மைகளின் நிலை என்ன?
அந்த ஷரத்தால் தான் கோத்தாபய ராஜபக் ஷ தற்போது எந்த அமைச்சையும் வகிக்க முடியாதிருக்கிறார். பாதுகாப்பு அமைச்சும் கூட 19 ஆம் திருத்தத்தின்படி அவருக்கு இல்லை. ஆக பல்லினம் வாழும் நாட்டில் தனிநபர் நிறைவேற்று அதிகாரமுள்ள ஓரின ஜனாதிபதி கூடாது. ஒரே தொகுதி என்னும் ரீதியில் ஒரே இனத்தவர் வெல்லும் தேர்தலும் தேவையில்லை. பேரினவாதத்தைத் தூண்டி பெரும்பான்மை சமூகத்தைத் துருவப்படுத்தும் முறையும் கூடாது.
2015 ஆம் ஆண்டு நிகழ்ந்தது என்ன? நிறைவேற்று ஜனாதிபதி எதிர்ப்பு அந்த மக்களாணைக்கு மைத்திரியும்– ரணிலும் மாறு செய்திருக்கக்கூடாது. 100 நாள் வேலைத்திட்டத்தின்போது அதற்கே முக்கியத்துவம் வழங்கியிருக்க வேண்டும். அப்போது இரு பெருங்கட்சிகளும் இணைந்திருந்ததால் தனிநபர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதற்கு யாப்பில் விதிக்கப்பட்டிருந்த இரு நிபந்தனைகளையும் நிறைவேற்றியிருக்கலாம். பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் சர்வஜன வாக்கெடுப்பில் அனுமதியும் கிடைத்திருக்கும். எனினும் மைத்திரியும்– ரணிலும் தமக்கிடையே தனிநபருக்கெனவும் பாராளுமன்றத்துக்கெனவும் 19 ஆம் ஷரத்தாக நிறைவேற்று அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டு ஒருவருக்கொருவர் சிக்கிக் கொண்டார்கள்.
இப்போது தனிநபர் நிறைவேற்று அதிகாரத்தைப் பாராளுமன்றத்திடம் ஒப்படைப்பது ஒருபுறமிருக்க 19 ஆம் திருத்தத்திலிருக்கும் இருமுனை அதிகாரக் கட்டமைப்பை நீக்குவதும் கூட பிரச்சினையாகி இருக்கிறது. நான் முன்பு கூறியபடி 100 நாள் வேலைத் திட்டத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்று நிறைவேற்று அதிகாரத்தை மக்களாணைப்படி பாராளுமன்றத்திடமே வழங்கியிருந்தால் இரு அதிகாரக்கட்டமைப்புகள் ஏற்பட்டிருக்காது. அந்த காலகட்டத்திலேயே சிறுபான்மைகளையும் உள்ளடக்கிய பல்லின யாப்பு அங்கீகரிக்கப்பட்டிருக்குமானால் அன்றே இனப்பிரச்சினையும் தீர்ந்திருக்கும். அப்போது தவறவிடப்பட்ட சந்தர்ப்பம் இனிமேல் வாய்த்தால் தான் உண்டு.
தனிநபர் நிறைவேற்று அதிகாரக் கட்டமைப்பு ஒரு கட்சி வசமும் பாராளுமன்ற அதிகாரக் கட்டமைப்பு மறுகட்சி வசமும் சிக்கிக் கொள்ளும்போது, தனிநபர் நிறைவேற்று அதிகாரத்தைப் பெற்றவர் தனது கட்சி சார்ந்து தனக்கு மட்டும் என வழங்கப்பட்டிருந்த பாராளுமன்ற சில அதிகாரங்கள் மூலம் முட்டுக்கட்டைகளைப் போட்டார். பாராளுமன்ற அதிகாரத்தைப் பெற்ற மறுகட்சி தனது அதிகாரத்தை கேடயம் போல் பாவித்து சமாளித்தது. ஒரு கட்டத்தில் மக்களால் தெரிவான ரணிலைப் பிரதமர் பதவியிலிருந்து மைத்திரி அகற்றித் தன்னிடம் தோற்ற மகிந்தவைப் பிரதமராக்கியது மட்டுமல்ல, சுயவிருப்பப்படி பாராளுமன்றத்தையும் கலைத்திருந்தார். அவற்றை உயர்நீதிமன்றம் இரத்து செய்திருந்தது. பின்னர் தனது பதவிக் காலம் எப்போது ஆரம்பித்து எப்போது முடிகிறது எனவும் மைத்திரி உயர்நீதிமன்றத்திடம் கேட்டிருந்தார். எல்லாவற்றுக்கும் முன்பு 19 ஆம் திருத்தம் எனக்குத் தெரியாதே என இவர் கூறியிருந்ததும் வேடிக்கையாகவே இருந்தது. அதைத் தெரியாமல் தானா தனது கட்சி எம்பிக்களின் முழு வாக்குகளையும் அதற்குப் பெற்றுக்கொடுத்திருந்தார். இந்த இரு கட்சி இழுபறியால் 19 ஆம் திருத்தத்திலிருந்த சுயாதீன ஆணைக் குழுக்களும் கூட சுயாதீனமாக செயற்பட முடியாதிருந்தன.
இப்போது தம்பி கோத்தாபய ராஜபக் ஷ ஜனாதிபதியாகவும், அண்ணன் மகிந்த ராஜபக் ஷ பிரதமராகவும் இருப்பதாலும் இருவரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களாக இருப்பதாலும் இரு அதிகாரக் கட்டமைப்புகளில் பாதிப்பு குறைவாகவே இருக்கும். குடும்பப் பிணக்கு ஏற்பட்டால் அல்லது கட்சி உரசல் ஏற்பட்டால் இரு அதிகாரக் கட்டமைப்பின் பாதிப்பு வெளிப்படவே செய்யும்.
ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் 1978 ஆம் ஆண்டில் ஜே.ஆரால் வலிந்து திணிக்கப்பட்ட தனிநபர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஏறத்தாழ 50 ஆண்டுகளாகியும் கூட நீக்கிக்கொள்ள முடியாதிருக்கிறது. பல்வேறு அழிவுகளை அதன் மூலம் அனுபவித்த பிறகும் கூட 1994 ஆம் ஆண்டு முதல் அதற்கெதிராக மக்களாணை வழங்கப்பட்ட பின்பும் கூட இறுதியாக உறுதியாக மைத்திரியும் – ரணிலும் 2015 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்து விட்டு மாறு செய்திருக்கக்கூடாது. 2008 ஆம் ஆண்டு தனிநபர் நிறைவேற்று அதிகாரத்தோடு தேர்தல் பொலிஸ், நீதி, அரச ஊழியர் ஆகியவற்றின் அதிகாரங்களையும் 18 ஆம் திருத்தம் மூலம் தன் வசப்படுத்திய மஹிந்த ராஜபக் ஷவை 2018 ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எப்படி பிரதமராக்கினார். அவரோடு ஏற்பட்ட கொள்கை முரண்பாட்டால் தானே இவர் அவரிடமிருந்து விலகி அவரையே எதிர்த்துப் போட்டியிட்டு வென்றிருந்தார்.
19 ஆம் திருத்தத்தின்படி பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுள்ள கட்சித் தலைவருக்கே பிரதமர் பதவி வழங்கியாக வேண்டும். அதை மீறி மைத்திரிபால பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்றிருந்த ரணிலை பிரதமர் பதவியை விட்டும் நீக்கிவிட்டு குறைந்த ஆசனமிருந்த மஹிந்தவை பிரதமராக்கியதும் உயர்நீதிமன்றம் அதை இரத்துச் செய்தது. அதன்படி மீண்டும் ரணில் பிரதமரானார்.
எனினும் கோத்தாபய ராஜபக் ஷ ஜனாதிபதியானதும் பாராளுமன்றத்தில் தனக்குப் பெரும்பான்மை இருந்தும் கூட ரணில் பிரதமர் பதவியை மகிந்தவிடம் கையளித்துவிட்டார். ஆக இதில் 19 ஆம் திருத்தம் மீறப்பட்டுள்ளது. எனவே 19 ஆம் திருத்தம் மூலம் தனிநபர் நிறைவேற்று ஜனாதிபதிக்கும் பாராளுமன்றத்துக்கும் நிறைவேற்று அதிகாரம் பகிரப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டபோதும் இரண்டும் ஒன்றோடொன்று மாட்டி சிக்கியிருக்கின்றன எனவும் இதை விளக்கப்படுத்தலாம்.
தற்போது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவிடமும் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவிடமும் பாதுகாப்பு அமைச்சு இல்லை. 19 ஆம் திருத்தத்தின்படி ஜனாதிபதி கோத்தாபயவுக்கு அதை வகிக்க முடியாதிருப்பின் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவிடம் அதை வழங்கியிருக்க வேண்டும். பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தியே கோத்தாபய ராஜபக் ஷ ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார். எனினும் அவரிடம் பாதுகாப்பு அமைச்சு இல்லை அதனால் அவருக்குக் கிடைத்த மக்களாணையை நிறைவேற்றமுடியாத நிலையில் அவர் இருக்கிறார்.
உண்மையில் அதிகாரக் கட்டமைப்புக்கு பாதுகாப்பு அமைச்சு அடிப்படையாகும். பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவிடமும் அதுவும் இல்லை. 19 ஆம் திருத்தத்தின்படி பிரதமர் அதை வகிக்கலாம். அதை அவர் பொறுப்பேற்றால் அதிகாரக் கட்டமைப்பு பாராளுமன்றத்துக்கு மட்டுமே என்றாகிவிடும். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ தனது நிறைவேற்று அதிகாரத்தை பாராளுமன்றத்திடமே வழங்கியதாகவும் ஆகிவிடும்.
தேசத்தின் தலைவர், ஆட்சியின் தலைவர், முப்படைகளின் தலைவர் என்னும் வகையில் பாதுகாப்பு அமைச்சு நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்குக் கட்டாயமானதாகும். ஜே.ஆர்.பாராளுமன்றத்தின் அதிகாரத்தை சுவீகரித்திருந்ததால் முப்படைகளின் தலைவர் என்னும் வகையில் லலித் அதுலத் முதலியிடம் பாதுகாப்பு அமைச்சை வழங்கியிருந்தார். பிரேமதாச, ரஞ்சன் விஜேரத்னவை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக நியமித்தார். சந்திரிக்கா பண்டாரநாயக்க அனுருத்த ரத்வத்தையை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக நியமித்தார். மஹிந்த ராஜபக் ஷ தம்பி கோத்தாபய ராஜபக் ஷவைப் பாதுகாப்பு செயலாளராக நியமித்துக் கொண்டார். தற்போது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ தனது அண்ணன்மாரில் ஒருவரான சமல் ராஜபக் ஷவை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக்கிப் படைப்பிரிவுகளில் ஒரு முன்னாள் தளபதியான கமல் குணரட்ணவைப் பாதுகாப்பு செயலாளராக்கியிருக்கிறார்.
பாதுகாப்பு விடயத்துக்கு அமைச்சரவை அந்தஸ்து வழங்கப்படவில்லை என்பதும் இதன் மூலம் ஜனாதிபதியிடமும் அமைச்சரவையிடமும் அது இல்லை என்பதும் இப்போது சுட்டிக்காட்டப்படுகிறது. ஜனாதிபதியும் பாராளுமன்றமும் ஜனநாயகப்படி மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்படுகையில் மக்களின் வாக்குகளைப் பெறாதவரிடம் மக்களின் பாதுகாப்பு விடயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
1978 ஆம் ஆண்டு 140 எம்.பிக்களின் திகதியிடப்படாத இராஜினாமாக் கடிதங்களை வலிந்து பெற்று நிறைவேற்று அதிகார முறையை உருவாக்கிய ஜே.ஆர் என்ன கூறினார் தெரியுமா? இது எல்லாம் செய்யும் ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் ஆக்க மட்டும் முடியாது. இதை எல்லோரும் எதிர்க்கிறார்கள். இந்த பதவிக்கு வந்தால் தான் இதன் சுகம் தெரியும். இதை விட்டுப் போகவே மாட்டார்கள் என்றார். அவர் சொன்ன மாதிரியே அவருக்குப் பின்னால் வந்த எந்த ஜனாதிபதியும் இதைக் கைவிட விரும்பவில்லை.
ஜனாதிபதியாகும் முன் எல்லோரும் வென்றால் அதை துறந்து விடுவோம் என்றே வாக்களித்திருந்தார்கள். எனினும் பதவி காலம் முழுதும் அதில் தொங்கியே இருந்தார்கள். மஹிந்த ராஜபக் ஷ 18 ஆம் திருத்தம் மூலம் மூன்றாம் முறையும் பதவி வகிக்க முயன்றதோடு தேர்தல், பொலிஸ், நீதி, அரச ஊழியர், சம்பந்தப்பட்ட அதிகாரங்களையும் பெற்றுக் கொண்டார். நிறைவேற்று அதிகாரத்தைப் பாராளுமன்றத்தோடு பகிர்ந்து கொள்வேன் என்று வந்த மைத்திரிபால சிறிசேன என்ன செய்தார்? முதலில் இவர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை தான் ஒழிக்கவே போட்டியிடுவதாகக் கூறிவிட்டு இனி ஜனாதிபதி முறை வேண்டாம். கடைசி ஜனாதிபதியான எனக்கு மட்டும் சில அமைச்சுக்களையும் சில நிறுவனங்களையும் தாருங்கள் எனக் கேட்டுப் பெற்றுக் கொண்டார். அவரும் கூட மறுமுறையும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறவே ஆசைப்பட்டார். 2015 ஆம் ஆண்டு 100 நாள் வேலைத்திட்டத்திலேயே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட்டிருந்தால் 2019 ஆம் ஆண்டு கோத்தாபய ராஜபக் ஷ போட்டியிட நேர்ந்திருக்காது. சஜித்தும் போட்டியிட நேர்ந்திருக்காது. இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக் ஷ பாதுகாப்பு விடயத்துக்கே மக்களாணை பெற்றிருந்தார். சஜித் பிரேமதாச அபிவிருத்திக்கே மக்களாணையைப் பெற்றிருந்தார். இருவரும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவது பற்றி எதுவும் பேசவில்லை.
19 ஆம் திருத்தத்தின்படி பாராளுமன்றத்தில் அதிக ஆசனங்களைக் கொண்ட கட்சிக்கே நிர்வாகம் என்றிருக்கையில் ரணில் ஏன் குறைந்த ஆசனங்கள் இருந்த மஹிந்தவிடம் நிர்வாகத்தைக் கையளித்தார். எப்போதும் அதிகாரத்தில் இருப்பவர்களே மக்களால் விமர்சிக்கப்படுவர் என்பது ரணிலுக்குத் தெரியும். எனினும் இது யாப்புக்கு முரணானதாகும் அல்லவா?
தனிநபர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையை நிரந்தரமாக வைத்திருப்பதற்கே 1978 ஆம் ஆண்டு ஜே.ஆர் விகிதாசார தேர்தல் முறையையும் சர்வஜன வாக்கின் அனுமதியையும் வைத்திருந்தார்.
பிரேமதாச வெற்றி பெறவே 12.5 வெட்டுப்புள்ளியை 5 ஆகக் குறைத்து சிறு கட்சிகளுக்கும் சிறுபான்மைக் கட்சிகளுக்கும் வாய்ப்பு வழங்கினார்.
விகிதாசார தேர்தல் முறைப்படி இதுவரை எந்த கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெற்றதில்லை. வெட்டுப்புள்ளிக் குறைப்பால் சிறுபான்மைக் கட்சிகளினதும் சிறு கட்சிகளினதும் ஆளுமையும் உள்ளது.
எனவே அறுதிப் பெரும்பான்மை கிடைத்தால் தொங்கு பாராளுமன்றமே அமையும் தனித்தனி எம்பிக்களின் தயவை நாடவோ வரப்பிரசாதங்களை வழங்கவோ வேண்டி வரும். இந்நிலையில் வேறு வேறு கட்சிகளோடு ஜனாதிபதியும் பிரதமரும் பிரிந்தால் அதிகாரக் கட்டமைப்புகள் இரண்டாகிவிடும்.-Vidivelli
- ஏ.ஜே.எம்.நிழாம்